சமுதாய வளர்ச்சிக்கேற்ப நூலக இயக்கமும் வளர வேண்டியது அவசியம்

.
சமுதாய வளர்ச்சிக்கேற்ப நூலக இயக்கமும் வளர வேண்டியது அவசியம்
               - வந்தவாசி நூலக வாசகர் வட்ட விழாவில் பேச்சு -



             வந்தவாசி.ஏப்.25. வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற உலகப் புத்தகத் தின விழா சிறப்பு நிகழ்வில், கால மாற்றத்திற்கேற்ப வளர்ந்துவரும் சமுதாயத்தோடு சேர்ந்து நூலக இயக்கமும் வளர வேண்டியது அவசியம் என்று நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ்   பேசினார்.

          மூன்றாம்நிலை நூலகர் பூ.சண்முகம் அனைவரையும்  வரவேற்றார். வந்தவாசி வேளாண்மை அலுவலர் தே.முருகன், உமா டிம்பர்ஸ் உரிமையாளர் ஞா.பன்னீர்செல்வம், ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டர் முதல்வர் பா.சீனிவாசன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.    
       


      நிகழ்வில், உலகப் புத்தகத் தினத்தையொட்டி நூலக உறுப்பினராக சேர்ந்த பள்ளிக் குழந்தைகளுக்கு அடையாள அட்டைகளையும், நூலகப் புரவலராக இணைந்தவர்களுக்கான பாராட்டையும் வந்தவாசி நகர்மன்றத் துணைத் தலைவர் ஜல்லி வி.குமார் வழங்கிப் பேசியதாவது: நூலகங்களுக்கு குழந்தைகள் பெருமளவில் வர வேண்டும். புத்தகங்கள் படிப்பதன் மூலமாக உலக விஷயங்களை குழந்தைகளும் அறிந்துகொள்ள முடிகிறது. பெற்றோர்களும் குழந்தைகளை நூலக உறுப்பினராக சேர்ப்பதற்கு முன்வர வேண்டும். வந்தவாசி அரசு கிளை நூலகம் விரைவில் சொந்த கட்டிடத்தில் செயல்பாட முயற்சிகளை மேற்கொள்வேன் என்றார்.

    விழாவிற்கு தலைமையேற்ற நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ்  பேசியதாவது: உலகத் தலைவர்கள் பலரை வழி நடத்தியவை மட்டுமல்ல, உலகையே மாற்றிய வல்லமை படைத்தவை புத்தகங்கள். இன்றைக்கு பல கிராமப்புற இளைஞர்களின் கல்வி வளர்ச்சிக்கு நூலகங்களே பேருதவி புரிகின்றன. பல விலை மதிப்பில்லா அறிவுப் பொக்கிஷங்கள் நூலகங்களில் நம் பார்வைக்காக காத்திருக்கின்றன. நூலகங்களைப் பயன்படுத்துவதில் நாம் இன்னமும் பின்தங்கியிருக்கிறோம். அவற்றை முறையாக பயன்படுத்தும் யாரும் நிச்சயம் வாழ்வில் உயர்வை அடையலாம்.  கால மாற்றத்திற்கேற்ப வளர்ந்துவரும் சமுதாயத்தோடு சேர்ந்து நூலக இயக்கமும் வளர வேண்டியது அவசியம். மேலும், நூலக இயக்கத்தை மக்கள் வாசிப்பு இயக்கமாக வளர்ந்திட நாம் அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
 
    விழாவில், ரூ. ஆயிரம் செலுத்தி நூலகப் புரவலராக இணைந்த சாலவேடு ஊராட்சி மன்றத் தலைவர் எம்.ராஜகோபால், நகர்மன்றத் துணைத் தலைவர் ஜல்லி வி.குமார், பெட்ரோல் பங்க் டி.எஸ்.கோவிந்தன், சம்பூர்ணா கேஸ் ஏஜென்ஸி எஸ்.சுரேஷ், ஆசிரியர் சி.பி.சக்கரவர்த்தி, டாஸ்மாக் மேற்பார்வையாளர் எம்.மாணிக்கம் ஆகியோருக்கு பாராட்டு செய்யப்பட்டது. 100 பள்ளிக் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் நூலக உறுப்பினராக இணைந்தனர்.
       
    நிறைவாக, அலுவலக உதவியாளர் மு.இராஜேந்திரன் நன்றி கூறினார்.  



படக்குறிப்பு :
       வந்தவாசியில் அரசு கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற உலகப் புத்தகத் தின சிறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டநகர்மன்றத் துணைத் தலைவர் ஜல்லி வி.குமார் பள்ளிக் குழந்தைகளுக்கு அடையாள அட்டை வழங்கியபோது எடுத்த படம். அருகில், நூலக வாசகர் வட்டத் தலைவர் மு.முருகேஷ், வந்தவாசி வேளாண்மை அலுவலர் தே.குமரன், உமா டிம்பர்ஸ் உரிமையாளர் ஞா.பன்னீர்செல்வம், மூன்றாம்நிலை நூலகர் பூ.சண்முகம் ஆகியோர் உள்ளனர்.

No comments: