.
புத்தகத்தின் கடைசிப் பக்கத்தை எட்ட இன்னும் நாலு பக்கம் தான் எஞ்சியிருந்தது. அதற்குள் வேலையில் இருந்து திரும்பும் ரயில் தன் தரிபிடத்தை வந்தடையவும் சனக்கூட்டத்தில் இருந்து விலகி அந்த ரயில் நிலையத்தில் நின்று கொண்டு முழுதையும் படித்து முடித்தது மூன்று மணி நேரத்துக்கு முன்புதான்.
சிட்னியில் மழை கனத்துப் பெய்து கொண்டிருக்கிறது. நேற்றுக் கொளுத்திய உச்சபட்ச வெயிலுக்கு எதிர்மாறாகக் குமுறிக் கொட்டிய அந்த மழைதான் இந்த நூலில் வெற்றிச்செல்வி கொணர்ந்த உணர்வின் வெளிப்பாடோ எனத் தோன்றியது.
அந்த மழைக் கதகதப்போடு என் கண்ணீரும் சேர்ந்து கொள்ள இலக்கியா இருக்கும் பிள்ளைப் பராமரிப்பு நிலையம் நோக்கி நடந்தேன். எதிர்ப்படுபவருக்கு நான் அழுது கொண்டே பயணித்ததைக் கண்டுணர நியாயமில்லை. அப்படிப்பட்டாலும் ஏதோ காலநிலை மாறுதலால் சளி பிடித்த முகம் என்று நினைத்திருக்கக் கூடும். இங்கே நான் எழுதிக் கொண்டு வரும் இந்த உணர்வின் பிரதிபலிப்பைக் கொச்சையாகக் கூட பார்க்கலாம். ஆனால் எனது பலமும் பலவீனமும் அதுதான். அதனால் தானோ என்னமோ 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போர் என்று முடிவு கட்டப்பட்ட பின்னர் வெளிவந்த, இறுதிப் போர் அனுபவங்களை நூலுருவாக்கிய படைப்புகளை வாங்கி வைத்திருந்தாலும் அவற்றைப் படிக்கக் கூடிய மன ஓர்மம் என்னுள் ஏற்படுத்தப்படவில்லை.
எனது 2009 வரை வானொலியில் பதினொரு ஆண்டுகள் தாயக நடப்புகளோடு இயங்கிய என்னிருப்பை நான் துடைத்து மாற்றிக் கொண்டேன். இறுதிக் கட்டப் போரில் நாட்கணக்காக அவலச் சுமைகளை எடுத்து வந்து கொண்டிருக்கத் துணையாக நின்ற புலிகளின் குரல் தவபாலன் அண்ணையின் தொடர்பும் தொலைய அது முற்றுப்புள்ளியானது.
கடந்த மாவீரர் நாளில் வெற்றிச் செல்வியின் "ஆறிப்போன காயங்களின் வலி" புத்தகம் கிடைத்த போது வாசிக்க உந்துதல் ஏற்பட, நீண்ட இடைவெளிக்குப் பின்னால் தொலைந்து போன தாயக உறவொன்று எனக்கு முன் உட்கார்ந்து தான் புனர்வாழ்வு என்ற பெயரில் தானும் தன்னோடு சேர்ந்திருந்த பெண் போராளிகள் அந்த பம்பைமடு தடுப்பு முகாம் வாழ்வில் எதிர்கொண்ட வாழ்வியல் அனுபவங்களைப் பேசிக் கொண்டிருப்பதாகப்பட்டது. அதனால் தானோ என்னமோ இந்தப் போராளிகளின் சுய வரலாற்றைப் படித்து முடித்த போது உடைந்து போய் விட்டேன். என்னால் இந்தளவுக்குத் தான் இந்த நூல் வாசிப்பின் அனுபவத்தை எழுத்தில் கொடுக்க முடியும். ஆனால் இது கொடுத்த உணர்வு வெளிப்பாட்டுக்கு மொழியில்லை.
பதினெட்டு ஆண்டுகள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இயங்கிய வெற்றிச் செல்வி தனது "ஆறிப்போன காயங்களின் வலி" படைப்பின் வழியாகக் காட்டும் அந்த அவல உலகம் அவரின் சுயவரலாறு மட்டும் சார்ந்ததல்ல அவரோடு அந்த முகாமில் ஒட்டியிருந்த ஆயிரக்கணக்கான சக தோழிகள் பலரின் முகங்களாக இருக்கின்றது.
இம்மாதிரியான படைப்பில் அதீத சொற்கட்டுமானமும் வார்த்தைச் செதுக்கலும் புனை கதை அந்தஸ்தை எட்டச் செய்து விடும். ஆனால் வெற்றிச் செல்வி நம்மோடு பேசுமாற்போலத் தான் இந்த அனுபவ எழுத்தைக் கொண்டு வருகிறார். மாதக்கணக்காகப் பம்பைமடு புனர்வாழ்வு முகாமில் அடைபட்டு 06.04.2010 இல் விடுதலையாகி ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது அவர் கொண்டு வந்திருக்கும் வரலாற்றுப் பதிவு ஆறாத காயமாகவே இந்த யுகத்தில் இருக்கும்.
இறுதிக் கட்டப் போரில் பிரித்தெடுக்கப்பட்டுக் கணவன் ஒரு பக்கம், மனைவி ஒரு பக்கமாக வெவ்வேறு புனர்வாழ்வு முகாமில் இருந்தவர்கள், தன் குழந்தையைப் பெற்றோருடன் அனுப்பி விட்டு முள் கம்பி வேலிக்குள் அடைபட்ட தாய், பிறப்பால் சகோதரங்களாக இயக்கத்தில் சேர்ந்து புனர்வாழ்வு முகாமில் இரு துருவங்கள் ஆனவர்கள், இராணுவத் தடுப்பில் மாட்டுப்பட்டுத் தன் குழந்தையைத் தொலைத்து விட்டு தேட வழியில்லாமல் அந்தப் புனர்வாழ்வுச் சிறையில் அழுது தொலைக்கும் அம்மா, கை, கால், கண் போனவர்கள், மன நலம் பிறழ்ந்தவர்கள், அந்த முள்வேலிக் காட்டிலும் தம் சுபாவத்தை மாற்றிக் கொள்ளாது பாடியும், ஆடியும் மகிழ்ந்தும் திரிந்தவர்கள் இவர்கள் எல்லோருமே இந்த வரலாற்றுப் பதிவின் நிஜப் பாத்திரங்களாக வருகிறார்கள். அவர்களைத் தேடித் தேடிப்போய் வெற்றிச்செல்வி எழுத்துகளாகச் சுமக்கிறார்.
இந்த அனுபவங்களைப் புனர்வாழ்வு முகாமில் இருந்த போது படையினரின் கண்ணில்படாமல் வெவ்வேறு இடங்களுக்குப் பிரதி பண்ணி அனுப்பி வைத்ததும் ஏதாவது ஒரு இடத்திலாவது பத்திரமாக இருக்கும் என்ற அந்த நம்பிக்கையும் தான் இப்போது காலம் கடந்து பொதுவில் பதிவாகியிருக்கிறது.
எந்தச் சமூகத்தின் விடுதலைக்காகத் தம்மைத் தியாகம் செய்தார்களோ அவர்கள் நடைப்பிணங்களாக முள்வேலிக்குள் அடைபட்டு நாற்றமடிக்கும் பொதுக் கழிப்பறையில் சிரமப்பரிகாரம் செய்ய முண்டியடித்ததையும், காவலாளிகளின் தூவேசமொழிகளைக் கேட்டுச் சிரித்து விட்டுக் கடந்து போனதையும், கக்கூசுக்குப் போகும் செருப்பைத் தலைமாட்டில் வைத்து உறங்கியதையும், கால், கை வலுவிழந்தவர்கள் கூட்டம் வருமுன் கிணற்றடியில் குளிக்கப் போய் படைப் பெண்ணால் அடி வாங்கிப் போனதையும் அனுபவப்பட்ட வெற்றிச்செல்விக்கு பழகிப் போன, இதுவும் கடந்து போனதாக இருக்கலாம் ஆனால் அந்த அத்தியாயங்களைப் படிக்கும் போது எழுந்த மன அவஸ்தைக்கு மருந்தில்லை.
பம்பைமடு முகாவில் தாங்கள் வாழ்ந்து கழித்த இடங்களையெல்லாம் இப்போது சென்று பார்த்துப் படங்களாகக் காட்டியிருக்கிறார். படித்து முடித்து விட்டு மீண்டும் ஒருமுறை பார்த்தேன்,
அசைபடங்களாகப் பட்டன.
ஊடகப் பசியால் புனர்வாழ்வு முகாமில் இருந்த பெண் போராளிகள் குறித்துப் பொதுப்படையாக எழுதப்பட்ட கட்டுரை எப்படி ஊசியாகத் தம்மைத் தைத்தது, நம்முடைய சமூகத்தவரே இட்டுக்கட்டிப் பேசியதைக் கேட்டு புனர்வாழ்வில் இருந்து மீண்டு எப்படி இந்தச் சமூகத்தில் வாழப்போகிறோம் என்று அழுது ஆற்றாமையோடு பேசிய அந்தப் பெண் போராளிகளின் குரலை அந்த முட்கம்பி வேலிகள் சேமித்து வைத்திருக்குமோ?
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த கட்டமைக்கப்பட்ட செயற்பாடுகள் இந்தப் புனர்வாழ்வு முகாமிலும் நீட்சி பெற்றிருப்பதை ஆங்கில, சிங்களப் பாடமெடுத்த சக பெண்கள், வாத்திய வாசிப்பும், பாட்டுத் திறனும் கொண்டவர்கள் கலை நிகழ்ச்சிகளாக ஆக்கி மேடையேற்றிக் கொண்டதையும், அயராது மருத்துவப் பணி புரிந்து தக்க நேரத்தில் காத்து நின்ற காவல் தெய்வங்களையும் இந்த அத்தியாயங்களில் எடுத்து வருகிறார்.
சின்ன மகளுக்கோர் பெரிய வேண்டுகோள் என்று முட்கம்பி வேலிக்கு அப்பால் இருக்கும் தன் மகளுக்கு எழுதித் தானே படித்து ஆற்றுப்படுத்திய குயிலி, தங்களுக்குள் கதை, கவிதைப் புத்தகங்களைப் பரிமாறிப் பின்னர் தம் படைப்புகளையே கையெழுத்துப் பிரதியாக அங்கே உலாவ விட்ட சேதிகளும் வருகின்றன.
பார்வையாளர் நேரத்தில் தன் பெற்றோர், உற்றாருடன் பார்வையாலேயே பேசி அழுது விட்டு வந்தவர் எத்தனை பேர், இன்னும் தன் முழுக் குடும்பத்தையும் காவு கொடுத்து விட்டு இன்னும் யாரேனும் நம்மைப் பார்க்க வருவார்களா என்று தேடியலைந்த விழிகள் தான் ஒரு காலத்தில் எங்கட சனத்தின் விடிவுக்காகப் போராடியவர்கள்.
உறங்காத உண்மைகளின் வெளிப்பாடாய் இருக்கும் இந்தப் படைப்பு ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுப் பரவலாக எடுத்துச் செல்லப்பட வேண்டியது.
"ஆறிப்போன காயங்களின் வலி" இராணுவ விசாரணையில் இருந்து ஆரம்பித்து விடுதலை அறிவிப்புக் கிட்டும் வரை அந்தப் பெண்களின் உள்மனப் போராட்டங்களை வலி மிகுந்த எழுத்தாக்கித் தருகிறது.
வலைப்பதிவு வாசகனாக முகம் தெரியாது இருந்த சகோதரன் மிகுதன் மாவீரனாகி போது தான் அவன் முகத்தைக் கண்டேன். http://www. madathuvaasal.com/2008/11/ blog-post.html
ஆறிப்போன காயங்களின் வலி நூலின் வழியாக அந்தச் சகோதரிகளின் முகங்கள் தெரிகின்றன.
"வெளியே எப்படி வாழப் போகிறேனோ நான் அறியேன் என் அடுத்த பிரவேசம் எப்படியிருக்கப் போகிறதோ அறியேன். என்றாலும் என் சுமைகளைச் சுமந்து செல்ல இன்னொருவர் வருத்தப்படுகின்ற வாழ்க்கை நான் வாழப் போவதில்லை" என்று நீளும் வெற்றிச்செல்வியின் முடிவுரையில் தான் இருக்கிறது தம் வாழ்விலும் சாவிலும் தேச நலனே பெரிது என்று இயங்கிய உன்னதங்களின் இருப்பு.
No comments:
Post a Comment