நீதி கோரி கிளிநொச்சியில் மாபெரும் கண்டனப் பேரணி
யாழ்.பல்கலை மாணவர்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத்தெரிவித்து பேராதனை பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
விபசார விடுதி விவகாரம் : மட்டு முன்னாள் மேயர் சிவகீதா விளக்கமறியலில்.!
தமிழ் மக்கள் நிறைந்து வாழும் பகுதியில் ஏன் சிங்களவர்களை கடமையில் அமர்த்துகின்றனர் : கேள்வியெழுப்புகிறார் விக்கிரமபாகு
பொலிஸார் மீதான வாள் வெட்டு : 'ஆவா குழு'வால் விநியோகிக்கப்பட்ட துண்டு பிரசுரம் : விபரிக்கும் சிறுவன் (காணொளி இணைப்பு)
மாணவர்கள் படுகொலை : நீதி வழங்கக்கோரி லண்டனில் இலங்கை தூதரகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்
கிளிநொச்சியில் பொலிஸார் இளைஞர்கள் இடையே மோதல் : பொலிஸ் மீது தாக்குதல் : வீதியில் டயர்கள் எரிப்பு : தொடருகிறது பதற்றம்
ஹர்த்தாலால் முடங்கியது யாழ்ப்பாணம்
யாழ்.துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பொலிஸாரின் தரப்பிலேயே தவறு
நீதி கோரி கிளிநொச்சியில் மாபெரும் கண்டனப் பேரணி
24/10/2016 யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்தும் அவர்களுக்கு நீதி கோரியும் இன்று கிளிநொச்சியில் பேரணி இடம்பெற்றது.
மேலும், கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த இப்பேரணி, கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் இருந்து ஆரம்பித்ததுடன் பொலிஸ் அராஜகம் ஒழிக, வேண்டும் வேண்டும் நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறும் பதாதைகளை தாங்கியவாறும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தைச் சென்றடைந்தது.
அங்கு மேலதிக அரசாங்க அதிபரிடம் கண்டன மனுவினை பேரணியில் கலந்து கொண்டோர் கையளித்தனர்.
இந்த பேரணியில், பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள், சிவில் பொது அமைப்புக்கள், வர்த்தகர்கள், கல்விச் சமூகத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிளை ஆகியோர் கலந்து கொண்டனர். நன்றி வீரகேசரி
24/10/2016 யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
கண்டி - கொழும்பு பிரதான வீதியில் கலஹா சந்தியில் இன்று இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது. இனவாதத்தை தூண்டி ஆட்சியதிகாரத்தை தக்க வைக்கும் முயற்சி என அவர்கள் தமது கண்டனத்தின் போது தெரிவித்தனர்.
பேராதனைப் பல்கலைக் கழக அனைத்து பீடங்களினதும் சுமார் 1000 மாணவர்கள் இதில் பங்கு கொண்டனர்.
நன்றி வீரகேசரி
விபசார விடுதி விவகாரம் : மட்டு முன்னாள் மேயர் சிவகீதா விளக்கமறியலில்.!
24/10/2016 மட்டக்களப்பு மாநகர முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் உட்பட 4 பேரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று பிற்பகல் மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது திருமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள முன்னாள் மேயரின் வீட்டின் ஒரு பகுதியில் இருந்து இரு பெண்கள் உட்பட 7 பேர் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்டனர்.
மேலும் அதனை நடாத்திவந்ததாக சந்தேகத்தின் பேரில் சிவகீதா மற்றும் அவரது கணவரும் கைதாகினர்.
இந்தநிலையில் நடைபெற்று வந்த விசாரணையின் அடிப்படையில் முன்னாள் முதல்வரின் கணவர் உட்பட 5 பேர் நேற்று பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இதேவேளை, இன்று காலை முன்னாள் முதல்வர் சிவகீதா உட்பட 3 பெண்களும் ஒரு ஆணும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் நால்வரையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் எம்.கணேசராசா உத்தரவு பிறப்பித்துள்ளார். நன்றி வீரகேசரி
தமிழ் மக்கள் நிறைந்து வாழும் பகுதியில் ஏன் சிங்களவர்களை கடமையில் அமர்த்துகின்றனர் : கேள்வியெழுப்புகிறார் விக்கிரமபாகு
24/10/2016 மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவர்களை பொலிஸார் இடைநிறுத்தக்கோரிய போது மாணவர்கள் தடுப்புக்காவலில் நிறுத்தாமல் சென்றுள்ளனர். இதனையடுத்து பொலிஸார் வாள் வெட்டுடன் சம்பந்தப்பட்டவர்கள் என கருதி மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவத்தின் போது கடமையில் இருந்த ஐந்து பொலிஸாரும் சிங்களவர்களே. இவர்களின் மொழி தெரியாமல் மாணவர்கள் குறித்த இடத்தில் நிறுத்தாமல் சென்றிருக்கலாம். தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் ஏன் சிங்களவர்களை அதிகமாக கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டும். இது மாணவர்களின் தவறல்ல. ஆட்சியாளர்களின் தவறாகும். இவ்வாறான சம்பவங்களினால் எவ்வாறு இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என நவ சம சமாஜக்கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன கேள்வியெழுப்பினார்.
பொலிஸாரின் துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த யாழ்பல்கலைகழக மாணவர்களின் படுகொலையை கண்டித்தும் அவர்களின் கொலைக்கான நீதி உடனடியாக வழங்கப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தியும் இன்று மாலை கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக பாரிய கண்டன ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே விக்கிரமபாகு கருணாரட்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு முழுவதும் நல்லாட்சியை தோற்றுவிப்பதாக கூறி இனவாதத்தினை பரப்பும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
வட மாகாணத்தில் பொலிஸாரின் அடாவடித்தனம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
பொலிஸார் இரவு நேர கடமைகளில் இருக்கும் போது மக்களை துன்புறுத்துகின்றனர். இதற்கு எதிராக சட்டம் பயன்படுத்தப்படவே இல்லை. இதுவா நல்லாட்சியின் மிக முக்கிய பண்பு?
நல்லாட்சியிலேயே பொலிஸாரின் அடாவடித்தனம் வரலாற்றில் என்றும் இல்லாதவாறு அதிகரித்துள்ளது.
கடந்த கால அரசாங்கங்களின் ஆட்சியில் பெரிதாக இனவாதம் இருக்கவில்லை. ஆனால் மைத்திரி ரணில் இணைந்த நல்லாட்சியில் இனவாதம் துளிர் விட ஆரம்பித்துள்ளது.
பொலிஸாரின் கட்டளைக்கு அடிபணியாவிட்டால் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்படும் கலாசாரமே வடமாகாணத்தில் நிலவி வருகிறது.
ஜனாதிபதி வட மாகாணத்துக்கு சென்று நாட்டில் இனவாதம் மீண்டும் துளிர்விடாது என்றும் நாட்டை பாதுகாக்கும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபடுகின்றது என்றும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாக்கப்படுவர் எனவும் கருத்துக்களை கூறி வருகிறார்.
ஆனால் அவை பொய்யாகியுள்ளது. பொலிஸாரின் அராஜகங்களை கட்டுப்படுத்த முடியாதளவிற்கு அரசாங்கம் பலவீனமடைந்துள்ளது.
நல்லாட்சி அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்டு ஒன்றரை வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் வட மாகாணத்தில் சென்று குறித்த மக்களின் துன்பங்களை கேட்க கூட இந்த அரசாங்கத்துக்கு நேரமில்லை என்றார். நன்றி வீரகேசரி
பொலிஸார் மீதான வாள் வெட்டு : 'ஆவா குழு'வால் விநியோகிக்கப்பட்ட துண்டு பிரசுரம் : விபரிக்கும் சிறுவன் (காணொளி இணைப்பு)
24/10/2016 யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்துக்கு ஆவா குறூப் உரிமை கோரியுள்ளது.
இது தொடர்பான விபரம் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் யாழ். இந்துக்கல்லூரிக்கு அருகில் இலக்கத்தகடற்ற மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களினால் வீசப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
நன்றி வீரகேசரி
மாணவர்கள் படுகொலை : நீதி வழங்கக்கோரி லண்டனில் இலங்கை தூதரகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்
25/10/2016 பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த யாழ்.பல்கலைக்கழகத்தின் ஊடகவியல் மற்றும் அரசறிவியல் துறை மாணவர்களான விஜயகுமார் சுலக் ஷன், நடராஜா கஜன் ஆகியோரின் படுகொலைகளைக் கண்டித்தும் உடனடியாக நீதி வழங்கக் கோரியும் இன்று லண்டனில்; அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக இன்று காலை 11 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
புலம்பெயர் தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக் கணக்கானோர் கலந்துகொண்ட தமது எதிர்ப்பை வெளியிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குற்றம் புரிந்தவர்களுக்கு தகுந்த தண்டனையை பெற்று கொடுக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான கிடைக்க வேண்டும், இனப்படுகொலை இடம்பெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
நன்றி வீரகேசரி
கிளிநொச்சியில் பொலிஸார் இளைஞர்கள் இடையே மோதல் : பொலிஸ் மீது தாக்குதல் : வீதியில் டயர்கள் எரிப்பு : தொடருகிறது பதற்றம்
25/10/2016 கிளிநொச்சி ஏ9 வீதி வைத்தியசாலைப் பகுதியில் பொலிசார் மற்றும் இளைஞர் களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதையடுத்து பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன் பொலிஸ் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
வடக்கின் பல பகுதிகளிலும் ஹர்த்தால் அனுஷ்ட்டிக்கப்பட்டுவந்த நிலையில் கிளிநொச்சியிலும் அனுஷ்ட்டிக்கப்பட்டிருந்தது.
இதன் போது, அங்கு ஒன்று கூடிய இளைஞர்கள் போத்தல்களை நடுவீதியில் உடைத்தும் வீதியின் நடுவில் இருந்தும் தமது எதிர்ப்பை வெளிக்காட்டியிருந்தனர்.
இதனையடுத்து, அங்கு கடமையில் இருந்த பொலிசார் ஒருவர் மீது இனம் தெரியாத நபர் ஒருவரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தனை தொடர்ந்து பொலிசாருக்கும் மக்களுக்கும் இடையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பின்னர் கலகம் அடக்கும் பொலிசார் இறக்கப்பட்டு நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும் வீதியில் டயர்களை எரித்தும் வீதியை மறைத்தும் தமது எதிர்ப்பை பொதுமக்கள் வெளிப்படுத்தும் நிலையில் அங்கு பெரும் பதற்ற நிலை காணப்படுவதாக அங்கு இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நன்றி வீரகேசரி ஹர்த்தாலால் முடங்கியது யாழ்ப்பாணம்
25/10/2016 யாழ். நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுவருவதால் வடபகுதியெங்கும் மக்கள் நடமாட்டம் இல்லாது வெறிச்சோடிக்காணப்படுகின்றது.
சுன்னாகம் பகுதியில் வைத்து இரு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரால் சுட்டுக்கொலைசெய்யப்பட்டதைக் கண்டித்தே வடபகுதியெங்கும் ஹர்ததால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இக் ஹர்த்தாலுக்கு தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ள நிலையிலேயே வடபகுதியெங்கும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இதனால் அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
பாடசாலைகள், வங்கிகள், எரிபொருள் நிரப்புநிலையங்கள் என்பன மூடப்பட்டுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது.
யாழ்.துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பொலிஸாரின் தரப்பிலேயே தவறு
26/10/2016 யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகள் தரப்பில் தவறு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
அங்கு, கொள்ளைச் சம்பவங்களோ, குழுவொன்றால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களோ அல்லது உயிரச்சுறுத்தல் போன்ற துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவிற்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஷேடமாக அந்த சம்பவத்தை உடனடியாக அறிவிக்காமை அந்த அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தவறு என்றும், அது தெளிவான விதி மீறல் செயற்பாடு என்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர சுட்டிக்காட்டியுள்ளார்.
150 ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஊடகவியலாளர்களிடம் இவ்வாறு கூறியுள்ளார்.
இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
அந்த மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் வரையிலான காலத்தில் பெற்றோர் பட்ட கஷ்டங்களையும், இரண்டு உயிர்களின் பெறுமதியையும் நினைக்கும் போது வருத்தமளிக்கின்றது.
எவ்வாறாயினும் இது போன்ற சந்தர்ப்பங்களில் குறைந்தபட்ச மற்றும் தேவையான பலத்தை பிரயோகிப்பதற்கு பொலிஸாருக்கு அனுமதி இருக்கின்றது என்றார்.
சுன்னாகம் பகுதியில் இரு பொலிஸ் அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பிலும் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பொலிஸ் மா அதிபர்,
அந்த சந்தர்ப்பத்தில் குறித்த இரண்டு புலனாய்வு அதிகாரிகளும் சீருடையில் இருக்காத காரணத்தினால், அவர்கள் பொலிஸ் அதிகாரிகள் என்பது தெரியாமலேயே அந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment