காங்., தலைவர் சோனியா, துணை தலைவர் ராகுல் ராஜினாமா?

.
புதுடில்லி: நடந்து முடிந்துள்ள லோக்சபா தேர்தலில், ஆளும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளதால், தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று, பதவிகளை ராஜினாமா செய்ய, காங்கிரஸ் தலைவர் சோனியாவும், அவர் மகனும், கட்சியின் துணைத் தலைவர் ராகுலும் முடிவு செய்துள்ளதாக, டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தோல்விக்கு பொறுப்புலோக்சபா தேர்தல் தோல்வியால், காங்கிரஸ் மேலிடம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2009 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சி, 206 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகள், 56 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ், 44 இடங்களை மட்டுமே வென்றுள்ளது.நேற்று முன்தினம், பத்திரிகையாளர்களை சந்தித்த போது, சோனியாவும், ராகுலும், தோல்விக்கு தாங்களே பொறுப்பேற்பதாக அறிவித்தனர். அப்போது, அவர்கள் இருவரின் மனநிலையும், குரலும், உடைந்து காணப்பட்டது.லோக்சபா தேர்தல் தோல்வி எதிரொலியாக, பீகார் முதல்வர், ஐக்கிய ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமார், தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அது போல், வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில், காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளதால், அதற்கு பொறுப்பேற்று, ஆளும், காங்கிரஸ் முதல்வர் தருண் கோகோய், பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளார்.மகாராஷ்டிராவில், காங்கிரஸ் பலத்த அடி வாங்கியுள்ளதால், காங்கிரசைச் சேர்ந்த முதல்வர், பிருத்விராஜ் சவான், பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளது.

காரணம்காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வு, பிரசாரம் போன்ற பணிகள் அனைத்தையும் மேற்கொண்ட ராகுல், தேர்தல் தோல்வியால் நொறுங்கிப் போயுள்ளார். அவர் மேற்கொண்ட அணுகுமுறைகள் எதுவும் செல்லாமல் போயுள்ளதால், தோல்விக்கு பொறுப்பேற்று, பதவியை அவர் ராஜினாமா செய்யப் போவதாக, டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், ராகுலின் ஆலோசகர்களாக இருந்த, மத்திய அமைச்சர், ஜெய்ராம் ரமேஷ், கட்சியின் முன்னணித் தலைவர்கள், மதுசூதன் மிஸ்த்ரி, மோகன் கோபால், மோகன் பிரகாஷ், அஜய் மேக்கன் ஆகியோரிடம், தோல்விக்கான காரணங்களை விளக்குமாறு, கட்சி மேலிடம் உத்தர விட்டுள்ளது; மேலும், அவர்களிடம் உள்ள பொறுப்புகளும் பறிக்கப்பட உள்ளன.நாளை மறுநாள், டில்லியில் கூட உள்ள, காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், தோல்வி குறித்து விரிவாக ஆராயப்படும் என, காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. அந்த கூட்டத்தில், சோனியாவும், ராகுலும், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


முடக்கம்ஏனெனில், நாட்டின் மிகப் பழமையான கட்சியான காங்கிரஸ், இரட்டை இலக்கங்களில் முடங்கியுள்ளது. அக்கட்சி ஆளும்சில மாநிலங்கள் உட்பட, 10 மாநிலங்களில், ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.வழக்கமாக இது போன்ற நிலை, மாநில சட்டசபை தேர்தல்களில் நிகழ்ந்திருந்தால், மாநில தலைவரும், மாநில முதல்வரும் பதவியிலிருந்து அப்புறப்படுத்தப்படுவர். 'அதே அணுகுமுறை, லோக்சபா தேர்தலிலும் பின்பற்றப்பட வேண்டும்; சோனியா, ராகுல் வசம் உள்ள பதவிகளை பறிக்க வேண்டும்' என, கட்சியில் சிலர் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.இதையடுத்தே, தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று, சோனியாவும், ராகுலும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இருவரையும் ராஜினாமா செய்ய, கட்சி பிரமுகர்கள் அனுமதிக்க மாட்டார்கள் எனவும், ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

இது குறித்து, ஜெய்ராம் ரமேஷ் போன்றவர்கள் கூறும் போது, 'தோல்விக்கு ஒரு சிலர் அல்லது மேலிடத் தலைவர்கள் இருவர் மட்டும் தான் காரணம் எனக் கூற முடியாது. தோல்விக்கு, பல காரணங்கள் உள்ளது போல், அதற்கான பொறுப்பும், கட்சியின் அனைத்து தரப்பினருக்கும் உள்ளது' என, தெரிவித்தனர்.

தோல்விக்கான சில காரணங்கள்*வேட்பாளர்கள் தேர்வு முறை சரியில்லை. அனுபவம் இல்லாத இளைஞர்களுக்கு, ராகுல் முன்னுரிமை அளித்தது; அனுபவம் வாய்ந்தவர்களுக்கு, 'சீட்' வழங்காதது.
*'சீட்' கிடைக்காத பலர், கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக, 'உள்வேலை'களில் ஈடுபட்டது.
*ராகுல் பிரசாரத்தில் புதுமை இல்லாதது; கூட்டம் சேராதது; அதற்கான முயற்சிகளை அவர் மேற்கொள்ளாதது.
*பிரசாரத்தை தான் ஒருவரே முன்னின்று மேற்கொண்டது. மூத்த தலைவர்களை பிரசாரத்தில் ஈடுபடுத்தாதது.
*பிரதமர் மன்மோகன் சிங், அதிக அளவில் பிரசாரத்தில் ஈடுபடாதது.இது போன்ற பல காரணங்கள் கூறப்படுகின்றன.
Click Here

No comments: