சிவாஜிக்கு வாழ்வளித்த தணிக்கை அதிகாரி

அக்கால தணிக்கை அதிகாரிகளில் குறிப்பிடத்தக்க இருவருள் ஒருவர், sivaji parasakthiஸ்டாலின் சீனிவாசன். இவர்தான் 'பராசக்தி' படத்தைத் தணிக்கை செய்தவர். அந்தப்படத்தில், 'பராசக்தி எப்போது பேசினாள்? பைத்தியக்காரா! அது பேசாது. வெறும் கல்' என்று மு.கருணாநிதி எழுதி, சிவாஜிகணேசன் பேசியிருந்த வசனம் இருந்தது.  'அது பேசாது. வெறும் கல்' என்ற வாக்கியத்தில் இருந்த 'வெறும் கல்' என்ற சொல்லின் ஒலி இழையை (சவுண்ட் டிராக்) படத்திலிருந்து நீக்கி விட்டு, உதட்டசைவை மட்டும் வைத்துக்கொள்ளும்படி உத்தரவு பிறப்பித்தவரும் இந்த தணிக்கை அதிகாரிதான்.

"நாத்திக வாடை வீசுகின்ற 'பராசக்தி' படத்தை தணிக்கைச் சான்றிதழ் தராமல், முற்றிலுமே தடை செய்து விடவேண்டும்" என்று சில உறுப்பினர்கள் கூறியதை, ஸ்டாலின் சீனிவாசன் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் மட்டும் அன்றைக்கு அந்த உறுப்பினர்களின் கருத்தை ஆமோதித்து ஏற்றுக்கொண்டிருந்தால், தமிழ் சினிமாவிற்கு 'நடிகர் திலகம்' சிவாஜிகணேசன் கிடைத்திருக்க மாட்டார்.


சிவாஜி நடித்த 'பாசமலர்' முதல், பல வெற்றிப் படங்களுக்கு நான் வசனம் எழுதி அவருடன் பழகிக்கொண்டிருந்த கால கட்டம் அது.  அந்நாட்களில் ஒருநாள் நான் அவரிடம் நகைச்சுவையாக இப்படிக் கூறினேன்:-

"அண்ணே! 'பராசக்தி' படத்துல நீங்க அறிமுகமாகி, அதன் மூலம் உங்களுக்கு கிடைச்ச புகழுக்காக நீங்க நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது அதன் தயாரிப்பாளரான நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ.பெருமாள் முதலியாருக்கோ, வசனம் எழுதின மு.கருணாநிதிக்கோ இல்லை. அப்போ சென்சார் ஆபீசராக இருந்த ஸ்டாலின் சீனிவாசனுக்குத்தான். அவருக்கு அப்புறம்தான் மத்தவுங்களுக்கு. ஏன்னா, அன்னிக்கு அவர் மட்டும் மொத்தப் படத்தையுமே தடை பண்ணியிருந்தார்னா, நீங்க நடிகர் திலகம் ஆகி இருக்க முடியாது. வெறும் நாடக நடிகராகத்தான், முன்னுக்கு வர்றதுக்கான நாட்களை எண்ணிக்கிட்டிருந்திருப்பீங்க."
இதைக்கேட்டு அவர் சிரித்தபடி சொன்னார்:-

'ஆமா. உண்மைதான். அந்த ஸ்டாலின் சீனிவாசன் மனசுல எங்கம்மா மகமாயி புகுந்துதான் என்னைக் காப்பாத்துனா. சென்ஸாராகி ரிலீசானதுக்கப்புறம் கூட பராசக்தி படத்தை தடை பண்ணப்போறதா எல்லா ஊர்லயும் வதந்தி கிளம்பி அதனால் வசூல் இன்னும் அதிகமாயிடுச்சு' ஆம்! அதுவும் உண்மைதான்.
தினத்தந்தி 

No comments: