இனிது இனிது - சினிமா விமர்சனம்

.
ஹேப்பி டேய்ஸ்' என்ற தெலுங்குத் திரைப்படத்தின் தமிழ் வடிவம்தான் இந்த 'இனிது இனிது'. 


4 மாணவர்கள், 4 மாணவிகள் என்று எட்டு பேர் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பாடப் பிரிவில் முதலாமாண்டில் சேர்ந்தது முதல், கல்லூரியைவிட்டு வெளியே வரும்வரையிலான அவர்களுடைய கல்லூரி வாழ்க்கைக் கதையைத்தான் இதில் சொல்லியிருக்கிறார்கள்.

கல்லூரிக்கு எதற்குப் போனார்களோ அல்லது போகிறார்களோ.. அந்தப் படிப்பு என்ற ஒன்றை மட்டும்விட்டுவிட்டு மீதி அத்தனையையும் இதில் காட்டுகிறார்கள்.

கல்லூரிகளில் ராகிங் செய்வதைத் தடை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் முதல் லோக்கல் கவுன்சிலர்வரையிலும் குரல் கொடுத்து வரும் சூழலில், அப்படியொரு சுகமும் மாணவர்களுக்கு உண்டு என்பதை பற்ற வைத்திருப்பது போல் இதில் வரும் காட்சிகள் பல உண்டு. முற்றிலுமாக தவிர்த்திருக்கக் கூடிய விஷயம் இது. 

என்னதான் தடை செய்தாலும் அது நிஜத்தில் நடக்கத்தான் செய்கிறது என்றாலும், அதற்கு ஒரு அளவு வைத்து செய்திருக்கலாம்.. அதையே காமெடியாக்கி செய்திருப்பதால் அதன் தாக்கம் மற்றவர்களைச் சேராது என்று நினைத்துவிட்டார்கள் போலும்.. ஆனால் படத்தில் ராகிங் காட்சிகள் ஓவர் டோஸ்.
 

அதேபோல் கல்லூரி லெக்சரராக வரும் அஞ்சலா ஜாவேரியின் மீது மாணவன் ஜொள்ளு விடுவதும், அதனை பார்த்தவுடன வரும் காதலாக வர்ணிப்பதும் ரொம்பவே கொடுமை.. இது போன்று வகுப்பறைகளில்  ஆசிரியைகளின் உடை நெகிழ்வதைப் பார்த்து ஜொள்ளு விடும் மாணவ சமுதாயத்தையும், உடையை நெகிழ வைக்க வேண்டிய ஜன்னல் கதவுகளை மாணவர்களே திறப்பதும், அஞ்சலா குனியும்போது காற்று வீச வேண்டி மாணவர்கள் கையில் இருக்கும் நோட்டுப் புத்தகங்களை வீசி காற்றை வரவழைக்கின்ற காட்சிகளும் வெட்கக்கேடான விஷயங்கள்..! பள்ளிகளைப் போன்றே கல்லூரிகளும் இருக்கும்.. இருக்க வேண்டும் என்கிற நினைப்பையே மாணவர்களும், ஆசிரியர்களும் கொண்டிருக்க சினிமா இயக்குனர்களும், கதாசிரியர்களும் மட்டுமே இந்த அளவுக்கு மட்டமான சிந்தனையை பகிரங்கப்படுத்தி வருவது கேவலமானது.

நான்கு மாணவர்களுமே சொல்லி வைத்தாற்போல் மூன்று மாணவிகள் மேல் காதல் கொள்கிறார்கள். அதில் அவர்களுக்குள் அவ்வப்போது ஏற்படும் மோதல்கள், தாபங்கள், காதல்கள், ஈகோக்கள் அத்தனையையும் வரிசைக்கிரமமாக என்னைப் போலவே விலாவாரியாக புட்டுப் புட்டு வைக்கிறார்கள்.

சிற்சில இடங்களில் ஜிலேபியின் மீதே தேன் ஊற்றிச் சாப்பிடுவதுபோல காட்சிகளின் அமைப்பு நகைக்க வைக்கிறது.. குபீர் சிரிப்பு தேவையில்லை. வெகு இயல்பான காட்சிகள் ஊடேயே நகைச்சுவையைத் தெளித்திருக்கிறார்கள். 

முற்றிலும் புதுமுகங்கள் என்றாலும் யாரும் சோடை போகவில்லை.. மது என்ற பெயரில் நடித்திருக்கும் ரேஷ்மி சேலை அணிந்து பஸ்ஸில் இருந்து இறங்கி வருகின்ற காட்சியே அழகு.. ஒரு அழகுக்கு, அழகு சேர்த்தது போல் இருந்தது அவர் சேலை அணிந்து வருகின்ற அத்தனை காட்சிகளும்..

அதேபோல் ஷாலு என்ற சீனியர் மாணவியும்.. அவருடைய பேச்சே இல்லாத முதல் தலையசைப்பு ஆக்ஷனே வித்தியாசத்தைக் காட்டிவிட்டது. அசத்தல்ம்மா.. போட்டோகிராபி முகம்.. எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் நடிப்பு தெரிகிறது.. இது போல் நூறில் ஒருவருக்குத்தான் கிடைக்கும்..

எம்.எல்.ஏ.வின் மகனாக விமல் என்கிற கேரக்டரில் நடித்திருப்பவரை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.. முதல் படம் என்பதே தெரியாத அளவுக்கு டைமிங் டயலாக் டெலிவரியில் பின்னியிருக்கிறார். அதிலும் ஜூஸில் எதையோ கலந்து குடித்துவிட்டு அவர் செய்கின்ற கோணங்கிச் சேட்டை.. சூப்பர்..!

ஷாலுவைக் காதலிக்கும் அந்த சைமனின் கதை.. மது-ஆதித் ஈகோவால் மோதல் துவங்கி இறுதியில் ஒன்று சேரும் இந்த ஜோடிகளின் கதை.. ரெண்டாங்கிளாஸில் பாட்டுப் பாடியதை ஞாபகம் வைத்திருந்து இப்போது திடீரென்று வரும் ஒரு பெண்ணால் தன் காதல் பாதிக்கப்பட்டு வருத்தப்படும் இன்னொரு பெண்.. தனது அழகை நினைத்து வருத்தப்பட்டு புலம்புகின்ற காட்சியெல்லாம் சுவையாகத்தான் இருந்தன.

அனைவரையும் ரொம்ப நல்லவர்களாகவே காட்டிவிட்டால் இன்றைய சூழலுக்குப் பொருத்தமாக இருக்காது என்று நினைத்து இவர்களிடையே ஒரு பெண்ணை மட்டும் கூடு விட்டு கூடு பாயும் காந்தாரியாகக் காட்டியிருக்கிறார்கள். இந்தப் பெண்ணை வைத்து மேலும் ஒரு குட்டிக் கலாட்டா.. அதனால் மீண்டும் ஒன்று சேர ஒரு முனைப்பு என்று திரைக்கதையில் கதம்பத்தை இறுக்கி, இறுக்கிக் கட்டியிருக்கிறார்கள்.


படத்தில் பெரிதும் சிரிக்க வைத்தக் காட்சிகள் கிரிக்கெட் போட்டி காட்சிகள்தான்.. வசனமே இல்லாமல் காட்சிகளிலேயே இந்த அளவுக்கு சிரிக்க வைக்க முடியும் என்று காண்பித்திருக்கிறார்கள். பாராட்ட வேண்டிய விஷயம்..

ஒரு நல்லத் திரைப்படம்தான் என்பதை சொல்லுவதைப் போன்ற திரைக்கதை அமைப்புடன் இப்படத்தை எடுத்திருந்தாலும், இது முற்றிலும் மேல்தட்டு வர்க்கத்தினருக்கான படமாகவே அமைந்திருப்பது மிகப் பெரிய குறை.

இந்தத் திரைப்படம் எந்தக் காரணத்துக்காக ஆந்திராவில் சூப்பர் ஹிட்டானது என்று எனக்குப் புரியவில்லை.  

இந்தப் படம் சத்தியமாக, சத்யம், பி.வி.ஆர்., மாயாஜால், ஐநாக்ஸ் என்ற இடங்களுக்கு நுனிநாக்கு ஆங்கிலம் பேசி, பில்லியனில் இடம் பிடித்து வரும் நங்கைகளுக்கும், அவர் தம் நண்பருக்கு மட்டுமே ஓடும் படமாக இருக்கிறது. பி.அண்ட் சி.யில் எப்படி ஓடும் என்று தெரியவில்லை.

படத்தின் முக்கால்வாசி வசனங்கள் ஆங்கிலத்தில்தான் உள்ளன. அணிகின்ற ஆடைகள் முதற்கொண்டு, காட்சியமைப்புகள் வரையிலும் ஹை கிளாஸ் சொசைட்டிக்காகவே இருப்பது படத்தின் மிகப் பெரிய குறை.

இவ்வளவு தூரம் படத்தை அக்கறையாக பிரேம் டூ பிரேம் செதுக்கியிருக்கும் இயக்குநர் ஒரு காட்சியாவது மனதில் நிற்பதைப் போல் எடுக்க வேண்டும் என்று நினைக்காதது ஏன் என்று தெரியவில்லை.. இறுதிக் காட்சியிலாவது ஏதாவது செய்வார்கள் என்று எதிர்பார்த்தால் ஏதோ ஒரு பாடலுடன் மங்களம் பாடி முடித்துவிட்டார்கள்.

'ஒரு தலை ராகம்' படத்தில் கடைசி நாள் வகுப்பறை காட்சி இன்னமும் என் மனக்கண்ணில் அப்படியே நிற்கிறது. அந்தக் காட்சியில் சந்திரசேகர் சொல்லும் அந்த 'புறா, ரத்தம்' கதை இன்னமும் என் நெஞ்சில் ஈரத்தைச் சொட்டுகிறது.. மறக்க முடியாத படம் என்று சொல்ல வைக்க வேண்டும் என்று நினைத்தவர்கள், நகைச்சுவையே போதும் என்று நினைத்து பாதியிலேயே விட்டுவிட்டார்களோ தெரியவில்லை..

குடும்பத்துடன் பார்க்கலாம்.. எந்தக் குத்துப் பாட்டு டான்ஸோ, தலைவலி தரக்கூடிய அடிதடிகளோ இல்லை என்றாலும் இந்தப் படத்தின் கதை என்ன என்பதை, வீட்டுக்கு வந்தும் யோசிக்க வேண்டியிருக்கிறது.

இதற்கு முன் மிகச் சமீபமாக கல்லூரி என்னும் திரைப்படம் இதே போன்ற கதையம்சத்துடன்தான் வந்தது. ஆனால் அதில் நமது மண்ணின் மணமும், மனமும் கொஞ்சம் கலந்திருந்தது.. நம் பக்கத்து வீடு, என் எதிர்த்த வீட்டுக் கதைகளும், நாம் பார்த்திருந்த, கேட்டிருந்த உரையாடல்களும், நாம் சந்தித்த, எதிர்த்த, பழகிய கதாபாத்திரங்களும் கண் முன்னே உலாவியிருந்தனர்.  அதில் கால்வாசி அளவுகூட இந்தப் படத்தில் நமக்கானதாக இல்லாமல் அந்நியப்பட்டு போயிருப்பது ரொம்பவே வருத்தமான விஷயம்.

என்னுடைய இந்த வருத்தத்திற்கான காரணம், இத்திரைப்படம் இந்தியாவின் மிக ஆச்சரிய கலைஞனான பிரகாஷ்ராஜின் சொந்தத் தயாரிப்பு. இரவு, பகல் பாராமல் தான் கஷ்டப்பட்டு நடித்து சம்பாதித்திருக்கும் பணத்தில் தனது விருப்பத்திற்காக அவர் எடுத்திருக்கும் படம் இது. இதற்கு முன் அவர் எடுத்திருந்த படங்கள் மூன்றுமே எனக்கு மிகவும் பிடித்தமான படங்கள்.. அவற்றில் கதை இருந்தது.. தமிழகத்தின் வாசனையும் இருந்தது.. மக்களும் இருந்தார்கள்..

இத்திரைப்படம் மட்டுமே புதிய, இளமையான மேட்டுக்குடி வர்க்கத்தினரை அடையாளம் காட்டுவதைப் போலவும், இவர்கள் பயில்கின்ற கல்லூரிகளின் தன்மையையும், இயல்பையும் காட்டுவதைப் போலவும் வெளியே போய்விட்டது.

தமிழ் மீடியத்தில் படித்துவிட்டு மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படிக்க வரும் பால்பாண்டி என்ற மாணவரை ராகிங் செய்யும்போது “உனக்கெல்லாம் எதுக்குடா இந்த காலேஜ்..? இந்த என்ஜீனியரிங் படிப்பு?” என்று கிண்டல் செய்வதெல்லாம் நிச்சயமாக பகடியல்ல.. நகைச்சுவையல்ல.. கொடுமை.. 

இந்த பால்பாண்டியை வைத்து அவருக்கு தைரியம் கொடுத்து மற்றவர்களின் ஒத்துழைப்பால் அவன் நன்றாக ஆங்கிலம் பேசி நல்ல வேலையில் அமர்வதாக வி.சேகர் டைப் கதையோடு கொண்டு போய் சேர்த்திருந்தாலும் படத்தில் அழுத்தமான காட்சிகளாக அது இல்லாததால் பத்தோடு பதினொன்றாகவிட்டது.

பாடல்கள் ஒலித்தன.. ஒலித்தன.. ஒலித்துக் கொண்டேயிருந்தன.. இடையில் இந்திய தேசியத்திற்கு  ஒரு ஜே-யும் போட்டிருக்கிறார்கள்.. கல்லூரி மாணவர்களிடத்தில் தேசபக்தியை புகுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன்.

படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரே விஷயம். ஒளிப்பதிவு.. கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம்போல அவ்வளவு அழகு. அடுத்தது காஸ்ட்யூம்ஸ் அண்ட் செட் பிராப்பர்ட்டீஸ்.. ஒவ்வொரு பிரேமையும் கலை நுணுக்கத்தோடு பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். அவரே பிரபலமான ஒளிப்பதிவாளர் என்பதால் ரொம்பவே மெனக்கெட்டு உழைத்திருக்கிறார் போலும்.. வாழ்த்துக்கள் குகன் ஸார்.

'இனிது இனிது காதல் இனிது' என்பவர்கள் தாராளமாக இந்தப் படத்திற்கு தங்களது 'காதல்களோடு' செல்லலாம்.


Read more: http://www.truetamilan.com/2010/08/blog-post_21.html#ixzz324ZKGKDE

No comments: