நதியைத் தேடிச் சென்ற கடல் - உமா வரதராஜன்

.


2014 சென்னை புத்தக கண்காட்சியை ஒட்டிய ஒரு தினம் .வெயில் மங்கத் தொடங்கும்  நேரம் மெரீனா கடற்கரை சாலை நடைபாதையில் சென்று  கொண்டிருந்தேன்.இயல்புடன் இருந்த சாலையில் திடீரென பரபரப்பு சூழ்ந்து கொண்டது  . நிறை மாத கர்ப்பிணிகளை நினைவூட்டிக் கொண்டிருந்த  போக்குவரத்துப் பொலிஸ்காரர்கள்  மிகவும் உஷார்  நிலையுடன்  ஓடியாடி மக்களுடையதும் ,வாகனங்களினதும்  நகர்வுகளைக்  கட்டுப் படுத்திக்  கொண்டிருந்தார்கள் .அதைத்  தொடர்ந்து ஓரிரு  நிமிடங்களுக்குள் முகப்பு  விளக்குகளை  ஒளிர விட்டபடி வாகனங்களின்  அணியொன்று  சாலையைக்  கடந்து சென்றது . வாகனங்களிலிருந்து  முளைத்த  மரக்கிளைகள் போல் கறுப்பு சீருடையணிந்த ,துப்பாக்கியேந்திய காவலர்கள்  [Black  cats ] வாகனங்களில்  முன்னேயும் பின்னேயும்  செல்ல  நடுவில்  சென்ற  வாகனமொன்றில்  தமிழ்நாட்டின்  முதலமைச்சர்  செல்வி  ஜெயலலிதா  புன்னகை ததும்பும்  வட்டமுகத்துடன் ,   இரு  விரல்களை  உயர்த்திக்  காட்டிய படி கடந்து  சென்றார். சாந்தம் ததும்பும் முகம். மிடுக்கு . அவர் அமர்ந்திருந்த  வாகனத்தின் உட்புறம் மிகவும் பிரகாசத்துடன்  ஒளிர்ந்து  கொண்டிருந்ததற்கு  வாகன விளக்குகள்  மட்டுமல்லாமல் ஜெயலலிதாவின் நிறமும் ,தோற்றமும்  கூட காரணங்களாக  இருந்திருக்கலாம் . அங்கு குழுமி  நின்ற  மக்களைப் போல  ஓர் உணர்வின்  உந்துதலில் நானும் கையசைத்தேன் .'ஆயிரத்தில் ஒருவனி'லிருந்து  உங்களை அறிவேன் 'என்ற பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின்  கையசைப்புக்குள் என்னுடையதும் அடங்கும்  .
வாகனத்தில் அப்போது  கடந்து  சென்றது  சுமார் ஐம்பது  ஆண்டுகளுக்கு  முன்னர் நான் 'ஆயிரத்தில் ஒருவனி'ல் சந்தித்த  ஜெயலலிதா  அல்ல. எம்.ஜி .ஆரைக்  கண்ட மாத்திரத்தில்  எழுந்து  நின்று மரியாதை செலுத்த  வேண்டும்  என்ற  அடிப்படை  'ஒழுக்க  விதிகளைக் ' கூட ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பின் போது  தெரிந்து  வைத்திராத வெகுளியான, எளிதில் காயப்படக்கூடிய, அப்பாவி பெண்ணல்ல அப்போது  சென்றது . அல்லது தன்னுடைய  அம்மாவும்  நடிகையுமான  சந்தியா படப்பிடிப்புக்காக சென்னைக்குக்  கிளம்பிவிடக்கூடாது என்பதற்காக , தூங்கும்போது, அவரது சேலைத் தலைப்பை தன்னுடைய  கைகளில் சுருட்டி வைத்துகொண்டு படுத்த அந்த பிஞ்சுமனம் கொண்ட சிறுமியுமல்ல  இது .காலையில் எழுந்திருக்கும்போது, தன் கையிலிருப்பது அம்மாவினால் மெதுவாக மாற்றப்பட்ட சித்தியின்  சேலைத் தலைப்பு  என்பதையறிந்து  நாட்கணக்கில் அழுதழுது  ஏங்கிய  குழந்தையல்ல இது  .முன்னணி  நடிகையாக இல்லாமல் ஒரு சாதாரண  நடிகையாக தன் தாய் இருந்ததால்  கல்லூரியில் மேல்தட்டுப் பெண்களின் பரிகாசத்துக்கு ஆளாகி  மனதுக்குள்  வெதும்பிய குமரியல்ல  இது .தமிழ் சினிமாவில் தன் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள   'ஆடாமல்  ஆடுகிறேன் ...பாடாமல்  பாடுகிறேன்  ' என்று  புலம்பிய  பதுமையல்ல இது .சொல்லடிகளுக்கு பழக்கப் பட்டு , சோதனைகள் பலவற்றைக் கடந்து செல்லும் நெஞ்சுரம்  வாய்க்கப் பெற்ற   தமிழ்நாட்டின்  'முதற்பெண்மணி' அவர் ,இப்போது .

ஜெயலலிதா  தமிழில் நடித்து  முதன் முதலாக வெளி வந்த திரைப்படம்  'வெண்ணிற ஆடை '[14.04.1965]. வயது  வந்தோர் மட்டுமே பார்க்கக் கூடிய  விதத்தில் 'ஏ ' சான்றிதழ் அதற்கு  வழங்கப் பட்டிருந்தது . காரணம்  கதாநாயகி  ஜெயலலிதா சில காட்சிகளில் 'ஸ்லீவ்லெஸ் ரவிக்கையுடன் ' தோன்றினார்  என்பது .[இப்போதைய தணிக்கை அதிகாரிகள் தாராள மனம் கொண்டவர்கள் . ரவிக்கையைக்  கூட  அவர்கள் எதிர்பார்ப்பதில்லை ]என் வயது காரணமாக அப்போது  அந்த  'ஸ்லீவ்லெஸ் ரவிக்கையையோ ,வெண்ணிற ஆடையையோ பார்க்க முடியாமல் போய் விட்டது .

ஆயிரத்தில் ஒருவனில்தான்   ஜெயலலிதாவை இளவரசி பூங்கொடியாக முதன்முதலாகப்  பார்த்தேன் . அவரை அந்தப் படத்தில் பெட்டியில் அடைத்து கடத்தப்  பார்ப்பார்கள்  .அவரை  விற்பதற்கு ஏலம் போடுவார்கள் .சவுக்கால் அடிப்பார்கள்  .அவரை அடைய ஆண்கள் போட்டி போடுவார்கள்.நான் பார்த்த முதல் படத்திலேயே  அவருக்கு  எவ்வளவு  சோதனைகள்.

பின்னாட்களில்  நான் பார்த்த  வெண்ணிற ஆடையிலும் அவருக்கு  கிட்டுவது  சோகமான  முடிவுதான் .அதே ஆண்டில் வெளி வந்த அவருடைய மற்றைய திரைப்படங்கள்  கன்னித்தாய் ,நீ  ஆகியவை .தேவரின்  கன்னித்தாய்  'பச்சைத் தண்ணியில் சுட்ட  பலகார'  ரகம் .ஜெயலலிதா தன்னுடைய  மூன்றாவது  படமான  'நீ'யில் இரட்டை வேடங்களை ஏற்றுக் கொண்டதால் சற்று  சிரத்தையெடுத்து தன் நடிப்பை நிரூபிக்க வேண்டியிருந்தது .ஒருத்தி நடத்தை  சரியற்ற ,மோசடி செயல்களில் ஈடுபடும் பெண் .மற்றவள்  ஏழ்மையிலும்  ஒழுக்க  நெறிகளைக் கை விடாதவள் .முடிந்தளவு  அவர் சிறப்பாகவே  தன் பங்கை செய்திருந்தார்  என்றே சொல்ல வேண்டும் .

1966 இல்  வெளி வந்த குமரிப்பெண்ணில் அவர்தான் நாயகி .  .தோழிகளுடன் சேர்ந்து 'ஜிஞ்சின்னாக்கடி ...ஜிஞ்சின்னாக்கடி ...' என்று  ரவிச்சந்திரனைக்   கலாய்த்துப் பாடும் பாத்திரம் .பின்னாட்களில்  அவர்  ஏற்கப் போகும்  பாத்திரங்களுக்கான  'கட்டியமா'கக்  கூட இதைக்  கொள்ளலாம் .1966 இல் மோட்டோர் சுந்தரம்பிள்ளை  சிவாஜியின் இளைய மகளாக   நடித்த  ஜெயலலிதா  இரண்டு   ஆண்டுகளின் பின்னர்  கலாட்டா கல்யாணம் [1968] படத்தில்  சிவாஜிக்கு  ஜோடியாகி விட்டார் .மிகவும் பூரிப்புடனும் ,உற்சாகத்துடனும்  தன் கன்னச் சதைகளை அசைத்த படி சிவாஜியும்   'வந்த இடம் ..நீ  நல்ல  இடம்  வர  வேண்டும்  காதல்  மஹராணி ' என்று பாடி மகிழ்ந்தார் . .தமிழ்த் திரையுலகை பொறுத்தமட்டில் கதாநாயகர்களின்  பருவமும் வயதும் முன்னோக்கிப் பயணிக்க  விரும்புவதில்லை என்பதற்கு  இது ஓர் உதாரணம் .
அதன் பின்னர் ஜெயலலிதா நடித்த பல படங்களையும் பார்த்திருக்கிறேன் . ஒரு நடிகை என்ற வகையில்  ஜெயலலிதா என்னை  மிகவும் ஈர்த்தவர்  என்று  சொல்வதற்கில்லை .அவருடைய தனித்துவத்தை சுட்டிக்காட்டக் கூடிய அம்சங்களை  அதிகமாக  நான்  கண்டதில்லை ..தமிழ்த் திரையுலகில்  சிறப்பான நடிப்பை  வெளிப்படுத்திய  சாவித்திரி ,பத்மினி வரிசையில் அவரை அமர்த்த  முடியாது .ஏறத்தாழ  அவருடைய சமகாலத்தவர்களான  சரோஜாதேவி ,கே .ஆர் .விஜயா அளவுக்குக் கூட ஜெயலலிதாவைக்  கூற  முடியாது . சரோஜாதேவி தன்   'பைங்கிளிப் பேச்சாலும்  ',கே .ஆர் .விஜயா கடல் கொந்தளித்தாலும் ,புயல் சுழன்றடித்தாலும் ,கூரை  தன் தலை  மீது  வீழ்ந்தாலும்  கைவிடாத தன்   முத்துப்பல் சிரிப்பாலும்  பல ஆண்டுகள்  வரை தாக்குப் பிடித்தார்கள் .



 கே .ஆர் .விஜயாவின்  நடையுடை பாவனை  'குடும்பத்து  குத்து  விளக்கையும் , ஜெயலலிதாவின்  பாத்திர அமைப்புகள்  அதற்கு  நேர்மாறாகவும்  தமிழ் ரசிகர்களை சென்றடைந்தன . 'ஏய்  மிஸ்டர்  ' என்று  ஒரு காலத்தில் அதட்டலுடன்  அழைத்த   பானுமதியின்  வாரிசாக குறிப்பிட்ட சில  அம்சங்களில்  ஜெயலலிதா வெளிப்பட்டார்  .1960 களில் பி .சுசீலா அவர்களின் கண்ணியமான ,'புடவையை இழுத்துப் போர்த்திக்  கொண்ட ' குரல்  சரோஜாதேவி ,கே .ஆர் .விஜயா ஆகியோருக்கு பொருந்தி வருவதாக  எவ்வாறு  கருதப் பட்டதோ  அதே விதமாக நடிகை  ஜெயலலிதாவுக்கு  எல் .ஆர் .ஈஸ்வரி அவர்களின்  குரல்  கனகச்சிதமாக பொருந்திப் போனதாகக்  கருதப்பட்டது  .சற்றுத்  துடுக்கான ,கவர்ச்சியான நடையுடை பாவனைகளைக்  கொண்ட ,பிறரை  எடுத்தெறியும்  வகையான  'பணக்கார
வாலைக்குமரியாக ' திரையுலகில் வலம்  வந்த  ஜெயலலிதாவுக்கு  எல் .ஆர் .ஈஸ்வரியின்  கிறக்கம்  தரும்   குரல்  பொருந்திப்  போனதில்  வியப்பில்லை .[ஜெயலலிதாவும் நன்றாகப் பாடக் கூடியவர்தான் . 'அம்மா என்றால் அன்பி'ல் அரிச்சுவடியை ஒப்புவிக்கும் ஒரு பாலகியின் பயம் தென்பட்டாலும் கூட பின்னாட்களில்   அவர் பாடிய 'இரு மாங்கனி போல் இதழோரம் ','சித்திர மண்டபத்தில் ','தீபாராதனையில் ' ஆகியவற்றில்  கூச்சம் தெளிந்து  தேறியிருப்பார் ]

சில விதி விலக்குகளைத் தவிர அவர் படங்களில் ஏற்றிருந்த  பெரும்பாலான பாத்திரங்களும்  கதாநாயகர்களின் நிழல்களில்  ஒண்டிக்  கொண்டவை . வெண்ணிற ஆடை ,நீ ,யார்  நீ ?,மேஜர் சந்திரகாந்த் ,முத்துச்சிப்பி ,சூரியகாந்தி ,எங்கிருந்தோ வந்தாள் ஆகிய படங்களில் அவர் ஏற்றிருந்த பாத்திரங்களும் ,நடிப்புகளும் சிலாகித்துக்  கூறக் கூடியவை  .கதாநாயகர்களுக்கு சமமாக  நடிக்கக் கூடிய வாய்ப்புகள் கிட்டிய படங்களாக  கண்ணன் என் காதலன் ,அடிமைப்பெண் ,அனாதை ஆனந்தன் ,எங்க மாமா ,சவாலே  சமாளி ,சுமதி  என் சுந்தரி  ,திக்குத் தெரியாத  காட்டில் ,பட்டிக்காடா ,பட்டணமா ,பாட்டும் பரதமும் ஆகியவற்றை  சொல்லலாம்  .
ஆனால் அவருடைய மொத்தப் பங்களிப்பையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது  அவரை  சிறந்த நடிகையாகவோ,வெற்றிகரமான நடிகையாகவோ  சொல்ல  முடியவில்லை .அவர் கதாநாயகியாக நடித்து , வணிகரீதியாக வெற்றி பெற்ற  படங்கள்  மிகச்  சிலவே . ஆயிரத்தில் ஒருவன் ,குமரிப்பெண் ,காவல்காரன் ,நான் ,எங்க ஊர் ராஜா ,ஒளிவிளக்கு ,குடியிருந்த கோயில் ,அடிமைப்பெண் ,தெய்வமகன் ,நம்நாடு ,மாட்டுக்கார வேலன் ,ஆதிபராசக்தி ,சவாலே சமாளி ,பட்டிக்காடா பட்டணமா ,சூரியகாந்தி  போன்றவை .இவை கூட  ஜெயலலிதாவின்  பங்களிப்பினால் மாத்திரம்  வெற்றி பெற்றவையல்ல .ஓரிரு படங்களைத்  தவிர வழக்கம் போல் இவையெல்லாம் 'கதாநாயக  சினிமாக்கள்தான் '.
முக்கியமான நட்சத்திர நடிகர்கள் பலருடனும் இணைந்து  நடித்த  ஜெயலலிதாவின்  திரையுலக  ஏறுமுகம்  சீரானதாக இருந்திருக்க  வேண்டும் . ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவ்விதம்  அமையவில்லை .மாறாக அவர்  நாயக நடிகர்களின்  சதுரங்க ஆட்டத்தில் பகடைக்காயாக  அலைக்கழிக்கப் பட்டிருப்பதாகவே  கொள்ள  வேண்டும் திரையுலகில் அவர் நுழைந்ததன் பின்னர் வந்த சுமார் எட்டு வருடங்கள் மாத்திரமே  அவருக்கு உற்சாகமளித்திருக்கக்  கூடியவை .1973 க்குப் பின்னர்  வந்த எந்தப் படங்களும்  அவருக்குக் கை  கொடுக்கவில்லை .மிகப் பெரிய ஆத்மார்த்த   நாயகனாக  அவர்  நினைத்திருந்த  எம் .ஜி .ஆரின்  சொந்தத் தயாரிப்பான  'உலகம் சுற்றும்  வாலிபனி'ல் மூன்று  நாயகிகள் தோன்றினார்கள் .ஆனால் அதில்  ஜெயலலிதாவுக்கு இடமிருக்கவில்லை . எம்.ஜி.ஆர் .,சிவாஜி  போன்ற  திரையுலக ஆதிக்க சக்திகளின்  ஆடுகளத்துக்கு   மஞ்சுளா ,லதா ,ராதா சலூஜா ,உஷா நந்தினி போன்ற  புதிய  முகங்கள்  அப்போது வந்து  சேர்ந்திருந்தன .1977 இல் ஸ்ரீகிருஷ்ண லீலா படத்தில்  நடித்த  ஜெயலலிதா தன்னுடைய  அடுத்த படமான  'நதியைத்  தேடி  வந்த  கடல் ' படம் வெளி வர   சுமார்  மூன்று  வருடங்கள்  காத்திருக்க  வேண்டியிருந்தது .
இந் நிலையில் சினிமாவைப் போலவே அவர் அரைகுறை மனதுடன் தவிர்க்க முடியாமல் அரசியல் பாதையையும்  தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கலாம் .முன்னையது நெருஞ்சி முட்கள் நிறைந்த பாதை .பின்னையது  கள்ளிச்செடிகளின்  காடு .ஆனாலும் அதிகாரத்தின் ருசியுடன் கூடிய இரண்டாவது  வாழ்க்கை  அவருக்கு  மிகுந்த மகிழ்ச்சியையே  அளித்திருக்கும் .தன்னைப் பயன்படுத்தியவர்களையும் ,ஏறி மிதித்தவர்களையும்  திருப்பி  அடிக்கும்  வாய்ப்பைக் காலம்  அவருக்கு  வழங்கியிருந்தது .அண்ணாந்து பார்த்து  கும்பிடு போட்ட ஆண்களையும்  ,முதுகுகள் வளைய தன் கால்களைத்  தொட்டு  வணங்கிய அதிகார வர்க்கத்தினரையும் பார்த்து மனதுக்குள் அவர் புன்னகைத்திருக்கக் கூடும் .
ஜெயலலிதாவின் அண்மைக்காலம் பரபரப்புகள் நிறைந்த உச்சக் காட்சிகள் பலவற்றைக் கொண்ட திரைப்படத்துக்கு நிகரானது . ஆதரவாளர்கள் புடை  சூழ  உச்சநீதிமன்றத்துக்கு  அவர் செல்லுகிறார்.அங்கே அவருக்குப் பாதகமான தீர்ப்பு கிடைக்கின்றது  . சிறையிலடைக்கப் படுகின்றார் .மேன் முறையீடு செய்து  விடுதலை ஆகிறார் . மீண்டும் பவனி  வருகின்றார் .தேர்தல் வருகின்றது .ஆகாயத்தில் பறக்கின்றார் .தனியாளாக கட்சியை தோளில் சுமந்து சுற்றிச் சுழன்று  வருகின்றார் .எவருடனும்  கூட்டணி  வைக்காமல் தனித்து நின்று  ஜெயித்துக்  காட்டுகிறார் . அடுத்த உச்சக் காட்சி . வைத்தியசாலையில் அவர்  அனுமதிக்கப்  படுகின்றார் .சுமார் இரண்டரை மாதம்  வெளியுலகின் பார்வையிலிருந்து  மறைந்து போகின்றார் .நடுவில் ஏகப் பட்ட  வதந்திகள் ;ஊகங்கள் .
கடைசியில்  அவர் காலமாகி  விட்டதாக  செய்தி  வருகின்றது .
இந்த முத்தாய்ப்புடன்  திரை இறக்கப் படுகின்றது .

ஜெயலலிதா பங்கேற்ற எந்தவொரு  திரைப்படத்திலும்  பார்க்க அவருடைய போராட்டம்  நிறைந்த ,பரபரப்பான ,தனிமை  மிக்க வாழ்க்கைதான்  மிகவும்  நெகிழ்ச்சியூட்டும்  திரைப்படமாக  மனதில் என்றென்றும்  நிலைத்திருக்கும்  .

No comments: