கண்ணன் -- என் சேவகன்- பாரதியார் கவிதை

.
கண்ணன் -- என் சேவகன்

கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம்மறப்பார்;
வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்;
‘ஏனடா, நீ நேற்றைக் கிங்குவர வில்லை’ யென்றால்
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்ததென்பார்;
வீட்டிலே பெண்டாட்டி மேற் பூதம் வந்ததென்பார்;
5

பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்;
ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறு செய்வார்;
தாயாதி யோடு தனியிடத்தே பேசிடுவார்;
உள்வீட்டுச் செய்தியெலாம் ஊரம் பலத்துரைப்பார்;
எள்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்.
10

சேவகரால் பட்ட சிரமமிக உண்டு, கண்டீர்;
சேவகரில் லாவிடிலோ, செய்கை நடக்கவில்லை.
இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில்,
எங்கிருந்தோ வந்தான், ‘இடைச்சாதி நான்’ என்றான்;
“மாடுகன்று மேய்த்திடுவேன், மக்களைநான் காத்திடுவேன்;
15


வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்;
சொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்;
சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே
ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்;
காட்டுவழி யானாலும், கள்ளர்பய மானாலும்,
20

இரவிற் பகலிலே எந்நேர மானாலும்,
சிரமத்தைப் பார்ப்பதில்லை, தேவரீர் தம்முடனே
சுற்றுவேன், தங்களுக்கோர் துன்பமுறா மற்காப்பேன்;
கற்றவித்தை யேதுமில்லை; காட்டு மனிதன், ஐயே!
ஆனபொழுதுங் கோலடி குத்துப்போர் மற்போர்
25

நானறிவேன்; சற்றும் நயவஞ் சனைபுரியேன்”
என்றுபல சொல்லிநின்றான். “ஏது பெயர்? சொல்” என்றேன்.
“ஒன்றுமில்லை; கண்ணனென்பார் ஊரிலுள்ளோர் என்னை” என்றான்.
கட்டுறுதி யுள்ளவுடல், கண்ணிலே நல்லகுணம்,
ஒட்டுறவே நன்றா உரைத்திடுஞ்சொல் -- ஈங்கிவற்றால்,
30

தக்கவனென் றுள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன்,
“மிக்கவுரைப் பலசொல்லி விருதுபல சாற்றுகிறாய்;
கூலியென்ன கேட்கின்றாய்? கூறு” கென்றேன். “ஐயனே!
தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிக ளேதுமில்லை;
நானோர் தனியாள்; நரைதிரைதோன் றாவிடினும்
35

ஆன வயதிற் களவில்லை; தேவரீர்
ஆதரித்தாற் போதும் அடியேனை; நெஞ்சிலுள்ள
காதல் பெரிதெனக்குக் காசுபெரி தில்லை” யென்றான்.
பண்டைக் காலத்துப் பயித்தியத்தில் ஒன்றெனவே
கண்டு, மிகவும் களிப்புடனே நானவனை
40

ஆளாகக் கொண்டுவிட்டேன். அன்று முதற்கொண்டு,
நாளாக நாளாக, நம்மிடத்தே கண்ணனுக்குப்
பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்; கண்ணனால்
பெற்றுவரு நன்மையெலாம் பேசி முடியாது.
கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல், என்குடும்பம்
45

வண்ணமுறக் காக்கின்றான். வாய்முணுத்தல் கண்டறியேன்.
வீதி பெருக்குகிறான்; வீடுசுத்த மாக்குகிறான்.
தாதியர்செய் குற்றமெலாம் தட்டி யடக்குகிறான்;
மக்களுக்கு வாத்தி, வளர்ப்புத்தாய், வைத்தியனாய்,
ஒக்கநயங் காட்டுகிறான்; ஒன்றுங் குறைவின்றிப்
50

பண்டமெலாம் சேர்த்துவைத்துப் பால்வாங்கி
மோர் வாங்கிப்
பெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்து
நண்பனாய், மந்திரியாய், நல்லா சிரியனுமாய்,
பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்,
எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி யென்று சொன்னான்.
55

இங்கிவனை யான்பெறவே என்னதவஞ் செய்து விட்டேன்!
கண்ணன் எனதகத்தே கால்வைத்த நாள்முதலாய்
எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச்
செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி,
கல்வி, அறிவு, கவிதை, சிவயோகம்,
60

தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும்
ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றனகாண்!
கண்ணனைநான் ஆட்கொண்டேன்!
கண்கொண்டேன் கண்கொண்டேன்!
கண்ணனெனை யாட்கொள்ளக் காரணமும் உள்ளனவே!
65

No comments: