உலகச் செய்திகள்


சென்னையில் கோர தாண்டவமாடும் 'வர்தா' : கார்கள் பறந்தன, பலமாடி கட்டிடங்களின் கண்ணா சரிந்து விழுந்தன ( காணொளி இணைப்பு)

வர்தாவின் தாக்கம் : 9 பேர் பலி, 40 பேர் காயம், 3,384 மரங்கள், 3,400 மின்கம்பங்கள் பலத்த காற்றில் விழுந்தன

சீரமைப்பு பணிகள் தீவிரம் : முதல்வர் ஓ.பி.எஸ். நேரில் சந்தித்து ஆறுதல்

16 வருடங்களுக்கு முன்னர் உயில் எழுதினாரா ஜெயலலிதா.?

மிகையில் கோர்பச்சோவ்: பேரரசை இழந்த மனிதர்  - பி.பி.சி

இந்தோனேசியாவில் விமான விபத்து : 13 பேர் பலி













சென்னையில் கோர தாண்டவமாடும் 'வர்தா' : கார்கள் பறந்தன, பலமாடி கட்டிடங்களின் கண்ணா சரிந்து விழுந்தன ( காணொளி இணைப்பு)

12/12/2016 

சென்னையில் வர்தா புயலால் பலத்த காற்று வீசி வருகிறது. சூறாவளி காற்றால் வீதிகளில்  நிறுத்தப்பட்டிருந்த கார்கள் தூக்கி வீசப்பட்டுள்ளதோடு  பல மாடிக் கட்டிடங்களின் கண்ணாடிகள் சரிந்து விழுந்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
 வர்தா புயல் காரணமாக பாதுகாப்பு கருதி 4 மாவட்டங்களில் 4622 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை புயல் காரணமாக மூவாயிரத்துக்கும் அதிகமான மின்கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளமையால் மின்சார சேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.
வர்தா புயல், சென்னைக்கு அருகே பழவேற்காடு - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை  கடக்க ஆரம்பமாகியுள்ளதால் 120 முதல் 140 கி.மீ., வேகத்தில் காற்று வீசுவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
 வர்தா புயல் காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூரில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்வதால் மக்கள் வீடுகளை விட்டு இரவு 7 மணிவரை வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

சூறாவளி காற்று வீசிவருவதால் சென்னையின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 
கடைகள், வணிக நிறுவனங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள் சூறைகாற்றால் தூக்கி வீசப்பட்டன.
பலத்த காற்றால் ஆங்காங்கே வீதிகளில்; மரங்கள் வேறுடன் முறிந்து விழுந்தன. வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன. 
இதனிடையே சென்னை டிஎல்எப் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் காற்றில் பறந்தன. அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.   நன்றி வீரகேசரி 
















வர்தாவின் தாக்கம் : 9 பேர் பலி, 40 பேர் காயம், 3,384 மரங்கள், 3,400 மின்கம்பங்கள் பலத்த காற்றில் விழுந்தன

13/12/2016 120 தொடக்கம் 140 கிலோ மீற்றர் வேகத்தில் வீசிய வர்தா புயல் காரணமாக சென்னையில் 9 பேர் உயிரிழந்துள்ளதோடு 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 
சென்னையில் வார்தா புயல் பாதிப்பு குறித்து  வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வார்தா புயல் மழை காரணமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 296 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 97 மையங்களில் 8,008 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 10,754 உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
தேசிய பேரிடர் மீட்புப் படைகள் காஞ்சீபுரத்தில் 2, திருவள்ளூரில் 3, சென்னையில் ஒன்றுமாக பணியமர்த்தப்பட்டுள்ளன. சென்னை மற்றும் திருவள்ளூரில் தலா 2 மாநில பேரிடர் மீட்புப்படைகள் பணியமர்த்தப்பட்டுள்ளன.
இதுவரை புயல் மழைக்கு 9 பேர் இறந்துள்ளனர். சென்னை மூலக்கடையில் குளிர் தாங்காமல் ஒருவரும், ஏழுகிணறு வைத்தியநாதன் தெருவில் வீடு இடிந்து ஆண் ஒருவரும், சூளைமேட்டில் சுவர் இடிந்து ஒரு பெண்ணும், வடபழனியில் சுவர் இடிந்து ஒரு குழந்தையும், தண்ணீரில் மூழ்கி ஒருவரும் இறந்துள்ளனர்.

மீனம்பாக்கத்தில் விளம்பர போர்டு விழுந்து ஒருவரும், ராஜமங்கலம் கொளத்தூர் செல்வி நகரில் விளக்கு கம்பம் விழுந்து வைகுண்டநாதன் (வயது 42) என்பவரும், திருவள்ளூர் மாவட்டம் போரூரில் சுவர் இடிந்து எல்பர்ட் என்கிற ராஜசேகரன் (23), செங்கல்பட்டு மேல்மெய்யூரில் அஸ்வதி (8) என்ற சிறுமி சுவர் இடிந்தும் பலியாகி உள்ளனர்.
திருவள்ளூரில் 21 குடிசைகள், காஞ்சீபுரத்தில் ஒரு குடிசை, விழுப்புரத்தில் 2 குடிசைகள் உள்பட 47 குடிசைகள் சேதமடைந்துள்ளன. 
இதுவரை 3,384 மரங்கள் விழுந்தன. அதில் 297 மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. 3,400 மின்கம்பங்கள் சாய்ந்துவிட்டன. 
30 மின்சார டிரான்ஸ்போர்மர்கள் சேதம் அடைந்தன. 297 வீதிகள் மூடப்பட்டுள்ளன. நிலைமை சீரான பிறகு 89 வீதிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
52 போக்குவரத்து சமிக்ஞை கம்பங்களும், 78 பஸ் நிறுத்த கூரைகளும் காற்றில் விழுந்தன.
சென்னையை கடும் சூறைக் காற்றுடன் புரட்டிப் போட்ட வர்தா புயல், சென்னை துறைமுகத்தில் நேற்று திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு கரையைக் கடந்தது.
கடும் மழை  
புயல் கரையைக் கடந்தாலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கடும் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புயலின் சீற்றம் காரணமாக 9க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர்.
சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் 120 தொடக்கம் 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய கடுமையான சூறைக் காற்று காரணமாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதோடு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.
சென்னையில் அதிக பாதிப்பை வர்தா புயல் ஏற்படுத்தியதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது.
2ஆவது புயல் வர்தா: 
தமிழகத்தில் காலதாமதமாக வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் நவம்பர் 30ஆம் திகதி நடா புயல் உருவாகியது. இந்தப் புயலானது கரையைக் கடப்பதற்கு முன்பே வலுவிழக்கத் தொடங்கியது. 

இதன் காரணமாக, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் சில இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. 
இருப்பினும், நடா புயலானது காரைக்கால் அருகே டிசம்பர் 2ஆம் திகதி கரையைக் கடந்தது.
வர்தா புயல் 
தென்கிழக்கு வங்கக்கடலில் டிசம்பர் 7ஆம் திகதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. 
இது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறி, விசாகப்பட்டினத்தின் அருகே நிலை கொண்டிருந்தது. 
இதனையடுத்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புயலாக மாறியது. வர்தா என்று பெயரிடப்பட்ட இந்தப் புயலானது தீவிர புயலாக மாறியது.
வடமேற்கு திசையில் நகர்வு: 
இந்தப் புயலானது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்தது. மணிக்கு மெதுவாக 2 கி.மீ. வேகத்தில் மட்டுமே நகர்ந்து கொண்டிருந்த புயலானது, ஆந்திர மாநிலம் நெல்லூர்-காகிநாடா இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டது. இதனால் தமிழகத்துக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டது.
திசை மாறி தாக்கிய புயல்: 
இந்த நிலையில், புயலின் திசையானது மேற்கு தென்மேற்காக மாறத் தொடங்கியது. இதன் காரணமாக, புயலானது அதிதீவிர புயலாக மாறி சென்னையை நோக்கி நகரத் தொடங்கியது. மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த புயலானது, சென்னைக்கு அருகே திங்கள்கிழமை நண்பகல் கரையைக் கடக்கத் தொடங்கியது. இதையடுத்து, சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நள்ளிரவு முதல் மழை: 
சென்னைக்கு அருகில் 300 கி.மீ. தொலைவில் வர்தா புயல் சென்றபோதே, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதலே மழை பெய்யத் தொடங்கியது.
2 பிரிவுகளாக கரையைக் கடந்தது: 
வர்தா புயலானது திங்கள்கிழமை 2 பிரிவுகளாக மாறி கரையைக் கடந்தது. புயலின் மத்தியப் பகுதியானது திங்கள்கிழமை நண்பகல் 12 மணி முதல் 3.30 மணி வரை கரையைக் கடந்தது.
இதன் காரணமாக திங்கள்கிழமை காலை முதலே சென்னை உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் கன மழை பெய்யத் தொடங்கியது. புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் சூறைக் காற்றுடன் மழை பெய்துள்ளது.

வீட்டுக்குள் அனைவரும் முடக்கம்: 
புயலின் கிழக்குப் பகுதியானது மாலை 4 மணி முதல் 6.30 மணியளவில் கரையைக் கடந்தது. புயலானது கரையைக் கடந்தபோது மணிக்கு 120 முதல் 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. காற்றின் வேகத்தாலும், மழையின் தாக்கத்தாலும் மக்கள் வெளியே வராமல், வீடுகளிலேயே முடங்கினர்.
மேலும் வலுவிழக்கும்: 
புயல் கரையைக் கடந்து நிலப்பகுதிக்குள் நகர்ந்து செல்ல போது மேலும் வலுவிழக்கும். காற்றின் வேகமும் படிப்படியாகக் குறையத் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஸ்ரீஹரிகோட்டா நோக்கிச் சென்ற காற்று...: இது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் கூறியது:-
அதிதீவிர புயல் வர்தா, சென்னை துறைமுகப் பகுதியில் நுழைந்து கரையைக் கடந்து திங்கள்கிழமை இரவு கிழக்கு திசையை நோக்கிச் செல்கிறது. இதன் காரணமாக மரக்காணம் முதல் ஸ்ரீஹரிகோட்டா வரை மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும்.
வலுவிழக்கும்: 
புயல் கரையைக் கடந்த பிறகு, தொடர்ந்து வலுவிழக்கத் தொடங்கும். இதன் காரணமாக மழையின் தாக்கமும், காற்றின் வேகமும் குறையத் தொடங்கும். இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் கன மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
  காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் திங்கள்கிழமை அதிகபட்சமாக 160 மி.மீ. மழையும், அதற்கு அடுத்தபடியாக ஸ்ரீபெரும்புதூரில் 150 மி.மீ. மழையும் பெய்துள்ளது.
மீனவர்களுக்கு தொடர் எச்சரிக்கை: 
புயலானது கரையைக் கடந்தாலும், தென்தமிழக கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகம் வரையில் பலமான காற்று இன்று வீசக்கூடும்.
மேலும் தமிழகம், புதுவை கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும், சீற்றத்துடன் காணப்படும். எனவே மீனவர்கள் இன்று செவ்வாய்க்கிழமையும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வேண்டப்பட்டுள்ளனர்.
 கடலோரப் பகுதிகளில் குடிசைப் பகுதியில் வசிப்போர் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.   நன்றி வீரகேசரி 













சீரமைப்பு பணிகள் தீவிரம் : முதல்வர் ஓ.பி.எஸ். நேரில் சந்தித்து ஆறுதல்

14/12/2016 வார்தா புயல் பாதித்த சில பகுதிகளுக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இதையொட்டி நேற்று மதியம் 12 மணியளவில் முதலமைச்சர் பன்னீர்செல்வம் சென்னை மாநகராட்சி செயல்படும் ரிப்பன் மாளிகைக்கு வந்து ஆலோசனை நடத்தினார். சென்னையில் புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை விரைந்து செயல்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை விரைந்து முடிக்கவும், மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 
அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்ட முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோர் பாடி பகுதிக்கு சென்றனர். அங்கிருந்து மாத்தூர் சென்ற முதலமைச்சர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்த்துவிட்டு, பெரியபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் உணவு அருந்தினார்.
அதை தெரிந்துகொண்ட பெரியபாளையம் நெடுஞ்சாலை அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த பொதுமக்கள் 70க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து உணவகத்தின் வாசல் முன்பு கூடினர். 
தங்கள் பகுதிகளில் பல வருடங்களாக மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை அதிகாரிகளிடம் இதைபற்றி கூறியும் அவர்கள் அதை சரி செய்யவில்லை. இதனால் முதல்வர் எங்கள் பகுதிக்கு வந்து பார்வையிட்டு, அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்து தந்தால் தான் நாங்கள் இங்கிருந்து கலைந்து செல்வோம் என்று அவர்கள் கூறினர்.
இதை உணவகத்தில் இருந்து பார்த்த முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பொதுமக்கள் அருகே வந்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதை உடனே நிவர்த்தி செய்ய தலைமை செயலாளர் ராமமோகன ராவுக்கு உத்தரவிட்டார். 
அங்கிருந்து புறப்பட்ட முதலமைச்சர்  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடுக்கு சென்றார். அங்கே பாதிப்புக்கு உள்ளான பகுதிகளை பார்வையிட்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அவர்கள் அளித்த மனுக்களை வாங்கி படித்து பார்த்துவிட்டு, கூடிய விரைவில் உங்கள் பிரச்சினை சரிசெய்யப்படும் என்று உறுதிமொழி அளித்தார்.
அதன்பின்பு, அங்குள்ள முகத்துவாரத்துக்கு (ஏரி) சென்று பார்வையிட்டார். அதை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை பார்த்த சந்தோஷத்தில் அவரை பொதுமக்கள் சுற்றிக்கொண்டனர். அவர்களிடம் முதலமைச்சர் கை குலுக்கி பேசினார். அதன்பின்பு அங்கிருந்து புறப்பட்ட முதலமைச்சர் பொன்னேரி பகுதியில் புயலினால் பாதிக்கப்பட்டு, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்களை பார்த்து ஆறுதல் சொல்லி, நிவாரண உதவிகளை வழங்கினார். 
கத்திவாக்கம் பகுதியில் நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்காக சமைக்கப்பட்ட உணவை பரிசோதித்த அவர் அங்குள்ளவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். 
பின்னர், பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்ற முதலமைச்சர், பாதிப்பு குறித்து கலெக்டரிடம் கேட்டறிந்தார். அதன்பின்பு, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளை விரைந்து முடிக்கவும், நிவாரண பணிகளை தொய்வில்லாமல் வழங்கவும் உத்தரவிட்டார். பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து செயல்படுத்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.   நன்றி வீரகேசரி 















16 வருடங்களுக்கு முன்னர் உயில் எழுதினாரா ஜெயலலிதா.?

15/12/2016 மறைந்த ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களா, கொடநாடு எஸ்டேட், ஹைதராபாத் திராட்சை தோட்டம் உள்ளிட்ட சொத்துக்கள் யாருக்குச் சொந்தம் என்று தமிழ்நாட்டில் பரபர விவாதங்கள் நடைபெறும் வேளையில், ஜெகன் மோகன் ரெட்டிக்குச் சொந்தமான ஆந்திராவில் வெளிவரும் ‘சாக்‌ஷி’ (விட்னஸ்) பத்திரிகையில், '16 ஆண்டுகளுக்கு முன்னரே ஜெயலலிதா தன் சொத்துக்களை இரத்த உறவுகளின் பெயரில் உயில் எழுதி வைத்து விட்டார்' என செய்தி வெளியிட்டிருக்கிறது.
கடந்த 2000 ஜூலை 14ம் திகதி அன்று டாக்குமென்டரி புத்தகத்தில் 3132ம் எண்ணில் ஹைதராபாத், பஷிராபாத் ஜெ.ஜெ. கார்டன் முகவரியில் நமது எம்.ஜி.ஆர். பெஸ்ட் சாரிடபிள் டிரஸ்ட்' என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த அறக்கட்டளைக்கு சசிகலா, தினகரன், பாஸ்கரன், புவனேஸ்வரி என நான்கு நபர்களை நிர்வாகிகளாக நியமித்தார். அதன் பின்பு சந்தேகம் தோன்றவே 'சாரிடபிள் செயல்பாடுகள் எதுவாக இருந்தாலும் நிர்வாகிகள் என்னைக் கலந்து ஆலோசித்த பிறகே செயல்பட வேண்டும்' என்று ஜெயலலிதா அறிவித்தார்.
தொடர்ந்து 2001இல் டிரஸ்ட் செயல்பாடுகள் குறித்து மீண்டும் ஜெயலலிதாவுக்கு சந்தேகம் எழுந்தது. அப்போது திடீரென ஹைதராபாத் திராட்சை தோட்டத்துக்கு விஜயம் செய்தவர், அந்த டிரஸ்டை கலைத்தார். நிர்வாகிகளையும் நீக்கினார். ஹைதராபாத்தில் உள்ள ரிஜிஸ்ட்ரேஷன் அலுவலரை தனது ஜெ.ஜெ.கார்டன் இல்லத்துக்கு வரவழைத்தார். முன்பு உருவாக்கிய, ‘நமது எம்.ஜி.ஆர் பெஸ்ட் சாரிடபிள் டிரஸ்ட்'  அறக்கட்டளை அமைப்புக்குப் பதில் பிரைவேட் கமிட்டியை உருவாக்கி அதை தனது இரத்த உறவினர்களின் பெயரில் அமைத்தார்.
தமிழ்நாட்டில் அந்த நடவடிக்கையை மேற்கொண்டால், அது எப்படியேனும் வெளியில் தெரிந்துவிடும் என்பதற்காக எச்சரிக்கை உணர்வோடு ஆந்திரா சென்று அங்குள்ள முகவரியில் தனது உயில் விவரங்களை எழுதிவைத்திருக்கிறார்' என்று அந்த பத்திரிகையில் தகவல் வெளியாகி இருக்கிறது.
இது குறித்து அந்த பதிவு அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘அந்த உறவினர்களின் பெயர்களை குறிப்பிட முடியாது என்று’ மறுத்துவிட்டனர்.
சம்மந்தப்பட்ட எவரேனும் ஊர்ஜிதப்படுத்தாத வரை, இப்படியான குபீர் தகவல்கள் வெளியான வண்ணமே இருக்கும்! சில தினங்களுக்கு முன்னர் ஜெயலலிதாவின் இரகசியங்கள் அடங்கிய கருவி ஒன்று இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 
















மிகையில் கோர்பச்சோவ்: பேரரசை இழந்த மனிதர்  - பி.பி.சி

14/12/2016 மேற்குலகம் ரஷ்யாவின் கோபத்தை தூண்டியிருப்பதாக குற்றஞ்சாட்டியிருக்கும் முன்னாள் சோவியத் தலைவர் மிகையில் கோர்பச்சோவ், 1991 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் "துரோகத்தால்" சின்னாபின்னமாகியத
gorbachev
ு என்று தெரிவித்திருக்கிறார். 85 வயதான மிகையில் கோர்பச்சோவ் இப்போது மிகவும் அரிதாகவே பேட்டி கொடுக்கிறார்


சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு மாஸ்கோவில் இருக்கும் பிபிசியின் ஸ்டீவ் ரோசென்பாக்கிற்கு, மிகையில் கோர்பச்சோவ் மிகவும் அரிதான பேட்டி ஒன்றை வழங்கினார்.


இப்போது 85 வயதாகியிருக்கும் மிகையில் கோர்பச்சோவ் உடல் சுகவீன பிரச்சனைகளோடு வாழ்ந்து வருகிறார். ஆனால், அவருடைய நகைச்சுவையுணர்வு அழிக்க முடியாத ஒன்றாக உள்ளது.


நாங்கள் சந்தித்தபோது, அவருடைய ஊன்றுகோலை காட்டி, "பாருங்கள். இப்போது நடப்பதற்கு மூன்று கால்கள் தேவைப்படுகின்றன" என்று நகைச்சுவையாக சுட்டி காட்டினார்.


உலகமே மாறிய அதாவது சோவியத் வல்லரசு வீழ்ச்சியடைந்த நாளான அந்த தருணத்தை பற்றி பேசுவதற்கு மிகையில் கோர்பச்சோவ் ஒப்பு கொண்டார்.


"சோவியத் ஒன்றியத்திற்கு என்ன நடத்தது என்பது என்னுடைய நாடகம்" என்று கூறிய அவர், "சோவியத் ஒன்றியத்தில் வாழ்ந்த அனைவருக்கும் கூட அது ஒரு பரபரப்பான நாடகம் " என்றார் கோர்பச்சோவ்.

அதுவொரு ஆட்சிக்கவிழ்ப்பு

ஆகஸ்ட் 1991: போரிஸ் எல்ட்சின் (நடுவில்) சோவியத் கடும்போக்காளர்களால் நடத்தப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பை எதிர்த்த போராட்டக்காரர்களை வழிநடத்தினார்

1991 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் நாள் ரஷ்ய தொலைக்காட்சியின் மாலை செய்திகள் அதிர்ச்சியளித்த அறிவிப்போடு தொடங்கின: "மாலை வணக்கம். செய்திகள். சோவியத் ஒன்றியம் இனி இல்லை...." என்பது தான் அந்த அறிவிப்பாக இருந்தது.

அதற்கு சில நாட்களுக்கு முன்னதாகத்தான், ரஷ்யா, பெலாரஸ் மற்றும் உக்ரேன் தலைவர்கள் சோவியத் ஒன்றியத்தை கலைத்துவிட்டு தனிப்பட்ட நாடுகளின் காமன்வெல்த்தை உருவாக்க சந்தித்தனர்.

தற்போது, மற்ற 8 சோவியத் ஒன்றியத்துக்குட்பட்ட குடியரசுகள் அதில் இணைய முடிவு செய்தன.

இந்தக் குடியரசு நாடுகளை ஒன்றாக இணைந்து வைத்திருக்க போராடிக்கொண்டிருந்த சோவியத் ஒன்றியத் தலைவர் மிகையில் கோர்பச்சோவை அந்த குடியரசுகள் ஒன்றாக இணைந்து மீறின.

"எங்கள் முதுகுக்குப் பின்னால் துரோகம் இழைக்கப்பட்டிருந்தது. ஒரு சிகரெட்டை பற்ற வைக்க அவர்கள் வீட்டையே கொளுத்தி கொண்டிருந்தனர். அந்த முயற்சி அதிகாரத்தை பெறுவதற்காக மட்டுமே.

ஜனநாயக வழிமுறைகள் மூலம் அவர்களால் அதனை பெற முடியவில்லை. எனவே அவர்கள் ஒரு குற்றமிழைத்தனர். அதுவொரு ஆட்சி கவிழ்ப்பு" என்று மிகையில் கோர்பச்சோவ் கூறினார்
 25 டிசம்பர் 1991: அதிர்ச்சியூட்டும் வகையில் தொலைக்காட்சியில் ராஜினாமா செய்யும் மிகையில் கோர்பச்சோவ்

1991 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி, கோர்பச்சோவ் சோவியத் ஒன்றியத்தின் அதிபர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். கிரம்பிளினில் கடைசியாக சோவியத் ஒன்றிய கொடி கீழங்கியது.

"நாங்கள் ஓர் உள்நாட்டு போர் தொடங்கும் நிலையில் இருந்தோம். நான் அதனை தவிர்க்க எண்ணினேன்" என்று கோர்பச்சோவ் நினைவு கூர்ந்தார்.

"அணு ஆயுதங்கள் உள்பட அதிக ஆயுதங்கள் உடைய எங்களை போன்ற ஒரு நாட்டில், சமூகத்தில் பிளவு மற்றும் நாட்டில் போராட்டம் என்பது பல மக்களின் இறப்புக்கு வழிகோலியிருக்கும். பேரழிவை உருவாக்கியிருக்கும். அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருப்பதற்காக, அது நடப்பதை நான் அனுமதிக்க முடியாது. அதிகாரத்தில் இருந்து இறங்கியது என்றுடைய வெற்றி" என்று கோர்பச்சோவ் கூறினார்.

விளாடிமிர் புதின் பற்றி?

தான் மேற்கொண்ட கட்டமைப்பு சீர்திருத்தத்தால் ரஷ்ய சமூகம் சுதந்திரம் அடைந்திருக்கிறது என்று தன்னுடைய ராஜினாமா உரையில் கோர்பச்சோவ் உரிமை கொண்டாடினார்.

25 ஆண்டுகள் கடந்து விட்டன. இன்றைய ரஷ்யாவில் இந்த சுதந்திரத்திற்கு அச்சுறுதல் ஏற்பட்டுள்ளதா? என்று அவரிடம் பிபிசி கேட்டது.

"இந்த வழிமுறை முடியவில்லை. இது பற்றி வெளிப்படையாக நாம் பேச வேண்டும். சுதந்திரம் என்றால் கோபப்படும் மக்கள் சிலரும் உள்ளனர். அவர்கள் இந்த சுதந்திரத்தை விரும்புவதில்லை" என்று அவர் பதிலளித்தார்.

நீங்கள் விளாடிமிர் புத்தினை குறிப்பிடுகிறீர்களா? என்று பிபிசி செய்தியாளர் அவரிடம் கேட்டார்.

நான் யாரை குறிப்பிடுகிறேன் என்று நீங்கள் தான் ஊகிக்க வேண்டும். இந்த கேள்விக்கு நீங்களே பதில் சொல்ல விட்டு விடுகிறேன்" என்று பதில் வந்தது.
 அதிபர் புதினின் (இடது) மிகவும் நெருங்கிய தோழர்களில் ஒருவரான ரோஸ்நெப்ட் எண்ணெய் நிறுவனத்தின் தலைவரான இகோர் செச்சின் (வலது)

விளாமிர் புத்தினை பற்றி நேரடியாக விமர்சிப்பதை கோர்பச்சோவ் தவிர்த்தார். ஆனால், அவரும், விளாடிமிர் புத்தினும் வேறுபட்ட கருத்துக்களை கொண்டிருப்பது குறித்து அவர் சூசகமாக்க் கோடிட்டுக் காட்டினார்.

"புதின் உங்களுடைய அறிவுரையை எப்போதாவது கேட்பதுண்டா?" என்று நான் அவரை கேட்டேன்.

"அவருக்கு அனைத்தும் ஏற்கெனவே தெரியும்" என்று பதிலளித்த கோர்பச்சோவ், , "ஒவ்வொருவரும் தங்களுடைய தனிப்பட்ட முறைப்படி காரியங்களை நிறைவேற்றுகிறர்கள் -அதுதான் வாழ்க்கை`` என்கிறார்.

மேற்குலகின் "ஆத்திரமூட்டல்"

முன்னாள் சோவியத் அதிபர் கோர்பச்சோவ், நவீன ரஷ்யாவை கடுமையாக விமர்சித்தார். "அதிகாரிகள், நாட்டின் செல்வங்களை திருடி பெருநிறுவனங்களை உருவாக்க தொடங்கினர்" என்று கோர்பச்சோவ் கூறினார்.

அதிபர் புதினின் மிகவும் நெருங்கிய தோழர்களில் ஒருவரான ரோஸ்நெப்ட் எண்ணெய் நிறுவனத்தின் தலைவரான இகோர் செச்சின், நாட்டின் விவகாரங்களில் தலையிட முயல்வதாக கோர்பச்சோவ் விமர்சனம் செய்கிறார்.

"ரஷ்யாவை ஆத்திரமூட்டுவதாக" குற்றஞ்சாட்டி மேற்குலகையும் கோர்பச்சோவ் தாக்குகிறார்.

"புதினுக்கு கெட்டப்பெயரை உருவாக்கி அவரை வெளியேற்ற வேண்டும் என்பது மேற்குலக ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரை. அதில் நீங்களும் அடங்குகிறீர்கள். உடல் ரீதியாக அல்ல. அவர் வெளியேறுவதை உறுதிசெய்து கொள்வது. ஆனால், இதன் விளைவாக புதினின் பிரபலம் இங்கு 86 சதவீதமாக உள்ளது. விரைவில் இது 120 சதவீதமாக மாறும்" என்று அவரிடம் இருந்து பதில் வருகிறது.
 1987 ஆம் ஆண்டு ரோனால்ட் ரீகனும், மிகையில் கார்ப்ச்சோவும் முக்கியமான அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்து

அமெரிக்க அதிபர் ரோனால்ட் ரீகனோடு மிகையில் கார்ப்ச்சோவ் காட்டிய நல்ல உறவு தான் பனிப்போரை முடிவுக்கு கொண்டு வர வழிகாட்டியது,

எனவே, வெள்ளை மாளிகைக்கு வரயிருக்கும் புதிய அதிபரை பற்றி மிகையில் கார்ப்ச்சோவ் என்ன நினைக்கிறார்? அவர் எப்போதாவது டொனால்ட் டிரம்பை பார்த்தது உண்டா?

"நான் அவர் கட்டியெழுப்பிய உயரமான கட்டடங்களை பாத்திருக்கிறேன். அவரை தனிப்பட்ட முறையில் சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால், அவருடைய பார்வைகளையும், கொள்கைகளையும் பற்றி தீர்ப்பளிக்க முடியாது" என்று கோர்பச்சோவ் கூறினார்.

"ஆனால், அதுவொரு சுவாரஸ்யமான தருணம். ரஷ்யாவில் நான் உள்பட ஜனநாயக கட்சிதான் அமெரிக்காவில் வெற்றிபெறும் என்று அனைவரும் எண்ணினோம். என்றாலும் நான் அதனை வெளியில் சொல்லவில்லை" என்கிறார்.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு சுதந்திரம் வழங்கியவர் என்றும், ஜெர்மனி ஒன்றிணைய அனுமதித்தவர் என்றும் கோர்பச்சோவ் மேற்குலகில் பலர் கதாநாயகனாக பார்க்கின்றனர். .

ஆனால், தாயகத்திலுள்ள பலரும் அவரை பேரரசை இழந்த தலைவராக பார்க்கின்றனர்.

மிகையில் கார்ப்ச்சோவ் - முக்கிய தேதிகள்

1931 - ரஷ்யாவின் தெற்கில் ஸ்டாவ்ரோபோல் என்ற இடத்தில் பிரிவோல்யே கிராமத்தில் பிறப்பு.

1955 - மாஸ்கோ பல்கலைக்கழக சட்ட கல்லூரியில் பட்டம். கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர்.

1970 - ஸ்டாவ்ரோபோல் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலர்.

1980 - சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் போலிட்பீரோவின் முழு உறுப்பினர்.

1985 - கம்யூனிஸ்ட் கட்சியின் போலிட்பீரோவின் பொது செயலராக தேர்வு

1987 - 1989 - திறப்பு மற்றும் சீர்திருத்தம் என்று அழைக்கப்படுகின்ற மறுகட்டமைப்பு திருத்தங்களை உட்புகுத்துதல்

1987 - அமெரிக்காவோடு முக்கிய அணு ஆயுத குறைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து

1990 - 1989 ஆம் ஆண்டு பெர்லின் சுவர் இடிப்புக்கு, பிறகு ஜெர்மனி ஒன்றாக இணைவதற்கு ஒப்பு கொள்ளுதல்

1991 - சோவியத் கடும்போக்காளர்களால் ஆட்சிக் கவிழ்ப்பில் கைதானார். டிசம்பரில் பதவியில் இருந்து ராஜினாமா.

சேர்ந்து பாடப்படும் சோவியத்

"சோவியத் ஒன்றிய வீழ்ச்சிக்கு நீங்கள் பொறுப்பேற்று கொள்கிறீர்களா?" என்று நான் அவரை கேட்டேன்.

"நான் என்ன சாதிக்க வேண்டும் என்று ஆரம்பித்தேன். உண்மையில் என்ன செய்தேன் என்று மக்கள் போதுமான அளவு புரிந்து கொள்ளாமல் இருப்பது தான் என்னை மிகவும் எரிச்சலடைய செய்கிறது" என்று மிகையில் கார்ப்ச்சோவ் கூறுகிறார்.

நாட்டுக்கும், உலகத்திற்கும் நான் மேற்கொண்ட கட்டமைப்பு சீர்திருத்தமானது, ஒத்துழைப்பிற்கும், அமைதிக்கும் பாதையை திறந்தது, அது முடியும் வரை அதனை என்னால் பார்க்க முடியவில்லை" என்கிறார்.
 ஸ்டாவ்ரோபோலில் உள்ள ஒரு பலகை “நமது வாழ்க்கை” என்கிறது. சோவியத் குடியரசு நாடுகளில்சோவியத் ஒன்றியத்தை எதிரொலிக்கும் பலர் உள்ளனர்

பேட்டியின் முடிவில், மிகையில் கார்ப்ச்சோவும் நானும் அவருடைய பியானோவுக்கு அருகில் சென்றோம்.

நான் அதனை இசைக்க சில பிரபல சோவியத் பாடல்களை கார்ப்ச்சோவ் பாடினார்.

இந்த பாடல்கள் மிகவும் கேட்கப்படுபவையாகவும், அவரது இந்த பேட்டிக்கு பிறகு சிறந்த பாரம்பரியமாக மாறியுள்ளன.

கட்டமைப்பு சீர்திருத்தம் மூலம் உலகையே மாற்றிய மனிதன் உணர்ச்சி மிகுந்த மெல்லிய குரலில் பாடுகிறார்.

"கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையே கண்மூடி திறக்கும் தருணமே. அந்த நேரத்தையே நாம் வாழ்க்கை என்கிறோம்" என்று அவர் பாடுகிறார்.

சோவியத் ஒன்றியம் கடந்தது கண்ணை மூடி திறக்கும் குறுகிய தருணம் தான். ரோமை மற்றும் ஓட்டமான் பேரரசுகளை ஒப்பிடும்போது 70 ஆண்டுகள் என்பது எந்த மூலைக்கு?

ஆனால், நாடுகள் குடியரசுகளாக பிளவுண்டதற்கு, சோவியத் பேரரசை அழித்தமைக்கு, மிகையில் கார்ப்ச்சோவை குற்றஞ்சாட்டுவது நியாயமற்றது என்று பிபிசி செய்தியாளர் கருதுகிறார்.

சோவியத் ஒன்றியம் தொடக்கத்தில் இருந்தே பொருளாதார, அரசியல் மற்றும் கருத்தியல் ரீதியில் தவறாக இருந்திருக்கலாம். ஒருவேளை சிறிது காலம் வல்லரசான இருக்கவே தோன்றியதாக இருக்கலாம்.    நன்றி தேனீ 
















இந்தோனேசியாவில் விமான விபத்து : 13 பேர் பலி

18/12/2016 இந்தோனேசியா நாட்டில் இராணுவ விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தோனேசியா நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள பப்புவா மாகாணத்திம் டிமிக்கா என்ற இடத்தில் இருந்து வாமெனா என்ற இடத்தை நோக்கி இன்று காலை உணவுப் பொருட்களை ஏற்றிச்சென்ற ‘ஹெர்குலஸ் சி-130’ ரக விமானம் மோசமான வானிலை காரணமாக தரையில் விழுந்து நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் அந்த விமானத்தில் இருந்த 3 விமானிகளும், 10 இராணுவ வீரர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.    நன்றி வீரகேசரி 










No comments: