அன்பாலயம்! இளம் தென்றல் 2014. - ஞானா அசோகன்.
கடந்த சித்திரைத் திங்கள் 5ஆம் திகதி சனிக்கிழமையின் பொன்மாலை நேரத்தில் இளம்தென்றல் காற்று இதமாக வீசிக்கொண்டிருந்தது. மணி 5:45ஜ நெருங்கிக்கொண்டிருந்தது. “கெதியாய்ப் போங்கோவன்” என்ற வழமையான சண்டையின் மத்தியில் எம் மோட்டார் வண்டி Blacktown ஜ சென்றடைய அவசரமாய் நிறுத்தி ஓட்டமும் நடையுமாகBowman மண்டபத்தை’ அடைந்தோம். காஞ்சிபுரத்துப் பட்டுகள் கண்களைப் பறிக்க நின்றிருந்த நண்பிகள் கூட்டத்தோடு வழமையான நலம் விசாரிப்புகளோடு நுழைந்து அமர்ந்தோம். கூட்டம் ஓரளவு சுமாராகத்தான் இருந்தது. எம்மவர் ஆறு மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்ச்சி என்றாலும் வந்து சேர எப்படியும் 6:30   என்றாலும் ஆகும் என நினைத்து கையில் இருந்த அன்பாலயம் மடலை மேலோட்டமாக வாசிக்க ஆரம்பித்தேன். சரியாக 6 மணிக்கு Eastwood தமிழ் பாடசாலை மாணவர்கள் தமிழ்மொழி வாழ்த்துப்பாட மேடைக்கு வந்தார்கள். பாலர் முதல் பெரியவர் வரை தமிழரின் பாரம்பரிய உடையில் தம் இனிய குரலால் பாடி முடிக்க சுத்தமான தமிழ் உச்சரிப்பில் ஒரு மாணவன் வாய்ப்புக்கு நன்றி கூறிச்செல்ல  மூடியிருந்த திரை இனிய கானமழை பொழிய விலகியது ஓர் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
என்ன ஆச்சரியம்! மேடையில் இருந்த அத்தனை பேரும் எம்மவர்கள். பாவலன் விக்ரமன் தன் கம்பீரக் குரலால் “மடை திறந்து” என்ற பாடலைப் பாடி சபையோரை அசத்தியது அபாரம். முதல் பாடலிலேயே நான் வந்த வேலையை மறந்து வாய் பிளந்து நிற்க, மாயி ராகவன்  சரசர சரசர சார காற்று | எனும் பாடலை தன் இனிய குரலால் பாடினார். அபிசாயினி பத்மஸ்ரீ கேஷிக்கா அமிர்தலிங்கம் கண்மணி ஜெகேந்திரன், அபினயினி குகஸ்ரீ,  ஜனனி மயூரன் ஆகிய இளம் குயில்களுக்கு அறிமுகம் தேவையில்லை என்பது அரங்கம் அமர்ந்திருந்தவர்களின் கைதட்டல்களிலும், காதைப்பிளந்த விசில் ஒலிகளிலும் தெரிந்தது. மற்றும் Dr கௌரிபாலன் நடராஜா, சுதாகர் சிவபாலன், திவியேஷன்; அமிர்தலிங்கம்,  சிவதாஸ் ஆனந்தசிங்கம்,  சேயோன் ராகவன் ஆகிய ஆண்பாடகர்கள் சேர்ந்து பாடி சபையோரை இசை வெள்ளத்தில் ஆழ்த்தியது அபாரம். மேலும் இசைக்கருவிகளுடன் இருந்தவர்களின் அசாத்தியத் திறமை அன்று வந்தவர்களுக்குத் தௌளெனப் புரிந்திருக்கும்.

செல்வன் டேவிட் தன் கட்டுப்பாட்டில் அரங்கேற்றிய அன்றைய இசை விருந்து, எம்மவர்களின் அபாரத் திறமையை உலகிற்கு உணர்த்தியது. வெங்கடேஷ் சிறீதரன்,  வருணண் பாலராஜு,  ராகுலன் ஜனநாயகம்,  ரமணன் மணிவண்ணன்,  சேயோன் ராகவன், பிறணவன் ஜெயராஜா,  அபினேஷ் டேவிட்,  சஹானா ஜெரோம்,  ஜனனி மய10ரன் ஆகியோர் பல்வேறு இசைக்கருவிகளுடன் அன்று சங்கமித்தார்கள் என்றே கூற வேண்டும். இவர்கள் அனைவருமே மாணவர்கள். தம் கல்விச் சுமைகளின் மத்தியில் அத்தனை பாடல்களையும் பயின்று அரங்கேற்றுவது அத்தனை சுலபம் அல்ல. இவர்களை தமது பல்வேறு வேலைகளின் மத்தியிலும் கூட்டித்திரியும் பெற்றோருக்கு கண்டிப்பாக ஒரு சபாஷ்; கூறித்தான் ஆகவேண்டும். அழகிய பாடல் தெரிவுகள், இடையிடையே வந்த கோரஸ் அத்தனையும் அருமை! அருமை!. இசைஞானி இங்கிருந்தால் நிச்சயம் திரு செல்வன் டேவிட் ஐ வாயாரப் பாராட்டியிருப்பார்,  அவ்வளவு அழகாக அத்தனை பாடல்களின் கோரஸ் ஐயும் பயிற்றுவித்திருந்தார்.


வெளியூர் கலைஞர்களின் அருமையான இசைநிகழ்வுகளுக்கு ஈடாக அன்றைய நிகழ்வு இருந்தது என்பது எம்மவர்களின் திறமைக்குக் கிடைத்த பரிசு. தம் கல்விச்சாலையில் வீறு நடை போடும் இந்த இளம் சிங்கங்கள்,  தாம் இளைப்பாறும் நேரத்தில் களைப்பாறாமல் காப்பாற்றிய கலைகள் அன்று கட்டாற்று வெள்ளம் போல கரைபுரண்டோடி சபையோரை கள்வெறியூட்டியது கண்கொள்ளாக் காட்சி தான். பழைய மெட்டுக்களைப் புதிய மொட்டுகள் பாடியது குறிப்பாக,  ‘பாட்டும் நானே| என்ற பாடலை சேயோன் பாடிக்கொண்டிருக்கும் போது குறுக்கே புகுந்தவரின் இடையூறையும் தன் சிரிப்பால் சமாளித்து அருமையாகப் பாடியது அற்புதம். “நான் புடிக்கும் மாப்பிள்ள| எனும் பாடலும் அருமை. பின்னணி இசை அப்படியே ஈ அடிச்சான்| போன்று அருமையாக இருந்ததில் தழிழனுக்கே உரிய சந்தேகத்தில் பாவலனிடம் கேட்டேன். கரியோக்கி (karaoke) ஏதேனும் போட்டீர்களா|? என்று. அவர் அய்யோ இல்லீங்க,  அத்தனையும் அவங்களே வாசிச்சாங்க| என்றார். இந்த இடத்தில் அருமையாக ஒலிஒளி|அமைத்துத் தந்த திரு பத்மஸ்ரீ அவர்களைப் பாராட்டுவது தகும் எனக் கருதுகின்றேன்.


இடைவேளையுடன் பாடல் மற்றும் நடனப் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகி, கண்டுகளித்த இசைவெள்ளத்திற்கு இணையாக விறுவிறுப்பாக நடைபெற்றது. குறிப்பாகப் பாடல் போட்டியில் பங்குபற்றிய சிறுவர் சுற்றில் பாடிய மூவருமே அருமை. யாரைத் தெரிவது என்று திணறினாலும் விடைகொடு எங்கள்| எனும் பாடலைப் பாடியவரின் நடை,  உடை,  பாவனை ஆகா அற்புதம். மீன் குஞ்சுகளுக்கு நீந்தக் கற்றுக்கொடுக்கத் தேவையில்லை என்பது அன்று புரிந்தது. நடனப் போட்டிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றன. நிற்க,  இத்தனை கடின உழைப்பிற்குப் பின்னால் பல நல்ல இதயங்கள் இராப் பகலாக தமது பொன்னான நேரத்தையும் உழைப்பையும் பணத்தையும் செலவழித்து சாதித்தது என்ன? என்று கேட்டால் கைகளில் தரப்பட்ட அன்பாலயம்| 2014 மடல் தெளிவாக  விடையளிக்கும். தாயகத்திலே ரத்தத் தாண்டவத்தின் பக்க விளைவுகள் , நிரந்தரப் பாதிப்புகள் ஏராளம்;. எம்மவர் படும் துயரம் சொல்ல முடியாதது. குறிப்பாக மனநிலை பாதிக்கப்பட்டு வருந்தும் சமூகம் ஏராளம் . அங்குள்ள “காவேரிகலாமன்றம்| ஆற்றி வரும் அரும்பணிக்கு அன்பாலயம் நீட்டும் அன்புக்கரம் ஆணிவேர் போன்றது. வருடாவருடம் நடாத்தி வரும் இந்த இன்னிசை நிகழ்ச்சி மூலம் திரட்டப்படும் இலாபத்தில் அன்பாலயம் ஆற்றிவரும் பெரும் பணி தாயகத்தின் ஓர் கட்டாய தேவை. அத்தோடு நம் உள்ளுர் கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொணரும் ஒரு களமாகவும் அமைந்திருப்பது இரட்டை அனுகூலம். வெளிய10ரிலிருந்து கலைஞர்களை வருவித்து ஏராளமான பணத்தைச் செலவளித்து அரங்கேறும் சிட்னி இசை நிகழ்வுகளின் தரத்திற்குச் சற்றும் குறையாமல் அன்பாலயம்| தந்த அந்த அருமையான இன்னிசை நிகழ்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் மனித நேயம் சார்பில் எம் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறேன். என்னை அன்போடு பல முறை அழைத்த நண்பர் நிச்சயம் (கெட்ட வார்த்தைகளால்) திட்டி இருப்பார். இத்தனை நீண்ட கால தாமதத்திற்குப் பின் இதனை எழுதுவதற்கு என் உடல் நலமின்மையும் நான் வெளியூர் சென்றதும் தான் காரணம். அதற்காக உங்களிடம் மன்னிப்புக் கோரி நின்றாலும்BETTER   LATE THAN  NEVER”. மானிடராய் அரிய பிறப்பெடுத்த நாம் மனித மாண்புடன் வாழ்வது என்றால்,  உதவி தேவைப்படுவோருக்கு தக்க சமயத்தில் கைகொடுப்பதுதான். கருணை உள்ளம் படைத்தோர் பலரின் அயராத உழைப்பில் இயங்கி வரும் அன்பாலயம்| அன்பிற்கோர் ஆலயம்|.
வாழ்க!,  வளர்க அவர்கள் பணி!!!

சிட்னியிலிருந்து ஞானா அசோகன்.

No comments: