சங்க இலக்கியக் காட்சிகள் (செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.

செந்தமிழ்ச்செல்வர் பாடும்மீன் சு ஸ்ரீகந்தராசா எழுதும் சங்க இலக்கிய காட்சிகள் என்ற இலக்கிய பகுதியை பத்து வாரங்கள் தொடர்ச்சியாக தர இருக்கிறோம் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகிறோம். படித்து சுவைத்து உங்கள் கருத்துக்களை பதியுமாறு வேண்டுகின்றோம்
ஆசிரியர் குழு

பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழ்பவை சங்க இலக்கியங்கள். அவற்றைப் படிக்கும்போது தமிழ் மொழியியன் செழுமையினையும், இனிமையினையும் நாம் உணருகின்றோம். அவை சொல்லுகின்ற சுவையான கதைகளிலும் நம் மனதைப் பறிகொடுக்கின்றோம். அவற்றில் ஆங்காங்கே வெளிப்படுத்தப்படும் வரலாற்று நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளுகின்றோம். அந்த வகையில் சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை எல்லோரும் படித்து இன்புற வாய்ப்பளிப்பதே இக்கட்டுரைத் தொடரின்  நோக்கமாகும்.
-------------------------------------------------------------------

காட்சி 1
                                       
                                                 காட்டுவழியில் காதலர் இருவர்
அவனும் அவளும் காதலர்கள். வேறு வேறு ஊர்களைச் சேர்ந்த இருவரும் உள்ளத்தால் ஒன்றுபட்டுவிட்டனர். அவளைச் சந்திப்பதற்கு அவன் இரவுவேளைகளிலே அவளின் ஊருக்கு வருவான். யாருக்கும் தெரியாமல் அவளைச் சந்திப்பான். அவளோடு உறவாடுவான். இவ்வாறு களவு ஒழுக்கத்திலே இணைந்துவிட்ட இருவரும், கற்பு ஒழுக்கத்திலே ஒன்றுசேர்ந்து வாழ விரும்பினார்கள். ஆனால் அதற்கு அவளின் ஊரவரும் உறவினரும் சம்மதிக்க மாட்டார்கள் என்பதை இருவரும் அறிவார்கள். இப்படியே களவு நெறியிலே நீடிக்கவும் முடியாது. என்றாவது ஒருநாள் இருவரும் கையும் களவுமாகப் பிடிபடவேண்டிவரும்.
எனவே, கற்புநெறியிலே அவனோடு செல்வதற்கு அவள் இசைந்தாள். ஊரையும் உறவினரையும் பிரியத் துணிந்தாள். பகலிலே இருவரும் பயணிக்க முடியாது. ஊரவர்கள் அவனைக் கொலை செய்தாலும் செய்வார்கள். இரவிலே அவனது ஊருக்குச் செல்வதிலும் அபாயம் உண்டு. இருவரின் ஊர்களுக்கும் இடைத் தூரம் அதிகம். இடையே கொடிய விலங்குகள் வாழும் பெருங்காடு ஒன்றையும் கடந்து செல்லவேண்டும்.



ஆயினும் காட்டு விலங்குகளிடம் இருந்து தப்பினாலும், நாட்டில் வாழும் மனிதர்களிடமிருந்து தப்பவே முடியாது என்று அவர்கள்நினைத்திருக்கவேண்டும். எனவே காட்டுவழி எவ்வளவோ மேலானது என்று முடிவுகட்டியிருக்க வேண்டும். அதனால் இருவரும் காட்டுவழியிலே கனதூரம் நடந்து சென்றுகொண்டிருக்கிறார்கள்.
அது, சிறிய மலைகளும், வலிமையான மரங்களும் நிறைந்த காடு. அங்கே பலமான காற்று அடிக்கடி சுழன்று சுழன்று வீசும். கொடிய விலங்குகள் அங்கே வாழும். அந்தக் காட்டுவழியில் பகல் நேரத்தில் செல்லுகின்ற வழிப்போக்கர்களின்மேல் பாய்ந்து அவர்களது தலைகளில் மோதி, அவர்களைக் கடித்துக்குதறியதால் அங்குள்ள புலிக்குட்டிகளின் தலைகளிலே இரத்தக்கறை படிந்து அவற்றின் முக அடையாளமே மாறியிருக்கும். இரத்தத்தில் தோய்ந்ததால் எப்போதும் அந்தப் புலிக்குட்டிகளின் வாய் சிவப்பாகவேயிருக்கும். மாலைவேளையில் மான்களை வேட்டையாடி உண்பதற்காகப் அந்தப் புலிக்குட்டிகள் புதர்களிலே பதுங்கிக்கொண்டிருக்கும்.
அத்தகைய கொடிய புலிகள் வாழுகின்ற, ஆபத்து நிறைந்த அடர்ந்த காட்டுவழியிலே இரவு நேரத்திலே அந்த இளைஞன் தனது காதலியுடன் நடந்து செல்கின்றான். அவளை முன்னே நடக்கவிட்டு அவளுக்குப் பின்னால் அவன் சென்று கொண்டிருக்கிறான். அப்போது அதே வழியால் வந்துகொண்டிருந்த வழிப்போக்கர்கள் அவர்களைக்கண்டு ஆச்சரியப்படுகின்றார்கள்.
அடடா! இத்தகைய அழகிய இளம் பெண்ணையும் அழைத்துக்கொண்டு இந்த இரவு நேரத்தில், ஆபத்து நிறைந்த இந்தக் காட்டுவழியாக அச்சமின்றி இவன் செல்கிறானே என்று அவனது ஆண்மையை மெச்சுகின்றார்கள். இரவோடிரவாகத் தன் காதலியைக் கூட்டிக்கொண்டு பொழுது விடிவதற்கிடையில் தனது ஊருக்குச் சென்று விடவேண்டுமென்று இவ்வாறு செல்கின்ற இவன் எப்படிப்பட்டவனாக இருக்கவேண்டும்?
காற்றோடு கலந்து பெருமழை பெய்கின்றபோது மலைகளையே பெயர்த்துத் தள்ளிவிடக்கூடியவாறு சிலவேளைகளில் இடிக்குமே பேரிடி அந்த இடியைவிட இந்த இளைஞனின் இதயம் வலிமையானதாயிருக்கவேண்டும் என்று வியக்கின்றார்கள். ஆனால் அதே வேளை, ஆபத்து நிறைந்த பாதையிலே சென்றுகொண்டிருக்கும் வுகைவகையான வண்ணத் தூரிகைகள் தூவப்பட்டுஅவர்களுக்காக வருந்துகிறார்கள். இவ்வாறு காட்டுவழிசெல்லும் காதலர்களைக் கண்ட வழிப்போக்கர்கள் தமக்குள் நினைத்துக்கொள்வதாக வருகின்ற இந்தக்காட்சியைச் சித்தரிக்கும் பாடல் எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாகத் தொகுக்கப்பட்டுள்ள நற்றிணையில் இடம்பெறுகின்றது.
பாடல்:
அழுதுபட வீழ்ந்த பெருந்தண் குன்றத்து
ஒலிவல் ஈந்தின் உலவை யங்காட்டு
ஆறுசெல் மாக்கள் சென்னி எறிந்த
செம்மறுத் தலைய, நெய்த்தோர் வாய
வல்லியப் பெருந்தலைக் குருளை, மாலை
மானோக்கு இண்டிவர் ஈங்கைய, சுரனே
வையெயிற்று ஐயள் மடந்தை முன்னுற்று
எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம்
காலொடு பட்ட மாரி
மால்வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே!
(நற்றிணை. பாடல் இலக்கம்: 2. பாலைத்திணை. பாடியவர் பெரும்பதுமனார். )

(காட்சிகள் தொடரும்)

No comments: