பசில் ராஜபக்ஸ கைது
ஜோதிடரை நம்பி ஜனாதிபதி தேர்தலை நடத்தியமைக்காக கவலையடைகின்றேன்
கோத்தபாய வெளியேறினார் : அரை மணித்தியாலம் விசாரணை
பஷிலை பார்க்கச்சென்றார் கோத்தா
பாராளுமன்றில் பகலிரவு ஆர்ப்பாட்டம்: மஹிந்த ஆட்சியில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? ராஜித
சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்த பஷில் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்
பசில் ராஜபக்ஸ கைது
22/04/2015 முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஸ பொலிஸ் நிதிமோசடி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடுவெல நீதவான் முன்னிலையில் அவரை ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பசில் ராஜபக்ஸவின் சட்டத்தரணி யூ.ஆர்.டி. சில்வா தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சருடன் முன்னாள் பொருளாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயதிலக மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கே.ஆர்.கே.ரணவக்க ஆகியோர் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொள்ளுப்பிட்டியில் உள்ள நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரும் அங்கு சுமார் 7 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபின்னர் கைதுசெய்யப்பட்டு கடுவலை பிரதான நீதிவான் தம்மிக ஹேமபால முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
திவிநெகும (வாழ்வின் எழுச்சி) திட்டம் ஊடாக மிக சூட்சுமமான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக் ஷவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பில் திவிநெகும திட்டத்தின் முன்னாள் பணிப்பாளர் ஆர்.ஆர்.கே.ரணவக்கவிடம் ஏற்கனவே பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்காரவின் தலைமையிலான நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளில் அப்போதைய பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் உத்தரவுக்கு அமையவே அத்திணைக்களத்தின் அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது.
அதன்படி பஷில் ராஜபக்ஷ வெளி நாடொன்றில் இருந்த நிலையில் அவரை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. நீதிமன்றம் ஊடாகவும் இதுதொடர்பில் அறிவித்தல் விடுக்கப்பட்டது. இந் நிலையில் நேற்று நாடு திரும்பிய முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்கு மூலம் அளிக்கச் சென்றார்.
இந் நிலையில் அவருக்கு மேலதிகமாக அவர் அமைச்சராக இருந்தபோது அவரது செயலாளராக இருந்த டாக்டர் நிஹால் ஜயதிலகவும் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்ததுடன் ஏற்கனவே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த திவி நெகும திட்டத்தின் பணிப்பாளரக இருந்த ஆர்.கே.கே.ரணவக்கவும் அழைக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்காரவின் கீழ் இடம்பெற்ற இந்த விசாரணைகளில் முதலில் முன்னாள் செயலாளர் நிஹால் ஜயதிலக, முன்னாள் பணிப்பாளர் கே.கே.ரணவக்க ஆகியோரை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்தது. பின்னர் தொடர்ந்த விசாரணைகளில் 7 மணி நேரத்தின் பின்னர் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜப்க்ஷ கைது செய்யப்பட்டார்.
விசாரணைகள் ஆரம்பமான போது நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அமைந்துள்ள கொள்ளுப்பிட்டி, கார்வில் பிரதேசத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பொலிஸ் கலகத்தடுப்புப் பிரிவினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இந் நிலையில் மாலை 6 மணியளவில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, ஏனைய இருவரும் பொலிஸாரின் ஆரம்பகட்ட நடவடிக்கைகளின் பின்னர் இரவு மணியளவில் கொள்ளுபிட்டியில் இருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவின் விஷேட வேன் ஊடாக கடுவலை நீதிவான் நீதிமன்றுக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
இந் நிலையில் கடுவலை நீதிமன்றின் முன்னால் சுமார் 1000 பேர் வரையில் திரண்டு பஷில் ராஜபக்ஷவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய நிலையில் அப்பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இந் நிலையில் நீதிமன்றுக்கு 10 மணியளவில் பஷில் ராஜபக்ஷவும், நிஹால் ஜயதிலகவும், ரணவக்கவும் ஆஜர்படுத்தப்பட்ட போதும் 50 நிமிடங்களின் பின்னரேயே அவர்களது விவகாரத்தை நீதிவான் விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.
இதனையடுத்தே அம்மூவரையும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றப்பட்ட பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரும் வெலிக்கடை விளமறியலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதன் காரணமாக வெலிக்கடை பொலிஸ் பிரிவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. சிறைசாலையை அண்மித்த பகுதிகளில் பொலிஸ் கலகத்தடுப்புப் பிரிவும் மேலதிக பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
திவி நெகும திணைக்களத்தில் ஊக்குவிப்பு தொடர்பிலான நிதியில் 70 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டமை, திவிநெகும வீடமைப்பு உதவித் திட்டத்திலும் நிதி மோசடி செய்யப்பட்டமை, 'லிதோ' அச்சுப்பதிப்பு தொடர்பிலும் பாரிய நிதி மோசடி, கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்காக அல்லது பிரசாரங்களுக்காக அத் திணைக்களத்திலிருந்து பல இலட்ச ரூபா நிதி செலவு செய்யப்பட்டமை உள்ளிட்ட பல குற்றச் சாட்டுக்கள் பஷில் ராஜபக்ஷ மற்றும் நிஹால் ஜயதிலக, ரணவக்க ஆகியோருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன. அத்துடன் தேசிய சம்மேளனம் ஒன்று திவி நெகும நிதியில் நடத்திவரப்பட்டமை தொடர்பிலும் விசாரணைகள் தொடர்கின்றன.மேளனம் ஒன்று திவி நெகும நிதியில் நடத்திவரப்பட்டமை தொடர்பிலும் விசாரணைகள் தொடர்கின்றன.
இந் நிலையிலேயே இந்த திவி நெகும நிதி மோசடிகள் தொடர்பில் பிரதான சந்தேக நபர்களான முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, முன்னாள் பொருளாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயதிலக மற்றும் திவி நெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கே.ஆர்.கே.ரணவக ஆகியோர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பசில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி
பசில் ராஜபக்ஷ சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நன்றி வீரகேசரி
ஜோதிடரை நம்பி ஜனாதிபதி தேர்தலை நடத்தியமைக்காக கவலையடைகின்றேன்
23/04/2015 ஜோதிடரின் பேச்சைக் கேட்டு முன்னதாகவே ஜனாதிபதி தேர்தலை நடத்தியமையையிட்டு தற்போது கவலையடைகின்றேன். தற்போது நான் ஜோதிடர்களை நம்புவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் கீழ் அரசியல் ஸ்திரமின்மை காணப்படுகின்றது. எனவே நாட்டில் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்வதற்காக விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ குறிப்பிட்டுள்ளார்.
ஏ.எப்.பி. செய்திச்சேவைக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அந்த செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
அரசாங்கம் எனது குடும்பத்தினருக்கு எதிரான அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபட்டுள்ளது. எனது ஆட்சி ஊழல் நிறைந்தது என சித்தரிக்க முற்படுவதன் மூலமாக என்னை மைத்திரிபால சிறிசேன அச்சுறுத்த முயல்கின்றார்.
அவர்களிடம் ஆதாரங்கள் இல்லை. அவர்கள் கண்மூடித்தனமான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும். நானோ அல்லது எனது குடும்பத்தை சேர்ந்தவர்களோ தவறான வழியில் பணம் சேர்க்கவில்லை.
ஹோட்டல்கள் உள்ளதா?
முதலில் என்னிடம் சுவிஸ் வங்கிக்கணக்குகள் உள்ளதாக தெரிவித்தனர். பின்னர் துபாயில் இருப்பதாக தெரிவித்தனர். அந்த பணத்தை காண்பியுங்கள் ஆதாரங்கள் எங்கே என்று கேட்கின்றேன்.
துபாயில் எனக்கு ஹோட்டலொன்று இருப்பதாக தெரிவித்தனர். அதன் பின்னர் இலங்கையில் உள்ள அனைத்து ஹோட்டல்களும் எனக்கும் எனது சகோதரர்களுக்கும் சொந்தமானவை என குறிப்பிட்டனர். இது ஓரு நகைச்சுவையாகும்.
சீன விவகாரம்
நான் ஒருபோதும் சீனாவிற்கு சார்பாக செயற்பட்டதில்லை, இலங்கையின் நலன்களை மனதில் வைத்தே செயற்பட்டேன். அனைத்து பாரிய அபிவிருத்தி திட்டங்களையும் முதலில் இந்தியாவிற்கே வழங்கினேன். ஆனால் அவர்கள் அதனை ஏற்கவில்லை.
ஜோதிடர்களில் நம்பிக்கை இழந்தேன்
குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தியது பாரிய தவறு என்பதை ஏற்றுக்கொள்கின்றேன். ஜனாதிபதி தேர்தலை இரண்டு வருடங்களுக்கு முன்னரே நடத்தியது மிகப்பெரும் தவறாகும். இதற்காக நான் தற்போது வருத்தமடைகிறேன். குறிப்பிட்ட திகதியில் தேர்தல் நடத்தினால் எனக்கு வெற்றி நிச்சயம் என ஜோதிடர் தெரிவித்தார். நான் சகல ஜோதிடர்களிலும் தற்போது நம்பிக்கையை இழந்துவிட்டேன்.
ஓய்வுபெறவில்லை
நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை. தற்போது ஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றேன். புதிய அரசாங்கத்தின் கீழ் அரசியல் ஸ்திரமின்மை காணப்படுகின்றது. ஸ்திரத்தன்மையை உறுதிசெய்வதற்காக விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவேண்டும். நன்றி வீரகேசரி
கோத்தபாய வெளியேறினார் : அரை மணித்தியாலம் விசாரணை
23/04/2015 இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு வருகைத் தந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சற்றுமுன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முன்பாக குழுமியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்து அங்கிருந்து சென்றதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் சுமார் அரை மணித்தியாலம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அவன்ட்கார்ட், லக்ன லங்கா நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கோத்தபாய மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
பஷிலை பார்க்கச்சென்றார் கோத்தா
23/04/2015 நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு, தற்போது சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கோத்தபாய ராஜபக்ஷ பார்வையிடச்சென்றுள்ளார்.
நன்றி வீரகேசரி
பாராளுமன்றில் பகலிரவு ஆர்ப்பாட்டம்: மஹிந்த ஆட்சியில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? ராஜித
23/04/2015 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக கடந்த நாட்களில் பாராளுமன்றில் பகலிரவாக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இதுவும் நல்லாட்சியின் வெளிப்பாடே ஆகும். மஹிந்த ராஜபக்ஷ மாத்திரம் ஜனாதிபதியாக இருந்திருந்தால் பாராமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்த தினத்தன்று இரவில் மின்சாரத்தை துண்டித்து குளிரூட்டியை தடைசெய்திருப்பார். நாங்கள் அவ்வாறு செய்திருந்தால் அவர்களால் எவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. இதுவே நல்லாட்சியின் வெளிப்பாடாகும். மேலும் அவர்களின் ஜனநாயக உரிமை என அமைச்சரவையின் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
100 நாள் வேலைத் திட்டம்
100 நாள் வேலைத்திட்டம் இன்றுடன் முடிவடைகின்றது. இந்த வேலைத் திட்டத்தில் குறிப்பிட்ட விடயங்களை நிறைவேற்றியுள்ளோம். சில விடயங்கள் கட்டாயம் நிறைவேற்றப்படும். அதாவது தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அமெரிக்க ஜனாதிபதி கூட இவ்வாறு நிறைவேற்றியது இல்லை என ஜோன் கெரி புகழ்ந்துரைத்திருந்தார். எனவே இதனை யாரும் குறை கூற முடியாது. இந்த 100 நாள் வேலைத் திட்டம் தொடர்பில் எனக்கு மிகவும் சந்தோசம்.
நிறைவேற்று அதிகாரம்
மஹிந்த ராஜபக்ஷ 2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்க வேண்டும் எம்மோடு இணைந்து வீதியில் ஆர்ப்பாட்டம் செய்தார். ஆனால் யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் அவருடைய மனநிலை மாற்றமடைந்துள்ளது. ஒரு விடயத்தை முன்னெடுக்கும் போது அதற்கு எதிரப்புகள் எழுவது வழக்கம். எனினும் எமது 100 நாள் வேலைத்திட்டத்தின் பிரகாரம் நிறைவேற்று அதிகாரத்தை கட்டாயம் இல்லாதொழிப்போம்.
புதிய தேர்தல் முறை
புதிய தேர்தல் முறைப் பற்றி கதைத்துகொண்டேதான் இருக்கின்றோம். இதனை முதலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி கூறினார். இதற்கமைய அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேர்தல் முறையில் மாத்திரமே மாற்றம் உள்ளது. ஆனால் மக்கள் பிரதிநிதிதுவத்தில் பெரிதாக மாற்றம் ஏற்படாது. சகல இனத்தவரின் பிரதிநிதிகளையும் உள்வாங்கும் வகையிலேயே இந்த தேர்தல் முறை அமையும்.
மக்கள் விருப்பம்
புதிய தேர்தல் முறை தொடர்பில் மக்கள் விருப்பம் கட்டாயம் கேட்டறியப்படும். இதற்கான கால அவகாசமும் வழங்கப்படும். நன்றி வீரகேசரி
சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்த பஷில் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்
23/04/2015 முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நன்றி வீரகேசரி
பசில் ராஜபக்ஷ பொலிஸ் நிதிமோசடி குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment