படித்தோம் சொல்கிறோம் - முருகபூபதி

.
மீண்டும்  தட்டிவேனில்  பயணிப்போமா...?
ராஜாஜி  ராஜகோபலன்  என்ற  வழிப்போக்கனின்  வாக்குமூலம்
  
                                           
வாழ்க்கையில்  நாம்  சந்திக்கும்  மனிதர்கள்  அனைவரையும் தொடர்ந்து  நினைவில்  வைத்திருப்பது  சாத்தியமில்லை. இலங்கையில்   இலக்கிய  உலகிலும்  ஊடகத்துறையிலும்  நான் நடமாடிய   1970 - 1987   காலப்பகுதியில்   நான்  சந்தித்த  கலைஞர்கள், படைப்பாளிகள்,   பத்திரிகையாளர்கள்  ஏராளம்.
அவுஸ்திரேலியாவுக்கு  வந்த  பின்னர்  அந்த  வரிசையில் சந்தித்தவர்களும்    ஏராளம்.  எனது  எழுத்துக்களை   படித்த  ராஜாஜி ராஜகோபாலன்   என்பவர்  முதலில்  என்னுடன்  மின்னஞ்சலில் தொடர்புகொண்டபொழுது -  அவர்  தமிழ்நாட்டிலிருக்கும் தமிழகத்தவர்   என்றுதான்  முதலில்  நம்பினேன்.
பின்னர்  - அவரது  தொடர்ச்சியான  தொடர்புகளில்  கனடாவிலிருக்கும் இலங்கையர்   என்றும்,  ஒரு  சட்டத்தரணி  என்றும் அறிந்துகொண்டேன்.   கொழும்பில்  நான்  பணியாற்றிய  காலத்தில் சட்டவரைஞர்   திணைக்களத்திலிருக்கும்  நண்பர்களை பார்க்கச்சென்றவேளையில்   ராஜாஜி   ராஜகோபாலனும் என்னைச் சந்தித்திருப்பதாகச் சொன்னார்.

 அவரது   முகமும்  பெயரும்  எனது  நினைவிலிருந்து  எப்படியோ தப்பியிருக்கிறது.   தற்பொழுது  அவரது  ஒரு  வழிப்போக்கனின் வாக்குமூலம்    என்ற   கவிதைத்தொகுதி  எனது  மேசையில்  கடந்த ஆண்டு   கடைக்கூறிலிருந்து  என்னையே   பார்த்துக்கொண்டிருந்தது.
தமிழ்நாடு   சிவகங்கை  வளரி  பதிப்பகத்தின்  வெளியீடாக  வந்துள்ள இந்நூலுக்கு   அருணா   சுந்தரராசன்   பதிப்புரையும்   கே.எஸ். சிவகுமாரன்  இரசனைக்குறிப்பும்  மேமன் கவி  அறிமுகமும் எழுதியிருக்கிறார்கள்.
நானும்   ராஜாஜி  ராஜகோபாலன்  போன்று  ஒரு  வழிப்போக்கன்தான். வழியில்  கண்டதையெல்லாம்  மனதில்  மாத்திரம் பதிவுசெய்யத்தெரியாமல்   வாசகரிடமும்  பகிர்ந்துகொள்ளும் வழிப்போக்கர்கள்தான்   படைப்பாளிகள்.
செய்யுள்   இலக்கியத்தில்  நாம்  அறிந்த  பிரிவுகள்  கவிதை,  பாடல், காவியம்,   கவிதை  நாடகம்.   இதில்  கவிதை  நாடகங்களை  மேடையிலும்     பார்த்திருப்பீர்கள்.   கவிதையில்  திரைப்படங்களும் வெளியாகியிருக்கின்றன.    பாத்திரங்கள்  அனைத்தும் கவிதையிலேயே   பேசும்  ஒரு  ஆங்கிலப்படம்  அண்மையில் பார்த்தேன்.
செய்யுள்    இலக்கியத்தின்  ஒரு  பிரிவான  கவிதையும்  மரபுக்கவிதை - வசன கவிதை -    புதுக்கவிதை    என்று  பிரிந்திருக்கிறது.
1970  களில்  புதுக்கவிதைக்கு  ஆதரவாகவும்  எதிராகவும் இலங்கையிலும்  தமிழகத்திலும்  பலர்  களத்தில்  குதித்தனர். புதுக்கவிதைக்கென   ஏடுகளும்  தோன்றின.  இலங்கையில் புதுக்கவிதையாளர்கள்  வீறுகொண்டு  எழுந்தனர்.
மகாகவி  உருத்திரமூர்த்தி  குறும்பா  என்ற  வடிவத்தை  அறிமுகப்படுத்தினார்.  வேறும்  சிலர்  ஹைக்கூ  வடிவத்தில்  கவிதைகளை   எழுதினர்.
இந்தப்பின்னணிகளுடன்  ராஜாஜி  ராஜகோபாலனை  பார்க்கின்றோம். அவரது  கவிதைகள்  இலங்கையில்  மல்லிகை,   அலை,  வீரகேசரி, தினகரன்  முதலானவற்றில்  வெளியாகியிருக்கின்றன.


எனினும்  2014  ஆம்   ஆண்டில்தான்  இவரது  நீண்ட  கால வழிப்பயணம்   வாக்குமூலமாக  நூல்  வடிவில்  வெளியாகியிருக்கிறது.   இவர்  இலங்கையில்  வாழ்ந்த காலப்பகுதியில்  இதழ்களில்  எழுதியிருந்தபோதிலும்,  விமர்சகர்களின்   பார்வையில்  கண்டுகொள்ளப்படவில்லை  என்ற ஆதங்கத்தையும்   வெளிப்படுத்துகிறார்.
பொதுவாகவே   பெரும்பாலான  படைப்பாளிகளின்  நூல்களிலிருந்தே விமர்சனங்கள்    வெளியாகும்.   அங்கீகாரத்திற்காகவும்  தேசிய விருதுகளுக்காகவும்   புகழ்பெற்ற  விமர்சகர்களின்  முன்னுரைகளுக்கு காத்திருந்த    பலர்  எம்மத்தியில்  வாழ்கின்றனர்.
1970 - 1980   காலப்பகுதியில்  இந்த  வழிப்போக்கனின்  கவிதைகள் நூலுருப்பெற்றிருக்குமானால்  -  சில  வேளை அங்கீகரிக்கப்பட்டவர்களின்    முன்னுரை   அதற்கு கிடைத்திருக்குமானால்,  ராஜாஜி  ராஜகோபாலனும்  இலங்கையில் சிறந்த   அறிமுகத்தை   பெற்றிருக்கக்கூடும்.
உடனுக்குடன்   கருத்துச்சொல்லி   இவரை   ஏற்றுக்கொள்வதற்கு அல்லது  வசைபாடுதற்கும்  அப்பொழுது  முகநூலும்  இல்லை. நல்லவேளை -  அதனால்  அவர்  முகவரி  தொலைக்காமல்  மீண்டும் உயிர்ப்பித்துள்ளார்.
இந்நூலில்  அவரது  உயிர்ப்பு  துலக்கமானது.
புலம்பெயர்ந்த  இலங்கைத்தமிழர்கள்  மத்தியில்  இலக்கிய சுவாசத்துடன்   வாழும்  ஈழத்து  படைப்பாளிகள்  தொடர்ந்தும் ஈழத்தின்   காற்றையே    சுவாசிக்கின்றனர் என்றும்,  இன்னமும்  அவர்கள்  தாம் வாழும்   புதிய  தேசங்களின்  காற்றை   உள்வாங்கவில்லை   என்றும்   விமர்சனங்கள்  வெளியாகின்றன.
ராஜகோபாலன்   என்ற  வழிப்போக்கனாலும்  தான்  பிறந்து - தவழ்ந்து - வளர்ந்த   அற்றைத்திங்கள்  தடங்ளை   மறக்க  முடியவில்லை.  கடக்க முடியவில்லை.   அதற்கு  பதச்சோறாகவே  அவரது  கவிதைகள் விளங்குகின்றன.
கனடாவில்  இயந்திரமயமான  வாழ்க்கைச்சூழலுக்குள்,  கொடிய பனிக்குளிருக்குள்  ,  காலை  எழுந்து  வெளியே  செல்லு முன்னர் வீட்டு  வாசலில்  நடைபாதையில்  மலர்ந்து  குவிந்துள்ள பனிப்படலங்களை    கொத்தியும்  வெட்டியும்  கிண்டியும்  அகற்றிவிட்டு    இரவில்  நாறிப்பிடிப்பிற்கு  எண்ணெய்  தடவி,  மீண்டும்    மறுநாள்  காலையில்  அந்தத்திருத்தொண்டை முடித்துக்கொண்டு  வேலைக்குச்செல்லும்  மனிதர்கள்  ஆசுவாசம் தேடுவது   பழைய  நினைவுகளில்  இருந்துதான்.
கனடாவில்    குளிர்காலத்தில்  பனிக்கட்டிகளை   உடைத்து வழித்தடத்தை  சீர்படுத்தும்  எந்தவொரு  ஈழத்து  மனிதனதும் மனசாட்சியை   தொட்டுக்கேட்டால்  அது  சொல்லும்  அவன்  முன்னர் வாழ்ந்த    தாயகத்தின்  ஏக்கம்  பற்றி.
 எல்லோரும்   கவிஞர்கள்  இல்லை.   கவிஞனாக  வாழ்பவன்  தனது ஏக்கத்தை  - தாபத்தை  - ஏமாற்றத்தை -  ஆதங்கத்தை   கவிதையில் தருகிறான்.   அதனால்  அது  புலம்பல்  இலக்கியம்  அல்ல.


ராஜாஜியும்   தனது  கவிதைகளில்  தாயகத்தை  நினைவுபடுத்துகிறார்.
அவரது  இதற்கு  மேல் என்ன வேண்டும்...?      கவிதை  எனக்கு பட்டுக்கோட்டை  கல்யாணசுந்தரத்தை  நினைவுபடுத்தியது.
மானிடம்  போற்றுதல்  மேன்மை
மனிதவுயிரே  என்றும்  பெருமை
வானமே  எமது  எல்லை
வாராது  காண்  என்றும்  தொல்லை.
என்ற  வரிகள்   தன்னம்பிக்கையின்  ஊற்றுக்கண்.
வானமே  எமது  எல்லை  என்று  கூறும்  கவிஞர்  அடுத்த  கவிதையில்  ( அம்மா  மெத்தப்பசிக்கிறதே)  வானமே  எங்கள் கூரையம்மா  என்று  ஒரு  அகதி  முகாம்  குழந்தை  பற்றி சொல்லி வைக்கிறார்.
அந்தக்குழந்தையின்  எல்லை அவள்  வாழும்   அகதி  முகாம் கூரைக்குள்ளால்    இரவில்  நட்சத்திரங்களும்   நிலவும்  தெரியும் வானம்.
எனினும்   அவளது  துயரத்தை   தோற்றுப்போகும்  உணர்வுடன் சொல்லாமல்
இருட்டினில்  வாழ்ந்தே  பழகிவிட்டோம்
இருப்பதை  உண்டே   பசி  தீர்ந்தோம்
நாளும்   ஒரு நாள்  விடியுமம்மா
நாங்களும்   மனிதர்கள்  ஆவோமம்மா
என்று   நிறைவு  செய்கிறார்.
இந்த   வழிப்போக்கனின்  நண்பர்கள்  சுற்றம் -  சூழல் - இயற்கை மனிதர்கள் -  பாதிக்கப்பட்ட  மக்கள்.  இவரது  சில  கவிதைகளுக்கு மெட்டமைத்து    பாடவும்  முடியும்.
இலங்கையில்    ஒவ்வொரு    ஊருக்கும்  பிரசித்தமான  ஏதாவது  ஒரு உணவுப்பொருள்   இருக்கும்.
அவ்வாறே  கனி  வர்க்கங்களும்  இருக்கின்றன.
மாத்தறை    பக்கத்தில்  தொதல்  நல்ல  பிரசித்தம்.  சில  மலையக ஊர்களில்    கித்துல்  கருப்பட்டி,   எங்கள்  நீர்கொழும்பில்  அரிசிமாவில் செய்த    அல்வா.   அதுபோன்று  பருத்தித்துறையில்  தட்டை  வடை. பனங்கள்ளுக்கு   மாத்திரம்  அல்ல,  எந்த  மேலைத்தேய  குடிவகை மோகத்தினருக்கும்     (குடிப்பிரியர்களுக்கும்)   வாயில்  விட்டு அரைப்பதற்கு     சுவையானது  பருத்தித்துறை   தட்டை  வடை. கனடாவிலிருக்கும்  இந்த  வழிப்போக்கனுக்கு  தனது  ஊர்  மீதுள்ள பாசம்    பருத்தித்துறை  வடை   என்ற  கவிதை   ஊடாகவும் வெளிப்படுகிறது.
ராஜாஜி  ராஜகோபாலனுக்கு  பாதிக்கப்பட்ட  மக்களின்  துயரத்தை கருணையுடன்  பதிவுசெய்யத் தெரிந்திருப்பது  போன்று  காதல் வயப்பட்ட   மனிதனின்  உள்ளத்தையும்  கனிவோடு  பதிவு செய்யத்  தெரிந்திருக்கிறது.
எழுதாத  கடிதத்தில்தான்   எத்தனையோ   உள்ளன -  என்ற கவிதையில்  வரும்  வரிகளைப்பாருங்கள்:
மறைத்துக்கொண்டவை
மலர்க் கதவுகள்தானே
திறந்துகொள்ள  நான்
தென்றலை  அனுப்புவேன்.
---
வட்டக்கழுத்தை  விட்டு
எட்டிப்பார்க்குமோவென்று
ஒவ்வொரு  சொல்லின்  முடிவிலும்
இழுத்துவிடுவாயே  சேலையை
----
ஒருகோடு  மட்டுமே  கீறி
ஓவியமாக்கு  என்றேன்
இரு  நுனிகளையும்  இணைத்து
இதயம்   ஆக்கிவிட்டாய்.
-----
பாரதியாருக்கு  சில    தென்னைமரங்களுக்கு  நடுவே  ஒரு  வீடும் களித்துச்சிரிக்க   ஒரு    பெண்ணும்  தேவைப்பட்டது.  கண்ணதாசனுக்கு ஒரு    கோப்பையும்  கோல   மயிலும்  தேவைப்பட்டது. ( ஆனால் - அதன்   அர்த்தம்  வேறு -  ஒரு  ஓவியனுக்கு   தேவைப்பட்ட  வர்ணம் நிரம்பிய  கோப்பையும்  தூரிகையாக  மயில்  இறகும்)
ஆனால்  - ராஜாஜி  ராஜகோபாலன்  இறைவனைக்கண்டால்  என்ற கவிதையில்   இறைவனிடம்   என்ன  கேட்பார்...?  என்பதற்கு  ஒரு நீண்ட  பட்டியலையே  தருகின்றார்.   இந்த  நீண்ட  கவிதைக்கும் மெட்டமைக்க   முடியும்.   ஒரு  மானிட  நேசனின்  ஆத்மக்குரலாக அந்த  வேண்டுதல்  அமைந்திருக்கிறது.   அதில்  சுற்றம்,  உறவு, தேசங்கள்,   இயற்கை,   உழைப்பு,  மானுடம்  என்பன  துலக்கமாக பதிவாகியிருப்பதால்   சர்வதேசப்பார்வை   கொண்டதாகவும் அமைந்துவிடுகிறது.
தட்டிவேன்   என்ற   கவிதை  எம்மை  வடபுலத்திற்கோ அழைத்துச்செல்கிறது.
எனக்கும்   இந்தத் தட்டிவேனில்  பயணித்த  அனுபவம்  இருக்கிறது. எனினும்   எனக்குத்தெரிந்தும்  கவனிக்கத்தவறிய  ஒரு  செய்தியை இவர்    பதிவுசெய்கின்றார்.
இந்தத்தட்டிவேனில்    பயணிப்பவர்கள்  பெரும்பாலும் முதியவர்கள்தான்.    இளம்  யுவதிகள்,   இளைஞர்கள்  சைக்கிளில் பவனி    வருவார்கள்.   தட்டிவேன்  நிற்பதற்கு Bushalt  தேவையில்லை. பயணிகள்   கைகாட்டி  நிறுத்தும்  எந்த  இடத்திலும்  அது  நின்று ஏற்றும்.   எவரையும்  கைவிட்டுச்செல்லாது.
ஆனால்,  சைக்கிள்களில்  வரும்  இளம்  தலைமுறை  அதற்கு ஏளனச்சிரிப்பை   உதிர்த்து,  கைகாட்டி  கடந்து செல்லும். தட்டிவேனிடம்  கருணை   இருக்கும்.  முதியவர்களை   எப்படியும் ஏற்றிச்சென்றுவிடும்.   வடமாகணத்தின்  உள்ளுர்  பொருளாதாரத்தின் ஏற்றுமதி   இறக்குமதி  வர்த்தகத்திற்கு  சலுகைவிலையில்  கட்டணம் அறவிட்டது   தட்டிவேன்.
தட்டி வேன்    கவிதையில்  வடபுலத்தைச் சித்திரிக்கும்  கவிஞர்  முதிய   பெண்களை   இவ்வாறு  வர்ணிக்கின்றார்.
குறுக்குக்கட்டிய  பெண்களும்
கடகம்  தூக்கிய  கிழவிகளுமே
உன்  கைபிடித்த
ஐஸ்வர்ய  ராய்கள்.
---
இளம்  பெண்களை  இப்படிச்சொல்கிறார்:
மெட்டி  அணிந்த  மங்கையர்
உன்  பலகைத்தட்டில்  ஏறியதில்லை
சேலை  உடுத்தியவர்கள்  உன்னைச்
சேர  நினைப்பதில்லை
டியூட்டரிக்   குமரிகள்  உன்னைத்
திரும்பியும்  பார்ப்பதில்லை.
----
ராஜாஜி   ராஜகோபாலன்  என்ற  வழிப்போக்கனிடமிருந்து  இலக்கிய உலகம்  மேலும்  எதிர்பார்க்கிறது.  அவருடைய  குதிரை   இல்லாத ராஜகுமாரன்   என்ற  சிறுகதைத்தொகுதி  வெளிவரவிருப்பதாக அறிகின்றோம்.
நடந்து  திரிந்த  இந்த  வழிப்போக்கன்,  தொடர்ந்தும் குதிரையில்லாமலும்  நடக்கவிருக்கிறார்.
அவர்  வரும் வழியில்  நாமும்  காத்து   நிற்கிறோம்.
---0---
letchumananm@gmail.com
No comments: