இலங்கையில் பாரதி அங்கம் -03 - By முருகபூபதி

.
பத்து ரூபா செலவில் திருமணம் செய்துகொண்ட பாரதியின் பக்தர் 
இலங்கையில்  பாரதியின் புகழ் பரப்பிய முன்னோடிகள் மூவர்

அண்மையில்   இந்தியாவில்   ஆயிரம்  ரூபா,  ஐநூறு  ரூபா நாணயத்தாள்  மாற்றப்பட்ட  விவகாரம்  இன்னமும் சூடுபிடித்திருக்கிறது. 
அந்தத்தேசம்  இவ்வாறு  அமளியில்  ஆர்ப்பரிப்பதற்கு      முன்னர்  தென்னிந்திய  மாநிலமான  கர்நாடகாவில்  ஒரு  முன்னாள்  அமைச்சரும்   சுரங்க  அதிபருமான ஜனார்த்தன  ரெட்டி  என்பவரின்  மகளுடைய  திருமணம்  74 மில்லியன் டொலர்கள் செலவில்   நடந்தேறியிருக்கிறது.
இதன்  இந்திய -  இலங்கை  நாணயப்பெறுமதியை  வாசகர்கள் ஊகித்து தெரிந்துகொள்ளமுடியும்.
அதே  இந்தியாவில்  கடந்த  நூற்றாண்டில்  ஒரு  தமிழ்த்தலைவரின் திருமணம்  பத்து ரூபாவில் நடந்திருக்கிறது.  அவர்  இந்திய அரசியலில்  மதிப்பிற்குரிய  இடதுசாரித் தோழராகவும் முற்போக்கு எழுத்தாளராகவும்  பத்திரிகை  ஆசிரியராகவும்   தமிழக  சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.   


குடிசையில்  பிறந்து  குடிசையிலேயே  வாழ்ந்து  மறைந்த அந்தத்தலைவர்தான் தோழர் ப. ஜீவானந்தம். 
இந்தக்குறிப்புகளுடன் இலங்கையில் பாரதி தொடரின்  மூன்றாவது அங்கத்தை ஆரம்பிக்கின்றோம்.
பாரதியின்  பெருமையும்  புகழும்  1930  ஆம்  ஆண்டின்  பின்னரே இலங்கையில்   பரவத்தொடங்கின  எனத்தெரிவிக்கிறார்   கைலாசபதி ( இலங்கை கண்ட பாரதி - மல்லிகை பாரதி நூற்றாண்டு மலர்) 
குறிப்பிட்ட  1930  ஆம்  ஆண்டிற்கு  முன்னரும்  பின்னரும் இலங்கையில்   பாரதியின்   புகழையும்  பெருமையையும் பரப்பியவர்களாக  மூவர்   அறியக்கிடைத்துள்ளனர்.
ப. ஜீவானந்தம் (1907-1963)   சுவாமி விபுலானந்தர் (1892-1947)
வ.ரா.  (1889-1951)
இந்தியாவில்  பிரிட்டிஷாரின் ஆட்சியில்  காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில்  இணைந்திருந்த  ஜீவானந்தம்,  அதிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சியை   உருவாக்கப்பாடுபட்டார்.  கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்ட   காலங்களில்  பம்பாய்  சிறையில் அடைக்கப்பட்டிருந்த  ஜீவானந்தம் இலங்கையில் 1948 ஆம் ஆண்டளவில்  தலைமறைவு  வாழ்க்கையை  மேற்கொண்டவர்.  
பின்னாளில்  தமிழக  சட்டமன்றத்தில் உறுப்பினராக  இருந்த சமயம்   இலங்கை  இனப்பிரச்சினை  குறித்தும்  குரல் எழுப்பியிருக்கிறார்.  ஜனசக்தி பத்திரிகையின்  ஆசிரியராக  இருந்தவர்.   இவர் தொடங்கிய  இலக்கிய இதழ் தாமரையில் ஈழத்து எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். அத்துடன் ஈழத்து  எழுத்தாளர்கள் தாமரையில் அட்டைப்பட அதிதிகளாகவும்  கௌரவம்  பெற்றுள்ளனர். 



அவருக்கு  திருமண  ஏற்பாடு  நடந்ததும்  ஒரு  தோழரிடம் பத்து ரூபா கொடுத்தனுப்பி   இரண்டு பூமாலையும்  இனிப்பும் வரவழைத்து மிக மிக  எளிமையாக  இல்லற பந்தத்தில் இணைந்தவர்தான் தோழர் ஜீவானந்தம்.  
மறைவதற்கு  முதல்  நாள்  இரவும்   ஜனசக்தி பத்திரிகைக்கு  ஆசிரியத்தலையங்கம்  எழுதியிருக்கிறார்  இந்த ஆளுமை. 
எளிமையே வாழ்க்கையாக வாழ்ந்திருக்கும்  ஜீவானந்தம் அவர்களின் ஆளுமையால்  கவரப்பட்ட யாழ்ப்பாணத்தில் வசித்த   டொமினிக்  என்பவர்தான்  பின்னாளில்  தமது பெயரை டொமினிக்ஜீவா  என மாற்றிக்கொண்டார்.   அவர்தான்  தமிழ்  இலக்கிய  உலகில் நன்கறியப்பட்ட  டொமினிக்ஜீவா.  இவர் தற்பொழுது மல்லிகை ஜீவா எனவும்  அறியப்படும்  ஈழத்தின்  மூத்த  எழுத்தாளர்.
ஜீவானந்தம்,  இலங்கையில்  தலைமறைவாக  வாழ்ந்த அக்காலத்தில்  பாரதியின்  கருத்துக்களை   இலங்கையில்  பரப்பியவர்களில் முக்கியமானவராக  கருதப்பட்டவர்.  பாரதியின் பாடல்களையும் சிந்தனைகளையும்  இலங்கையில்   இலக்கிய  மேடைகளில் முழங்கியவர். எம்மவர் மத்தியில் மறுமலர்ச்சி சிந்தனைகளை பாரதியின் பாடல்களிலிருந்தே பரப்பியவர் ஜீவானந்தம். 
மயில்வாகனன்  என்ற  இயற்பெயருடன்  இலங்கை  கிழக்கு மாகாணத்தில்  காரைதீவில் 27-03-1892 ஆம்  திகதி பிறந்தவர்தான் பின்னாளில் சுவாமி விபுலானந்தராக அறியப்பட்டவர்.



 கல்முனை  மெதடிஸ்த  ஆங்கிலப்  பாடசாலையில்  ஆரம்பக்கல்வியை பெற்றதன்  பின்னர்,  மட்டக்களப்பு  புனித  மைக்கல்  கல்லூரியிலும் பயின்று  கேம்ரிட்ஜ்  பரீட்சையில்  சித்திபெற்று,   தான்  முன்னர்  கற்ற புனித  மைக்கல்  கல்லூரியில்  ஆசிரியராக  சிறிதுகாலம் பணியாற்றிவிட்டு,   கொழும்பில்  ஆசிரியப்பயிற்சிக்கல்லூரியில்  இணைந்தவர்.
மதுரைத்தமிழ்ச்சங்கம்  நடத்திய  பரீட்சையில்  பண்டிதர் பட்டத்தைப்பெற்ற   முதல்  இலங்கையர்  இவரே.  கொழும்பு  அரசினர் தொழில்   நுட்பக்கல்லூரியிலும்  யாழ்ப்பாணம்  புனித சம்பத்தரிசியார்  கல்லூரியிலும்  பணியாற்றியவர்.   லண்டன் பல்கலைக்கழகத்தின்   தேர்விலும்   சித்தியடைந்து,  மானிப்பாய் இந்துக்கல்லூரியிலும்   அதிபராக  பணியாற்றியவர்.   பின்னாளில் திருகோணமலை    இந்துக்கல்லூரியிலும்  அதிபராக  இருந்தவர் இந்தக்கல்விமான். 
யாழ்ப்பாணம்  ஆரியா  திராவிட  பாஷா  அபிவிருத்திச்சங்கத்தை அமைத்தவர்களில்  இவரும்  ஒருவராக   அறியப்படுகிறார்.
இராமகிருஷ்ண  இயக்கத்தில்  இணைந்து 1924 இல்  துறவறம் பூண்ட மயில்வாகனன்,  அதன் பிறகு  சுவாமி விபுலானந்தராகிறார்.
துறவியானபோதிலும்  தொடர்ச்சியாக  கல்விப்பணியாற்றியவர். அத்துடன்   இதழாரியர்.   ஷேக்ஸ்பியரின்  நாடகங்களை  ஆய்வுசெய்த எழுத்தாளர்.   இசை  ஆராய்ச்சியாளர்.   இசைத்தமிழ்பற்றிய   இவரது யாழ் நூல்  காலத்தையும்  வென்று  வாழ்கிறது. 
1943  ஆம்  ஆண்டில்  இலங்கை  பல்கலைக்கழகம் இயங்கத்தொடங்கியதும்  அதன்  தமிழ்த்துறையில்  முதலாவது பேராசிரியராக  நியமிக்கப்பட்டவர்.   தமிழில்  ஆய்வுத்துறையை நெறிப்படுத்திய   முன்னோடி.
1947  ஆம்  ஆண்டு  மறைந்த  அடிகளாரின்  சமாதி  மட்டக்களப்பு கல்லடியில்   அமைந்துள்ளது.   அடிகளாருக்கு  இலங்கையில் ஞாபகார்த்த  அஞ்சல்  தலை  வெளியிடப்பட்டது.
இலங்கையில்   இராமகிருஷ்ண  இயக்கத்தில்  அவர்  இணைந்திருந்த ஆரம்பகாலத்தில்,   அதன்  பொறுப்பிலிருந்த  பாடசாலைகளில்  முதல் வகுப்புத்தொடக்கம்,   எட்டாம்  வகுப்புவரையில்  மாணவர்களின் தமிழ்ப்பாடத்திட்டத்தில்   பாரதியின்   பாடல்களைச்சேர்த்திருக்கும் விபுலானந்தர், இந்திய சுதந்திரப்போராட்டக்காலத்திலேயே அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில், 1932 இல் Bharathi Study Circle என்னும் அமைப்பை நிறுவியவர்.    அத்துடன் அண்ணாமலைப்பல்கலைகழக வெளியீடுகளிலும் பாரதி பற்றி ஆங்கிலத்திலும் கட்டுரைகள்  எழுதியிருக்கிறார். 



(ஆதாரம்: சுவாமி விபுலானந்தர் - நூல் பெ.சு.மணி )
வாசகர்களே,  2000 ஆம் ஆண்டு ஞான ராஜசேகரனின் இயக்கத்தில் வெளியான பாரதி  திரைப்படம்  பார்த்திருக்கிறீர்களா...?
அதில்  மகாத்மா காந்தியை பாரதியார் சென்னையில் சந்திக்கும் ஒரு காட்சி  வரும்.  காந்தி தங்கியிருந்த  இல்லத்தில் வாயில்  காப்போனாக நிற்கும் வ.ரா என்ற வ. ராமசாமி  அய்யங்காரை  தள்ளி விலக்கியவாறு காந்தி அமர்ந்திருக்கும்  அறைக்குள்  பாரதி  திடீரென்று  பிரவேசித்து அனைவரையும்  ஆச்சரியப்படவைப்பார்.
இந்த வ.ரா. பாரதியின் நெருங்கிய நண்பர்.
பாரதி அவரை " யோவ், என்னாவோய் " என்றெல்லாம் உரிமையுடன் அழைப்பார்.  தஞ்சாவூரில்  திருவையாறு  சங்கீதத்திற்கு  பெயர்பெற்ற தலம்.  இங்கு 1989 இல் வைதீக  குலத்தில்  பிறந்திருக்கும்  இவர், பூநூலையும்  குடுமியையும்  துறந்த புரட்சியாளர். காந்தியடிகளின் வழியைப்பின்பற்றியவர். 
அறிஞர் அண்ணா, தமது திராவிட நாடு பத்திரிகையில் இவரை அக்கிரகாரத்து அதிசய மனிதர் என்றே வர்ணித்திருக்கிறார். 
தாம் பிறந்த தஞ்சாவூரில் சுதந்திரன் என்ற பத்திரிகையிலும் ஆசிரியராக பணியாற்றியவர்.  அத்துடன், வர்த்தமித்திரன், பிரபஞ்ச மித்திரன்,  தமிழ்நாடு, சுயராஜ்யா, பாரததேவி ஆகிய பத்திரிகைகளிலும் ஆசிரியராக பணியாற்றியவர்.
சிறந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ் இலக்கிய வரலாற்றில் இன்றும் பேசப்படும் மணிக்கொடி  இலக்கிய  இதழின் வரவுக்கு காரணமாக  இருந்தவர்  வ.ரா.  இலங்கையில்  சிறிதுகாலம் வாழ்ந்திருக்கும் இவர்,  வீரகேசரி நாளிதழின் ஆசிரியராகவும் அதன்  தொடக்க  காலத்தில்  பணியாற்றியவர்.
தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், விதவைகள் மறுவாழ்வு முதலான பாரதியின் கருத்துக்களை வ.ரா. இலங்கையில் தாம் பணியாற்றிய வீரகேசரி பத்திரிகை ஊடாக அக்காலத்திலேயே பரப்பியிருக்கிறார்.
கொழும்பில்,  அக்காலத்தில்     தாழ்த்தப்பட்ட   சமூகத்தைச்சேர்ந்த ஒரு பெண்ணை விரும்பி  மணம்  முடித்தவர்தான்  வ.ரா எனப்படும் ராமசாமி.  அந்தப்பெண்ணின்  பெயர் புவனேஸ்வரி.
வெற்றுப்பேச்சிலும் எழுத்திலும் மாத்திரம் தன்னை அடையாளப்படுத்தாமல் வாழ்ந்தும் காட்டியிருக்கும் வ.ரா., எழுதியிருக்கும் மகாகவி பரதியார் என்னும் நூல், 1944 ஆம் ஆண்டில் முதல் பதிப்பு கண்டிருக்கிறது. அதன் பின்னர் பலபதிப்புகள் வெளியாகிவிட்டன. 
இந்நூல் பற்றி கல்கி கிருஷ்ணமூர்த்தி கல்கி இதழில் இவ்வாறு பதிவுசெய்துள்ளார்:   ".... பாரதியாரை  நேரில்  பார்த்துப்பழகக் கொடுத்துவைக்கவில்லையே  என்ற  வருத்தம்  நம்மில் பலருக்குண்டு.   இந்தப்புத்தகத்தைப் படித்தால்  அந்தக்குறை பெரும்பாலும்  தீர்ந்துவிடும்"
புதுவையில்  பாரதி வாழ்ந்த காலத்தில்,  இவருடைய மொழிபெயர்ப்பு ஆற்றலையும்  உரைநடையையும்  விதந்துபோற்றியிருக்கும் பாரதி, ஒரு  சந்தர்ப்பத்தில், இனிமேல் தான் கவிதைத்துறையை கவனிப்பதாகவும்  வ.ரா  உரைநடையை  கவனிக்கட்டும் என்றும்  சொல்லியிருக்கிறார்.
1930 ஆம் ஆண்டின் பின்னர்  தோழர் ஜீவானந்தம், சுவாமி விபுலானந்தர், வீரகேசரி ஆசிரியர் வ.ரா ஆகியோர் பாரதியின் சிந்தனைகளை இலங்கையில் பரப்பி  பெரும் தாக்கத்தை உருவாக்கிய  முன்னோடிகளாக கருதப்படுகின்றனர். 
--------------------------------
யாழ்ப்பாணத்தில் 1920 இல் ஒலித்த பாரதி பாடல்கள்
1930 இற்குப்பின்னர்தான்  பாரதி பற்றிய சிந்தனைகள் இலங்கையில் விகசிக்கத்தொடங்கியது  என்று  பேராசிரியர்  கைலாசபதி பதிவுசெய்திருந்தாலும்,  அதற்கு  முன்னரே  பாரதியின்  பாடல்கள் இலங்கையில்  ஒலித்திருப்பதற்கும்  சான்றுகள்  இருக்கின்றன.
யாழ். வாசிகளுக்கு  ஒரு  தகவல்  தெரியுமா...?
இன்றைய  மனோகரா   தியேட்டர்  அமைந்திருக்கும்  இடத்தில் 1920 - 22 காலப்பகுதியில்  ஒரு  மண்டபம்  இருந்தது.  அதற்குப்பெயர்: புத்துவாட்டி  வீட்டு  மண்டபம்.  லிடோ  தியேட்டர்  இருந்த  இடத்தில் அன்று   இருந்தது   ராசா  தகரக்கொட்டகை.  இங்கு  வந்திருக்கும் தமிழகக்கலைஞர்கள்   சிலர்  மேடையேற்றிய  நாடகங்களில் பாரதியின்  பாடல்களுக்கும்  முக்கியத்துவம்  கொடுத்துள்ளனர். பாரதி உயிருடன்  வாழ்ந்த  காலத்திலேயே  இலங்கையில்  யாழ்ப்பாணத்தில் தமிழகக்கலைஞர்கள்  வந்து  பாடியிருப்பதை  தாம்  நேரில் பார்த்திருப்பதாக  ஒரேற்றர்  சுப்பிரமணியம்  தெரிவித்துள்ளார்.
 ( ஆதாரம்: சி. தில்லைநாதன் - நூல்: பாரதி பன்முகப்பார்வை) 
பிற்குறிப்பு:  இந்தத்தொடரில்  இனிவரும்  அங்கங்களில்  பாரதி தொடர்பாக  இலங்கையில்  வெளியான  நூல்கள்  பற்றிய பதிவில் இந்த  நூல் பற்றிய மதிப்பீடும்  எழுதப்படும்.
(தொடரும்) 








No comments: