உலகச் செய்திகள்


யேமனியில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்

ஈராக் - சிரிய எல்லையில் 17 கிலோ மீற்றர் நீளமான இராட்சத அகழி: சிரிய போராளிகளை தடுப்பதற்காக நிர்மாணம்

மத்திய ஆபிரிக்க குடியரசில் பிரான்ஸ் ஊடகவியலாளர் படுகொலை

துருக்கியில் நிலக்கரிச் சுரங்கத்தில் பாரிய வெடிப்பு ; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 230 ஆக உயர்வு

கிழக்கு உக்ரைன் விடுதலை!
=======================================================================

யேமனியில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்

13/05/2014  யேமனிய முகல்லா நகரில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலொன்றில் குறைந்தது 10 யேமனிய பொலிஸார், பொதுமகன் ஒருவர் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
பொலிஸ் நிலையத்துக்கு வாகனமொன்றில் வந்த தற்கொலைக் குண்டுதாரி பொலிஸாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதையடுத்து குண்டை வெடிக்க வைத்துள்ளார்.
அதேசமயம் அன்றைய தினம் தலைநகர் சனாலில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 4 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் இதுவரை உரிமை கோரவில்லை. நன்றி வீரகேசரி 

ஈராக் - சிரிய எல்லையில் 17 கிலோ மீற்றர் நீளமான இராட்சத அகழி: சிரிய போராளிகளை தடுப்பதற்காக நிர்மாணம்

14/05/2014     ஈராக்கானது சிரியாவிலிருந்து  எல்லையைக் கடந்து வரும் போராளிகளை தடுக்கும் முகமாக இரு நாடுகளதும் எல்லையில் 17 கிலோ மீற்றர் நீளமும் 2 மீற்றர் ஆழமும், 3 மீற்றர் அகலமுமுடைய இராட்சத அகழியொன்றை நிர்மாணித்துள்ளது. 
இந்த அகழியானது குர்திஸ்டான் பிராந்தியத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. 
இந்நிலையில் இந்த அகழியை நிர்மாணிக்கும் நடவடிக்கையானது அவசியமற்ற  ஒன்றென சில அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. 
நன்றி வீரகேசரி


மத்திய ஆபிரிக்க குடியரசில் பிரான்ஸ் ஊடகவியலாளர் படுகொலை

14/05/2014   மத்திய ஆபிரிக்க குடியரசில் பணியில் ஈடுபட்டிருந்த வேளை பிரான்ஸின் பெண் புகைப்பட ஊடகவியலாளரான கமில்லி லெபாஜ் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 
போர் பிராந்தியத்தில் போராளிகளால் செலுத்தப்பட்ட காரொன்றை பிரெஞ்சு ரோந்துப் படையினர் தடுத்து நிறுத்திய போது அந்தக் காரினுள் கமில்லியின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 
அவர் மத்திய ஆபிரிக்க குடியரசின் கமெரூனுடனான எல்லைப் பகுதிக்கு பயணத்தை மேற்கொண்டிருந்த வேளையிலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார். 
அவர் செலகா போராளிகளால் படுகொலை செய்யப்பட்ட 150 பேர் தொடர்பில் பெர்பேராரி நகரிலிருந்து 120 கிலோமீற்றர் தூரத்திலுள்ள நகருக்கு கிறிஸ்தவ அன்ரி - பலாகா போராளி குழுவுடன் மோட்டார் சைக்கிளில் கடந்த வாரம் பயணத்தை மேற்கொண்டிருந்தார். 
இந்த படுகொலைக்கான காரணத்தை கண்டறிந்து அவரைப் படுகொலை செய்தவர்களை கண்டுபிடிக்க தேவையான அனைத்து நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும் என பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகத்தால்  வெளியிடப்பட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
மத்திய ஆபிரிக்க குடியரசில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மோதல்கள் ஆரம்பமானது முதற்கொண்டு அந்நாட்டின் 4.6 மில்லியன் சனத்தொகையில் கால்பங்கினர் வீடு வாசல்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில் அந்நாட்டில் ஆபிரிக்க ஒன்றியம் மற்றும் பிரான்ஸை சேர்ந்த 7000 படை வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
 நன்றி வீரகேசரி
துருக்கியில் நிலக்கரிச் சுரங்கத்தில் பாரிய வெடிப்பு ; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 230 ஆக உயர்வு

15/05/2014   மேற்கு துருக்கியில் நிலக்கரிச் சுரங்கமொன்றில் இடம்பெற்ற வெடிப்பில் குறைந்தது  230 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
மனிஸா மாகாணத்தில் சோமா நகரிலுள்ள மேற்படி சுரங்கத்தில் செவ்வாய்க்கிழமை இரவு மின் ஒழுக்கு காரணமாக இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற போது 787 பேர் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்ததாக அந்நாட்டு சக்தி வள அமைச்சர் டானர்யில்டிஸ் தெரிவித்தார்.
இந்நிலையில் சுரங்கத்தின்  அடியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்ட வண்ணம் உள்ளதாகவும் இந்த  சம்பவத்தில் எவரும் உயிர்தப்பியிருப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளதாக அவர் கூறினார்.
தலைநகர் அங்காராவின் மேற்கே சுமார் 450 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள இந்த தனியாருக்கு சொந்தமான சுரங்கத்தின் அருகே சுரங்கத் தொழிலாளர்களின் உறவினர்கள் கவலையுடன் கூடியிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 
இந்த வெடிப்பு சம்பவத்தில் சுமார் 80 பேர் காயமடைந்துள்ளனர். மேற்படி வெடிப்புச் சம்பவத்தையடுத்து சுரங்கத்தில் பணியாற்ற பலர் காபனோரொட்சைட் வாயுவால் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர். 
இந்நிலையில் அந்த சுரங்கத்துக்குள்  எவராவது உயிருடன்  சிக்கியிருப்பின் அவர்களுக்கு உதவும் முகமாக அந்த சுரங்கத்துக்குள் ஒட்சிசன் வாயு உட்செலுத்தப்பட்டு வருகின்றது.
மின்சார ஒழுக்கு காரணமாக மின் துண்டிக்கப்பட்டதால் சுரங்கத்திலுள்ள மின்னுயர்த்தி உபகரணங்களை பயன்படுத்த முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி தொழிலாளர்கள் சுரங்க நுழைவாயிலிருந்து 4 கிலோ மீற்றர் தூரத்தில் மேற்பரப்பிலிருந்து 2 கிலோமீற்றர் ஆழத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சுரங்க விபத்து தொடர்பாக பிரதமர் றிசெப் தாயிற் எர்டோகன் அல்பேனியாவுக்கான விஜயத்தை இரத்து செய்து சுரங்க வெடிப்பு இடம்பெற்ற சோமா நகருக்கு விஜயம் செய்யவுள்ளதாக அவரது அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. 
உயர் பாதுகாப்பு செயற்பாடுகளும் கட்டுப்பாடுகளும் பின்பற்றப்பட்டு வந்த மேற்படி சோமா கோமுர் இஸ்லெட்மெலேரி சுரங்கத்தில் இடம்பெற்ற அனர்த்தம் குறித்து விசாரணையொன்றை முன்னெடுத்துள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர். 
1992 ஆம் ஆண்டு துருக்கியின் கருங்கடல் பிராந்திய நகரான லொங்குல்டக்கிற்கு அண்மையில் இடம்பெற்ற சுரங்க அனர்த்தத்தில் 270 சுரங்கத் தொழிலாளர்கள் பலியாகியிருந்தனர். 
 நன்றி வீரகேசரி

கிழக்கு உக்ரைன் விடுதலை!Ukraine map
14/05/2014  உக்ரைன் நாட்டில் இருந்து கிழக்குப்பகுதி விடுதலையடைந்து விட்டதாக ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். உக்ரைனின் கிழக்குப்பகுதியை ரஷியாவுடன் இணைக்கவும் அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ரஷியா உடனடியாக பதில் எதுவும் அளிக்கவில்லை. இருப்பினும், கிளர்ச்சியாளர்களுடன் உக்ரைன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அந்நாடு கேட்டுக் கொண்டுள்ளது.

உக்ரைன் அதிபராக இருந்த விக்டர் யானுகோவிச், தனக்கு எதிராக உள்நாட்டில் கிளர்ச்சி வெடித்ததையடுத்து நாட்டைவிட்டு வெளியேறி ரஷியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதனையடுத்து உக்ரைன் அதிபராக புதிதாக பதவியேற்ற அலெக்ஸாண்டர் துர்ச்சினோவ், தங்கள் நாட்டை ஐரோப்பிய யூனியன் அமைப்பில் சேர்ப்பதற்கு அதிக ஆர்வம் காட்டவே, அதற்கு ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதனிடையே, உக்ரைனுக்கு எதிராக கிரீமியா பகுதியைச் சேர்ந்த ரஷிய ஆதரவாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். கிரீமியாவில் பொதுவாக்கெடுப்பு நடத்தி ரஷியாவுடன் அப்பகுதியை கிளர்ச்சியாளர்கள் இணைத்தனர்.

இதேபோல், உக்ரைனின் கிழக்குப் பகுதியான டொனெட்ஸ்க் மற்றும் லூகான்ஸ்க் பகுதியிலும் உக்ரைன் அரசுக்கு எதிராக கிளர்ச்சி வெடித்தது. அந்தப் பகுதியில் உள்ள உக்ரைன் அரசு கட்டடங்கள், தொலைக்காட்சி நிலையங்கள் உள்ளிட்டவற்றை கிளர்ச்சிப்படையினர், தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

உக்ரைனுடன் நீடிப்பதா? அல்லது வேண்டாமா? என்பது தொடர்பாக அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே ஞாயிற்றுக்கிழமை கிளர்ச்சியாளர்கள் பொது வாக்கெடுப்பு நடத்தினர். இதில் 90 சதவீத மக்கள், உக்ரைனில் இருந்து பிரிந்து தனித்து செயல்படுவதை ஆதரித்து வாக்களித்தனர்.

இதனையடுத்து உக்ரைனில் இருந்து டொனெட்ஸ்க் பகுதி விடுதலையடைந்து விட்டதாக கிளர்ச்சியாளர்கள் திங்கள்கிழமை அறிவித்தனர். மேலும் ரஷியாவுடன் டொனெட்ஸ்க் பகுதியை இணைக்கவும் கிளர்ச்சிப் படையினர் விருப்பம் தெரிவித்தனர்.

இதுகுறித்து ரஷியா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. அதேசமயம் ரஷிய அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கிளர்ச்சியாளர்களுடன் உக்ரைன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இருதரப்புக்கும் ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பு மத்தியஸ்தம் செய்யும் என ரஷியா நம்புகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் அதிபர் கண்டனம்: உக்ரைன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் அதிபர் அலெக்ஸாண்டர் துர்ச்சினோவ் பேசுகையில், ""பிரிவினைவாதக் கிளர்ச்சியாளர்களால் உக்ரைனின் கிழக்குப் பகுதியில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பு எந்த சட்ட விதியையும் கடைபிடிக்காத போலி நாடகம்.

இது கொலை, கடத்தல், வன்முறை மற்றும் பிற தீவிர குற்றங்களுக்கு இணையாக கருதப்படக்கூடியது. சட்டப்பூர்வமான நடவடிக்கையால் மட்டுமே அதற்கான நீதியை நிலைநாட்ட முடியும். அந்தப் பகுதியில் வன்முறையைக் கைவிட்டு சட்டப்படி தங்களின் கோரிக்கையை முன்வைக்க தயாராக இருந்தால் அவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த அரசு உறுதியாக இருக்கிறது'' என்றார்.

கிளர்ச்சியாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு: இதனிடையே, கிராஸ்னோர்மிஸ்க் நகரில் திரண்டிருந்த ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மீது உக்ரைன் பாதுகாப்புப் படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 2 பேர் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலை நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி, உக்ரைனின் கிழக்குப்பகுதியில் பொது வாக்கெடுப்பு நடத்தி, விடுதலையடைந்ததாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்திருப்பது அப்பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நன்றி தேனீ No comments: