தமிழுக்குப் பேரிழப்பு -செல்வா கனகநாயகம் காலமாகிவிட் டார்

.
ஆங்கிலப் பேராசிரியரும் இலக்கியத் திறனாய்வாளரு மான செல்வா கனகநாயகம் திடீரென்று காலமாகிவிட் டார். கனடாவின் கல்விப்புலத்தில் அதி உயர் மதிப்பளிப்பாகக் கருதப்படும் Royal Society of Canada வின் சிறப்புரிமையைப் பெற்றமைக்காக அந்த நிறு வனம் நவம்பர் 21 அன்று நடத்திய விழாவில் கலந்து கொண்டுவிட்டுத் திரும்பும் போதே செல்வா கனகநாயகம் மாரடைப்பால் காலமானார்.


இலங்கை பேராதனை பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்று பிற்பாடு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் முதுகலை மாணி, முனைவர் பட்டங்களைப் பெற்றார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராகப் பணியாற்றிய பின், கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறையில் நீண்டகாலமாகப் பேராசிரியராகப் பணி புரிந்து வந்தார் அவர்.
அவருடைய ஆய்வுத்துறைகளாக இருந்தவை பின் காலனித்துவ இலக்கியம், இலக்கியத் திறனாய்வு, தென்னாசிய ஆங்கில இலக்கிய வரலாறு, தமிழியல் மற்றும் மொழிபெயர்ப்பியல் என்பன. முக்கியமான ஈழத் தமிழ் இலக்கியங்களை அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். எஸ்.பொ, மகாகவி, சேரன், வ.ஐ.ச. ஜெயபாலன், கி.பி. அரவிந்தன், புதுவை இரத்தினதுரை,பா. அகிலன் போன்ற பல எழுத்தாளர்களின் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இந்த ஆண்டு உலகத் தமிழ்க் கவிதைகளின் தொகுப்பு ஒன்றை ‘In Our Translated World: Global Tamil Poetry’ என்னும் பெயரில் வெளியிட்டிருக்கிறார். சங்க இலக்கியமான நெடுநல்வாடையையும் அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அவருடைய தமிழ்க் கட்டுரைகளின் தொகுப்பு ‘நெடுநல்வாடை’ என்ற பெயரில் தமிழியல் வெளியீடாக 2010இல் வெளியானது. கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இலக்கிய அமைப் பிலும் இயல் விருது அமைப்புக் குழுவிலும் செல்வா கனகநாயகம் முக்கிய பங்காற்றி வந்திருக்கிறார். கடந்த எட்டு ஆண்டுகளாக டொரண்டோ பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்திவரும் தமிழியல் மாநாட்டின் அமைப்பாளர்களில் செல்வா கனகநாயகமும் ஒருவர். அவருடைய ஆங்கில நூல்கள்:
Wilting Laughter: Cheran, Jayapalan, Puthuvai Rathnathurai:Three Tamil Poets (2009), You Cannot Turn Away : Cheran Poems(2010),Counterrealism and Indo-Anglian Fiction (2002); Lutesong and Lament: Tamil Writing from Sri Lanka (2001); Dark Antonyms and Paradise: The Poetry of Rienzi Crusz (1997); Configurations of Exile: South Asian Writers and Their World (1995); Structures of Negation: The Writings of Zulfikar Ghose (1993).
செல்வா கனகநாயகத்தின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.

Nantri காலச்சுவடு .

No comments: