முள்ளிவாய்க்கால் தீபம் - தீபச்செல்வன்-

.
முள்ளிவாய்க்கால் தீபம் - தீபச்செல்வன்-
குருதி ஒழுகும் தினங்களால் நிரப்பப்பட்ட வரலாற்றின்
மறக்க முடியாத் தினங்களில்
அடக்கப்பட்ட நினைவிலிருந்து
ஒரு பறவை சிறகுலர்த்திப் பறக்கிறது
உயிர் அழிக்கும் ஞானத்தால்
மயானம் ஆக்கப்பட்ட தேசத்தில்
பிரதிஷ்டை செய்யப்பட்ட புத்தருக்காய்
குருதி உறைந்த கடலின் மேல்
வண்ணங்கள் பூசப்பட்ட
எலும்புக் கூடுகளுக்குள் ஒளிர்கின்றன தீபங்கள் 
எரிக்க முடியாத நினைவுகள்
குரலற்ற பாடல்களாய் எழ
தீபங்களுக்கு அலைகின்றன ஆன்மாக்கள்.
கொல்லப்பட்டவர்கள் மறைக்கப்பட்ட
நிலமெங்கும் குழந்தையின் புதைகுழியை தேடி 
அலைகிறாள் தாயொருத்தி
தாயிற்கு தீபமொன்றை ஏற்ற முடியாக் 
குழந்தையின் இருதயம் 
தீப்பிடித்து எரிகிறது அனற்காடாய்
சிதைக்கப்பட்ட சமாதிகளின்மீது நடுப்பட்ட
இருள் மண்டிய அரச மரங்களில் வந்தமர்கிறது 
காணாமல்போன துணையை தேடும்
ஆட்காட்டிக்குருவி. 
அழிக்கப்பட்ட முகங்கள்
நட்சத்திரங்களில் தெரிய
நந்திக் கடலில் விழுந்து மிதக்கிறது 
எரிந்து கொண்டிருக்கும் நிலவு.
சுற்றிவளைக்கப்பட்ட முள்ளிவாய்க்காலில்
தீபங்களை சுமக்கின்றன மின்மினிப்பூச்சிகள்.
தீபச்செல்வன்
மே 2014

No comments: