மோடியின் வெற்றிக்கு பின்னால்...

.

காங்கிரசை வீழ்த்தி, தனிப்பெரும்பான்மையோடு மாபெரும் வெற்றியை வசமாக்கியிருக்கிறார் மோடி.தேசத்தின் எதிர்காலத்தை நரேந்திர மோடியிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் மக்கள். மோடியின் மாபெரும் வெற்றிக்கு பின், பக்கபலமாக, நம்பிக்கைக்கு உரியவர்கள், நலன்விரும்பிகள் பலர் உள்ளனர். அவர்களில் முதல் பத்து நபர்கள் பற்றிய சிறுகுறிப்பு...

'மாயாஜால' வித்தகர்கள் கிரண்ஜோஷி
மோடியின் 'ஹ டெக்' பிரசாரத்தின் 'ஹைலைட்' டான, 3டி பிரசாரத்தின் பின்புலத்தில், தேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் குழு இயங்கியது. கிரண்ஜோஷி தலைமையில் ராஜேஸ்ஜெயின், மகேஷ் ஆகியோரின் கைங்கரியம் இருந்தது. ஜோஷி குழுவினர், டில்லியில் தங்கியிருந்து, மோடியின் புதிய திட்டங்களுக்கு உதவுவார்கள் என்று தெரிகிறது.

உற்ற ஆலோசகர் சதாய்வாலே
குஜராத் நிறுவனம் ஒன்றில் துணைத்தலைவராக பணியாற்றும் சதாய்வாலே, ஆர்.எஸ்.எஸ்., குடும்பத்திலிருந்து வந்தவர். பல்வேறு பிரச்னைகளில் மோடிக்கு தக்க ஆலோசனை சொல்லும் உற்ற நண்பர். டில்லியிலில் தங்கியிருந்து, உற்ற ஆலோசகராக தொடர வேண்டும் என்பது மோடியின் விருப்பமாம்.

மோடியின் கண்கள் பரத்லால்
மோடியின் கண்களாகவும், காதுகளாகவும் செயல்படுபவர் என அறியப்படும் பரத்லால், நான்கு ஆண்டுகளாக டில்லியில் தங்கியிருந்து மோடிக்கு டில்லி அரசியல் தொடர்புகளை பலப்படுத்தியவர். பிரதமர் அலுவலக செயல்பாடுகளில் இவர் முக்கிய பங்கு வகிப்பார் என கூறப்படுகிறது.

கைலாசநாதன் தெற்கில் உறுதுணை
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான கைலாசநாதன், குஜராத் அரசின் முதன்மை செயலாளர். மோடியின் பிரசார திட்டங்களை வகுப்பதிலும், பா.ஜ., கூட்டணி அமைய தென்மாநிலங்களில் பல்வேறு கட்சிகளின் இணைப்பு பாலமாக இருந்தவர். தொடர்ந்து, குஜராத்திலேயே தங்கியிருந்து புதிய அரசுக்கு வழிகாட்டுவார் என தெரிகிறது.

வலதுகரம் அமித் ஷா
மோடியின் வலதுகரமாக வர்ணிக்கப்படும் இவர், பா.ஜ.,வின் தேர்தல் வெற்றியிலும் பக்கபலமாக இருந்துள்ளார். உ.பி., மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் அமித் ஷா. கிராமம் கிராமமாக சுற்றிச்சுழன்ற அவர், பா.ஜ., அலை அங்கு உருவாக காரணமாக இருந்தார். மோடியை வாரணாசி தொகுதியில் நிற்க வைத்து, அபார வெற்றிக்கும் உறுணையாக இருந்துள்ளார். அமித்ஷா வின் உழைப்பால், கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி உ.பி., யில் அமோக வெற்றி பெற்றுள்ளது பா.ஜ., மோடி அரசில் நேரடியாக களம் இறங்காமல், வழக்கம்போல, பின்புலமாக இருந்து செயலாற்றவே அமித் ஷா விரும்புவதாக தெரிகிறது. கங்கை நதி தூய்மை படுத்தும் திட்டம், உள்ளிட்ட முக்கிய திட்டங்களை செயல்படுத்துவதில் முக்கிய பங்காற்றி, மோடியின் ஆட்சிக்கு உறுதுணையாக இருப்பார் என்றே கட்சி வட்டாரங்கள் கருதுகின்றன.

சட்ட ஆலோசகர் கிரிஸ் முர்மு
குஜராத் அரசின் முதன்மை செயலாளர் கிரிஸ் முர்மு; 1985 ல் ஐ.ஏ.எஸ்., தேறியவர்; தேர்ந்த சட்டநிபுணர். குஜராத் கலவரம், லோக் ஆயுக்தா என முக்கிய பிரச்னைகளில், மோடிக்கு உரிய சட்ட ஆலோசனை வழங்கி உள்ளார். பிரதமர் அலுவலகத்தில் முக்கிய பங்காற்றுவார் என தெரிகிறது.

பிரசாந்த் கிஷோர் பிராண்ட் பில்டர்
மோடியின் பிரசார வியூகங்களை வகுப்பதில் முக்கிய பங்காற்றிய 30 வயது இளைஞர் பிரசாந்த் கிஷோர். அமெரிக்காவில் கல்வி பயின்ற இவர், மோடியின் தேர்தல் வியூகம், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசார சாயலில் அமையவும், எங்கு நோக்கிலும் 'மோடி பிராண்ட்' அமைய காரணமாக இருந்தவர். பிரதமர் அலுவலக செயல்பாடுகளில் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரவிந்த் சர்மா திட்ட ஆலோசகர்
குஜராத் மாநிலத்தின் அதிவேக வளர்ச்சிக்கு காரணமான, மோடியின் புதுமையான திட்டங்களுக்கு அடித்தளம் இட்டவர் என கூறப்படும் அரவிந்த் சர்மா. 1988 பேட்ச் ஐ.ஏ.எஸ்., அதிகாரி. மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து குஜராத் மக்களின் பிரச்னைகள் உடனுக்குடன் தீர வழிகாட்டியவர். பிரதமர் அலுவல செயல்பாடுகளில் இவரும் இணையக்கூடும்.

பண பலம் சுரேந்திர படேல்
பா.ஜ., குஜராத் மாநில பொருளாளர் சுரேந்திர படேல். தொழிலதிபரான இவர் மோடியின் நிதி தேவைகளுக்கு முழு ஆதாரம். தொடர்ந்து குஜராத்திலேயே தங்கியிருந்து, கட்சியின் தேசிய அளவிலான கணக்கு வழக்குகளை கவனிப்பார் என்கிறார்கள்.

பக்க பலம் விஜய் நெஹ்ரா
குஜராத் முதல்வர் அலுவலக துணை செயலரான விஜய் நெஹ்ரா மோடி டீமில் இளையவர்; 2001 ல் ஐ.ஏ.எஸ்., தேரியவர். மோடி வெற்றிகரமான முதல்வராக திகழ உறுதுணையாக இருக்கும் இவர், குஜராத்தில் தங்கியிருந்து, மோடிக்கு தொடர்ந்து உதவுவார் என தெரிகிறது.
நன்றி dinamalar 

No comments: