மேலோங்கும் விஞ்ஞானம் - எம்.ஜெயராமசர்மா ... மெல்பேண்

.

விலங்காக இருந்தவனே 
      விந்தை பல செய்கின்றான்
நிலம்யாவும் அவன்நினைக்கின்
      நீள்சொர்க்கம் ஆகிவிடும்
நலம்காணும் எண்ணத்தில்
      நாளெல்லாம் உழைகின்றான்
அவன்கண்ட விஞ்ஞானம்
       அகிலத்தை ஆளுதிப்போ

விஞ்ஞானம் வளர்ந்ததனால்
     அஞ்ஞானம் அகன்றதென்பர்
நல்ஞான வளர்ச்சியினால்
     நாடெல்லாம் உயர்ந்ததென்பர்
கல்ஞானம் எனப்பெற்றோர்
     கண்டிப்பார் பிள்ளைகளை
விஞ்ஞானம் தானிப்போ
    மேலோங்கி நிற்கிறது

காலைமுதல் மாலைவரை
    கண்திறந்தால் விஞ்ஞானம்
வேலைசெய்யும் இடமெல்லாம்
    விதம்விதமாய் விஞ்ஞானம்
நாலுபேரும் கூடிநின்று
     நயப்பதுவும் விஞ்ஞானம்
நம்வாழ்வில் காண்பதெல்லாம்
    நனிசிறந்த விஞ்ஞானம்


மருத்துவத்திலும் விஞ்ஞானம்
  மாட்டுத்தொழுவத்திலும் விஞ்ஞானம்
கருத்துக்களிலும் விஞ்ஞானம்
   காணுமிடத்திலெல்லாம் விஞ்ஞானம்
அடுக்களையிலும் விஞ்ஞானம்
    ஆசிரியர்வகுப்பறையிலும் விஞ்ஞானம்
கொடுத்துநிற்பதுவும் விஞ்ஞானம்
   யாவர்மனத்தையும் பிடித்துநிற்பதும் விஞ்ஞானம்

தொட்டிலிலும் விஞ்ஞானம்
   யாவர்கட்டிலிலும் விஞ்ஞானம்
தொட்டுநிற்கும் இடமெல்லாம்
   துணிந்து நிற்குதுவிஞ்ஞானம்
தட்டுமுட்டுச் சாமான்கள்
    சகலதிலும் விஞ்ஞானம்
சதிராடி   நிற்குதிப்போ 
    புதிரான விஞ்ஞானம்

விஞ்ஞானம் தானிப்போ
  மேலோங்கி நிற்கிறது
எஞ்ஞான்றும் அதன்துணையே
  எல்லோரும் நாடுகிறார்
தொல்ஞானம் தானிப்போ 
   சுடர்விட்டு நிற்கிறது
நல்ஞான வழிசென்றால்
   யாவர்க்கும் உய்வுண்டாம்

ஆக்கவழி தன்னில்
    அனைத்துமே நிகழ்ந்துவிடின்
காக்குகின்ற காவலென
    கரம்கொடுக்கும் விஞ்ஞானம்
பேய்க்குணத்துள் விழுந்துநின்று
     பித்தநிலை கண்டுவிடின்
சாய்த்துவிடும் என்பதனை
     சகலருமே அறிந்துநிற்போம்

வரம்கொடுக்கும் விஞ்ஞானம்
     வாழ்வளிக்கும் விஞ்ஞானம்
உரம்கொடுக்கும் விஞ்ஞானம்
      உய்ர்த்திவிடும் விஞ்ஞானம்
தரம்கெட்டுப் பார்த்துவிடின்
       தலையறுக்கும் விஞ்ஞானம்
சிரம்தாழ்த்திக் கேட்கின்றேன்
      திசைமாறிப் போகாதீர் !

அறிவார்ந்த கலையாவும் 
      அனைத்துமே விஞ்ஞானம்
நெறிசார்ந்த நிலையாவும்
      நீழ்கின்ற மெஞ்ஞானம்
பொறிசார்ந்த அனைத்தையுமே
      புனைவதோ விஞ்ஞானம்
பொறியைந்தை அடக்கிவிடின்
      புலப்படுமே மெஞ்ஞானம் 

No comments: