கப்பற் திருவிழா - புங்கையூரன்

.
எல்லாக் கொண்டாட்டங்களும், ஒரு சமுதாயப் பிணைப்பை, மேலும் வலுவூட்டுவதற்காகவே உருவாகின!
ஆனால், மனிதன் அவற்றைத் தனது ;நான்' என்ற மமதையில்,புதைத்து விட்டதன் விளைவே, மேலுள்ள கதை!
இது தான் இன்று புலத்திலும் நடக்கிறது!
பானையில் இருப்பது தானே, அகப்பையிலும் வரும்கடற்காற்று குளிராக வீசிக்கொண்டிருந்தது!

கிடுகு வேய்ந்த, தனது தோணிக்குள், அரிக்கன் விளக்கைக் கொஞ்சம் தூண்டி எரியவிட்ட சிங்கன், தனது வலது காலின் விரல்களை மெதுவாக, நீவி வீட்ட படி, ஒரு பீடியைப் பத்த வைத்துக்கொண்டான்!

சீ! இந்தக் கண்டறியாத 'சரளி வாதத்தாலை' ஒண்டும் ஒழுங்காச் செய்யேலாமல் கிடக்கு! தனக்குத் தானே புறு புறுத்துக் கொண்டான்! வேறெவரும் தோணிக்குள் இருக்கவில்லை! சிறிது முன்னர்தான், களங்கண்டித் தடிகள், ஊன்றும் வேலையில் பாதியை முடித்து விட்டிருந்த வேளையில், இந்தச் சரளிவாதம், அவனது கால்விரல்களை இழுத்து விட்டது! கொஞ்ச நேரம் செல்லச் சரிவரும், என்று தனக்குள் நினைத்துக் கொண்டவன், பீடிப் புகையை நன்றாக, இழுத்துவிட்ட வேளையில், அவனது நினைவுகள், கொஞ்சம் பின்னோக்கி நகர்ந்தன!


போன முறை, அம்மன் கோவில் திருவிழா முடிஞ்ச கையோடு, அடைவு வைச்ச மனுசியின்ர தாலிக்கொடியை, அண்டைக்குப் பகல் தான், அடைவு மீட்டிருந்தான். இந்தக் களங்கண்டி மீன்பிடி, இன்னும் ஒரு கொஞ்ச நாள் தான் செய்ய வேணும்! அங்கால வாடைக் காற்றுப் பெயரத் துவங்கினால், இந்தக் கடலுக்கை இறங்கி நிண்டு, களங்கண்டி வலை விரிக்கிற வேலையோட மினக்கடத் தேவையில்லை, என்று நினைத்தவன், குறைப் பீடியைக் கடலுக்குள் வீசியெறிந்து விட்டு, மிச்ச வேலையைத் தொடர்ந்தான்!

வாடை பெயர்ந்தால், சிங்கனைப் பிடிக்க முடியாது!
கடற்கரையில், அந்த அம்மன் கோயிலடியில், அவனது ஓலைக் குடிசை ஒன்று, புதிதாக முளைத்திருக்கும்! குறைந்தது ஒரு நாலு பேராவது, அவனுக்குக் கீழே வேலை செய்வார்கள்! கடற்கரை முழுவதும், ஒரே திருவிழாக் கோலம் கொள்ளும்! வெளியூரில் இருந்து, வருகிற மீனவர்களுக்கெல்லாம், அவனிடம் ஒரு தனி மரியாதை! இதற்கு முதலாவது காரணம், அவன் உள்ளூரவன் என்பதாக இருக்கலாம்! ஊர்ப் பெரியவர்களும், சாதாரண ஊர் மக்களும், அவன் மீது காட்டும் மதிப்பும், மரியாதையும், அவனை, வெளியூரார்க்கிடையே, ஒரு உத்தியோகப் பற்றற்ற நீதிபதியாகவே, எண்ண வைத்திருந்தன! அதற்குப் பல காரணங்கள், இருந்தன! ஒரு முறை, கடலில் பிடிக்கப் படும் கணவாய்களுக்குத் திடீர் மரியாதை, வந்து விட்டது! காரை நகரிலிருந்த 'சீனோர்' நிறுவனம், இந்தக் கணவாய்களின் உடற்பகுதியை மாத்திரம், அதிக விலை கொடுத்து வாங்கி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது! ஊர்மக்களுக்கு, கழிக்கப் பட்ட கணவாய்த் தலைகளும், செட்டைகளும் மட்டுமே விற்கப் பட்டன! அப்போது, ஊர்மக்கள் வாங்கிய பின்பு, மிச்சமிருக்கும் கணவாய்களை மட்டுமே, வெளியாருக்கு விற்கவேண்டும், என்று வாதாடியவனாம் சிங்கன்!. அத்துடன், அந்த ஊர் அம்மன் கோவிலில், நடக்கும் கப்பற்திருவிழா! இது சிங்கனாலும், அவனுடன் சேர்ந்த மற்ற மீன் பிடிப்பவர்களாலும் செய்யப் படுவது!

காலமை, வெள்ளாப்பு நேரம் கரையிறங்கிய சிங்கன், நேரே வீட்டுக்குப் போய் ஒரு குட்டித்தூக்கம் போட்டு விட்டு, எழுந்து சாப்பிட்ட பின்பு, சந்தைப் பக்கம் போகிற பாதையில் நடக்கத் துவங்கினான்! கொஞ்சம் வெயில், தலையில சுட்ட மாதிரிக் கிடக்கத் தோளில் கிடந்த துவாய்த் துண்டை எடுத்துத் தலைப்பாகையாகக் கட்டிக் கொண்டு நடந்தான்! வழியிலிருந்த கள்ளுத் தவறணையிலிருந்து, சிங்கண்ணை என்று யாரோ கூப்பிட, தவறணைக்குள் நுழைந்தவனை, என்னண்ணை, வெயிலுக்கு மருந்திருக்கேக்கை, ஏன் வேர்த்து விறுவிறுப்பான்? என்ற தம்பையரின் குரல் வரவேற்றது!
சரி, அப்ப ஒன்டையடிப்பம் என்று தொடங்கியவன், நாலு போனப்பிறகு தான், கொஞ்சம் பொச்சடிக்கத் துவங்கினான்! அதுக்கிள்ள, தவறணையில் கூட்டமும் சேர்ந்துவிடத் தம்பையர் தான் முதலில் கதையைத் தொடக்கி வைத்தார்!

சிங்கன், இந்த முறை வாற, சித்திரைத் திருவிழாவில, நீயும், உன்ர ஆக்களும் நடத்திற 'கப்பல் திருவிழா' அந்த மாதிரி இருக்கோணும்! வழக்கம் போல, நாலு கூட்டம் மேளமும், சின்ன மேளமும் கட்டாயம் இருக்கும் தானே! என ஆரம்பித்து வைத்தார்!
சிங்கண்ணை, இப்போது வெறும் சிங்கனாகி விட்டார்! பனங்கள்ளின் மகிமை அப்படி!
தம்பையர், எங்கட திருவிழாவை விட நல்லா இந்த ஊரில, ஆராலும் செய்ய ஏலுமே?
இல்லச் சும்மா ஒரு கதைக்கென்டாலும், செய்யத் தான் விட்டிடுவமே?
சிங்கனின் ஆட்களும் சேர்ந்து கொள்ளத் திருவிழாவுக்கு, அத்திவாரம் போட்ட திருப்தியில், தம்பையரும், சிங்கன் உனக்கும், உன்ரை ஆக்களுக்கும், என்ர கணக்கில ஒவ்வொண்டு எண்டு சொல்ல சிங்கன் பாட்டி குளிர்ந்து போனது!

வாடையும் வழக்கம் போல வந்து போனது! சூடை மீனும், அந்த மாதிரி!
அம்மாளாச்சி துணையால, இந்த முறை, கடலன்னை கிள்ளித் தராம, அள்ளி எல்லோ தந்திருக்கிறா! மனசார அம்மாளாச்சியை வாழ்த்தினான், சிங்கன்!
பிள்ளையள் வளருதுகள்! வீட்டைக் கொஞ்சம் பெருப்பிக்க வேணும்! கிணத்துத் தண்ணி கொஞ்சம் மணக்கிற மாதிரிக் கிடக்குது! இந்த முறை, கட்டாயம் சேறு எடுக்க வேணும்! அவனது சராசரி மனம் கணக்குப் போட்டது!

திருவிழாவும் தொடங்கி விட்டது! எல்லாரும், சிங்கனுக்கு உசுப்பேத்திற வேலையில, மும்முரமாத் தொடங்கீற்றினம்!

சிங்கன் இந்தமுறை 'கப்பல்' உண்மையான கப்பல் மாதிரி இருக்க வேணும், சரியோ!
சிங்கனுடைய ஆக்களும், இந்த முறை 'ராசேஸ்வரி' கோஸ்டி எண்டு சொல்லி, ஒரு பொம்பிளை மேளமொண்டு புதுசா வந்திருக்காம் என்று சொல்லச் சிங்கனும், விலை தலை ஒண்டும் விசாரிக்காமச் செட் அப் பண்ணச் சொல்லீட்டான்! விலையைப் பற்றி அவன் கவலைப் பட்டிருக்கவும் மாட்டான்! திரும்பவும், தங்கட திருவிழா தான், பெருசா இருக்க வேணும்!

திருவிழாவும் வந்தது! மேளக்கச்சேரியை, இந்த முறை ஒருத்தரும் அடிக்கேலாது எனச் சிங்கனின் காது பட எல்லோரும் கதைக்கச், சிங்கன் பெருமையால் குளிர்ந்து போனான்!

வடக்கு வீதிக்குச் சாமி வரக், கிட்டத்தட்ட விடியத் துவங்கி விட்டிருந்தது!
'சின்ன மேள மேடையைச்' சுத்திச் சனம் நெருக்கமா வரத் துவங்கீற்றுது!
முதலாவது வரிசையில், வயது போனவர்கள் அடிபட்டு இடம் பிடித்துக் கொள்ள, பெடியள் அவைக்குப் பின்னாலையும், இளம்பெடிக் கூட்டம், கடைசி வரிசையிலும் இடம் பிடித்துக் கொண்ட விதம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது!

'நாங்க புதிசா! 
...
வாத்தியாரின் பாட்டோடு சின்னமேளம் துவங்கக் கரகோசமும், விசில் சத்தமும் வானத்தைப் பிழந்தன!
தொடர்ந்து , ஒரு பக்கம் பாக்கிறா.. ஒரு கண்ணைச் சாய்க்கிறா....

எல்லாருடைய கண்களும் சாயத் தொடங்கி விட்டன! வயதானவர்களுடைய கண்களும் தான்!
கம்பி போட்ட ஜன்னலிலே.... கன்னத்தைத் தேய்க்கிறா....
மீண்டும் விசில் சத்தங்கள்!!!!

ஒரு மாதிரிக் 'கப்பலைக்' கொண்டு வந்து, கோயிலுக்கிள்ள வைச்சாப் பிறகு....

சிங்கனும், அவன்ர ஆக்களும் கணக்கு முடிக்க ஒன்றாகக் கூடினார்கள்!, எல்லாரும் தங்கட திருவிழா தான் இந்த முறையும் பெரிசு, என்று பெருமைப் பட்டுக் கொண்டு, தங்கள் முதுகுகளில் தாங்களே தட்டிக் கொண்டார்கள்!
வாற முறையும் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று உறுதியும் எடுத்துக் கொண்டார்கள்!

ஒரு வாரத்தின் பின்பு....

சிங்கனும். மனுசியின்ர தாலிக்கொடியோட அடைவு கடையை நோக்கி நடந்து கொண்டிருந்தான்!
 

http://www.yarl.com/

No comments: