.
பூமியை மட்டுமல்ல; விண்வெளியையும் நாம் மாசுபடுத்திவிட்டோம்.
விண்வெளி, ஆதி காலத்திலிருந்தே மனிதர் களுக்குப் புரியாத புதிராக விளங்குகிறது. புதிருக்கு விடை காணவும் மனித இனத்துக்குப் பயன்படும் வகையிலும் செயற்கைக் கோள்கள் ராக்கெட் உதவியுடன் விண்ணுக்குள் செலுத்தப்படுகின்றன.
புவியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ள வெற்றிடம், விண்வெளி (ஸ்பேஸ்) எனப்படுகிறது. பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 200 முதல் 2,000 கி.மீ. தொலைவில் தொலையுணர் செயற்கைக் கோள்கள் இயங்குகின்றன. இவை நிலத்தையும் கடற்பரப்பையும் படம் பிடிக்க உதவுகின்றன. இந்தியத் தொலையுணர் செயற்கைக் கோள்கள், சர்வதேச விண்வெளி நிலையம், ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி போன்றவை இயங்குவதும் இந்தச் சுற்றுப்பாதையில்தான். விண்வெளி வீரர்கள் விண்வெளி நடை நிகழ்த்துவதும் இங்குதான்.
பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 18,000 முதல் 22,000 கி.மீ. தொலைவில் வழிசெலுத்தும் செயற்கைக் கோள்கள் இயங்குகின்றன. ஒருவரோ, ஒரு வாகனமோ இருக்கும் இடத்தைத் துல்லியமாக அறிவதற்கு இந்த செயற்கைக் கோள்கள் பயன்படுகின்றன. புவியிடங்காட்டி (ஜிபிஎஸ்) செயற்கைக் கோள்கள் இதற்குச் சிறந்த உதாரணம்.
பூமியின் மேற்பரப்பிலிருந்து 35,786 கி. மீ. தொலைவில் புவியிணை சுற்றுப்பாதை (ஜியோஸ்டேஷனரி ஆர்பிட்) உள்ளது. இங்கு நிலைநிறுத்தப்படும் செயற்கைக் கோள்கள் தொலைத்தொடர்பு மற்றும் வானியல் ஆய்வுக்குப் பயன்படுகிறது. இந்த சுற்றுப்பாதை, மற்ற சுற்றுப்பாதைகளை ஒப்பிடும்போது தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்தச் சுற்றுப்பாதையின் செயற்கைக் கோள்கள் 24 மணி நேரமும் புவியின் ஒரே பகுதியை மட்டுமே நோக்கி இருக்கும். உதாரணமாக, இந்தியாவின் தொலைத்தொடர்புக்குப் பயன்படும் இன்சாட் மற்றும் ஜிசாட் செயற்கைக் கோள்கள் எப்போதும் இந்தியா மேலேயே இருக்கும்.
குப்பைகள் யுகம்
ரஷ்யாவால் 1957 அக்டோபர் 4-ல் ஸ்புட்னிக்-1 என்னும் செயற்கைக் கோள் விண்ணுக்கு செலுத்தப்பட்டதன் மூலம் ஆரம்பமானதுதான் விண்வெளி யுகம். அன்று முதல், சுமார் 8,000 செயற்கைக் கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில் தற்போது சுமார் 3,000 செயற்கைக் கோள்கள்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன. மீதமுள்ள செயல்படாத செயற்கைக் கோள்கள் விண்வெளிக் குப்பைகளாக விண்ணில் மிதந்துகொண்டிருக்கின்றன.
விண்வெளிக் குப்பை என்பது இயற்கையாகவும் செயற்கையாகவும் விண்வெளியில் சேரும் பொருட் களைக் குறிக்கிறது. விண்கற்கள், எரிநட்சத்திரத் தூசுகள் ஆகியவை இயற்கை விண்வெளிக் குப்பைகள் எனவும், மனிதர்களால் விண்ணுக்கு அனுப்பப்பட்டு செயலிழந்த, வாழ்நாள் முடிந்த செயற்கைக் கோள், செயற்கைக் கோள் பாகங்கள் செயற்கை விண்வெளிக் குப்பைகள் எனவும் அழைக்கப்படுகின்றன. தற்போதைய சூழ்நிலையில் செயற்கைக் கோள்களின் தேவை அதிகமானதால் செயற்கை விண்வெளிக் குப்பைகள், இயற்கை விண்வெளிக் குப்பைகளைவிட அதிகரித்தபடி உள்ளது.
விண்ணுக்கு அதிக செயற்கைக் கோள்களை அனுப்புவதும், செயற்கைக் கோள்களை விண்ணுக்குச் செலுத்தும்போது தொழில்நுட்பக் கோளாறுகளால் அவை வெடித்துச் சிதறுவதுமே விண்வெளியில் குப்பைகள் சேர்வதற்குக் காரணமாகின்றன. இது மட்டுமல்லாமல், செயற்கைக் கோளை விண்ணுக்குச் செலுத்த உதவும் ராக்கெட்டின் மேற்பகுதி விண்வெளிக் குப்பையாகவே இருக்கிறது. பொதுவாக, ராக்கெட்டுகள் மூன்று அல்லது நான்கு நிலைகளைக் கொண்டவை. இதில் மேல்நிலை (மேற்பகுதி) தவிர, மற்ற நிலைகள் கடலிலோ அல்லது மனிதர் இல்லாத நிலத்திலோ விழுந்துவிடுகின்றன. ராக்கெட்டின் மேல்நிலை வெடிப்புகளும் விண்வெளிக் குப்பை அதிகரிக்க வழிவகுக்கின்றன. மேலும், விண்வெளி வீரர், விண்வெளி நடையின்போது தவறவிட்ட பொருட்களும் விண்வெளிக் குப்பையாகவே கருதப்படுகின்றன. 1960-களில் அமெரிக்கா, ரஷ்யா; 2007-ல் சீனா ஆகிய நாடுகள் நடத்திய, செயற்கைக்கோள்-எதிர்ப்பு ஆயுதச் சோதனைகளாலும் (ஆன்டி-சேட்டிலைட் வெப்பன் டெஸ்டிங்) விண்வெளிக் குப்பைகள் அதிகரித்தன.
விபத்துகள்
செயற்கைக் கோள்களை விண்ணுக்கு ஏவுவதற்கும், அவற்றைப் பராமரிப்பதற்கும் விண்வெளிக் குப்பைகள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. உதாரணமாக, செயல்பாட்டில் இருக்கும் செயற்கைக் கோள் மீது விண்வெளிக் குப்பை மோதி விபத்தை ஏற்படுத்தினால் அந்த செயற்கைக் கோள் பயனில்லாமல்போவது மட்டுமல்லாமல், விண்வெளிக் குப்பைகள் இதனால் மேலும் அதிகரிக்கிறது. இதனால் அந்த செயற்கைக் கோளை ஏவிய நாடு பொருளாதார, தொழில்நுட்பரீதியில் பின்னடைவைச் சந்திக்கும்.
செயற்கைக் கோள் மோதல் விபத்துகளுக்கு உதாரணமாகப் பின்வரும் இரண்டு சம்பவங்களைக் கூறலாம். 1996 ஜூலை 26-ல் ஏரியான்-1 ராக்கெட்டின் மேற்பகுதி, செரிஸ் எனும் பிரான்ஸின் செயற்கைக் கோள் மீது மோதியது. ஆனால், பெரும் சேதம் ஏதும் விளைவிக்கவில்லை. 2009 பிப்ரவரி 10-ல் அமெரிக்காவின் இரிடியம்-33, ரஷ்யாவின் காஸ்மோஸ்-2251செயற்கைக் கோள்கள் ஒன்றோடு ஒன்று மோதி வெடித்துச் சிதறின. இதில் காஸ்மோஸ்-2251 செயலிழந்து விண்வெளிக் குப்பையாக ஆகிவிட்டது.
இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க செயற்கைக் கோளின் சுற்றுப்பாதையில் மாற்றங்கள் செய்யப்படு கின்றன. 1999 முதல் 2013 வரை சர்வதேச விண்வெளி நிலையம், மோதல் தவிர்ப்பு சுற்றுப்பாதை மாற்றத்துக்கு 16 முறை உட்படுத்தப்பட்டுள்ளது. 2013-ல் வெளியான ‘கிராவிட்டி’ என்னும் ஆங்கிலத் திரைப்படம் விண்வெளிக் குப்பைகளால் ஏற்படக்கூடிய விளைவுகளை உணர்த்தும் விதமாகச் சித்தரிக்கப்பட்டது.
காற்று மண்டலத்தில் நுழையும் குப்பைகள்
விண்வெளிக் குப்பைகள் சில சமயம் புவியீர்ப்பு விசை காரணமாகத் தாமாகவே காற்று மண்டலத்தில் நுழைந்து எரிந்து சாம்பலாவதும் உண்டு. அவை அளவில் பெரிதாக இருந்தால் பூமியில் வந்து விழுவதும் உண்டு. கடந்த ஆண்டு பிப்ரவரி 16 அன்று ரஷ்யாவின் காஸ்மோஸ்-1220 எனும் செயலிழந்த செயற்கைக் கோள், காற்றுமண்டலத்தில் எரிந்து சாம்பலானது. 250 கி.மீ. உயரத்தில் உள்ள விண்வெளிக் குப்பை இரண்டு மாதத்திலும், 600 கி.மீ. உயரத்தில் உள்ள விண்வெளிக் குப்பை 15 ஆண்டுகளிலும், 850 கி.மீ. உயரத்தில் உள்ள விண்வெளிக் குப்பை 100 ஆண்டுகளிலும் புவியின் காற்று மண்டலத்தில் நுழையலாம் என வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர். ஆனால், அதிக உயரத்தில் உள்ள விண்வெளிக் குப்பைகள் பூமிக்குத் திரும்ப வாய்ப்பே இல்லை. அவை குறையவும் வாய்ப்பே இல்லை.
பரிந்துரைகள்
விண்வெளிக் குப்பைகளுக்குத் தீர்வு காணும் வகையில் சர்வதேசத் தொலைத்தொடர்பு சங்கம் சில கட்டுப்பாடுகளையும் வழிமுறைகளையும் வகுத்துள்ளது. செயற்கைக் கோள்களை ஏவும்போது, வெடிப்பு விபத்துகள் நிகழாதபடி தக்க சோதனைகள் செய்தல், பிற செயற்கைக் கோள்கள் இருக்கும் பாதையில் குறுக்கிடாமல் தடுத்தல், செயற்கைக் கோள் களின் ஆயுள் முடிந்த பின் காற்று மண்டலத்திலோ அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள சுற்றுப்பாதையிலோ செலுத்துதல் ஆகியவை இந்தச் சங்கத்தின் முக்கியமான பரிந்துரைகள்.
ஒன்று மட்டும் புரிகிறது, பூமியை மட்டுமல்ல; விண் வெளியையும் நாம் மாசுபடுத்திவிட்டோம் என்பதே அது.
- மு.இரா. இராஜேஷ் கண்ணன், விஞ்ஞானி / பொறியாளர்,
nantri:tamil.thehindu
No comments:
Post a Comment