இயங்க மறுக்கிறதா இயக்குனர் சிகரம்? - குகதாசன் கனடா‏

.

புதிய துறை ஒன்று ஒரு இனத்துள் உருவாகும் போது அதன் தோற்றுவாய் வேறு துறையினரால் தொடங்கப்பட வாய்ப்புண்டு. திரைப்படத்துறை தமிழில் ஆரம்பிக்கப்பட்ட போது பாடி நாடகம் நடித்தவர்கள் ”ஹமராவிற்கு” முன் இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். அதனால் தான் ஆரம்பத்தில் இசை தமிழ்ப் படங்களில் நடித்திருக்க வேண்டும். தியாகராஜபாகவதரும் சின்னப்பாதேவரும் கதாநாயகர்களான கதை இதுவாகத்தானிருக்கும். இசையைத் தொடர்ந்து வாள் வீச்சும் கம்படியும் சண்டைக்காட்சிகளும் குதிரைகளில் பாய்ந்து பாய்ந்து நடித்தன.   
நடிப்பிற்கென தோன்றிய அபூர்வப் பிறவி சிவாஜி கணேசன் நடிக்க ”சான்ஸ்” கேட்டு வந்த போது இவன் என்ன வித்தியாசமாக பேசுகிறான்…. வேறு மாதிரி நடிக்கிறான் ….. பாகவதர்கள் போல இல்லையே என வாய்ப்பு மறுக்கப்பட்டு …. அவர் விரட்டப்பட்டார். தான் அழுத கண்ணீரில் ”ஏ வி எம்” ஸ்ரூடியோவில் வளர்ந்த மரங்கள் பல என ஒரு தடவை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கூறியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. அன்றைய தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் இளம் அழகான பாகவதர்களையே தேடினர். அழகிற்காக நடிகனாக தெரிவு செய்யப்பட்ட ஜெமினி கணேசன் முன் சிவாஜி கணேசன் நடிப்பு வாய்ப்பிற்காக நேர் முகப் பரீட்சைக்காக வந்து நின்றதும் வரலாறு தான்.

நடிப்புச் சக்தியாக சிவாஜி கணேசன் நுழைந்த பின்னரும் முகத்தை தன் கையால் மறைக்காது அழத் தெரியாத எம் ஜீ அர் அவரிற்கு பெரிய சவாலாக விளங்கினார். நடிப்பைத் தவிர இதர சினிமா அம்சங்களை எல்லாம் எம் ஜீ அர் இழுத்து வந்து தனது படங்களை சிவாஜியின் இமாலய நடிப்பு படங்களுடன் போட்டியிட வைத்து வெற்றியும் கண்டார். ஆனாலும் நடிப்புத் தான் இன்று வரை நடிகர்களால் தேடப்படுகிறது போற்றப்படுகிறது. ஆம், படங்கள் எம் ஜீ ஆரின் சண்டைக் காட்சிகளிற்கும் , விறுவிறுப்பான கதைகளிற்காகவும் பாடல்களிற்காகவும் அழகான இளம் கதாநாயகிகளிற்காகவும் ஓடி வசுல் சாதனைகளை நிகழ்த்தி வந்தது மறு புறத்தில் சிவாஜியின் படங்களும் நடிப்புச் சாதனைகளை நிகழ்த்தியவாறு திரையில் ஓடின. மூன்றாவது நிலையில் ஜெமினி கணேசனின் படங்களும் ஓடின. இந்த நிலையில் இயக்குனரிற்காக படம் ஓடியதென்றால் அது பாலச்சந்தரிற்காகத் தான்.
அந்நாட்களில் முக்கோணக்காதல் கதைகளிற்கு ஸ்ரீதரும் இன்னுமாக கோபாலகிருஸ்னன் போன்ற பல சிறந்த இயக்குனர்கள் இல்லாமில்லை. இருந்தாலும் அன்றைய தமிழ்ச் சினிமா வழமைகளைத் தளுவாது , மாறுபட்ட விதத்தில் தனக்கென ஒரு புதியபாணியில் படங்களை இயக்கத் தொடங்கியவரே திரு பே பாலச்சந்தர் ஆவார். இவரது ”ஐடியாக்கள்” கூட வேறு எவரையும் தளுவியதாக இல்லாமல் அவருடைய சொந்த் தயாரிப்பாகவே இருந்தன. இவரது கதைகளில் ”ஹீரோயிசத்திற்கு” முதன்மை அளிக்கப்படவில்லை.
சமூக வழமைகளிற்கு முரனான சிக்கல் நிறைந்த தொடரும் மானசீக உறவுகளை அடிப்படையாக வைத்து அவரால் எழுதப்பட்ட கதைகளிற்காக படங்கள் ஓடி வெற்றி பெற்றன. இதற்கு உதாரணங்களாக நாணல், இருகோடுகள் , எதிரொலி, நான் அவனில்லை, மூன்று முடிச்சு அபூர்வ ராகங்கள் போன்ற பல படங்களை குறிப்பிடலாம். இவரது ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு பரிசோதனை என கவிஞர் வைரமுத்து ஒரு தடவை ஒப்பிட்டது குறிப்பிடத் தக்கது.
திருமாணமாகி மனைவியுள்ள போது கதையின் நாயகனிற்கு தோன்றும் காதற்கதையே இரு கோடுகளாகும். திருமணமான, வயதிலும் மூத்த பாடகியை காதலிக்கும் மிருதங்க இளைஞனின் காதற்கதையாக அபூர்வ ராகங்கள், தான் விரும்பியவளை அடைய தன் நண்பனை நீரில் மூழ்கி மரணமடையும் போது உதவ மறுத்து பின் தான் விரும்பியவளையே தாயாக காணும் தொடர் கதையாக மூன்று முடிச்சு ( வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள் பாடல் - https://www.youtube.com/watch?v=7Q55nVGOofo ) அவள் ஒரு தொடர் கதையென இவரது கதைகள் யாவும் மரபிற்கு முரனான ஆனால் ஏற்ற வேண்டிய காதலை அல்லது மணோவியல் உறவுகளை மையமாக வைத்து எழுதப்பட்ட அற்புதமான கதைகளாகும்.
எதையும் ஒப்பிட்டு சித்தரித்கும் காட்சிகள் வாயிலாக , பாத்திரங்களின் சிக்கலான நினைப்புக்களைக் கூட , வசனங்கள் இல்லாமலே பாமர ரசிகர்களும் ஊகித்து புரியும் வண்ணம் அமைக்கும் இந்த சிந்தனைச் சிற்பி ஒரு தனித்துவமான பிறவியாகும். இரு கோடுகள் படத்தில் ”ஒரு ஆண்(கணவன்) …. இரு பெண்கள் என்ற நிலையில் ஒரு சங்கீதக்கதிரைப் போட்டி காட்சியை அமைத்து இரு பெண்களையும் ஒரு கதிரைக்காக (ஒரு அணிற்காக) சுற்றிச் சுற்றி ஓட வைத்து ……… ஒரு பாடற் காட்சியை ( பாடல் - நான் ஒரு குமாஸ்தா நான் பாடுவேன் தமாஸ்சா ரி எம் எஸ்- நாகேஸ் ) அமைத்து பாத்திரங்களின் போக்கை சித்தரித்த அற்புதம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது. இதே போன்ற ஒரு கதிரைக்கான 3 பெண்களின் ஓட்டத்தை சொல்லத்தான் நினைக்கிறேன் பாடலிலும் காணலாம். இதே போன்ற போட்டியை ”புன்னகை மன்னன் கோயிலிற் கண்ணன்…….. ” http://www.dailymotion.com/video/xspj52 என்ற பாடல் மூலமும் கண்னன் …ராதைக்காகவா? ருக்மணிக்காகவா? என்று ஆரம்பித்து இருவரிற்கும் என முடிப்பது இரை மீட்பிற்குரியது.
இதே இரு கோடுகளில் ஒரு கோட்டை அழிக்காமல் அதை எப்படி சின்னக் கோடாக்குவது என்ற கேள்வியை எழுப்பி ஒரு தத்துவத்தையே முத்தாக்கி முடிவுமாக்கிய திரை இலக்கியம் இரு கோடுகள். திரு கே பாலச்சந்தர் ஒரு பிராமணர் என்பதால் வயதான ஒரு கணவரிற்கு மூன்று முடிச்சில் ஒரு இளம் பெண்ணான ஸ்ரீதேவியை வாழக்கைப்பட வைத்தமை தொடர்பில் ஒரு சாரார் அரசியற் தனமாகவும் மறுசாரார் சமூகவியற் காரணமாகவும் விமர்சனங்களையும் கண்டனங்களையும் முன் வைத்த போதும் , திரையில் கதை வசனம் டைரக்ஜன் கே பாலச்சந்தர் என பின்னணியில் எதுவித ஆரப்பாட்ட துள்ளல் ஒலி மட்டுமல்ல மெல்லிசை அடங்கலாக எதுவித சத்தமுமின்றி அவரது பெயர் காட்டப்படும் போது கடைப்பிடித்த அதே மௌணத்தால் அவர் வெற்றி கொண்டார் என்றே கணிக்க வேண்டியுள்ளது.
ஒரு சிறந்த படைப்பென்றால் அது பழமரம் போல் கல் எறிகளை வாங்கும் என்பதற்கு அமைய அவரது படைப்புக்கள் ஒரு சாராரின் எதிர்ப்பை பெற்றதே ஒழிய அவரது கதைகளும் முடிவுகளும் தனி மனித உடல் உள்ளத் தேவைகளை நிராகரித்தாலும் மறுத்தாலும் சமூக விதிகளை மீறவிடாது சமூக மற்றும் பண்பாட்டு விழுமியங்களை நிலை நிறுத்த வேண்டும் என்ற அந்தணத்துவம் ஏற்புடையது என்றே கருத வேண்டியுள்ளது. கொடுக்க வல்ல விதி விலக்குகள் பிள்ளைகளையும் எதிர்காலச் சந்ததியையும் சமூகத்தையும் பாதிப்பதால் புனிதமாக கருதப்பட்டு பேண வேண்டிய திருமண மற்றும் தாலி உறவுகளை சீரளிக்காத அவரது சுமூகம் நோக்கிய முடிவு தனி ஒரு பாத்திரத்தை பாதிப்பதே விதி விலக்கென முடிவாவது அற்புதமானது.
நண்பரக்ளாக இருந்த போதும் காதல் என வரும்போது சிக்கல்படும் பல படஙகளை நாம் பார்த்துள்ளோம். ஆனால் மூன்று முடிச்சில் படகால் வீழந்து ஆற்றுநீரில் மூழ்கும் ஹமலை காக்காத ரஜனிகாந்த என்ற பாத்திரம் இரட்டைக் கொலைக்கு காரணமாகிவிடுகிறது என்பதே எனது புரிதலாகும். அந்தக் காட்சி கொலைக்காட்சியா இல்லையா என்பதை விட்டு விட்டு வெறும் ஸ்ரீதேவி- ஹமல் காதலை கொலை செய்வதாக கதையை அவர் நகர்த்துவது அற்புதம். இப்படி மற்றவர் காதலை நிஜவாழ்க்கையில் கொலை செய்யும் இக்கதை கூட ஒரு முக்கோணக் காதற்கதை தான். ஆனால் இது போன்ற ஒரு முக்கோணக் கதை எங்கும் காண முடியாத ஒன்று என்பதிலேயே பாலச்சந்தர் வாழ்கிறார். இதை விட இவரது காட்சிகள் யாவும் தமிழ்ச் சினிமாத்தனமற்று , ஆங்கிலப் படங்கள் அல்லது ஜெகஸ்பியரின் கதைகள் போல் யதார்த்தமாக இயல்பாக இருப்பது கவனி்ப்பிற்குரியது. அத்தோடு எதையும் இவர் கதைகளை சொல்லும் காட்சி உத்திகள் அபூர்வமானவை.
அதிசயித்து பிரமிக்க வைப்பவை அதே சமயம் யதார்த்தமும் உண்மைத் தன்மையும் உள்ளவை. ஆக திரைப்படத்தை இலக்கியஙகள் மற்றும் தத்துவங்கள் வேதாந்தங்கள் சித்தாந்தங்கள் போல் நுாலக புத்தக விறாக்கைகளில் துார உயரத்தே துாசி படர வைக்காது யதார்த்தமான வாழ்க்கை காட்சிகளாக்கிய உயரந்த படைப்பாளி திரு கே பாலச்சந்தர் திரை உலகில் அமரர் சிவாஜி போல் என்றும் வாழ்வார் என்பதில் ஐயமில்லை. ஆனால் பல படங்களை இயக்கிய இந்த வயதான இயக்குனர் சிகரம் தொடர்ந்து இயங்குமா என்பதே இனறைய நமது கேள்வியாகும். அவரது நலனிற்காக செய்தி இணையத்தளத்தோடு இணைந்து நாமும் பிராரத்திப்போமாக!

No comments: