இலங்கைச் செய்திகள்


ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் இது­வ­ரையில் 115 முறைப்­பா­டுகள்

காணாமல் போன எனது மகனை கருணா குழுவினரே கடத்தியிருக்க வேண்டும்: ஆணைக்குழுவிடம் தந்தை தெரிவிப்பு

தாயும் மகளும் தூங்கிகொண்டிருந்த போது குடிசைக்கு தீவைப்பு

சிகை­ய­லங்­கார நிலையம் நடத்தி வந்தவர் சடலமாக மீட்பு

மனித எலும்புக்கூடு, மண்டையோடு வெவ்வேறாக மீட்பு


ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் இது­வ­ரையில் 115 முறைப்­பா­டுகள்

16/12/2014  ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் இது­வ­ரையில் 115 முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெற்­றுள்­ள­தாக தேர்தல் செய­லகம் அறி­வித்­துள்­ளது.
இந்த முறைப்­பா­டு­களில் 20 முறைப்­பா­டுகள் பார­தூ­ர­மா­ன­வை­யாகும். ஏனைய 95 முறைப்­பா­டு­களும் சிறு சம்­ப­வங்கள் குறித்த முறைப்­பா­டு­க­ளாகும்.
கண்டி மாவட்­டத்தில் பார­தூ­ர­மான குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பி­லான ஏழு சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன. அனு­ரா­த­புரம் மாவட்­டத்தில் மூன்று சம்­ப­வங்­களும், புத்­தளம் மாவட்­டத்தில் மூன்று சம்­ப­வங்­களும்,குரு­ணாகல் மாவட்­டத்தில் இரண்டு சம்­ப­வங்­களும் பதி­வா­கி­யுள்­ளன.
கொழும்பு, கம்­பஹா, களுத்­துறை, மாத்­தளை,பொல­ன்ன­றுவை ஆகிய பிர­தே­சங்­களில் தலா ஒரு பார­தூ­ர­மான சம்­பவம் குறித்த முறைப்­பாடு கிடைக்­கப்­பெற்­றுள்­ளது.இந்த முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது. நன்றி வீரகேசரி 











காணாமல் போன எனது மகனை கருணா குழுவினரே கடத்தியிருக்க வேண்டும்: ஆணைக்குழுவிடம் தந்தை தெரிவிப்பு

15/12/2014 எனது மகன் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அக்கரைப்பற்றில் காணாமற் போனார். அப்போது அந்தப் பகுதி முழுவதும் கருணாவின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. எனவே எனது மகனை அவர்களே கடத்தியிருக்க வேண்டும் என கந்தையா சங்கரப்பிள்ளை என்ற  காணாமல் போன ஒருவரின் தந்தை ஆணைக்குழுவிடம் இன்று தெரிவித்தார்.
காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வு இன்று வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுவரும் நிலையில் சாட்சியமளித்த கந்தையா சங்கரபிள்ளை என்ற தந்தையே இவ்வாறு கேள்வியெழுப்பினார். 

தொடர்ந்தும் அங்கு சாட்சியமளித்த அவர், 
எனது மகன் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அக்கரைப்பற்றில் காணாமற் போனார். அப்போது அந்தப் பகுதி முழுவதும் கருணாவின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. எனவே எனது மகனை அவர்களே கடத்தியிருக்க வேண்டும். 
நான் செட்டிகுளம் மெனிக்பாம் எனும் கிராமத்தில் தான் வசித்து வருகின்றேன். எனது மகன் வேலைவாய்ப்புக்காக அக்கரைப்பற்றில் தங்கியிருந்த சமயம் கடந்த 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காணாமல் போயிருந்தார். 
இதன் போது அக்கரைபற்று யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது என்று ஆணைக்குழுவினர் கேள்வி எழுப்பினர் அதற்கு கருணா அம்மானின் கட்டுப்பாட்டில் இருந்தது என தெரிவித்திருந்தார். 
இதனை தொடர்ந்து ஆணைக்குழுவின் தலைவர் கருணா  வடபகுதியில் தானே இருந்தார் என கேட்க, இல்லை அவர் கிழக்கு மாகாணத்தில் இருந்தார். அங்கு முகாம்களை அமைத்து அவர்கள் தங்கியிருந்தனர். அந்தக் காலப்பகுதியில் எனது மகன் காணாமல் போனார். 
எனவே கருணா குழுவினரே எனது மகனைக் கடத்தியிருக்க வேண்டும் என தெரிவித்த அவர் காணாமல் போன எனது மகனுக்கு எப்படி மரணச் சான்றிதழைப் பெற முடியும் எனவும் தெரிவித்தார். நன்றி வீரகேசரி








தாயும் மகளும் தூங்கிகொண்டிருந்த போது குடிசைக்கு தீவைப்பு


17/12/2014 மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஏறாவூர் ரூபி கிராமத்தில் குடிசையொன்றுக்கு இனந்தெரியாத நபர்களால் தீவைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை  இந்த தீவைப்பு இடம்பெற்றதாக அந்தக் குடிசையில் வசித்து வந்த அதன் உரிமையாளர் முஹம்மத் ஹஸன் பாத்தும்மா (வயது 53), பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இதனால் குடிசை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதோடு வீட்டுப் பாவணைப் பொருட்கள். உடமைகள் மற்றும் தொழில் உபகரணங்கள் என்பனவும் எரிந்துள்ளதாக வீட்டார்கள் தெரிவித்தனர்.
இக் குடிசைக்குத் தீ வைக்கும் வேளையில் தாயும் மகளுமாக இருவரும் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அங்கு சென்ற இனம் தெரியாத நபர்கள் இருவர் குடிசைக்கு தீ வைத்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். 
தனது காணியை அடாத்தாகக் கைப்பற்றிக் கொள்ள முயற்சிக்கும் ஒரு நபராலேயேதான் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வந்திருப்பதாகவும் ஏற்கனவே இரு தடவைகள் தனது குடிசை சேதப்படுத்தப்பட்டதாகவும் தனது வளவில் பயிரிடப்பட்டிருந்த பயன்தரும் பயிர்கள் அவ்வப்போது அழிக்கப்பட்டதாகவும் இதன் மூலம் பாதிக்கப்பட்ட தாயான பாத்தும்மா ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் தெரிவித்துள்ளார்.
இதற்கிணங்க இச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளில் ஏறாவூர் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.  நன்றி வீரகேசரி








சிகை­ய­லங்­கார நிலையம் நடத்தி வந்தவர் சடலமாக மீட்பு

17/12/2014 ஏறாவூர் நகரிலுள்ள சிகை அலங்கார நிலையம் ஒன்று மூடப்பட்டிருந்த நிலையில் அதற்குள்ளிருந்து அந்த சிகை அலங்கார நிலையத்தை நடத்தி வந்த வயோதிபர் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கரடியனாறு பொலிஸ் பிரிவில் பங்குடாவெளி தளவாய்க் கிராமத்தில் வசிக்கும் செல்லத்துரை வேல்முருகு(66 வயது) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸ் சார்ஜன்ற் ஏ.இஷற். ஹஸன் தெரிவித்தார்.
தரையில் கால் நீட்டி உறங்கியவாறு சடலம் காணப்பட்டது. தனது கணவர் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் தங்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பின்னர் மாலையாகும் வரை தொடர்பே இல்லாதிருந்ததால் தாங்கள் கடைக்கு வந்து பார்த்தபொழுது கடைக்குள் அவர் இறந்த நிலையில் காணப்பட்டதாக மனைவி பொன்னையா மாணிக்கம் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
தனது கணவர் அவருக்கு ஏற்பட்ட நீண்ட நாள் உடல் உபாதைக்காக  கிளினிக் செல்லவிருந்தார் என்றும் மனைவி பொன்னையா மாணிக்கம் மேலும் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளில் ஏறாவூர் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.  நன்றி வீரகேசரி











மனித எலும்புக்கூடு, மண்டையோடு வெவ்வேறாக மீட்பு


18/12/2014 வடமராட்சி முள்ளிப்பகுதியில் மனித எலும்புக்கூடும் மண்டையோடும் வெவ்வேறாக  இருக்க கண்டிபிடிக்கப்பட்ட.
 முள்ளிச்சந்தியில் இருந்து யார்க்கரைக்கு செல்லும் விதியில் சிறிது தொலைத்தூரத்தில் இராணுவத்தினர் தமது முகாம்களை அலங்கரிப்பதற்காக இன்று காலை வியாழக்கிழமை புற்பூண்டுகளை வெட்டியபோது இவற்றைக்கண்டனர்
உடனடியாக நெல்லியடிப்பொலிஸாருக்கு தகவல்கள் கொடுப்பட்டதையடுத்து அங்கு விரைந்த நெல்லியடிப்  பொலிஸ்  இன்ஸ்பெக்டர் சுமித் பெரேரா தலைமையிலான பொலிஸார்  இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தொன்னம் பொச்சுக்குவியல் எரித்து காணப்பட்ட இடத்திற்கு அருகில் மனித எலும்புக்கூடும் அதில் இருந்து சிறிது தூரத்தில் மனித மண்டையோடும் காணப்பட்டது. எலும்புக்கூடும் மண்டையோடும் இருக்கும் பகுதிகளை பொலிஸார் மஞ்சள் நாடாவால் வேலியிட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் முள்ளிப்பகுதியில் இறந்த நிலையில் நாகர் கோவிலைச்சேர்ந்த குடும்பப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி






No comments: