.
நெல்லோ, புல்லோ... பயிர் நன்றாக வளர ஆரோக்கியமான இடைவெளி அவசியம். பயிர் சுதந்திரமாக, ஆரோக்கியமாக வளர்ந்து செழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாற்றுகளைப் பிடுங்கி, போதுமான இடைவெளி விட்டு நடுகிறார்கள். பயிர்களின் வளர்ச்சிக்குத் தேவைப்படுகிற இந்த இடைவெளி, உறவுகளின் வளர்ச்சிக்கும் முக்கியம். குறிப்பாக தம்பதியருக்கிடையில்... நமது சமூக அமைப்பிலோ பெரும்பாலான கணவன்-மனைவிக்கிடையே அது சாத்தியப்படுவதே இல்லை.
மனைவி படித்தவராக இருப்பார். திறமைசாலியாக இருப்பார். நல்ல வேலையில், கை நிறைய சம்பளத்தில், சமூகத்தில் கவனிக்கத்தக்க இடத்தில் இருப்பார். ‘அதெல்லாம் எனக்குத் தேவையில்லை. கல்யாணத்துக்குப் பிறகு வேலைக்குப் போகக் கூடாது. என்னையும் குடும்பத்தையும் கவனிச்சுக்கிட்டா போதும்’ என முடக்கிப் போடும் கணவர்கள் எத்தனை எத்தனை பேர்?
திருமணத்துக்கு முன்பான மனைவியின் திறமைகள் எதுவும், திருமணத்துக்குப் பிறகு தொடர்வதில் பல ஆண்களுக்கும் ஏனோ உடன்பாடிருப்பதில்லை. தப்பித் தவறி மனைவியை வேலைக்கு அனுப்புகிறவர்களும், குழந்தை பிறந்ததும் மாறிப் போகிறார்கள். ‘நீ வேலைக்குப் போனா, குழந்தையை யார் பார்த்துப்பா?’ எனக் கேட்கிற கணவர்கள் யாரும், குழந்தை வளர்ப்பில் தனக்கும் பங்குண்டு என்பதை ஏனோ உணர்வதில்லை.
‘கல்யாணத்துக்குப் பிறகு உங்கம்மா, அக்கா, தங்கச்சிங்கன்னு உறவு கொண்டாடற வேலையெல்லாம் வேண்டாம்’ எனக் கணவரை அடக்கி ஆளும் மனைவிகளுக்கும் இங்கே பஞ்சமில்லை. இந்த அணுகுமுறை ஆரோக்கியமான தாம்பத்யத்தின் அழகையும் அன்யோன்யத்தையும் சிறிது சிறிதாகக் கெடுக்கும்... மன விரிசல் பெரிதாகி, ஒரு கட்டத்தில் பிரிவு மட்டுமே தீர்வாகி நிற்கும். கணவன்-மனைவி என்கிற உறவுக்கிடையில் பரஸ்பர இடைவெளியை அனுமதிப்பதுதான் இதற்கு ஒரே வழி!
இடைவெளி அனுமதிக்கப்படுகிற உறவுகளில் இடையூறுகள் வருவதில்லை. அன்பும் அன்யோன்யமும் வளர, அது விரிவடைய, ஆரோக்கியமாக நிலைத்திருக்க அந்த இடைவெளி மிக மிக அவசியம். நம் எல்லோருக்கும் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத ஏதோ சில அந்தரங்கங்கள், ரகசியங்கள் இருக்கும். கணவரிடமோ, மனைவியிடமோ பகிர்ந்துகொள்ள விரும்பாத அந்த விஷயங்களை நமக்கு மிகப் பிடித்த ஒரு தோழி அல்லது நண்பரிடம் பகிர்ந்து கொள்வோம். அதன் பின்னணி என்ன? அப்படி நாம் பகிர்ந்து கொள்கிற அந்த நபர், அந்த விஷயங்களை வேறு யாரிடமும் சொல்ல மாட்டார் என்கிற பாதுகாப்பு உணர்வும் நம்பிக்கையும்தானே காரணங்கள்? அந்த நம்பிக்கையும் பாதுகாப்பு உணர்வும் வாழ்க்கைத் துணையிடமும் இருக்க வேண்டும்.
தன்னைச் சார்ந்தவர்களிடம் அதீத அன்பு காட்டுவதாக நினைத்துக்கொண்டு நாம் எல்லோரும் செய்கிற தவறு, அவர்களை அதிகமாகக் கட்டுப்படுத்துவது. வாழ்க்கைத் துணையிடம் மட்டுமல்ல... நமது குழந்தைகள், நம்மிடம் வேலை பார்ப்பவர்கள் என எல்லோரையும் இப்படித்தான் நடத்துகிறோம். மனைவி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும், கணவனுக்கான இலக்கணங்கள் இவைதான் என்றும் நம் சமுதாயம் சில எழுதப்படாத விதிகளை உருவாக்கியிருக்கிறது.
அதுதான் பாதுகாப்பு என்று தவறாக நினைத்துக் கொண்டு வாழ நிர்ப்பந்திக்கப்படுகிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கணவனுக்கோ, மனைவிக்கோ தன் மனதிலிருப்பதை துணையிடம் பகிர்ந்து கொள்வது சாத்தியமில்லாமல் போகிறது. சொன்னால் என்னாகுமோ... துணைவர் அதை எப்படி எடுத்துக் கொள்வாரோ... நாளைக்கே அதைக் குத்திக் காட்டிக் காயப்படுத்தினால் என்ன செய்வது போன்ற தயக்கங்கள் அதிகரிக்கின்றன. கணவன்- மனைவிக்கிடையிலான அந்த வெளி எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டியதும் அவசியம். ஆனால், அந்த இடைவெளி முழுக்க தேவையற்ற குப்பைகளால் நிரப்புகிறோம். குப்பைகள் என இங்கே குறிப்பிடுவது, தேவையற்ற எண்ணங்களை...
அதாவது, நாம் நம்மை நமது எண்ணங்களை வைத்தே எடை போடுகிறோம். மற்றவர்களை மட்டும் அவர்களது நடத்தையை வைத்து எடை போடுகிறோம். அதனால்தான் உலகிலேயே நம்மைத் தவிர மற்ற எல்லோரும் கெட்டவர்கள் என நினைக்கிறோம். கணவரைப் பற்றி அல்லது மனைவியைப் பற்றி, மற்ற உறவுகளைப் பற்றிய கெட்ட எண்ணங்களைக் குப்பையாகச் சேகரிக்கிறோம். எல்லோரையும் எண்ணங்களை வைத்து எடை போடக் கற்றுக் கொண்டால், இந்தக் குப்பைகள் சேராது. கணவன் - மனைவிக்கிடையே இது மிக முக்கியம். மனைவியைப் பற்றி கணவனும், கணவனைப் பற்றி மனைவியும் தவறான எண்ணங்களைத் தேக்கிக் கொண்டே போனால், இருவருக்குமிடையில் குப்பைகள் தேங்கி, இடைவெளி என்பதே இல்லாமல் போய் விடும்.
நமது எண்ணங்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.
நம்மைப் பற்றி நமக்கு மட்டுமே தெரிந்தது. மற்றவருக்குத் தெரியாதது.
நம்மைப் பற்றி நமக்கும் தெரிந்தது. மற்றவர்க்கும் தெரிந்தது.
நம்மைப் பற்றி நமக்கே தெரியாதது. ஆனால், மற்றவர்க்குத் தெரிந்தது.
நம்மைப் பற்றி நமக்கும் தெரியாதது. மற்றவர்க்கும் தெரியாதது.
இவற்றில் 2வது, 3வது பற்றிப் பெரிதாகக் கவலைப்பட வேண்டாம். 4வது ஆழ்மன சிந்தனை தொடர்பானது. அதுவும் தேவையில்லை. முதல் விஷயம்தான் முக்கியம். மற்றவர்க்குத் தெரியாத நமது உண்மைகளைப் பகிர்ந்து கொள்ள நமக்கு நம்பகமான ஒரு துணை அவசியம். நடிகைகள், நடிகர்கள், பிற துறை பிரபலங்கள் என சிலர், வெளி உலகுக்குத் தெரியாத சில விஷயங்களை, தமக்கு நெருக்கமான சிலரிடம் மட்டுமே பகிர்ந்து கொள்வார்கள்.
அப்படி அவர்கள் பகிர்ந்து கொள்கிற தகவல்கள் வெளியே போகாது என்கிற நம்பிக்கையில்... இருட்டான அந்தப் பகுதி, சம்பந்தப்பட்ட அந்த இருவருக்கும் இடையே பாதுகாப்பாக இருக்கும்போது, அவர்களிடையே நெருக்கமும் அன்பும் கூடும். அதே விதிதான் தம்பதிக்கிடையிலும் அவசியமாகிறது. இருவருக்கும் இடையில் அவ்வப்போது வருகிற பிரச்னைகளை உடனுக்குடன் பேசித் தீர்த்து சரி செய்து கொள்வதன் மூலம் இடைவெளியில் குப்பைகள் சேராமல் தவிர்க்கலாம்.
உங்கள் துணை எப்போதும் சரியாகத்தான் இருக்க வேண்டும் என நினைக்காதீர்கள். அப்படி நினைக்கத் தொடங்கினாலே, ஒவ்வொரு நிமிடமும், துணையின் ஒவ்வொரு செயலையும் கூர்ந்து கவனித்து, விமர்சனம் செய்யவும், குறை சொல்லவும், ஜட்ஜ்மென்ட் வழங்கவும் ஆரம்பித்து விடுவீர்கள். எப்படியும் நம் துணையை மாற்றி விடலாம் என்கிற நம்பிக்கையையும் ஓரங்கட்டுங்கள். அப்படி நினைப்பதும் உங்கள் உறவைப் பாதிக்கும்.
குறையில்லாத மனிதர் என யாருமே இல்லை. நாம் நேசிப்பவரை அவரது குறைகளுடன் ஏற்றுக் கொள்ளப் பழகுவதுதான் உறவுக்கு அழகு. உங்கள் இருவருக்குள்ளும் என்ன நடந்தாலும், அதை மறைக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். நடந்தது நல்லதாக இருப்பின் மகிழ்ச்சி.
காது கொடுங்கள்!
உங்கள் துணை உங்களிடம் ஏதோ ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள வரும்போது, நீங்கள் எந்த வேலையில் இருந்தாலும், (உதாரணத்துக்கு பேப்பர் படிப்பது, டி.வி பார்ப்பது, சமைப்பது...) உடனே அதைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு, அவர் சொல்வதைக் காது கொடுத்துக் கேளுங்கள்.
‘இதெல்லாம் ஒரு விஷயமா... இதைப் போய் ஏன் பெரிசுபடுத்தணும்’ என்று உங்கள் துணையின் பிரச்னையின் தீவிரத்தை அலட்சியம் செய்யாதீர்கள்.
‘அதுக்குத்தான் அப்பவே சொன்னேன்... எல்லாத்துக்கும் நீதான் காரணம்... நான் சொன்னபடி கேட்டிருக்கணும்’ என துணையின் தலையில் குட்டி, தீர்வு சொல்லாதீர்கள்.
துணையின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுங்கள். ‘எங்கம்மா சொன்னதால உனக்கு வருத்தமாயிடுச்சா... எங்கப்பா திட்டினதால மனசு கஷ்டப்பட்டியா...’ என அக்கறையாக விசாரியுங்கள்.
பிரச்னையை உங்களிடம் பகிர்ந்து கொள்கிற உங்கள் துணையிடம், அது தொடர்பான நேர்மையான கேள்விகளை, அக்கறையாகக் கேளுங்கள். அதைத் தவிர்த்து, கிண்டலாக, கேலியாக விசாரிக்காதீர்கள்.
உங்கள் துணையின் பிரச்னை, உங்களுக்கு நடந்திருந்தால் எப்படி உணர்வீர்களோ அதே மனநிலையுடன் அன்பாக அணுகுங்கள்.
‘இப்ப என்னாயிடுச்சு... நான் இருக்கேன்ல... எதுவானாலும் பார்த்துக்கலாம்’ என முழு மனதுடன் ஆதரவு கொடுங்கள். ஏதேனும் பிரச்னை என்றால், உடனே துணையைக் குட்ட ஆரம்பிக்காதீர்கள். மனதுக்கு ஒவ்வாத ஒரு நிகழ்வை, மனதுக்கு உகந்த, பாசிட்டிவான, மகிழ்ச்சியான தருணமாக, அனுபவமாக எப்படி மாற்றுவது என்பதை இருவரும் ஒரு விளையாட்டாகவே கடைப்பிடிக்கலாம். உதாரணத்துக்கு இருவரும் படம் பார்க்க முடிவெடுத்து தியேட்டருக்கு போகிறீர்கள். டிக்கெட் காலி. அதற்கு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்ளாமல், அந்த நேரத்தை நீங்கள் நீண்ட காலமாகத் திட்டமிட்ட ஒரு இடத்துக்குப் போகச் செலவிடலாம்.
அது உங்கள் இருவருக்கும் விருப்பமான ஒரு ரெஸ்டாரென்ட்டாக இருக்கலாம். காதலித்த காலத்தில் அதிக நேரத்தைக் கழித்த அதே கடற்கரையாக இருக்கலாம். ஒருவேளை டிக்கெட் கிடைத்து படம் பார்த்திருந்தால்கூட உங்களுக்கு அப்படியொரு அனுபவம் கிடைக்காமல் போயிருக்கலாம். வாழ்க்கையில் நாள்தோறும் புதிது புதிதாகப் பிரச்னைகள் வந்து கொண்டுதானிருக்கும். மகிழ்ச்சியான தருணங்களில் மட்டும் பக்கத்தில் இருப்பதைத் தவிர்த்து, கசப்பான நேரங்களிலும் சேர்ந்தே இருப்பது, உங்கள் இருவருக்குமான இடைவெளியை அழகாக்கும். அர்த்தப்படுத்தும்.
கலீல் ஜிப்ரான்
கவிதை மாதிரி...நீங்கள் இணைந்திருங்கள்...
ஆனால், உங்களுக்குள் சிறிது இடைவெளி இருக்கட்டும்.
சொர்க்கத்தின் தென்றல் அதன் வழியே உங்களிடம் செல்லட்டும்.
ஒருவர் கோப்பையை ஒருவர் இட்டு நிரப்புங்கள்.
ஆனால், மற்றவர் கோப்பையிலிருந்து எடுத்துப் பருகாதீர்கள்...
பாடி, ஆடி மகிழ்ச்சியாக இருங்கள்...
ஆனால், தனித்தனியாக இருங்கள்...
(வாழ்வோம்!)
எழுத்து வடிவம்: மனஸ்வினி
நன்றி குங்குமம் தோழி

No comments:
Post a Comment