அம்மா அரசியலுக்குப்பின்னாலிருக்கும் தீவிர விசுவாசம் By முருகபூபதி

.

அம்மா  அரசியலுக்குப்பின்னாலிருக்கும்   தீவிர விசுவாசம்
அண்ணாத்துரையின்  அறைகூவலை தவறாக அர்த்தப்படுத்தும்  தொண்டர்கள்
                                                                           முருகபூபதி
" அம்மா என்றால் அன்பு. அப்பா என்றால் அறிவு" என்ற பாடலை தனது  சொந்தக்குரலில்  பாடி  நடித்தவர்,  தமிழகத்தின் அம்மாவாகவே அழுத்தமாக பதிவாகிவிட்டார்.
எம்.ஜீ.ஆரின் அடிமைப்பெண் படத்தில் அவர் இரட்டைவேடஙகள் ஏற்றிருந்தார்.  1969 ஆம் ஆண்டில் இந்தப்படம் வெளியானது. கூனிக்குறுகி அப்பாவியாக தோன்றும் கதாநாயகனுக்கு தன்னம்பிக்கையை ஊட்டி அவனை வீரனாக்குவார்.
ஆனால், காலம் கடந்து, இன்று அவர் அரசியலில் யாருக்கு தன்னம்பிக்கை ஊட்டியிருக்கிறார்...? எவரை அடிமைப்படுத்தி குனிக்குறுக வைத்துள்ளார் என்பதை பார்க்கும்போது, சினிமா வேறு வாழ்க்கை வேறு என்று பகுத்துப்பார்க்க  முடியவில்லை.




தமிழகத்தில் அரசியலை தீர்மானிப்பதற்கு    சினிமா கவர்ச்சிதான் முக்கிய காரணியாக இருந்திருக்கிறது. அந்தக்காரணிக்கு  வித்திட்டவர்  இன்றைய முதல்வரை வாரிசாக்கிய எம்.ஜீ.ஆர்.தான்
 இந்த வாரிசை அன்று  அம்மு என அழைத்த தாய் நடிகை  சந்தியாவும் இன்றில்லை. மக்கள் திலகமும் இல்லை. ஆனால், திலகம்  தான் செய்த பல புரட்சிகளில் ஒன்றுதான்   தனது வாரிசாக இந்தப்புரட்சித்தலைவியை தமிழகத்திற்கு தந்திருப்பது.
வருங்கால முதல்வர் என்ற கனவை பல சினிமா கலைஞர்களிடம் விதைத்ததும் திலகம் செய்த புரட்சிகளில் ஒன்று. எனினும் விதையை விருட்சமாக்கி தமிழகத்திற்கே அம்மாவாகியவர்தான் இந்தப்புரட்சித்தலைவி.
உணவுக்குச்சேர்க்கும் உப்புக்கும் அம்மாவின் பெயர்தான் சூட்டப்பட்டது. அம்மா உணவகங்களும் திறக்கப்பட்டன.

தமிழகத்தின் சுவர்களில், வீதிகளில், கட்டிடங்களில், அரச திணைக்களங்களில் எல்லாம் அம்மாவின் படங்கள்தான் நீக்கமற நிறைந்தன. அம்மா அப்பல்லோவுக்குச்சென்றதும், அவருடைய அமைச்சர்கள் அதிகாரிகள் நடத்தும் கூட்டங்கள், உட்பட நிருபர்களுடனான சந்திப்பிலும் அம்மாதான் படமாக முன்னிலைப்படுத்தப்படுகிறார்.
தன்னை தமிழக மக்கள் அம்மா என்று  அழைப்பதையே தான் பெரிதும் விரும்புவதாகவும் ஜெயலலிதா பல சந்தர்ப்பங்களில் பகிரங்கமாக சொன்னவர்.
அதனால் அவர் ஒரு மாதகாலத்திற்கும் மேலாகத்  தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் அப்பல்லோவையும் அம்மல்லோ என அழைப்பதே பொருத்தம் என்று யாரோ எழுதியதாக அறிந்தோம்.
அவர் சொத்து குவிப்பு வழக்கில்  கர்னாடகாவில் சிறையில் தடுத்துவைக்கப்பட்டபோதும்  அந்த வளாகத்தைச்சுற்றி அவரது தொண்டர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், ஊராட்சித்தலைவர்கள் உறுப்பினர்கள் பொதுமக்கள் திரண்டதுபோன்றே, இன்று அப்பல்லோ மருத்துவமனையில் அவர் தங்கியிருக்கும்போதும் திரண்டிருக்கின்றனர்.
மத்தியிலிருந்தும் ஏனைய மாநிலங்களில் இருந்தும் யாராவது ஒரு முதல் அமைச்சர் அல்லது அரசியல் பிரமுகர் தலைவர் அப்பல்லோவுக்கு வந்தவண்ணமிருக்கின்றனர்.

பிரதமர் மோடியும் விரைவில் வரவிருக்கிறார். ஆளுனர் வருகிறார். ரஜனி காந்த்,   குஷ்பு , பாரதிராஜா, வைரமுத்து வந்தார்கள். கமல் தனது பிறந்த நாளையே கொண்டாடவேண்டாம் என்று தனது ரசிகர்களுக்கு அறிவிக்கிறார்.
ஆனால்,  எவரும் தீபாவளியை கொண்டாடவேண்டாம் எனச்சொல்லவில்லை. தீபாவளி அமளி தொடங்கும் முன்பே சிவகாசியில் நடந்த பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது.
ஒவ்வொரு தொகுதியிலும் அபிவிருத்தி நடக்கிறதோ இல்லையோ, அண்ணா தி. மு.க எம்.எல்.ஏ.க்கள் மக்களை ஆயிரக்கணக்கில் திரட்டி பால்குடம் ஏந்தியும் - வேல் குத்தியும் கற்பூரச்சட்டியுடன்  ஊர்வலம் செல்லும் நிகழ்ச்சிகளில் அக்கறை காண்பிக்கிறார்கள்.
ஒரு அமைச்சர் இந்த அமளியில் மயங்கியும் விழுந்திருக்கிறார்.
ஒரு வீட்டில் குடும்பத்தலைவியாகக்கருதப்படும்  அம்மா நோய் உபாதையில் படுத்துவிட்டால் யாவுமே வீட்டில் படுத்துவிடும். எமது தமிழ்க்குடும்பங்களில் பெரும்பாலும் இதுதான் நிலை. புகலிடச்சூழலில் இந்த நிலை குறைவு. ஆண்கள் பலதையும் சுமப்பார்கள்.
ஆனால்,  தமிழகத்திலும் இலங்கையிலும் பெண்கள்தான் பிள்ளையும் சுமந்து வீட்டுக்கடமைகளையும் சுமப்பார்கள். தனக்குப் பின்னர் ஒரு தலைமையை அல்லது வாரிசை உருவாக்காமல் தமிழக அரசின் சுமையையே சுமந்த அம்மா,  படுக்கையில் வீழ்ந்ததும், அரச நிருவாகமும் படுத்துவிடும் அபாயம் தோன்றியதனால் மத்திய அரசு உஷாரடைந்திருக்கிறது.
மத்திய பா.ஜ.க. அரசிற்கு இதுவிடயத்தில் உள்நோக்கம் இருப்பதாகவும் பேசப்படுகிறது. எப்படியோ  நிருவாகம் நடக்கவேண்டும். இடையில் காவிரிப்பிரச்சினை வேறு துருத்திக்கொண்டு நிற்கிறது.
பதில் முதல்வர் இல்லாமல், முதல்வரின் இலாகாக்களை கவனிக்கும் பொறுப்பை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஏற்றிருக்கிறார்.
அவருக்கும் அம்மாவின் ஆசிதான் தேவை. அதனால் அவரும் அம்மாவின் படத்துடன் இயங்கவேண்டியிருக்கிறது.
கானகம் சென்ற இராமன். அந்தக்காட்டில் கல்லிலும் முள்ளிலும் நடந்து அலைந்து அண்ணி சீதைக்கு காய் -  தேடவேண்டுமே என்ற கவலையே இல்லாமல்,  அண்ணனின்  பாதுகையை வாங்கிச்சென்று அயோத்தியின் அரியணையில் ஏற்றினான் பரதன்.
இராமனின் பாதுகைதான் அவன் திரும்பும் வரையில் அயோத்தியை ஆட்சி செய்தது. இன்று சரித்திரம் திரும்பியிருக்கிறது.
அம்மாவின் படம்தான் தமிழகத்தை ஆட்சிசெய்கிறது. அம்மா அம்மல்லோவில் இருந்தாலும்,  அம்மா  தமிழகத்தின் இதயதெய்வம் மட்டுமல்ல அவருடைய அமைச்சர்களினதும் இதயதெய்வம்தான்.
அதனால் இந்த அமைச்சர்கள் தங்களைப்பெற்ற அம்மாவை வணங்குவதை விட தமிழக அம்மாவை வணங்குவதில்தான் கரிசனையோடு வாழ்கிறார்கள்.
வை.கோ.வை ஒரு தடவை ஜெயலலிதா பொடா சட்டத்தில் சில மாதங்கள்  சிறைவைத்திருந்தார். " தனது அம்மா தன்னை வயிற்றில் பத்துமாதங்கள்தான் வைத்திருந்தார். இந்த அம்மா தன்னை சிறையில் பல மாதங்கள் வைத்திருந்தார்" என்று பஞ் டயலக்பேசினார் வை.கோ.
இன்றைய தமிழக அமைச்சர்களுக்கு தமிழக அரசியல் வரலாறு நன்கு தெரியும். அதில் ஓரங்கட்டல் என்றும் ஒரு அத்தியாயம் இருக்கிறது.
எம்.ஜீ.ஆரை ஓரங்கட்டினால்  பிரச்சினை வரும் எனத்தெரிந்தமையால்தான் கட்சியிலிருந்து அவரை விலக்குவதற்கு முன்னர் கண்ணதாசனிடம் ஆலோசனை கேட்டார் கருணாநிதி.
அதற்கு கண்ணதாசன், " வெளியே விடாதே உள்ளே வைத்து அடி" என்று சொல்லியிருக்கிறார்.
அந்தத் திராணி இல்லாத கருணாநிதி, ஒரு சினிமாக்காரனால் தம்மை என்ன செய்துவிட முடியும் என்று தப்புக்கணக்குப்போட்டார். முடிவு தெரிந்ததுதானே.


கருணாநிதிக்கு அவ்வாறு ஆலோசனை சொன்ன கண்ணதாசனையே தனது அரசவைக்கவிஞராக்கி உள்ளே வைத்தார் எம்.ஜீ.ஆர்.
" இவருடைய வாய் சும்மா இருக்காது.  அதனால் இவர் வாயை மூடுவதற்குத்தான் எம். ஜீ.ஆர் அவ்வாறு செய்தார் " என்று  கண்ணதாசனின் துணைவியார் பார்வதி அம்மா சொல்லியிருக்கிறார்.
தமிழக அரசியலில் எதிரியும் இல்லை நண்பரும் இல்லை என்பது அதன் அங்க இலட்சணம். எதிரிக்கு எதிரி நண்பராகும் அரசியலும் அங்கு நடக்கிறது.
எம். ஜீ. ஆரின் நம்பிக்கைக்குரிய செயலாளரும் சத்தியா மூவிஸ் உரிமையாளரும் திரைப்படத்தயாரிப்பாளருமான ஆர். எம். வீரப்பன் எம்.ஜீ. ஆரின் பதவிக்காலத்தில் அறங்காவல் அமைச்சராகவும் இருந்தவர்.
இவர் மட்டுமல்ல எஸ். டி. சோமசுந்தரமும், இன்று தமிழக காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியாலும் சோனியா காந்தியாலும் நியமனம் பெற்றுள்ள திருநாவுக்கரசுவும் ஜெயலலிதாவால் ஒருகாலகட்டத்தில்  ஓரங்கட்டப்பட்டவர்கள்தான்.
எம்.ஜீ.ஆருக்கு மிகவும் விசுவாசமாக இருந்த பண்ருட்டி இராமச்சந்திரனும் ஓரங்கட்டப்பட்டு எங்கெல்லாமே சென்று திரும்பியவர்தான்.
இவ்வாறு தமிழக அம்மாவால் பலரும் ஓரங்கட்டப்பட்டிருக்கும் வரலாறு நன்றாகத்தெரிந்த  இன்றைய அ.தி.முக. அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு, மக்களுக்குச்சேவை செய்து அவர்களின் இதயத்தில் இடம்பிடிப்பதை விட அம்மாவின் விசுவாசிகளாக காண்பிப்பதற்காக  எந்த நிலைக்கும் இறங்குவதற்கு தயாராகிவிட்டனர்.
அம்மாவின் சுகத்திற்காக பிரார்த்திக்க  மக்கள் பால்குடம் ஏந்துவது ஆச்சரியப்படத்தக்க விடயம் அல்ல. சினிமா நாயகர்களின் கட்அவுட்டுகளுக்கே பால் அபிஷேகம் செய்தவர்கள்தானே.
நல்லவேளை இன்றும் தமிழகத்தில் ஆவின்பால் என்ற அழைக்கப்படுகிறது. அதற்கும் அம்மாவின் பெயரை சூட்டினால் விகற்பமாகிவிடும்.
மூலிகையில் பெற்றோல் தயாரிக்கமுடியும் என்று புறப்பட்டு அன்று முதல்வராக இருந்த கருணாநிதிக்கே கண்ணில் மண் தூவினார் ஒருவர். பின்னாளில் மூலிகைப்பெற்றோலின் மோசடி அம்பலமானது.
அம்மா கர்நாடகா நீதிமன்றம் செல்லும் முன்னர் பெரிய யாகம் நடத்தினார். குன்காவின் அதிரடி தீர்ப்பால் பெற்றோல் ஊற்றிக்கொண்டு இறந்தவர்கள் அ.தி.மு.க.வின் தியாகிகள் பட்டியலில் இணைந்தனர். இந்தப்பட்டியல் தொடராதிருக்கவாவது அம்மா குணம் பெறல் வேண்டும்.
மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் அம்மா பூரண சுகம் பெற்று போயஸ்கார்டனுக்கு திரும்பவேண்டும். ஏனென்றால் அப்பல்லோ மருத்துவமனையை பாதுகாக்கவேண்டும்.
தொடர்ந்தும் மருத்துவமனை நிருவாகம் அம்மா தேறிவருகிறார் என்றே தகவல் குறிப்புகள் வெளியிட வேண்டும்.
அங்கு செல்லும் வி.ஐ.பி.க்களும் தொலைக்காட்சி ஊடகங்களுக்கு மருத்துவமனை தகவல் குறிப்பையே திருப்பிச்சொல்லவேண்டும்.
இதுவே இன்றைய தமிழகத்தில்  காலத்தின் தேவையாகியிருக்கிறது.
அண்ணாத்துரை முதல்வராவதற்கு முன்னர் மேடைகளில்," ஏ... தாழ்ந்த தமிழகமே " என்று விளித்தே அறைகூவல் விடுத்தார். அதன் உள் அர்த்தம் விழிப்புணர்வுதான்.


தமிழகத்தை அப்படித்தான் கருதவேண்டும் என்று அ.தி.மு.க. தொண்டர்கள்    தவறாகப்புரிந்துகொண்டதற்கு  அண்ணாத்துரை பொறுப்பல்ல.
தண்ணீருக்காக ஏங்கும் தமிழகத்தில் அம்மாவுக்காக கண்ணீர்விடும் மக்கள்  முன்னே அம்மா மீண்டும் தோன்றவேண்டும்.
அதுவரையில் அப்பல்லோ மருத்துவமனை எச்சரிக்கையுடன்தான் இயங்கும்.
------------------
இவ்வாறு தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் அம்மா அலை தோன்றுவதற்கு பல காலத்தின் முன்னர் ஒரு நடிகையாக வலம் வந்த ஜெயலலிதாவுக்கு மற்றும் ஒரு பக்கம் இருக்கிறது.
அவர்  சிறந்த வாசகர்.  அத்துடன்  நல்ல நினைவாற்றலும்  பல்துறை ஆற்றலும்  மிக்கவர்.
தினமும்  அவர்  நூல்கள் படிப்பவர். அவர் ஆங்கில இலக்கியம் படித்தவர். அவர் சினிமாவுக்கு வந்தது  ஒரு  விபத்து. தொடர்ந்து கல்லூரியில்  படித்து  பட்டம்  பெறுவதற்கே  விரும்பியிருந்தவர்.
தாய் நடிகை சந்தியாவிடம், பத்மினி பிக்‌ஷர்ஸ் பந்துலுவும், சித்ராலய ஶ்ரீதரும்  கேட்டதனாலேயே  அம்மு  என்று அழைக்கப்பட்ட ஜெயலலிதா  தமிழ்த்  திரையுலகிற்கு வந்தார்.
பந்துலுவின் எம். ஜி. ஆர். நடித்த ஆயிரத்தில் ஒருவன், ஶ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை முதலான படங்களே அவருடை முதல் தமிழ்ப்பட வரிசையில் இடம்பெற்றவை.   1961 இலேயே அவர்  Epistle  என்ற ஒரு ஆங்கிலப்படத்திலும் நடித்தவர். 1961 - 65 காலப்பகுதியில் அவர் கன்னடம், ஹிந்தி, தெலுங்குப்படங்களில் நடித்துவிட்டிருந்தார்.
ஆனால், அவர் எம்.ஜி. ஆருடன் திரையுலகில் இணைந்து அரசியலுக்கு வராமல் விட்டிருந்தால், சிலவேளை சிறந்த எழுத்தாளராகியிருப்பார்.
அவருடைய ஆங்கில இலக்கியப்புலமை  பற்றி  சாருநிவேதிதாவும் எழுதியிருக்கிறார். சட்டசபையில்  ஒரு  தடவை, ஒரு தி.மு.க. உறுப்பினர், தமது தலைவர் கலைஞர் செய்த தியாகங்கள் பற்றி பட்டியலிட்டுப்பேசியபோது,   நேரு பிரதமராக  இருந்த காலப்பகுதியில் தமிழக மாநில  காங்கிரஸ் அரசு , தமிழ்நாட்டில் கல்லக்குடி என்ற பெயரை டல்மியாபுரம் என்று பெயர் மாற்ற முனைந்தபோது அங்கு ரயிலுக்கு முன்னால் படுத்து போராட்டம் நடத்தியதையும் சொன்னார்.
அவருக்கு பதில் அளித்த ஜெயலலிதா, உங்கள் தலைவர் கருணாநிதி ஓடும் ரயிலுக்கு  முன்னால்  படுக்கவில்லை.  தரித்து நின்றுகொண்டிருந்த  ரயிலுக்கு  முன்னால்தான் படுத்தார். ஆதாரம்:  கவியரசு கண்ணதாசன்  எழுதிய  வனவாசம்  நூல். வேண்டுமானால் எடுத்துப்படித்துப்பாருங்கள்  என்றார்.
இந்தச்செய்தி அப்பொழுது ஊடகங்களில் வெளியானதும், பலரும் சென்னை தி. நகரில் இருக்கும் கண்ணதாசன் பதிப்பகத்திற்கு படையெடுத்தனர்.
ஆனால், பிரதிகள் கைவசம் இல்லாத நிலையில் மீண்டும் ஒரு பதிப்பாக கண்ணதாசனின் வனவாசம் வெளியிட நேர்ந்தது என்று ஒரு தடவை கண்ணதாசனின் மகனும், பதிப்பகத்தின் அதிபருமான காந்தி கண்ணதாசன் குறிப்பிட்டார்
இதுவரையில் வனவாசம் சுமார் 40 பதிப்புகளைக்கண்டுவிட்டது.
படப்பிடிப்பில்  கிடைக்கும்  ஓய்வுநேரங்களிலும்  அவர்  நூல்கள் படித்தார்.  அவருக்கு  இசை  ஞானம்  இருந்தது.  பரத நாட்டிய அரங்கேற்றம்  செய்தவர்.
இவ்வாறு பல்துறை ஆற்றல் மிக்கவர்தான் ஜெயலலிதா.
சினிமாவும் அரசியலும்தான் அவரை திசைமாற்றியவை.
இந்த மாற்றம் அம்மா விசுவாசிகளைத்தான் அங்கு உருவாக்கியது.
அம்மா விரைந்து குணமாகி வாருங்கள்.
----0----

No comments: