எந்த கட்சிக்கு எவ்வளவு ஓட்டு?அ.தி.மு.க., - 44.3%; தி.மு.க., - 23.6%

தமிழகத்தில், 16வது லோக்சபாவுக்கான தேர்தல், கடந்த ஏப்ரல், 24ம் தேதி நடந்தது. மொத்தம் உள்ள, 5.3 கோடி வாக்காளர்களில், 73.82 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. 39 தொகுதிகளிலும் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி, நேற்று முன்தினம் நடந்தது. மொத்தம், நான்கு கோடியே, 3 லட்சத்து 93 ஆயிரத்து 657 ஓட்டுகள் பதிவாகி இருந்தன.

அவற்றில், 44.3 சதவீத ஓட்டுகளை பெற்ற, அ.தி.மு.க., 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக, 23.6 சதவீத ஓட்டுகள் பெற்ற தி.மு.க.,வால், ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. வெறும் 5.5 சதவீத ஓட்டுகள் பெற்றுள்ள பா.ஜ., ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், 4.4 சதவீத ஓட்டுகள் வாங்கிய பா.ம.க.,வும் ஒரு இடத்தில் ஜெயித்துள்ளது. தமிழகத்தில் பதிவான ஓட்டுகளில், கட்சிகள் பெற்ற பங்கு மற்றும் சதவீதம் உள்ளிட்ட விவரங்களை, தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:



அ.தி.மு.க.,
மொத்தம் உள்ள 39 தொகுதிகளில், 37 தொகுதிகளை பிடித்து, அமோக வெற்றி பெற்றுள்ள ஆளும் அ.தி.மு.க.,வுக்கு, ஒரு கோடியே 79 லட்சத்து 83 ஆயிரத்து 168 ஓட்டுகள் கிடைத்துள்ளன. அதாவது, பதிவான ஓட்டுகளில், 44.3 சதவீதம் இக்கட்சிக்கு கிடைத்துள்ளது. கூட்டணியின்றி, தனித்துப் போட்டியிட்டு இக்கட்சி, இவ்வளவு ஓட்டுகளை பெற்று, தேர்தல் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது.

தி.மு.க.,
தமிழகத்தில் 34 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க.,வுக்கு, 95 லட்சத்து 75 ஆயிரத்து 850 ஓட்டுகள் கிடைத்துள்ளன. பதிவான ஓட்டுகளில், 23.6 சதவீதம் பெற்றும், இக்கட்சியால், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.

பா.ஜ.,
இந்த தேர்தலில், தமிழகத்தில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பா.ஜ.,வுக்கு, எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில், நீலகிரி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை இக்கட்சி இழந்தது. இதையடுத்து, ஏழு தொகுதிகளில் வேட்பாளரை நிறுத்தியது. மேலும், பொள்ளாச்சி, பெரம்பலூரில் போட்டியிட்ட வேட்பாளர்களும், தாமரை சின்னத்தில் போட்டியிட்டதால், அவர்களும் பா.ஜ., கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.அதன்படி, ஒன்பது தொகுதிகளில் பா.ஜ.,வுக்கு கிடைத்துள்ள ஓட்டுகள், 22 லட்சத்து 22 ஆயிரத்து 90. அதாவது, 5.5 சதவீத ஓட்டுகள் இக்கட்சிக்கு கிடைத்துஉள்ளதுடன், கன்னியாகுமரி தொகுதியில் வெற்றியும் பெற்றுள்ளது.

தே.மு.தி.க., 
பா.ஜ.,கூட்டணி சேர்ந்திருந்த தே.மு.தி.க., 14 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. என்றாலும், இந்த 14 தொகுதிகளில் 20 லட்சத்து 79 ஆயிரத்து 392 ஓட்டுகளை பெற்றுள்ளது. பதிவான ஓட்டுகளில், 5.1 சதவீதம் மட்டுமே இக்கட்சிக்கு கிடைத்துள்ளது.

பா.ம.க., - ம.தி.மு.க.,
இதேபோல், பா.ஜ., கூட்டணியில் போட்டியிட்ட பா.ம.க.,வும் 8 தொகுதிகளில் வேட்பாளரை நிறுத்தியது. 18 லட்சத்து 4 ஆயிரத்து 812 (ஓட்டு சதவீதம் 4.4) ஓட்டுகளை வாங்கியுள்ள இக்கட்சி, தர்மபுரியில் மட்டும் வெற்றிக் கனியை பறித்துஉள்ளது.மேலும், இந்த கூட்டணியில், 8 இடங்களில் போட்டியிட்டு, எல்லாவற்றிலும் தோற்ற ம.தி.மு.க.,வுக்கு இந்த தேர்தலில் 14 லட்சத்து 17 ஆயிரத்து 535 ஓட்டுகள் கிடைத்துள்ளன. பதிவான ஓட்டுகளில் வெறும் 3.5 சதவீதம் மட்டுமே இக்கட்சியால் பெற முடிந்துள்ளது.

காங்கிரஸ்
தமிழகத்தில், 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு வெறும், 4.3 சதவீத ஓட்டுகள் கிடைத்துஉள்ளன. 39 வேட்பாளர்களும் சேர்ந்து, 17 லட்சத்து 51 ஆயிரத்து 123 ஓட்டுகளை வாங்கி உள்ளனர்.அரசியல் களத்திற்கு புதிய வரவான ஆம் ஆத்மி கட்சி, தமிழகத்தில் 25 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால், வெறும் 2 லட்சத்து, மூவாயிரத்து 175 ஓட்டுகளை மட்டுமே இவர்களால் பெற முடிந்துள்ளது. பதிவான ஓட்டுகளில் வெறும் அரை சதவீதம் தான் இது.

'நோட்டா'
ஆம் ஆத்மி கட்சியினர் பெற்ற ஓட்டுகளை விட, 'நோட்டா'வுக்கு கிடைத்த ஓட்டுகள் அதிகம். 39 தொகுதிகளிலும் 5 லட்சத்து 82 ஆயிரத்து 62 பேர், நோட்டா பட்டனை அழுத்தி, யாருக்கும் ஆதரவு இல்லை என்பதை பதிவு செய்துள்ளனர்.இதை தவிர, இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, 6 லட்சத்து, 6 ஆயிரத்து 110 ஓட்டுகளும் (1.5 சதவீதம்), ஒரு தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சிக்கு, 2 லட்சத்து 62 ஆயிரத்து 812 ஓட்டுகளும் கிடைத்துள்ளன.இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து, இந்த முறை 18 தொகுதிகளில் நின்றன. இதில், தலா அரை சதவீதம் என, ஒரு சதவீத ஓட்டுகளை இரு கட்சிகளும் பெற்றுள்ளன. மார்க்சிஸ்ட் கட்சிக்கு, 2 லட்சத்து 20 ஆயிரத்து 614 ஓட்டுகளும், இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு, 2 லட்சத்து 19 ஆயிரத்து 866 ஓட்டுகளும் கிடைத்துள்ளன.

நன்றி தினமலர்.com 

No comments: