.
2000இல் எழுதப் பெற்றுப் பின் 2003இல் பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களின் மணிவிழாச் சிறப்பு மலரில் இடம்பிடித்த அவரது ~சார்வாகன்| குறுநாவல், ~மௌனம்| எனும் மகுடம் இட்ட இம்மணிவிழாச் சிறப்பு மலரின் உள்ளே இவ்வளவு காலமும் மௌனித்துக் கிடந்த பின் இப்போது நூலுருப் பெற்று மகுடம் வெளியீடாக வெளிச்சத்துக்கு வரவுள்ளது. ஆம்! 15.10.2016 இன்று பி.ப.4.00 மணிக்கு இதன் வெளியீட்டு நிகழ்வு மட்டக்களப்பு சின்ன உப்போடை அல்மெய்டா மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு ~மகுடம்| வெளியீட்டகத்தின் ஒன்பதாவது வெளியீடாக பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களின் ~சார்வாகன்| குறுநாவல் வெளிவருகிறது.
மகாபாரத இதிகாசக் கதையை மையப்படுத்தி பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்குமிடையே நடைபெற்று முடிந்த குருஷேத்திர யுத்தத்தை நாவலின் கருப்பொருளாக்கி அதன்மூலமாக யுத்தத்திற்கு எதிரான மனிதகுலத்தின் ஒட்டுமொத்தக் குரலாகச் ~சார்வாகன்| எனும் தலைப்பிலான இக்குறுநாவலைப் பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள் பின்னியிருக்கிறார்.
இக்குறுநாவலின் நாயகன் சார்வாகன், வேதங்களும் உபநிடதங்களும் ஏனைய புராண இதிகாசங்களும் கட்டமைத்த சுவர்க்கம், நரகம், தேவர் எனும் கற்பனப் படிமங்களை மறுதலித்து – அவை போதித்த வர்ணச்சிரம தர்மத்தைக் கேள்விக்குள்ளாக்கி – மக்களையும்; அம்மக்களின் இவ்வுலக வாழ்வையுமே முதன்மைப்படுத்தும் ~சார்வாகம்| எனும் இந்தியாவின் பழம்பெரும் சிந்தனை மரபின் குறியீடாகப் படைக்கப்பட்டுள்ளான்.
அதிகார வேட்கை கொண்ட அணிகளுக்கிடையிலான அதிகாரப் போட்டியால் உருவாகும் யுத்தத்தில் களப்பலியாவது அப்பாவி மக்களே என்பதை எடுத்துச் சொல்லி யுத்த மோகம் கொண்;ட அதிகார வர்க்கத்திற்கும் அவ்வதிகாரத்தின் வால்பிடியாளர்களுக்கும் எதிராக மக்கள் நலன் சார்ந்து நின்று குரல் எழுப்பும் மக்களின் பிரதிநிதியாகச் சார்வாகன் இக்குறுநாவல் முழுவதிலும் உலா வருகிறான்.
நாவலின் முதலாவது அத்தியாயத்திலே யுத்தம் முடிந்து வெறிச்சோடிக் கிடக்கும் குருஷேத்திரகளத்தை மிகவும் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தியுள்ளார் மௌனகுரு அவர்கள். அவரது மொழிப் புலமையும் அதனைக்கையாளும் திறமையும் அவருக்குக் கைகட்டிச் சேவகம் செய்துள்ளன. பாரதப்போர் முடிந்து ஒருமாதகாலமாகிவிட்ட யுத்தகளத்தை அவர் காட்சிப்படுத்தும் போது ஒரு கட்டத்;தில்,
~சிறிய மலைகள் உருகி ஒடுவதுபோல இறந்த யானைக் குவியல்களிலிருந்து நிணம் ஒழுகிக் கொண்டிருந்தது.| என்று கூறியிருப்பது அவரது மொழி ஆளுமைக்கு ஓர் உதாரணம்.
~சிறிய மலைகள் உருகி ஒடுவதுபோல இறந்த யானைக் குவியல்களிலிருந்து நிணம் ஒழுகிக் கொண்டிருந்தது.| என்று கூறியிருப்பது அவரது மொழி ஆளுமைக்கு ஓர் உதாரணம்.
குருஷேத்திர யுத்தம் மூலம் அத்தினாபுரி அரண்மனை அதிகாரம் கௌரவர்களிடமிருந்து பாண்டவர்களினிடம் கைமாறியதே தவிர அந்த யுத்தத்தில் தர்மங்களும் நியாயங்களும் புதையுண்டன. குடிமக்கள் அனைவரினதும் நலன்கள் யாவும் பலிகொடுக்கப்பட்டன. இந்த உண்மை நாவலின் அத்தனை அத்தியாயங்களிலும் இழையோடிக் கிடக்கிறது.
இன்று உலகில் கண்டங்களுக்கிடையேயும் - நாடுகளுக்கிடையேயும் - இனங்களுக்கிடையேயும் - மொழிகளுக்கிடையேயும் - மதங்களுக்கிடையேயும் - ஊர்களுக்கிடையேயும் - பிராந்தியங்களுக்கிடையேயும் போட்டியும் பூசலும் குரோதமும் உருவாகி எங்கும் யுத்த மேகங்கள் கருக்கட்டும் சூழலில் யுத்தத்திற்கு எதிரான மனிதகுலத்தின் குரலாகச் சார்வாகன் இந்நாவலில் அடையாளப்படுத்தப்படுகின்றான். யுத்தத்தின் அடிப்படை அதிகார மோகமே; அதிகார வர்க்கமும் அதிகாரவர்க்கத்தை வால்பிடித்து அதனால் அடையப்பெறும் சுகபோகங்களைச் சகிக்கின்ற சுயநலக் கூட்டமுமே அம்மோகத்தை வளர்க்கின்றன என்பதை இந்நாவல் வரிக்கு வரி விளக்குகிறது.
“அனைத்துச் செயற்பாடுகளுக்கும் அதிகாரமே அடிநாதம். ஆளும் கூட்டத்தினர் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்கிறார்கள். அறிஞர்களும் இலக்கியங்களும் மதங்களும் அதிகாரத்திற்குச் சார்பாகவேயுள்ளனர். தம் கருத்துக்களால் மக்கள் மனதிலே அதிகாரத்தை ஞாயப்படுத்தும் மனோநிலையை உருவாக்கி விடுகிறார்கள். அதிகாரம் சார்ந்த கருத்துக்கள் உருவாக்கப்படுகின்றன. உருவாக்கப்பட்ட கருத்துக்களுக்கு மக்களும் அடிமைகளாகி விடுகிறார்கள்.” என்ற சார்வாகனன் வாயிலான பேராசிரியர் மௌனகுரு அவர்களின் கூற்று சமகால இலங்கைத் தமிழ் அரசியலுக்கும் - தென்னிலங்கை அரசியலுக்கும் - இந்துசமுத்திரப் பிராந்திய அரசியலுக்கும் - பூகோள அரசியலுக்கும்கூடப் பொருந்துமாறு உள்ளது.
குருஷேத்திர யுத்தம் என்றாலும் சரி – நடைபெற்ற இரண்டு உலக மகா யுத்தங்கள் என்றாலும் சரி – அண்மைக் காலத்தில் நாடுகளுக்கிடையே நடைபெற்ற அல்லது அண்மைக்காலமாக நடைபெறும் யுத்தங்கள் என்றாலும் சரி - இலங்கையினதும் இலங்கைத் தமிழ்ச் சமூகத்தினதும் அனுபவத்தில் உள்நாட்டில் நடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் யுத்தம் என்றாலும் சரி, எல்லா யுத்தங்களினதும் நோக்கமும் குணாம்சமும் ஒரே மாதிரியானவைதான். அடைய நினைக்கும் அல்லது அடைந்து கொண்ட அதிகாரத்தின் தன்மை – அதிகாரத்தின் வீச்செல்லை – அதிகாரத்தின் கனதி மாறுபடலாமே தவிர இந்த எல்லா யுத்தங்களின் போதும் மக்கள் நலன்கள் முதன்மைப்படுத்தப்படவில்லை. ஏதோ ஒரு மட்டத்தில் அதிகாரங்களைப் பெற முற்பட்ட அதிகாரவர்க்கம் சார்ந்த அணிகளுக்கிடையேயான யுத்தங்கள்தான் இவை.
நாவலின் இறுதியில் அதிகார வர்க்கத்தினருக்கு எதிராகவும் - யுத்தத்திற்கு எதிராகவும் குரல்கொடுத்த சார்வாகன் அதிகார வார்க்கத்தின் சதியினால் எரித்துக் கொல்லப்படுகிறான். அதைக் கண்ட “அவர்கள் (மக்கள்) மனங்கள் குருஷேத்திர களங்களாயின”
என்ற வாக்கியத்துடன் நாவல் நிறைவுறுகிறபோது யுத்தத்திற்கான எதிர்ப்பு என்பது இன்னும் பல யுத்த களங்களைத் தோற்றுவிக்குமா? என்ற வினாவும் விஸ்வரூபம் எடுக்கிறது.
என்ற வாக்கியத்துடன் நாவல் நிறைவுறுகிறபோது யுத்தத்திற்கான எதிர்ப்பு என்பது இன்னும் பல யுத்த களங்களைத் தோற்றுவிக்குமா? என்ற வினாவும் விஸ்வரூபம் எடுக்கிறது.
மொத்தத்தில் உலக சமாதானத்தை விரும்பும் அனைவரும் ஊன்றிப்படிக்க வேண்டிய நாவல் இது. யுத்தத்தை நாடுபவர்களும் யுத்த அவலங்களை உணர்ந்து திருத்துவதற்கும் இந் நாவலைப் படிக்க வேண்டியது அவசியம்.
nANTRI:thenee.com/
No comments:
Post a Comment