கடிதம் எழுதிட ஆசை - ராபியா குமாரன்

.          
         
 உயிரிருக்கும் வரை
நினைவிலிருக்கும்
என் பள்ளிப்பருவது…

தொலைதூரம் சென்ற
உறவுகள் கடிதங்களால்
உறவாடிய காலமது…

வேலை வேண்டி,
கடல் தாண்டி,
துபாயில் வசித்த
தாய்மாமாவிடமிருந்து
தவறாமல் கடிதங்கள்
வந்த நேரமது…

தபால்காரர் ‘தபால்’ என்று
வீட்டு முற்றத்தில் வீசிய
மறுகணமே என் பாட்டியின்
கரங்களில் தவழும்
அந்தக் கடிதம்…


கடிதத்தை பிரிக்கும்
அந்த நொடிப் பொழுதில்
முகம் முழுவதும்
மகிழ்ச்சியே மலர்ந்திருக்கும்…

படிக்கப் படிக்க
படிக்கும் உதடுகள்
சிரிப்பைத் தெறிக்கும்,
கேட்கும் செவிகள்
சுகமாய் தலையசைக்கும்.

அன்று உணர்ந்தேன்,
உறவுப் பாலமாக செயல்படும்
கடிதங்களின் உன்னதத்தை…

வீட்டுக் கூரையில் தொங்கிய
கம்பியில் குத்தப்பட்டு
கடிதங்கள் பாதுகாக்கப்பட்டதை
கண்டபோது,
உள்ளுக்குள் ஓர் ஆசை
நாமும் வளர்ந்து,
இருப்பிடம் விட்டு,
இடம் பெயரும்
காலங்களில் கடிதங்கள்
எழுத வேண்டும் என்று…

காலங்கள் கரைந்தன !
மாற்றங்கள் நிறைந்தன !
நானும் இடம் பெயர்ந்தேன் !
இருப்பிடம் விட்டு
திரவியம் தேட…

கூரை வீடுகளெல்லாம்
மாடி வீடுகளாக மாறி,
அதன் மேல்
அலைபேசி கோபுரங்கள்
முளைத்து விட்டன…!

கடிதங்கள்
காணாமற் போய் விட்டன…!
மின்னஞ்சலுக்கும்,
குறுஞ் செய்திக்கும்
இவ்வுலகம்
அடிமைப்பட்டு விட்டது.

அன்பும், பண்பும்,
பாசமும் நிறைந்த…
எனத் தொடங்கி
கடிதம் எழுத கனா கண்ட நான்
காலத்தின் கோலத்தால்
ஹாய், ஹலோ… என்று
மின்னஞ்சலையும்,
குறுஞ் செய்தியையும்
ஆரம்பிக்கிறேன்…

ஆர அமர்ந்து
யோசித்து, யோசித்து
உணர்வுகளைக் கொட்டி
உயிரையும் கொஞ்சம் கலந்து
உருகி, உருகி எழுதிய
கடிதங்களுக்கு கல்லறை
கட்டப்பட்டு புற்கள் கூட
முளைத்து விட்டன…

சொற்ப நொடிகளில்,
பேருந்து நெரிசலில்,
கடைத் தெருவின் இரைச்சலில்,
குறுஞ் செய்தி உருவாகி
என் உறவுகளுடனான
அன்பும், பாசமும்
உயிர் வாழ்கிறது…
சிறகொடிந்த
ஒரு பறவையைப் போல…

No comments: