அகல்விளக்கு எரியட்டும்; இனி அழாதே!! - வித்யாசாகர்

.

நான்
முழுதாகப் படித்திடாத
புத்தகம் நீ;
அருகருகில் இருந்தும் உரசிக்கொள்ளாத
நெருப்புக்குச்சிகள் நாம், 
உதட்டுக்கு உறவுக்கும் தொடுதல் நிகழ்ந்திடாத
இரவையும் பகலையும்
வாழாமலேயே
விட்டு விலகி வந்ததில் ஊமையாகிப் 
போயிருக்கிறாய் நீ, 
நான் வேறேதேதோ பேசி
பேசி -
நம்மை மட்டும் மறந்திருக்கிறேன்..

உன் சிரிப்பு
காற்றில் சலசலத்தபோது
எப்படியோ
கண்களை மூடிவிட்டிருக்கிறேன்
நீ காத்திருந்து காத்திருந்து
பேசியதையெல்லாம் -
தூரத்தில் பார்த்துவிட்டு
தெருமுனை திரும்பாமலே போயிருக்கிறேன்

உனதுப் பார்வையைத்
தாண்டி
தாண்டித்தான் எனது
இத்தனை வருடங்களே கடந்துள்ளது

உன் விசும்பலில்
சிந்தியக் கண்ணீரால் தானோ
மழைமழையாய் நனைகிறது நம் மண்?

உன்னிடம்
உனைப்பற்றிப் பேசிவிடத்தான்
உயிறுதிர்க்க வில்லையோ
எனது முதுமை?

எத்தனை வருடம் கழித்தும்
உனது குரலுள்
எனை
பத்திரமாய் வைத்திருக்கிறாய்

நான் நானாக இல்லை
நீ எனை
அதே நானாகவே
இருப்பதாய் நம்புகிறாய்

எப்படி சபிப்பது இந்த காலத்தை ?

ஒருவரின் ஏக்கத்தை
இன்னொருவரின் சிரிப்பிலும்
இன்னொருவரின் சிரிப்பை
வேறொருவரின் கண்ணீரிலும்
புதைப்பது, 'உயிரை உயிரோடு எரிப்பது எல்லாம்
காலத்தாலேயே முடிகிறது..

உனக்குள் நீ
நினைவாகவே எரிந்திருக்கிறாய்
மூடியக் கதவுகளுக்குள் இதயம் சுடச் சுட
அழுதிருக்கிறாய்..
இரவு சுட்டிருக்குமே (?)
பகல் கொஞ்சம் கொஞ்சமாய்க் 
கொன்றிருக்குமே ?
உயிரோடு என்னையும் விழுங்கி விட்டிருக்கலாம் நீ;

உயிர் பிரிகையில்
பிணமாவது எளிது
உடன் இருப்பவர் பிரிகையில்
உயிரோடிருப்பதே கடினம்..

எனது நினைவுகளிலிருந்து
ஒரு பக்கத்தைக் கூட கிழித்துவிடாமல்
இத்தனை வருடங் கழித்தும் மிக பத்திரமாய்
வைத்திருக்கிறாய், என்னை

உனக்கென கொடுத்துவிட
இப்போதைக்கு என்னிடம் ஒன்றுமேயில்லை
அன்பைத் தவிர;
அன்பு போதுமா ?
போதுமெனில் இதோ.. வா
ஓடி வா..
வந்து எனைக் கட்டியணை 
முத்தமெல்லாம் வேண்டாம் முழுமுகம் பார்
கண்களில் சிந்தும் நீர் சிந்தட்டும்
துடைக்காதே விட்டுவிடு
சொட்டச் சொட்ட
ஒவ்வொருச் சொட்டு நீரின் வெப்பத்திலிருந்தும் -

மெல்ல மெல்ல எரியத் துவங்கட்டும் நம் 
உயிர்விளக்குகள் -
அந்த ஒற்றை அகலுக்குள்!!

No comments: