புகழ் மலர்கள்!

.

எல்லோரும் தேடினாலும்
சிலரை மட்டுமே தேடிச் செல்வது...

எல்லோரும் விரும்பினாலும்
சிலரை மட்டுமே விரும்பிச் செல்வது..

எல்லோரும் பின்தொடர்ந்தாலும்
சிலரை மட்டுமே பின்தொடர்வது..

எல்லோரும் சிறைபிடிக்க நினைத்தாலும்
சிலருக்கு மட்டுமே சிறைப்படுவது..

!பு  க  ழ்!

ஒருவன் எவ்வளவு உயராமானவன் என்பதைவிட  அவன்
எவ்வளவு உயர்வானவன் என்பதையே காலம் திரும்பிப்பார்க்கிறது.

ஒருவன் எவ்வளவு அழகானவன் என்தைவிட  அவன்
எவ்வளவு அழகான பண்புகளைக்கொண்டவன் என்பதையே இவ்வுலகம் எண்ணிப்பார்க்கிறது.

ஒருவன் வாழும்போது எவ்வளவோ இடங்களை ஆளுமை என்ற பெயரில் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அதையெல்லாம்விட.... 
அவன் இறந்தபின்...

எவ்வளவு மனங்களில்..
எவ்வளவு இடங்களை...

தன் அன்பால், ஆளுமையால் ஆக்கிரமித்திருந்தான் என்பதே நினைவில் கொள்ளத்தக்க சிறப்பான பண்பாக அமைகிறது..

ஒருவன் உடலும், உயிரும் இருக்கும்போது அவன் காதுபட பேசப்படும் புகழுரைகள் பெரும்பாலும் சுயநலம் கருதியதாகவும், பொய்மை நிறைந்தவையாகவுமே விளங்குகின்றன.

ஆனால்..

ஒருவன் மறைவுக்குப் பின்னர் பேசப்படும் புகழுரைகளில் சுயுநலம் மறைந்து உண்மை மட்டுமே நிறைந்திருக்கக் காண்கிறோம்..

இதோ மறைந்த மனித மலர்களுக்காக..
மலர்ந்த புகழ் மலர்கள் இக்கூற்றை மெய்பிப்பனவாக அமைகின்றன.


காட்சி  1.

 “ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும், சிறுவரை
சென்று நின்றோர்க்கும் தோன்றும் மன்ற
களிறு மென்று இட்ட கவளம் போல
நறவு பிழிந்த இட்ட கோதுடைச் சிதறல்
வார் அசும்பு ஒழுகும் முன்றில்
தேர் வீசு இருக்கை நெடியோன் குன்றே.

புறநானூறு -114

(பாரி மறைவுக்குப் பின் நட்பினை மறவாத கபிலர் அவனுடைய மகளிரைக் கொண்டுபோகும் போது பறம்புநோக்கி நின்று பாடியது.)

அருகில் நின்று பார்ப்பவர்க்கும் தோன்றும்...
சிறிது தொலைவு சென்று நின்று பார்ப்பவர்க்கும் தோன்றும்..
“யானை மென்று போட்ட உணவினது சக்கைபோல..
மதுப் பிழிந்துபோட்ட சக்கையிலிருந்து மதுச் சேறு ஒழுகும் முற்றத்தையுடைய தேர்வழங்கும் இருக்கையையுடைய பாரியின் பறம்புமலை!
என மறைந்த பாரியை எண்ணிக் கையற்றுப் புலம்புகிறார் கபிலர்.

இப்பாடலில் தேர் வழங்கும் என்றுகூட கபிலர் சொல்லியிருக்கலாம்.. “தேர்வீசும்“ என்று சொல்லியமை பாரியின் கொடையின் மிகுதியை தெரிவிப்பதாக அமைவது பாடலுக்கு மேலும் சுவையளிப்பதாக அமைகிறது.

காட்சி -2

கோப்பெருஞ்சோழன் என்றவுடன் நினைவுக்கு வருவது பிசிராந்தையார் மட்டுமே.. ஆனால் கோப்பெருஞ்சோழன் பல நல்ல உள்ளங்களை கொள்ளையடித்தவனாவன்.
பொத்தியார் என்பவர் சோழனின் அமைச்சராவர். சோழனின் மீது மிகுந்த அன்புடையவராக இருந்தார்.
சோழன் தன் மகன்களுடன் மனம் மாறுபட்டு அவர்களிடமே நாட்டை ஒப்படைத்துவிட்டு “வடக்கிருந்து“(உண்ணாமல் வடக்குநோக்கியிருந்த உயிர்துறத்தல்) உயிர்நீத்தபோது பிசிராந்தையாருடன் பலரும் வடக்கிருந்து உயிர்நீத்தனர் என்று பாடல்கள் சான்றுபகர்கின்றன.
அப்போது சோழனோடு தானும் வடக்கிருந்து உயிர்நீக்கவிரும்பினார் பொத்தியார். பொத்தியாரின் மனைவி கருவுற்றமை அறிந்த சோழன்... நீ இப்போது வருவது முறையன்று. உனக்கு மகன் பிறந்த பிறகு என்னோடு வா என்றார். இதோ பொத்தியாரின் கண்ணீர் மலர்கள் சோழனி்ன் புகழ் மலர்களாக..

“பெருஞ்சோறு பயந்து பல் யாண்டு புரந்த
பெருங்களிறு இழந்த பைதற் பாகன்
அது சேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை
வெளிழ் பாழாகக் கண்டு கலுழ்ந்தாங்கு
கலங்கினென் அல்லனோ, யானே  பொலந் தார்த்
தேர் வண் கிள்ளி போகிய
பேர் இசை மூதூர் மன்றம் கண்டே?

புறநானூறு  220

மிகுதியான சோற்றைத் தந்து பல ஆண்டுகள் பாதுகாத்த பெரிய களிற்றுயானையை இழந்த  வருத்தத்தை உடைய பாகன், அந்த யானை இருந்து தங்கிய இரக்கமுண்டாக்கும் கூடத்தில் உள்ள கம்பம் வெறுமையாக நிற்கக் கண்டு கலங்குவான். அதுபோல நான் பொன்னால் செய்யப்பட்ட  மாலையையுடைய தேரைக் கொண்ட வளமிக்க சோழனது பெருகிய புகழை உடைய உறையூரின் மன்றத்தைப் பார்த்துக் கலங்கினேன் என்று புலம்புகிறார் பொத்தியார்.

பாடல் வழியே..
  
இந்த இரண்டு பாடல்களிலும் பாரி  கோப்பெருஞ்சோழன் என்னும் இரு அரசர்களின் ஆளுமைத்திறன் மிக அழகாகப் புலப்படுத்தப்பட்டுள்ளது..

இவ்விருவரும் வாழும்போது தாம் ஆக்கிரமித்திருந்த நிலப்பரப்பைவிட பலமடங்குஅதிகமாக இறந்தபின்பும் அன்பு உள்ளங்களில் பரப்பை ஆக்கிரமித்திருந்தார்கள் என்னும் உண்மை அறிவுறுத்தப்பட்டள்ளது.

இவர்களின் இடத்தை யாராலும் நிறைவு செய்ய முடியாது என்பதைப் புலவர்களின் கூற்று தெளிவுபடுத்துகிறது.

ஒரு மனிதன் வாழ்ந்தால் இப்படியொரு வாழ்க்கை வாழவேண்டும் இறந்தால் இப்படி நான்கு உள்ளங்களை சம்பாதித்த பின்தான் இறக்கவேண்டும் என்ற எண்ணத்தை வரவழைப்பதாக இப்பாடல்கள் அமைகின்றன.



உண்மையான புகழ் மலர்கள் ஒருவனின் கல்லறையில்தான் மலர்கின்றன என்பது எவ்வ்வ்வளவு பெரிய உண்மை!!!!!
என்பதைப் அறிவுறுத்துவனாக இப்பாடல்கள் அமைகின்றன
Nantri gunathamizh.com

No comments: