என்னைப் பெற்ற அம்மா!... .......காலத்தால் அழியா நினைவுகள்!



.
என்னைப் பெற்ற அம்மா விற்கு
என்னிற் கொள்ளை அன்பு!
எடுத்துக் கூற வார்த்தை ஏது?
இயம்பி டுவேன் நம்பு!
ஆசை யோடு உச்சி மோந்து
அணைத்து மடியில் இருத்திப்
பாசத் தோடு அமுது தந்து
பாலும் ஊட்டும் அம்மா!
நெஞ்சில் என்தன் தலையைச் சாய்த்து
நீவி மகிழும் அம்மா!
கெஞ்சும் விழியால் அன்பைச் சிந்திக்
கொஞ்சும் தெய்வ அம்மா!
கிள்ளை மொழியிற் பேசும் என்னை
மெள்ள  அள்ளித் தூக்கி
வெள்ளைப் பட்டுச் சட்டை போட்டுப்
பள்ளிக் கனுப்பும் அம்மா!

பள்ளிக் கூடம் விட்ட வுடனே
பட்ச ணங்கள் தருவாள்!
கொள்ளை அன்பு பொங்க முத்தம்
கொட்டி வீட்டிற் சேர்ப்பாள்!
அந்தி மாலை கெந்தி ஓடிப்
பந்த டிக்கச் செய்வாள்!
சந்த மோடு சிந்து பாடித்
தழுவும் செல்ல அம்மா!
ஓங்கு புகழ் பெற்ற வர்கள்
உண்மைச் சரிதம் கூறி
தூங்க வைக்க நீதி நேர்மை
துலங்கும் கதைகள் சொல்வாள்!
நீதிக் கதைகள் ஓதி ஒழுக்க
நெறியில் என்னை வளர்த்தாள்
சாதி இல்லைத் தெய்வம் ஒன்று
சமயம் அன்பே என்பாள்!
விழியைக் காக்க இமைபோல் அன்பு
வேலி கட்டி வளர்த்தாள்
வழிந டத்தும் தந்தை யின்சொல்
மந்தி ரந்தான் என்பாள்!.
                                  
         ஆக்கம் -- பல்மருத்துவ கலாநிதி இளமுருகனார் பாரதி.

2 comments:

Selvi said...

இந்தக் கவிதையை வாசிக்கும் வேளையில் வேந்தனார் அவர்களின்

காலைத்தூக்கி கண்ணில் வைத்து கட்டிக்கொஞ்சும் அம்மா

என்ற கவிதைபோல் உள்ளது.

அன்புடன்
செல்வி

Anonymous said...

இலகு தமிழில் ஓசை நயத்துடன் கவிதை அருமை. சந்தம் திறமாக அமைந்துள்ளது. எழுதியவரின் ஊஞ்சற்பாடல்கள் மெய் சிலிர்க்க வைப்பவை. பலமுறை பல கோவில்களிலும் கேட்டுள்ளேன். தொடர்க இவரின் தமிழ்ச் சேவை. நன்றி -- சிவசோதி