உளங்களில் ஒளிர்வான்! - க. கணேசலிங்கம்

.
அண்மையில் அமரரான மலேசியா அறிஞர் முனைவர் உலகநாதன் அவர்கள் தமிழ், சைவம், தத்துவம் என்று பல துறைகளில் அரும் பணிகள் செய்தவர். முதல் தமிழ்ச் சங்கம், சுமேருத் தமிழ் முதலியவற்றை  ஆய்ந்து அறிஞருலகை ஈர்த்தவர்.  ‘மெய்கண்டார் குரூப்ஸ்’ (Meykandargroups) எனும் இனைய தளத்தை நடத்தி அறிவுச் சுடர் ஏற்றியவர். அவர் பற்றிய அஞ்சலிக் கவிதை கீழே தரப்படுகிறது.]
உளங்களில்  ஒளிர்வான்!
பலதுறை அறிந்த பல்கலை வேந்தன்!
பைந்தமிழ் சைவம்  சிறப்புற ஆய்ந்து
அவற்றின் பெருமையை விளக்கிய அறிஞன்!
அகிலம் கண்டநல் அறிவின் மணிகளை
‘மெய்கண் டார்’எனும் அவனின் இணையத்
தளித்தவன்! பலரின் கருத்தையும் ஏற்றவன்!
தர்க்க நெறியினில் எவரும் மறுத்திடா
வகையினில் தனது முடிவினைத் தந்தவன்!  
சைவசித் தாந்த தத்துவம் உலகின்
தலைசிறந்  திட்ட தத்துவம் என்று
சான்றுக ளோடு சாற்றிய சான்றோன்!
புத்தம் கிறித்துவம் சமணம் சாக்தம்
வேதாந்தம் என்று பலதையும் அவற்றின்
தத்துவ நிலையையும் ஆய்ந்து அறிந்தவன்!  
அவனே முனைவர் உலக நாதன்.
அனைவர் நெஞ்சிலும் அறிவுரு ஆனவன்!

“உலக சைவப் பேரவை” தோன்றிச்
சிறப்புடன்  வளர்ந்திட உழைத்தநற் றொண்டன்!
“செயலாளர் நாயகம்” எனஅதில் இருந்தும்
"சைவ உலகம்" இதழினை நடத்தியும்
அரும்பெரும் கட்டுரை பலவதில் எழுதியும்
"ஆகம உளவியல்" "போம்டெஸ்ட்" என்று
பலபுதுத் துறைகளை அறிந்திடச் செய்தும்
ஆற்றிய பணிகள் எத்தனை? எத்தனை?
சுபாஷினி யோடு சேர்ந்துசெய் திட்ட
தொண்டுகள்  எத்தனை? சொல்லவும் எளிதோ?
‘இலண்டன் மெய்கண் டார்ஆ தீனப்
புலவராய்’ இருந்த செந்தமிழ்ப் புலவன்!
சிவநெறி விழைந்திடும் உளவியல் அறிஞன்!
தொல்காப் பியத்தின் பொருளையும் வழியையும்
துல்லிய மாக ஆய்ந்தனன்!  அதன்வழி
திருக்குறள் திருமுறை சைவசித் தாந்தம்
தமிழர் தருக்கம் எனும்தொல் ஏரணம்
எனப்பல கண்ட  தமிழரின் சிந்தனை
வளர்ந்தது என்று  உணர்த்தினான்!  சுமேருத்
தமிழ்எம் தமிழின் மூலம் எனவும்
முதற்றமிழ்ச் சங்கக் காலத்   தொடக்கமும்
அதுவெனத்  தனதுநீள் ஆய்வினில்  அறிந்தான்!
எந்தமிழ்க் கவிதைகள் கண்டு மகிழ்ந்தான்!
எழுதுக இன்னுமென் றூக்கம் அளித்தான்!
சித்தாந் தத்துறை கண்டஎன் சொற்கள் 
சிந்தையில் கொண்டவை ஆய்ந்துபின் போற்றிச்
சிந்தை மகிழ்ந்தனன்! எழுதுக மேலும்
எனப்பணித் திட்டனன்! இருவர் கருத்தும்  
ஒன்றிய நிலையினைக் கண்டனன்; எனினும் 
முரண்பட்டு மோதிய வேளையும் உண்டு!
சரியெனக் கண்டதைக் கொண்டதை ஏற்கும்
கண்ணியம் மிக்கவோர் பண்புடை ஏந்தல்!
இறுதி வரைக்கும் எழுதினான்! எழுதி
இறுதியில் இயற்கை எய்தினான்! எந்தத்
துறையிலும் அவனின் எழுத்துப் பரந்தது!
எண்ணரும் உளங்களில் அறிவொளி ஏத்தினான்!
இன்றவன் எம்முடன் இல்லை என்பதை
ஏற்குமோ இதயம்? நம்பிடக் கூடுமோ?
இனியவன் என்றுமெம்  உளங்களில்  ஒளிர்வான்!
க. கணேசலிங்கம்

No comments: