சுகுமாரனுக்கு இயல் விருது 2016

.


தமிழ் இலக்கியத் தோட்டம் ஆண்டுதோறும் இயல் விருதை அளித்துவருகிறது. 2016-ம் ஆண்டுக்கான விருது கவிஞர் சுகுமாரனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. சுகுமாரன், 1957-ல், கோயம்புத்தூரில் பிறந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். குங்குமம், குமுதம் போன்ற தமிழ் வார இதழ்களிலும் சன், சூர்யா தொலைக்காட்சிகளிலும் பணிபுரிந்திருக்கிறார். தற்போது ‘காலச்சுவடு’ இதழின் பொறுப்பாசிரியராக உள்ளார்.
இவர் கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எழுதுவதுடன் மொழிபெயர்ப்புகளையும் செய்துவருகிறார். இயல் விருதைப் பெறும் 18-வது தமிழ் ஆளுமை இவர். சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜார்ஜ் ஹார்ட், ஐராவதம் மகாதேவன், அம்பை, எஸ். பொன்னுத்துரை, எஸ். ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன், சு. தியோடர் பாஸ்கரன், ஜெயமோகன், டொமினிக் ஜீவா, ஆர். மயூரநாதன் ஆகியோர் இவ்விருதைப் பெற்றிருக்கிறார்கள்.
சுகுமாரனின் ‘கோடைக்காலக் குறிப்புகள்’ கவிதைத் தொகுப்பு பரவலான கவனம் பெற்றது. ‘வெல்லிங்டன்’ என்னும் நாவலை எழுதியுள்ளார். மலையாள இலக்கியத்தின் ஆளுமைகளான வைக்கம் முகம்மது பஷீர், சச்சிதானந்தன், அடூர் கோபாலகிருஷ்ணன், சக்கரியா போன்றவர்களின் படைப்புகளை சுகுமாரன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ‘அஸீஸ் பே சம்பவம்’, ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’, ‘பட்டு’ ஆகியவை இவரது மொழிபெயர்ப்பில் குறிப்பிடத்தக்கவை. 2,500 டாலர் பணப் பரிசும் கேடயமும் கொண்டது ‘இயல் விருது’. விருது வழங்கும் விழா டொரொண்டோவில், 2017 ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது.

No comments: