இலங்கைச் செய்திகள்


அச்சத்திலும் சந்தோசத்திலும் மக்கள் : 32 வருடங்களின் பின்னர் வவுனியாவில் நிகழ்ந்த சம்பவம்

புனர்வாழ்வளிக்கப்பட்ட மற்றுமொரு முன்னாள் போராளி மரணம்

புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு செலவிடப்பட்ட தொகை தெரியுமா ? மரணமடைந்த பொதுமக்கள், புலிகள், இந்திய அமைதிப் படையினரின் எண்ணிக்கை தெரியுமா? : அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மேனன்

ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி. கொலை : பிள்ளையான் உட்பட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு.!

கொழும்பு கதிர்காம  வீதியை மறித்து ஹம்பாந்தோட்டை மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டு.மங்களராம விகாராதிபதி பிணையில் விடுதலை.!

ஊடகவியலாளரை  தாக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டம்

எமில் காந்தனுக்கு பிடியாணை

துறைமுக ஊழியர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் கைவிடப்பட்டது.!

மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மலேஷியாவில் ஆர்ப்பாட்டம் ; முழு பாதுகாப்பு வழங்கப்படும் என்கிறது மலேஷிய அரசு

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் வேனில் பயணித்த 10 பேர் மரணம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலேசிய மன்னரை சந்தித்தார்

நாமல் ராஜபக்ஷ நிதிமோசடி விசாரணைப்பிரிவில் ஆஜர்


அச்சத்திலும் சந்தோசத்திலும் மக்கள் : 32 வருடங்களின் பின்னர் வவுனியாவில் நிகழ்ந்த சம்பவம்


12/12/2016 வவுனியா, நெடுங்கேணி ஒலுமடு  கிராமத்தில் ஒரு தொகை முரளி மரம் பழுத்து குலுங்கியுள்ளது. இதனால் ஒரு பகுதியினர் அச்சத்திலும், ஒரு பகுதியினர் சந்தோசத்திலும் பழத்தினை பிடுங்கி விற்பனை செய்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றனர்.
 இதேபோன்று 1984 ஆம் ஆண்டு முரளி மரம் பழுத்து குலுங்கியுள்ளது. இக் காலப்பகுதியில்  மக்கள் பெரும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் 32 ஆண்டுகளின் பின்னர் தற்போது  அதிகப்படியான பழம் காய்த்துள்ளமையால் 1984 ஆண்டு ஏற்பட்ட வறட்சி போன்று தற்போதும் ஏற்பட்டு விடுமா என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
 இதேவேளை குறிப்பிட்ட சிலர் பழங்களை பிடுங்கி ஒரு கிலோகிராம் 160 ரூபா தொடக்கம் 200 ரூபா வரை விற்பனை செய்து வருகின்றார்கள். 
மேலும்  ஒரு சிலர் பழங்களை பிடுங்குவதற்காக மரம் அறுக்கும் கருவியை பயன்படுத்தி   மரங்களை அறுத்து விழுத்துவதனால்  அவ்விடத்தில் பொலிசாரும், வனவள பகுதியினரும்  குவிக்கப்பட்டுள்ளனர்.

 நெடுங்கேணி ஒலுமடு, ஊஞ்சால்கட்டி, மருதோடை, காஞ்சிர மோட்டை வயல் பிரதேசம், முல்லைத்தீவு  தண்ணிமுறிப்பு பகுதிகளிலும்  முரளிப்பழம் பழுத்து குலுங்கியுள்ளமை  குறிப்பிடத்தக்கது. 
 நன்றி வீரகேசரி புனர்வாழ்வளிக்கப்பட்ட மற்றுமொரு முன்னாள் போராளி மரணம்

12/12/2016 முல்லைத்தீவு, வற்றாப்பளை பகுதியை சேர்ந்த புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான முன்னாள் போராளி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
சுகவீனம் காரணமாக திருகோணமலை குச்சவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியில் வசித்து வந்த இராசதுரை திக்சன் வயது 26 என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போரின்போது இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் வெலிக்கந்தை திருகோணமடு புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த திக்சன், கடந்த இரண்டரை வருடங்களின் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில் விடுதலைசெய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் திக்சன், சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.     நன்றி வீரகேசரி புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு செலவிடப்பட்ட தொகை தெரியுமா ? மரணமடைந்த பொதுமக்கள், புலிகள், இந்திய அமைதிப் படையினரின் எண்ணிக்கை தெரியுமா? : அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மேனன்

13/12/2016 விடுதலைப்புலிகளுடன் நடைப்பெற்ற யுத்தத்திற்காக இலங்கை அரசு சுமார் 200 பில்லியன் அமெரிக்க டொலரை செலவு செய்ததாக முன்னாள் இலங்கைக்கான இந்திய தூதுவராக கடமையாற்றியவரும்  இந்திய மத்திய அரசின்  பாதுகாப்பு ஆலோசகருமான சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
 அவர் எழுதியுள்ள ஓர் புத்தகத்திலேயே இந்த விபரங்களை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் போராளிகள் உள்ளிட்ட இரண்டு தரப்பிலும் ஒரு இலட்சம் பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 
யுத்தத்தால் சுமார் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் வாரையிலான  பொது மக்கள் இறந்திருக்கலாமெனவும் இதில் தமிழ் சிங்கள மக்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தில் சுமார் 27693 விடுதலைப் புலிகள்   மரணமடைந்துள்ள அதேநேரம் அரசு படைகள் சுமார் 23790 பேர் இறந்திருப்பதாகவும் என தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அமைதிகாக்கும் படையை சார்ந்த 1155 பேர் உயிரிழந்ததாவும் 3 இலட்சம் பேர் இடம் பெயர்ந்ததாகவும் வடக்கு – கிழக்கில் சுமார் 1.6 மில்லியன் மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருந்ததாகவும் தனது நூலில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த போருக்கு இருதரப்பினருமே காரணம் எனவும் இவர் மேலும் குறிப்பிடுட்டிருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.   நன்றி வீரகேசரி ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி. கொலை : பிள்ளையான் உட்பட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு.!

14/12/2016 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் உட்பட 4 பேரினதும் விளக்கமறியல்; எதிர்வரும்  28ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் இன்று இவர்களை ஆஜர்படுத்தியபோதே, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித்; தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல் ஆகியோருக்கே விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில்; நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட 4  பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர். இந்தக்; கொலைச்; சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் கடந்த 11.10.2015 அன்று கைதுசெய்யப்பட்டிருந்தார்.  நன்றி வீரகேசரி கொழும்பு கதிர்காம  வீதியை மறித்து ஹம்பாந்தோட்டை மக்கள் ஆர்ப்பாட்டம்

 
14/12/2016 தமது நிலத்தை சீன நிறுவனத்துக்கு விற்பனை செய்ய உள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹம்பாந்தோட்டை பிரதேசவாசிகள் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பு கதிர்காம பிரதான வீதியை மறித்து மிரிஜாவில சந்தியில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் கொழும்பு கதிர்காமத்திற்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 

மட்டு.மங்களராம விகாராதிபதி பிணையில் விடுதலை.!

14/12/2016 மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாராதிபதியும் கிழக்கு மாகாண பிரதி சங்கநாயக்கருமான அம்பிட்டியே சுமணரத்ன தேரரை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணை இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த தேரரை 50 ஆயிரம் ரூபா இரு சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறும் மீண்டும் ஜனாவி 25ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பொது பல சேனவின் வருகை தொடர்பாக மட்டக்களப்பு நகரில் கடந்த 3 ஆம் திகதி பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. பொது பல சேனவின் வருகை தடுக்கப்பட்டதை அடுத்து, நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட தடை உத்தரவை மீறி மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமண ரத்ன தேரரால் மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தேரரின் ஆர்ப்பாட்டத்துக்கு மட்டக்களப்பு நகரில் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், பொதுமக்களை பிரதான வீதியில் ஒன்றுதிரட்டி சமாதானத்துக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் கலகத்தை உருவாக்குவதற்கு உடந்தையாக இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர் மீது மட்டக்களப்பு பொலிஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
தேரார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 
ஊடகவியலாளரை  தாக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டம்

15/12/2016 அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வைத்து ஊடகவியலாளர் ஒருவரை தாக்கிய சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தினை ஊடக அமைப்புகள் இணைந்து முன்னெடுத்துள்ளன.
கடந்த டிசம்பர் 10 ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வைத்து ஊடகவியலாளர் மீது கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன தாக்கிய சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.    நன்றி வீரகேசரி

எமில் காந்தனுக்கு பிடியாணை

15/12/2016 தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான எமில் காந்தனுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (15) திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.
ராடா நிறுவனத்திலிருந்த பொதுமக்களின் 169 மில்லியன் ரூபாய் பணத்தை மோடி செய்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே குறித்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி

துறைமுக ஊழியர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் கைவிடப்பட்டது.!

15/12/2016 துறைமுக அதிகார சபையில் தம்மை இணைக்குமாறு கோரி, ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் சிலர் ஆரம்பித்த சத்தியாகிரகப் போராட்டம் கைவிடப்பட்டது.
கடந்த 8 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு குறித்த போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
நாட்டிற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு வழங்குவதற்கு எடுக்கப்படும் முயற்சியினால் தமது தொழில் தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தே இந்த சத்தியாகிரகப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.  நன்றி வீரகேசரிமைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மலேஷியாவில் ஆர்ப்பாட்டம் ; முழு பாதுகாப்பு வழங்கப்படும் என்கிறது மலேஷிய அரசு

15/12/2016 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மலேஷியாவில்  ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளதாக கூறப்படுகின்றமை தொடர்பில் மலேஷியாவின்   பாதுகாப்பு தரப்பினருக்கு தெரியும். அது  தொடர்பில் நாங்கள் கவலையடையவேண்டியதில்லை. ஆனால் அது  தொடர்பில் இந்நாட்டு     அரசாங்கம் தேவையான  நடவடிக்கைகளை  எடுக்கும்.   தேவையான   பாதுகாப்பை    மலேஷிய அரசாங்கம் வழங்கும் என்று மலேஷியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சார்  தெரிவித்தார். 
ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றமை குறித்து நாங்கள் கவலையடையவேண்டியதில்லை.ஜனநாயக நாட்டில் ஜனநாயக சூழலில் இவ்வாறான  ஆர்ப்பாட்டங்ககள் நடப்பதுண்டு. அது  தொடர்பில் நாங்கள் கவலையடைய வேண்டியதில்லை.    இதனால்  எமது  நிகழ்ச்சிநிரலில் எவ்வாறான    தடையும்  ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டார். 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று  உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு  மலேஷியாவுக்கு சென்றுள்ள நிலையில் அவருக்கு எதிராக  கோலாலம்பூரில்  புலம் பெயர்ந்தோர் ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறித்து வினவியபோதே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மலேஷியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சார் இது குறித்து மேலும் குறிப்பிடுகையில் 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மலேஷியாவில்    ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளதாக கூறப்படுகின்றமை தொடர்பில் மலேஷியாவின்   பாதுகாப்பு தரப்பினருக்கு தெரியும். நாம் அது தொடர்பில்  மலேஷிய பாதுகாப்பு  தரப்பினருக்கு அறிவித்துள்ளோம். 
பாதுகாப்பு தரப்பினர்  தேவையான  நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இது   ஒரு சிறிய குழுவினால் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.  
மலேஷியாவில் தமிழ்  புலம்பெயர்  மக்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் இதில்  தொடர்புபட்டுள்ளார்களா என்று கூற முடியாது. அது  தொடர்பில் நாங்கள் கவலையடையவேண்டியதில்லை. ஜனநாயக நாட்டில் ஜனநாயக சூழலில் இவ்வாறான  ஆர்ப்பாட்டங்ககள் நடப்பதுண்டு.  ஆனால் அது  தொடர்பில் இந்நாட்டு     அரசாங்கம் தேவையான  நடவடிக்கை எடுக்கும்.   தேவையான   பாதுகாப்பை    மலேஷிய அரசாங்கம் வழங்கும். 
அது  தொடர்பில் நாங்கள் கவலையடைய வேண்டியதில்லை.    இதனால்  எமது  நிகழ்ச்சிநிரலுக்கு  எவ்வாறான    தடையும்  ஏற்படாது. 
மலேஷியாவுடனான  எமது உறவு பழமையானது.   மலேஷியாவுக்கு 1957 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்ததும் அதனை நாங்கள் அங்கீகரித்து  இராஜ தந்திர உறவை ஆரம்பித்தோம். வர்த்தக  உறவில் சிறந்த  முன்னேற்றம் இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படுகின்றது. 
மலேஷிய பிரதமருடனான  இருதரப்பு சந்திப்பின்போது  ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன.  குறிப்பாக  இளைஞர்  ஒத்துழைப்பு   சுற்றுலா, விவசாயம், பெருந்தோட்டத்துறை, கலாசாரம் ஆகிய துறைகளில் ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன.   இதன்மூலம் இரண்டு நாடுகளுக்கும்   எதிர்காலத்த் பாரிய நன்மைகள் கிடைக்கும். அரசியல் பொருளாதார உறவு  மேலும் வளர்ச்சியடையும் என்றார்.   நன்றி வீரகேசரி


யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் வேனில் பயணித்த 10 பேர் மரணம்

17/12/2016 யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, சங்கத்தானை  புகையிரத  நிலையத்திற்கு முன்னால் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் சுற்றுலா பயணிகள் 10 பேர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர்.
மாதம்பயில் இருந்து சுற்றுலாப் பயணிகளுடன்  யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கயஸ் வாகனமும் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் இன்று பிற்பகல் 1:30 மணியளவில்  நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் சிக்கி கயஸ்  வாகனத்தில் பயணித்த  3 பெண்களும் 7 ஆண்களும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாகவும், கயஸ் வாகனத்தில் பயணித்த ஏனைய மூன்றுபேர்  காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு  இப்பொழுது யாழ்  போதனா  வைத்திய சாலைக்கு  மாற்றப்பட்டுள்ளனர்  அத்துடன் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில்  பயணித்த பலர் காயமடைந்துள்ளதாகவும்  எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார் 
இதேவேளை உயிரிழந்த 10 பேரது சடலங்களும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்படவுள்ளதாக ரெதரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலேசிய மன்னரை சந்தித்தார்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு மலேசியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் மலேசிய மன்னர் சுல்தான் முஹம்மதுக்குமிடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
மலேசிய அரச மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, மலேசிய மன்னர் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.
மிகவும் சுமுகமாக இடம்பெற்ற இச்சந்திப்பின் போது இலங்கையின் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளைப் புகழ்ந்து பேசிய மலேசிய மன்னர், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையிலான இணக்க அரசாங்கத்தின் செயற்பாடுகளையும் பாராட்டினார்.
இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு தான் மலேசிய அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட மன்னர் சுல்தான் முஹம்மத், இலங்கையின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
நல்லிணக்கம், அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் பொருளாதார அபிவிருத்தியை நோக்கி புதிய இணக்க அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, மலேசிய மன்னருக்கு விளக்கினார்.
மலேசிய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிவரும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்வதற்கு மலேசியாவின் உதவி தொடர்ந்தும் கிடைக்கும் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
2016 ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்த மன்னர் சுல்தான் முஹம்மத் மலேசியாவின் மன்னர்களில் மிகவும் குறைந்த வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி

நாமல் ராஜபக்ஷ நிதிமோசடி விசாரணைப்பிரிவில் ஆஜர்

16/12/2016 பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பொலிஸ் நிதிமோசடி விசாரணைப்பிரிவில் ஆஜராகியுள்ளார்.
நாமல் ராஜ­ப­க்ஷ­வுக்கு சொந்­த­மா­னது என கூறப்­படும் ஹெலோ கோப் நிறு­வ­னத்தில் இடம்பெற்ற நிதிமுறைகேடு தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே இவர் நிதிமோசடி விசாரணைப்பிரிவிக்கு வருகைத்தந்துள்ளார்.   நன்றி வீரகேசரி


No comments: