தமிழ் இதழியலின் பிதாமகன்!

.

அது 1984-ம் வருடம்... மாணவப் பத்திரிகையாளருக்கான நேர்முகத் தேர்வின்போதுதான் விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியனை முதன் முதலாகச் சந்தித்தேன். சுதந்திரமாகப் பேசவிட்டார். என்னை மட்டுமல்ல... எல்லா மாணவர்களையும்தான். அவரவர் ஊர் பற்றிச் சொல்லும்போது ஆசிரியர் இடைமறித்து அந்தந்த ஊர்பற்றிக் கேட்ட விவரங்கள் வியப்பில் ஆழ்த்தின.
பின்னாளில் விகடனிலேயே முழு நேர வேலைக்குச் சேர்ந்த பிறகு, அவரிடமே பேச்சுவாக்கில் தெரிந்துகொண்டது: கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர் வரையில் இந்தியாவில் அவர் போய் வராத இடங்களே அநேகமாக இல்லை. தானே காரை ஓட்டிக்கொண்டு தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம்கூடப் போய்வந்திருக்கிறார். அந்த அனுபவ அறிவுதான், தமிழ் மக்களின் நாடித்துடிப்பை அவர் தன் கையில் வைத்துக்கொள்ள அவருக்கு ஆதாரமாக இருந்திருக்கிறது.
எழுத்துக்கு மரியாதை
பச்சை மசி கொண்ட பவுன்டன் பேனாவால் மட்டுமே கதை, கட்டுரைகளைத் திருத்துவார். திருத்துவார் என்றால், கதை நடுவிலோ கட்டுரை நடுவிலோ எல்லா இடத்திலும் அவருடைய மசி படிந்துவிடாது. மிகமிக முக்கியமான இடங்களில் மட்டும் ஓரிரு வார்த்தைகளைச் சேர்ப்பார் அல்லது எடுப்பார். சில வாக்கியங்களைத் துளிகூட மாற்றாமல் கட்டுரையின் வேறொரு இடத்துக்குக் கோடு இழுத்துக்கொண்டுபோய்ச் சேர்ப்பார். கட்டுரையின் வடிவமே முற்றிலுமாக மாறியிருக்கும். ஒரு மாயாஜாலம்போல அது பல மடங்கு சீர்பெற்றிருக்கும்.


கவிஞர்கள் வாலி, அப்துல்ரகுமான், வைரமுத்து மூவருடனும் ஆழ்ந்த நட்பு கொண்டிருந்தார். வெவ்வேறு காலகட்டங்களில், வாலி ‘அவதார புருஷன்’, அப்துல்ரகுமான் ‘இது சிறகுகளின் நேரம்’, வைரமுத்து ‘கருவாச்சிக் காவியம்’ எழுதியபோது, மூவரிடமுமே ஒன்றுபோல அவர் சொன்ன வார்த்தைகள்: ‘‘உங்களோட தமிழ் வீச்சோட நான் போட்டி போட முடியாது. நான் அவற்றை வாசகர்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கிற வேலையை மட்டும்தான் செய்வேன். ஆனால், எங்காவது ஓரிரு திருத்தம் செய்ய வேண்டும் என்று தோன்றினால், அது வீ்ம்புக்காக இருக்காது. பத்திரிகை ஆசிரியர்னாலே அடுத்தவங்க எழுத்தில் கைவெச்சுத் திருத்தியாகணும்கிற வீம்புக்காகவும் இருக்காது. நான் என்ன திருத்தம் செஞ்சாலும் உங்ககிட்ட சொல்லிட்டுத்தான் அச்சுக்கு அனுப்புவேன். சரிதானே..?’’
தங்கள் எழுத்தில் திருத்தம்செய்வது என்பதே கிட்டத்தட்ட மூன்று கவிஞர்களுக்கும் புது அனுபவமாகத்தான் இருந்திருக்கும். சிறு தயக்கத்தோடுதான் எழுதத் தொடங்கினார்கள். பெரும்பாலான அத்தியாயங்கள் பச்சை மசியில் ஒரு புள்ளிகூடப் படியாமல் அச்சுக்குப் போயின. சிலசமயம் ஆசிரியர் முன்பே சொன்னபடி ஓரிரு இடங்களில், ஒருசில வார்த்தைகளை மட்டும் மாற்றியமைத்தார். அப்போதெல்லாம் கவிஞர்களுக்குத் தானே போன் போட்டுப் பேசுவார். திருத்தத்தைப் படிப்பார். அதைச் செய்ததற்கான காரணத்தையும் பொறுமையாக விளக்குவார்.
வியந்து, மாற்றத்தை ரசித்து, திருத்தத்தைக் கவிஞர்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டதுதான் ஒவ்வொரு முறையும் நடந்தது.
‘எழுதாதே!’
நிர்வாக ஆசிரியர் என்ற பதவிக்கு என்னை உயர்த்திய போது, அறைக்குள் அழைத்துச் சொன்னார்: ‘‘நீங்க நிருபரா இருந்து நிர்வாக ஆசிரியர் வரை வந்தாச்சு. எழுத்து நன்னா இருக்கு. அதனாலதான் சொல்றேன்... இனிமே நீங்க எழுதறதை நிறுத்திக்கோங்கோ!’’
புரியாமல் பார்த்தபோது, ‘‘எத்தனையோ எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களோட கதைகளையும் கட்டுரைகளையும் படிச்சுப் பார்த்துத் திருத்தம்செய்து, லட்சக்கணக்கான மக்களுக்குக் கொண்டுபோற பொறுப்பு உங்களுக்கு வந்திருக்கு. நீங்களும் ஒரு எழுத்தாளராக மனதளவில் இருந்தால், மற்றவர்களின் எழுத்தை நடுநிலையோடு படித்து, ரசித்து அப்ரூவ் பண்ண மனசு வராது. நிர்வாக ஆசிரியரோடு, கூடவே ஒரு எழுத்தாளனும் இருப்பான். ‘என்னைவிட இவர்கள் சிறப்பாக எழுதுவதா?’னு ஈகோ வந்தா, அது மற்ற எழுத்தாளர்களுக்குச் செய்யுற துரோகமா மாறிடும். அதனாலதான் சொல்றேன்... நீங்க எழுதுறத நிறுத்திக்கோங்கோ!’
சொந்தப் பெயர் போட்டு எழுதுவது அன்றோடு நின்றுபோனது.
‘உப்பாய் இரு!’
ஆனந்த விகடன் பத்திரிகை, அச்சிலேயே ‘3டி’ தொழில்நுட்பத்தைக் கொண்டுவந்து பிரம்மாண்டமான விளம் பரங்களோடு வெளியானபோது, அந்த இதழின் விற்பனை அதுவரை விகடன் தொடாத உச்சம். அந்தப் பிரதி வெளியான நாளன்று ஆசிரியர் அழைத்தார். அறைக்குள் போனபோது கை குலுக்கியவர், ‘‘வாழ்த்துக்கள்! இன்னிலேர்ந்து ஆனந்த விகடனுக்கு நீங்கதான் ஆசிரியர்!’’ என்று சொல்லி அதிரவைத்தார்.
உண்மையாகவே ஆசிரியர் பொறுப்பை ஒப்படைத்து விட்டதை நினைத்து ஜீரணிக்க முடியாமல் தவித்தபோது, அவர் சொன்ன வார்த்தைகள்: ‘‘பத்திரிகை ஆசிரியரா இருக்குறதுக்கு முதல் தகுதி என்ன தெரியுமா? சாம்பார்ல உப்பு மாதிரி இருக்கணும். சாம்பாரோட எந்தத் துளியை எடுத்து ருசிச்சாலும் அதுல உப்பு இருக்கணும். ஆனா, கண்ணுக்குத் தெரியக் கூடாது. பூசணிக்கா துண்டு மாதிரி தனியா நீட்டிண்டு தெரியணும்னு அவசியம் கிடையாது. ஒரு ஆசிரியர் தன்னையே பிரதானப்படுத்திக்கிறது - அந்தப் பத்திரிகைக்கு எந்த வகையிலும் நல்லது கிடையாது!’’
விகடனின் ஒவ்வொரு துளியிலும் கலந்திருந்த அவருடைய உழைப்பு, அறிவு, அனுபவம், அவரோடு சேர்ந்து பணியாற்றியவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். காலை ஏழரை மணிக்கு அலுவலகத்தில் முதல் ஊழியராக நுழைந்து, இரவு 8 மணிக்குக் கிளம்புகிற வரையில் அவர் ஆற்றிய பணிகள்தான் பல நூறு எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் புகழையும் பெருமையையும் வாங்கிக் கொடுத்தது.
‘சினம் எனும் குணம்!’
அவருடைய மறைவுக்கு 20 நாட்களுக்கு முன்பு, அவரைச் சந்திக்க முடிந்தது. அவருடைய துணைவியார் சரோஜா மேடமும் அருகில் இருந்தார். நடுங்கும் கரங்களைக் காற்றில் அசைத்து, பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டே வந்தார். பேச்சு சுற்றி வளைத்து கடைசியாக அவரைப் பற்றியே வந்து நின்றது.
‘‘நெறைய தடவை நான் உங்கிட்டயெல்லாம் கோபப் பட்டிருக்கேன் இல்லையா?’’ என்றார்.
‘‘ஐயோ... கொஞ்சமான கோபமா சார் பட்டீங்க... நீங்க உரத்த குரலில் கண்டிக்கும்போதெல்லாம் நாங்க தடதடத்துப் போய் நின்னுருக்கோம்’’ என்றேன்.
‘‘ஏண்டா இவன்கிட்ட வேலை பார்க்கிறோம்னு வெறுத்துப் போயிருக்கும்… இல்லையா?’’ என்றார்.
சிரித்தபடியே மறுத்துத் தலையசைத்ததற்கு, ‘‘நான் யாரிடம் கோபப்பட்டு வலிஞ்சு ஒரு விஷயத்தைச் சொல்றேனோ... அவங்கள்லாம் நம்மோடயே இருந்து, தொடர்ந்து நம்ம பேச்சக் கேட்டுத் திருத்திண்டு, நல்லபடி முன்னுக்கு வருவாங்கன்னு நினைப்பேன். அவன்கிட்டதான் கோபப்படுவேன். கோபத்துக்கும் ஒரு பிரயோஜனம் இருக் கணும் இல்லையா... இந்த ஆள் சரிவர மாட்டான், எவ்வளவு சொல்லியும் பயனில்லைனு நெனச்சுட்டா, அவங்ககிட்ட எதுக்கு வீணா கோபப்படணும்? ‘நீங்க செஞ்சது எனக்குப் பிடிக்கலை சார். திருத்திக்கொண்டு வேலை செய்யறதா இருந்தா சரி… இல்லேன்னா, கிளம்பிண்டே இருங்கோ...’ அப்படின்னு தன்மையா சொல்லி கைகுலுக்கி அனுப்பிட மாட்டேனா..?’’ என்றார்.
ஊடகத் துறையில் எல்லா இடங்களிலும் இன்றைக்குப் பரவிக் கிடக்கிற அவருடைய மாணாக்கர்களுக்குத் தெரியும் அவர் கோபத்தின் மதிப்பு!
தொடர்புக்கு: editor@thehindutamil.co.in

http://tamil.thehindu.com/

No comments: