சிவாஜியின் கையெழுத்து - அ.முத்துலிங்கம்

.       

  ’சிவாஜி வருகிறார், சிவாஜி வருகிறார்’ என்று கத்திக்கொண்டே என் நண்பன் பரஞ்சோதி ஓடிவந்தான். அவனுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. முதல் முறையாக நடிகர் சிவாஜி கொழும்புக்கு வரப்போகிறார். வருடம் 1959. தினகரன் பத்திரிகை ஆசிரியர் க.கைலாசபதியின் பெருமுயற்சியால் ஏற்பாடுசெய்யப்பட்ட முத்தமிழ் விழாவுக்கு சிவாஜி வருவது உறுதியாகிவிட்டது. நான் திட்டமிடத் தொடங்கினேன்.

சிவாஜியுடனான என்னுடைய பரிச்சயம் பல வருடங்களுக்கு முன்னரே ஆரம்பித்துவிட்டது. எங்களுடைய வீட்டில் அண்ணர் சர்வாதிகாரி. பேப்பர் பறக்காமல் இருக்க ஒரு கல் வைப்பதுபோல ஆணை இடும்போதே அதை மறக்காமல் இருக்க ஓர் அடியும் வைப்பார். பராசக்தி படம் வந்தபோது அவர் என்ன செய்தார் என்றால் ஐந்து சதத்துக்கு விற்ற வசனப் புத்தகத்தை வாங்கி வந்து அதைபாடமாக்கச் சொல்லி எனக்கு கட்டளையிட்டார். நான் நாலு நாட்களில் ’நீதி மன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்திருக்கிறது’ என்று அடிக்குரலில் ஆரம்பித்து பேச்சை உணர்ச்சிகரமாக முடிப்பதற்கு பழகிவிட்டேன். அதுவெல்லாம் தனிமையான பயிற்சியின்போதுதான். அண்ணர் முன்னே நின்றபோது நாக்குழறி, மண்டைக்குள் இருந்த சொற்கள் வாய்க்குள் வராத சொற்களிலும் பார்க்க அதிகமாகிவிட்டன. அவர்சமிக்ஞை விளக்குப்போல, அடிக்கடி மனம் மாறுகிறவர். முழுவதையும் பாடமாக்கினால் படத்துக்கு கூட்டிப்போவதாகச் சொல்லியிருந்தார். வாக்கை காப்பாற்றாமல் போகலாம். ஒருநாள்  நண்பர்களை அழைத்துவந்து அவர்களுக்கும் பேசிக்காட்டச் சொன்னார்.  பேசி முடிந்ததும் நண்பர்கள் வயிறு குலுங்க சிரித்தார்கள். அது ஏன் என்றுமட்டும் எனக்கு புரியவில்லை.


இப்படி பலவருடங்களுக்கு முன்னர் படம் பார்க்க முதலே சிவாஜி கணேசன் எனக்கு அறிமுகமாகியிருந்தார். சிவாஜிபற்றி நிறையத் தகவல்களை பரஞ்சோதி கொண்டுவந்தான். ஆனால் எல்லாவற்றையும் உடனே சொல்லமாட்டான். கார் முகப்பு வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக ரோட்டைக் காட்டுவதுபோல அவ்வப்போது புதிய செய்திகளை வெளியே விடுவான். அவன் கையெழுத்து சேகரிப்பவன். சிவாஜியின் கையெழுத்தை எப்படியும் வாங்கி, கண்ணாடிச் சட்டத்தில் மாட்டி கூடத்தில் தொங்கவிடவேண்டும் என்பது அவன் லட்சியம்.

தினகரன் பத்திரிகை ஒரு சிறுகதைப் போட்டி நடத்தியது. அதிலே முதல் பரிசு பெறுபவருக்கு சிவாஜி கணேசன் அவர் கையால் தங்கப் பதக்கம் அணிவிப்பார் என்று சொன்னார்கள். எத்தனை பெரிய சந்தர்ப்பம் என்னை நோக்கி வந்தது. ஒரேயொரு சின்னப் பிரச்சினைதான். சிறுகதைப் போட்டி முடிவு தேதிக்கு மூன்று நாட்கள் இருந்தன.  அதற்கிடையில் எப்படியும் ஒரு சிறுகதை எழுதி அனுப்பி முதல் பரிசு பெற்றுவிடவேண்டும். அவ்வளவுதான்.

முத்தமிழ் விழாவில் நாடகமும் இடம்பெறுவது அவசியம்.  பீமனாக நடித்த கா.சிவத்தம்பிக்கு மேக்கப் போடுவது இலகுவானது. உயரமாக வாட்டசாட்டமாக அவர் இருந்தார். கையிலே ஒரு கதாயுதத்தை கொடுக்கவேண்டியது, அவர் பீமனாகிவிடுவார். ஆனால் அந்த ஒப்பனைக் கலைஞர் தன் முழுத் திறமையையும் காட்டத் தீர்மானித்துவிட்டார். பீமன் அணிவதற்கு முத்துப் பதக்கம், கல்அட்டிகை, ரத்தினமாலை, ஒட்டியாணம் எல்லாம் வேண்டுமென்றார். அவற்றை சேகரிப்பது என் வேலை. சிவாஜி பாராட்டவேண்டுமென்றால் கொஞ்சம் பாடுபடத்தானே வேண்டும்..

சிறுகதைப் போட்டியில் எனக்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டதால் நான் சிவாஜியிடமிருந்து தங்கப் பதக்கம் பெறுவது உறுதியாகிவிட்டது. விழாவில் கலந்துகொள்ள வேறு புகழ்பெற்ற எழுத்தாளர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள். சிவாஜி கணேசனுக்கு தினகரன் பத்திரிகை ’கலைக்குரிசில்’ பட்டம் அளித்தது இந்த விழாவில்தான். அந்தப் பட்டத்தை அளித்தவுடனேயே எல்லோரும் மறந்துவிட்டார்கள். தினகரன் பத்திரிகை மட்டும் ’கலைக்குரிசில் சிவாஜி கணேசன்’, ’கலைக்குரிசில் சிவாஜி கணேசன்’ என்று விடாமல் எழுதித் தள்ளியது.

சிவாஜி மேடைக்கு வந்தது ஞாபகத்தில் வருகிறது. வெள்ளை ஆடை அணிந்து சற்று தோள்கள் முன்னே வளைய அவருடைய கவர்ச்சியான சினிமா நடையில் நடந்து வந்து மேடையில் ஏறினார். சிவாஜி அப்போது புகழின் உச்சியில் இருந்தார். அவர்  தோன்றியதும் எதிர்பாராத காரியம் ஒன்று நடந்தது. கீழே சபையில் இருந்தவர்கள் பாய்ந்து பாய்ந்து மேடையில் ஏறிவிட்டார்கள். பாதுகாப்புக்காக நின்ற இரண்டு பொலீஸ்காரர்கள் தடிக்கம்புகளால் அவர்களை அடித்து விரட்டினார்கள். எனக்கு நடுக்கம் பிடித்தது. சிவாஜியை ஒருமுறை தொட்டுப் பார்த்தவருக்கு கிடைத்த அடி அவர் வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாத ஒன்றாக இருந்தது. 25 வயது இளைஞன். ஒருவனுடைய சேர்ட் சுக்கு நூறாக கிழிந்துவிட்டது. அப்போதும் அவன் மேடையில் முன்னேறினான். அவன் முதுகில் ’பளார் பளார்’ என்று அறைகள் விழுந்தபடியே இருந்தன. பின்னர் அவனைக் காணவில்லை. திடீரென ஓர் எண்ணம் எழுந்தது. என் துடைகள் பக்கவாட்டில் நடுங்கின. தங்கப் பதக்கம் அப்படி ஒன்றும் உலகத்துக்கு அவசியமானதாக எனக்கு தோன்றவில்லை. என்னை பிடித்து பொலீஸ்காரர்கள் உதைத்தால் நான் அவர்களுக்கு என்ன சொல்வது. ’நான் சிவாஜி கணேசனிடம் தங்கப் பதக்கம் பெறுவதற்காக நிற்கிறேன்’ என்று கூறினால்யார் நம்பப்போகிறார்கள்.   

ஒருவழியாகக் கூட்டம் அமைதியடைந்தது. சிவாஜி, அவருடைய வாழ்நாளில் இப்படியான ஓர் ஆக்கிரமிப்பை சந்தித்திருக்கமாட்டார். தன் பேச்சை அவசரமாகமுடித்தார். மாலை அணிவித்தார்கள். படம் பிடித்தார்கள். ஆனால் எனக்கு அவர் தங்கப் பதக்கம் தரவேண்டும் என்பதை மறந்துவிட்டார்கள்.  இது யார் குற்றம்? விதியின் குற்றமா? அல்லது விதியின் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் வீணர்களின் குற்றமா? இப்படி வசனங்கள் தாறுமாறாக என் மூளைக்குள்ஓடியபோதேசிவாஜி மேடையிலிருந்த திரைக்கு பின்னால் ஓடி மறைந்துவிட்டார்.

மேடையின் கீழ் இருந்தபடியே நூற்றுக் கணக்கான பார்வையாளர்கள் தங்கள் ஆட்டோகிராஃப் புத்தகங்களை நீட்டினார்கள். அவற்றை எல்லாம் சேகரித்து கையெழுத்துப் பெற்ற பிறகு அவை திருப்பிக் கொடுக்கப்படும் என அறிவித்து சபையோரை ஆறுதல் படுத்தினார்கள். எனக்கு வாழ்க்கையில் பிறகு கிடைக்க முடியாத ஓர் ஐந்து நிமிடம் ஆரம்பமானது. சிவாஜி நாற்காலியில் அமர்ந்திருந்தார். எனக்கும் அவருக்குமிடையில் பத்து அடி தூரம்தான். ஒரு நத்தையை தொடருவதுபோல கீழே பார்த்தபடி மெல்ல மெல்ல அவரை நோக்கி நகர்ந்தேன். தொட்டுவிடலாம் என்று நினைத்தபோது சிவாஜி சட்டென்று எழுந்து நிற்க அவரை யாரோ அழைத்துப் போனார்கள். எழுத்தாளர் அகிலன் மேடையில் இரண்டு கைகளையும் அகலவிரித்து  பேசிக்கொண்டிருந்தார். திடீரென அகிலன் பரிசு வழங்குவார் என அறிவித்தார்கள். நான் மேடையில் சென்று குற்றவாளிபோல குனிந்து நிற்க தங்கப் பதக்கத்தை அகிலன் என்னுடைய புது டெர்ரிலின் சட்டையிலே குத்திவிட்டார். 

சேர்ட்டிலே தொங்கிய தங்கப் பதக்கம் எழுந்து எழுந்து ஆட நான் மேடையின் பின்பக்கம் சென்றேன். அங்கே இன்னொரு எதிர்பாராத காட்சி நடந்துகொண்டிருந்தது. பின்னாளில் பி.பி.சி தமிழோசையில் பிரபலம் பெறப்போகும் சுந்தரலிங்கம் அன்றைய நாடக வேடத்தை கலைக்காமல், எப்பவோ செத்துப்போன ஒரு புலியின் தோலால் உடம்பை மூடிக்கொண்டு, துரியோதனன் அமர்ந்திருந்த அதே சிங்காதனத்தில் காலுக்குமேல் கால்போட்டு வீற்றிருந்தார். சபையோரிடம் சேகரித்த அத்தனை ஆட்டோகிராஃப் புத்தகங்களும் அவர் முன் பிரமிட் கட்டிடம் போல மாபெரும் குவியலாககிடந்தது. அவர் ஆறுதலாக ஒவ்வொரு புத்தகமாக எடுத்து ஒரு வெள்ளைப் பக்கத்தை திறந்துவைத்து அதில் ’சிவாஜி கணேசன்’ என்று கையெழுத்துப் போட்டுக்கொண்டிருந்தார். பின்னர் புத்தகங்கள் அந்தந்த சொந்தக்காரர்களிடம் சேர்ப்பிக்கப்பட்டன. 

இன்று 55 வருடங்கள் கழித்து அந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து பார்க்கிறேன். சிவாஜி அத்தனை சமீபமாக இருந்தபோதும் அவருடன் ஒரு வார்த்தை பேச எனக்கு கிடைக்கவில்லை. தொட்டுப் பார்க்கவும் முடியவில்லை. அவரிடமிருந்து தங்கப் பதக்கம் பெறும் சந்தர்ப்பமும் அநியாயமாகப் பறிபோனது. இன்று கலைக்குரிசில் சிவாஜி கணேசன் இல்லை. 16 சைஸ் ஒட்டியாணத்தை 48 சைஸ் இடுப்பிலே கட்டி பீமனாக நடித்த கா.சிவத்தம்பி இல்லை. க.கைலாசபதி இல்லை. சிவாஜியிடம் கையெழுத்துப் பெறுவதே வாழ்வின் ஒரே லட்சியம் என்றிருந்த நண்பன் பரஞ்சோதி இல்லை. நூற்றுக்கணக்கான  கையெழுத்துக்களை அயராமல் போட்டுமுடித்த பி.பி.சி. சுந்தரலிங்கம் இல்லை. ஆனால் அவர் ’சிவாஜி கணேசன்’ என்று மணிமணியாக போட்டுத்தள்ளிய கையெழுத்துகளில் ஒன்றிரண்டு  கண்ணாடிச் சட்டத்தில் மாட்டப்பட்டு எங்கோ ஒரு வீட்டுக் கூடத்தை  இன்றைக்கும் அலங்கரிக்கலாம்.

Nantri :http://amuttu.net/

No comments: