கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களுடன் இனிய மாலைப் பொழுதும் "பாலித் தீவு" நூல் வெளியிடும் - கானா பிரபா

.
ஈழத்தில் இருந்து சமயப்பணி மற்றும் அறப்பணி ஆகியவற்றைத் தன் இரு கண்களாகக் கொண்டு நாளும் பொழுதும் இயங்கி வரும் சிட்னியில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களுடனான இனிய மாலைப் பொழுது கடந்த சனிக்கிழமை 25 ஏப்ரல் 2015  TheRedgum Function Centre, Wentworthville இல் நிகழ்ந்தது. இந்த நிகழ்வு அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊடக அனுசரணையோடு, இரவு உணவு, மண்டப வசதி உட்பட அனைத்துச் செலவினத்தையும் இந்த நிகழ்வை முன்னெடுத்த தொண்டர்கள் பொறுப்பேற்க இனிதே நிகழ்ந்தது.  இந்த நிகழ்வில் திரட்டப்பட்ட முழுமையான நிதி ஈழத்தில் இயங்கும் "சிவபூமி" சிறுவர் மனவளர்ச்சிப் பாடசாலைக்குக் கையளிக்கப்பட்டது.

"கானா பிரபாவையும் ஆறு திருமுருகன் அவர்களையும் சந்திக்க வேணும்"  ஒரு மூதாட்டியின் குரல், நிகழ்ச்சி ஆரம்பிக்க அரைமணி நேரம் இருக்கும் தறுவாயில் ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்த போது அந்தக் குரலைக் கேட்டு நிமிர்ந்தேன். எனக்குப் பக்கத்தில் இருந்த சிவா அண்ணர் "இவர் தான் கானா பிரபா" என்று கை காட்ட, அந்த மூதாட்டி சிரித்துக் கொண்டே 
"உங்கட வானொலி நிகழ்ச்சிகளைப் பல வருஷமாகக் கேட்கிறேன், இன்று தான் உங்களைக் காணுறன் நான் நினைத்தேன் இன்னும் பெரிய ஆளா இருப்பியள் எண்டு,
மன்னிக்க வேணும், கணவர் நோய்ப் படுக்கையில் இருக்கிறார் உங்களைக் காண வேணும் எண்டு தான் வந்தனான் நிகழ்ச்சியை பார்க்க முடியாத சந்தர்ப்பம்" 
என்றவாறே கையில் இருந்த பண நோட்டு அடங்கிய கடித உறையை என்னிடம் தந்தார். 
நெகிழ்ந்து போனேன் நான். இந்த மாதிரி அன்பான நெஞ்சங்களை விட வேறு எந்தப் பெறுமதியான சொத்தை இந்த நாட்டில் என்னால் ஈட்ட முடியும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். கையைக் கூப்பியவாறே அவருக்கு விடை கொடுத்தேன்.




 

 "போரினாலும்,  இயற்கை அநர்த்தத்தாலும் இறந்த உறவுகள் மற்றும் போரில் வீர உயிர் துறந்த அவுஸ்திரேலிய, நியூசிலாந்து வீரர்களை நினைவு கூர்ந்தும் ஒரு நிமிட மெளன அஞ்சலியோடு  
நிகழ்ச்சி மாலை 6.32 மணிக்கு ஆரம்பமானது.  இந்த நிகழ்வினை திருமதி இந்துமதி.ஶ்ரீனிவாசனோடு கானா பிரபாவும் இணைந்து தொகுத்து வழங்கினார்கள்.

 
 
சங்கீதபூஷணம் அமிர்தகலா அவர்கள் தேவாரப் பண் இசைத்துச் சிறப்பித்தார்.


இந்த நிகழ்வின் ஒருங்கமைப்பாளர்களில் ஒருவரான சட்டத்தரணி செந்தில்ராஜன் சின்னராஜா அவர்கள் வரவேற்புரையை நிகழ்த்தினார்.

நடனமணி சந்திரிகா ஞானரட்ணம் அவர்களின் சிறப்பான நாட்டிய நடனம்  தொடர்ந்து நிகழ்ந்தது.


திரு ராஜயோகன் அவர்களது இயக்கத்தில் சிட்னி "கீதசாகரா" மெல்லிசைக் குழு வழங்கிய இன்னிசை நிகழ்வினை பாடகர் பாவலன் விக்கிரமன் அவர்கள் தொகுத்து வழங்க, நாற்பத்தைந்து நிமிடம் பழைய புதிய பாடல்களோடு உள்ளூர்க் கலைஞர்கள் பாடிச் சிறப்பித்தார்கள்.

"இணுவில் மண்ணின் மைந்தர் மூவர் மேடையில் இடம் பிடிக்கிறார்கள்" என்ற அறிமுகத்தோடு கலாநிதி ஆறு திருமுருகன், திரு வைத்திலிங்கம் ஈழலிங்கம், கானா பிரபா அவர்களை அழைத்து சிறப்பு வரவேற்புரையை வழங்கினார் திருமதி இந்துமதி ஶ்ரீனிவாசன் அவர்கள்.

கானா பிரபா எழுதிய "பாலித் தீவு - இந்துத் தொன்மங்களை நோக்கி" என்ற நூலை விழா நாயகர் செஞ்சொற் சொல்வர் ஆறு திருமுருகன் அவர்கள் வெளியிட்டு வைக்க, இந்த விழாவின் முக்கிய ஒருங்கமைப்பாளர் மற்றும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இயக்குநர்களில் ஒருவர் திரு வைத்திலிங்கம் ஈழலிங்கம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

டாக்டர் மு.வரதராசனார், சிலேடைச் செல்வர் கி.வ.ஜகந்நாதன், "இதயம் பேசுகிறது" மணியன் ஆகியோரது ஆன்மிக, பயணக் கட்டுரைகளையும் சிலாகித்து அவற்றின் நுட்பங்களையும் எடுத்துக் காட்டி, இவர்களோடு நம்மவர் கானா பிரபா அவர்கள் கம்போடியா நாட்டின் பயண நூலைத் தொடர்ந்து இப்பொழுது பாலித் தீவு பயண, மற்றும் வரலாற்று இலக்கியத்தைப் படைத்துள்ளார். இவரின் மொழி நடை எளிமையானது, இளையோரையும் கவரக் கூடியது. ஒரு பயண இலக்கியம் படைப்பது அவ்வளவு எளிதான காரியமன்று, தான் போகும் இடத்துக்கு நம்மையும் கூட்டிச் சென்று அங்கே காணும் வரலாற்றுப் புதையல்களையும், காட்சி நுட்பங்களையும் பகிர்வது இந்தப் படைப்பின் சிறப்பு. 
கானா பிரபாவின் இந்தப் பயண நூலை நீங்கள் வாசிக்க வேண்டும், இவ்வாறான இடங்களுக்கு நீங்கள் எல்லோரும் சென்று அழிந்து கொண்டிருக்கும் இந்துத் தொன்மங்களை வெளி உலகுக்குக் காட்ட வேண்டும் என்று "பாலித் தீவு - இந்துத் தொன்மங்களை நோக்கி"நூல் வெளியீட்டு உரையை நிகழ்த்தினார் திரு ஆறு.திருமுருகன் அவர்கள்.

தொடர்ந்து, இந்த நூலை வெளியிடும் வாய்ப்பை வழங்கிய விழாக்குழுவினர், வானொலிப் பேட்டியை எடுத்துப் பரவச் செய்த SBS வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திரு.மகேஸ்வரன்.பிரபாகரன், அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினர் ஆகியோருக்கு நூலாசிரியர் கானா.பிரபா தன் நன்றியறிதலைப் பகிர்ந்து கொண்டார்.

இந்த விழாவில் விற்கப்பட்ட "பாலித் தீவு - இந்துத் தொன்மங்களை நோக்கி" நூலின் முழுமையான வருவாய் 1600 டாலர் ஈழத்தின் சிவபூமி சிறுவர் மனவளர்ச்சிப் பாடசாலைக் கட்டட நிதிக்கான பங்களிப்பில் சேர்க்கப்பட்டது.  முன்னர் நான் சிவபூமி பாடசாலையைத் தரிசித்த அனுபவம் இது 
 "சிவபூமி" என்னும் கோயிலில் கடவுளின் குழந்தைகளைக் கண்டேன் http://www.madathuvaasal.com/2011/07/blog-post.html

சிவயோக சுவாமிகளின் "நற்சிந்தனைப் பாடல்கள்" ஓ.எஸ்.அருண் என்ற கர்நாடக  இசைப்பாடகரால் பாடி, அபயகரம் அமைப்பினால் வெளியிட்ட இறுவட்டின் விற்பனை மூலம் கிட்டிய நிதியான 200 டாலரும் இந்த நற்காரியத்துக்குக் கையளிக்கப்பட்டது.
 
அறுசுவை உணவு விருந்து திரு சம்பந்தர் அவர்கள் பொறுப்பில் பரிமாறப்பட அந்த உணவை ரசித்துச் சாப்பிட்டவாறே தமக்குள் பேசி மகிழ்ந்தனர் சபையோர்.

இடைவேளைக்குப் பின்னர் நிகழ்ச்சி மீண்டும் அடுத்த பரிமாணத்தில் தொடங்கியது.

கலாநிதி ஆறு திருமுருகன் அவர்கள் தான் தேர்ந்தெடுத்த சமய மற்றும் அறப்பணி குறித்து ஒரு மணி நேரம் வழங்கிய அனுபவப் பகிர்வில் தான் கொண்டு நடத்தும் முதியோர் இல்லம், சிறுவர் மனவளர்ச்சிப் பாடசாலை குறித்து நெகிழ்வான மறக்க முடியாத அனுபவங்களைப் பகிர்ந்த போது சபையில் சிலர் ஈரமான கண்களைத் துடைத்துக் கொண்ட் கேட்டுக் கொண்டிருந்தனர். அந்த நீண்ட உரையின் வழியாக ஆறு திருமுகன் அவர்கள் குன்றில் இட்ட விளக்காக நம் எல்லோர் மனதிலும் இடம்பிடித்தார்.
"இவனுக்கு சமையலைக் கற்றுக் கொடுத்துவிட்டேன், எதுக்காக சமைக்கிறோம்னு கற்றுக் கொடு" என்று பிரபல மலையாளப் படமான உஸ்தாத் ஓட்டலில் காட்சிப்படுத்திய அனுபவத்தைப் பகிர்ந்த கானா பிரபாவின் தொகுப்பு நிறைவில், 
நன்றி உரையை விழா ஒருங்கமைப்பாளர் திரு.வைத்திலிங்கம் ஈழலிங்கம் அவர்கள் பகிர்ந்தார்.

இரவு பதினொரு மணி வரை இந்த நிகழ்வை ஒருங்கமைத்த தொண்டர்களோடு, பங்கேற்ற அன்பர்களும் இருந்து சிறப்பித்த இனியதொரு நிகழ்வாக அமைந்தது சிட்னியில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களுடன் இந்த இனிய மாலைப் பொழுது.













No comments: