.
இரண்டாவது உலகப் போரில் ஜப்பான் நகரங்களின் மேல் அமெரிக்கா அணுக்குண்டு போட்டது; அதுவும் பணக்காரர்கள் குறைவாகவும் ஏழைகள், உழைப்பாளிகள் அதிகமாகவும் மிகவும் அடர்த்தியாகவும் குவிந்து கிடந்த இரண்டு நகரங்களைத் தேர்ந்தெடுத்து குண்டு போட்டது. குண்டு போட்ட ஐந்து நொடிகளில் ஹிரோசீமா, நாகசாகி என்ற அந்த நகரங்களில் வாழ்ந்த லட்சக்கணக்கான மக்கள் அப்படியே உருகிக் கருகிச் செத்தனர். ஐன்ஸ்டீன்தான் அணுக்குண்டைக் கண்டுபிடித்தவர். அவரே ‘போட வேண்டாம்’ என்று அமெரிக்காவைக் கேட்டுக் கொண்டார். மேலும் போரில் அணுக்குண்டின் தேவை இல்லை. ஏனென்றால் ஜப்பான் ஏற்கெனவே எல்லா இடங்களிலும் தோல்வி அடையத் தொடங்கி விட்டது. இதைச் சுட்டிக்காட்டினார் ஐன்ஸ்டீன். ஆனாலும் அமெரிக்கா கேட்கவில்லை. செய்துவிட்ட அணுக்குண்டு ‘எப்படி வேலை செய்கிறது’ என்று சோதனை செய்து பார்க்க வேண்டும்; உலகத்தின் முன்னால் தானொரு பெரிய வல்லரசு என்பதை நிலைநிறுத்த வேண்டும் என்கிற வெறி இருந்தது. எனவே போர்க்களத்திற்கே சம்பந்தமில்லாத அப்பாவி மக்களைக் கொன்றொழிக்கிறோமே என்கிற மனச்சாட்சி அணுவளவும் இன்றி ஆடிக் காட்டியது.
மக்கள் அலறி உருகிச் சாவதைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கிறார் ஆணையிட்ட அன்றைய அமெரிக்க அதிபர் ட்ரூமென். பத்திரிக்கை நிருபர்கள் அவரை அணுகிக் கேட்கிறார்கள். “அணுக்குண்டின் கதிர் வீச்சினால் இவ்வளவு மக்கள் ஒரு நொடியில் உருகிச் சாகும் காட்சியை நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?”
ட்ரூமென் பதில் கூறுகிறார் இப்படி:-
“என் வாழ்நாளிலேயே இன்றுதான் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைந்த நாள்”
நிருபர்கள் மீண்டும் கேட்கிறார்கள்:-
அந்த மக்கள் கூட்டம் ஓலமிட்டு ஓடி உருக்குலையும் காட்சி உங்கள் மனதை ஒரு சிறிதும் துன்புறுத்தவில்லையா?
ட்ரூமென் சொல்லுகிறார்:-
‘அமெரிக்காதான் உலகிலேயே பெரிய வல்லரசு நாடு என்பதை நிரூபித்துவிட்டேன். என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை’
இந்த வரலாற்று நிகழ்ச்சியை ஓஸோ ஒரு புத்தகத்தில் இப்படி வர்ணித்து விட்டு, “மனித சமூகத்தில் மிகவும் கொடூரமானவர்கள் யாரென்று கேட்டால் இந்த அரசியல்வாதிகள்தான்” என்று எழுதுவார். லட்சக்கணக்கான பொது மக்கள் ஒரு நொடியில் செத்து மடிவதைப் பார்த்து ஒரு அரசியல்வாதி தவிர வேறு யார் மகிழ்ச்சியில் மிதக்க முடியும்? அவ்வளவு வன்செயல்காரர்கள் இந்த அரசியல்வாதிகள். ஆனால் இவர்கள்தான் “மக்களுக்காக உழைக்கிற தியாகிகள், தலைவர்கள்” என்று சமூகத்தின் பெருவாரி மக்கள் மனத்தில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறார்கள். மனித சரித்திரத்தில் எவ்வளவு பெரிய நகைமுரண் இது.
இந்த வரலாற்று நிகழ்வையும் இந்தக் கருத்தையும் வகுப்பில் மாணவர்களுக்கு உணர்ச்சிகரமாகச் சித்தரித்து, ‘வகுப்பெடுப்பது என்றால் இதுதான்’ என்று அனைவரும் பாராட்டும் அளவிற்குப் பெயர் வாங்கி இருக்கிறேன்.
*
ஜப்பான் மேல் குண்டு விழுந்த நிகழ்வு குறித்து எத்தனையோ புத்தகங்களில் வாசித்திருக்கிறேன். ஆனால் முதன்முதலில் “குண்டு போட்டது சரிதான்” என்று சொல்லுகிற ஒரு புத்தகத்தை வாசிக்கிற வித்தியாசமான அனுபவம் சமீபத்தில் எனக்கு வாய்த்தது. அப்படிச் சொல்பவர் வேறு யாருமல்ல. 1965-இல் மலேசியாவில் இருந்து பிரிந்து, மிகக் குறுகிய காலத்தில் சிங்கப்பூரை நிகர வருமானத்திலும் வாழ்க்கைத்தரத்திலும் முதல் உலக நாடுகளின் வரிசையில் கொண்டு வந்து சேர்த்திருக்கும் சிங்கப்பூர் அரசின் மூத்த அமைச்சராக இன்றைக்கும் உழைத்துக் கொண்டிருக்கும் லீ குவாங் யீ (1923). இலண்டன் கேம்பிரிட்ஜ் வரை சென்று சட்டம் படித்த லீ, 1954-இல் 31-வயதில் “மக்கள் நடவடிக்கைக் கட்சி” என்றொரு அரசியல் கட்சியைத் தொடங்கி, ஐந்து ஆண்டிற்குள் சிங்கப்பூர் தேர்தலில் வெற்றி பெற்று 36-வயதில் பிரதம மந்திரியாகி விட்டார். 67 வயதுவரை பிரதம மந்திரியாக இருந்துவிட்டு 1990-இல் இருந்து மூத்த அமைச்சராகப் பணி ஆற்றிக் கொண்டிருக்கிறார். அவர் “சிங்கப்பூரின் கதை லீகுவாங் யீ-வின் நினைவு அலைகள் (1998)" என்றொரு புத்தகம் எழுதி இரண்டு தொகுதியாக வெளியிட்டுள்ளார். முதல் தொகுதியைப் படிக்கிற வாய்ப்பு இந்த ஆண்டு மே, சூனில் சிங்கப்பூர் போயிருந்தபோது கிடைத்தது. அந்தப் புத்தகத்தின் ஒரு தலைப்பு, சிங்கப்பூரை ஜப்பான் ஆக்ரமித்த நிகழ்வைப் பற்றியதாகும். அந்த நிகழ்வைச் சித்தரிக்கும்போதுதான் ஜப்பான் மேல் அணுக்குண்டு வீசியதைக் குறித்தும் பேசுகிறார். ஜப்பானின் ஆக்ரமிப்பும் அட்டூழியமும் அதன் மேல் அணுக்குண்டு வீசியது சரிதான் என்று ஒரு நல்ல அரசியல்வாதியையும் சொல்ல வைக்கக் கூடிய அளவிற்கு இருந்திருக்கின்றன என்றால் எவ்வளவு கொடூரமாக அந்த அனுபவம் அவருக்குள் ஆழப் பாதித்திருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது.
*
1941, டிசம்பர் 8-ஆம் தேதி காலை 4 மணி அளவில் ஜப்பான் சிங்கப்பூரைத் தாக்கத் தொடங்கியது. குண்டு மழை பொழிந்தது. 60 பேர் மாண்டனர். 130 பேர் காயமுற்றனர். பிரிட்டீஷ் இந்தியா, ஆஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்த படைவீரர்களான 1,30,000 பேரைக் கொண்ட பெரும் இராணுவத்தை வெறும் 60,000 ஜப்பானியப் படைவீரர்கள் தோற்கடித்தனர். “இது மிக மோசமான பேரிழப்பு, பெருந்துயர், கூடவே மிகப்பெரிய பின்னடைவு, இழப்பு” என்று இதை வின்ஸ்டன் சர்ச்சில் வர்ணித்தாராம்.
இரண்டு மாதச் சண்டைக்குப் பிறகு 1942, பிப்ரவரி 15ஆம் தேதி ஜப்பானிய இராணுவம் சிங்கப்பூரை முழுமையாகக் கைப்பற்றிவிட்டது. பிரிட்டிஷ் இராணுவம் விலகிக் கொண்டது. 2000 பேரை வைத்துக் கொண்டு 70 லட்சம் ஆசியர்களை ஆண்ட பிரிட்டீஷ்காரர்கள்தான் உலகத்திலேயே மிக உயர்ந்த மக்கள், அவர்கள் மொழிதான், அவர்கள் பண்பாடுதான் உயர்ந்தவை என்கிற கருத்துக்கள்தான் எங்கும் பரவிக்கிடந்தன. இந்தப் புனைவுகளையெல்லாம் ஜப்பான், சிங்கப்பூரில் உடைத்தெறிந்தது என்பது உண்மை. ஆசியக் கண்டத்து மக்களும் இளைத்தவர்கள் அல்லர் என்று நிறுவியது உண்மை. ஆனால் அதே ஆசியர்களான சிங்கப்பூர் மக்களை ஜப்பான் நடத்தியது பிரிட்டீஷ்காரர்களைவிடக் கொடுமையாக இருந்தது. அவர்களைவிட
“மிகவும் இரக்கமற்றவர்கள், மிகவும் விலங்குத்தனமானவர்கள், மிகவும் அநீதியானவர்கள், மிகவும் கேடானவர்கள்” என்று கொதிக்கிறார் லீ. மூன்றரை ஆண்டு காலம் சிங்கப்பூரை ஆக்ரமித்திருந்த ஜப்பானியர்கள், ஆங்கிலேயர்களைப் போலவே தங்களைத் “தாங்கள் மட்டுமே உயர்வானவர்கள்” என்று கட்டமைக்க முயன்றனர். “சூரிய தேவதையின் வாரிசுகள்” என்றும் “வடிகட்டித் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களினம்” என்றும், ‘சீன, இந்திய மற்றும் மலேசிய மக்களை விடத் தனியான வேறுபட்ட ஆசிய இனம்’ என்றும் புனைவுகளை உருவாக்கினர். அவர்கள் மொழியை, அவர்கள் பழக்க வழக்கத்தை, அவர்களுடைய சமூக மதிப்பீடுகளை வலுக்கட்டாயமாகச் சிங்கப்பூர் மக்கள் மேல் திணித்தனர்.
*
ஜப்பான் இராணுவ அமைப்பின் ஒரு பகுதியாகவே அதன் விலங்குத்தனமான கொடூரம் அமைந்திருந்தது. சிங்கப்பூருக்குச் சீனர்கள் குடிவந்த ஆண்டான 1819-இல் இருந்தே பிப்ரவரி 15-ஆம் தேதியைச் சீனர்கள் லூனார் புத்தாண்டு விழாவாகக் கொண்டாடி வருகின்றனர். அந்த நாளில் ஜப்பான் வீரர்களும், உள்ளூர் ரவுடிகளும் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டனர். பிரிட்டீஷ் நிறுவனத்திற்குச் சொந்தமான பெரிய பெரிய கடைகளையும், சேமிப்புக் கிடங்குகளையும் கொள்ளை அடித்துக் கொண்டு போயினர். பாலியல் வன்முறைகள் தலைவிரித்தாடின. பிரிட்டீஷ் படை சரண் அடைந்தவுடன், பெரிய மாளிகைகளில் வாழ்ந்த பிரிட்டீஷ் அதிகாரிகள், செல்வந்தர்கள் எல்லாம் அப்படியே விட்டுவிட்டுக் கிளம்பி விட்டனர். அந்த மாளிகைகளை எல்லாம் கொள்ளை அடித்ததோடு, ஆக்ரமித்துக் குடியேறவும் செய்து விட்டனர். சிறு சிறு தவறுகளுக்கும் கடுமையான தண்டனைகளை நடுத்தெருவில் நிறைவேற்றுவதுதன் மூலம் எங்கும் எதிலும் எப்பொழுதும் அச்சத்தை நிரப்பிப் பரப்பினர். இதன் உச்சகட்டமாக நடந்த நிகழ்வொன்றை எடுத்துக்காட்டுகிறார் லீ.
சீனர்கள் அனைவரும் ஜாலன் பேசர் விளையாட்டு அரங்கத்திற்கு வந்து பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர். ஆயிரக்கணக்கான சீனக்குடும்பத்தினர் அந்தச் சிறு பகுதியில் கூடிக் கூட்டத்தில் மூச்சுத் திணறிக் கொண்டு கிடந்தனர். ஒவ்வொருவரும் சோதனை செய்யப்பட்டு அழிக்கமுடியாத மையினால் “சோதனை முடிந்தது” என முத்திரை குத்தப்பட்டனர். வெறுப்பின் உச்சத்தில் மனம் போன போக்கில் எடுக்கிற முடிவுகள், எத்தனை எத்தனை பேருடைய வாழ்க்கையை மிக எளிதாக முடித்து வைத்து விடுகிறது என்பது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது” என்கிறார் லீ.
“கலகக்காரர்களைத் துடைத்தெடுத்தல்” என்கிற ஜப்பானிய இராணுவத் திட்டத்தின் கீழ், பிப்ரவரி 18-ஆம் தேதி “சீன இனத்தைச் சார்ந்த 18-இல் இருந்து 50-வயதுக்கு உட்பட்ட எல்லா ஆண்களும் சோதனைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஐந்து ஆள் திரட்டும் மையத்திற்குத் தாங்களே வந்து விட வேண்டும்” என்று துண்டுச் சீட்டு அடித்துத் தெரிவித்தனர். மேலும் இராணுவ வீரர்கள் மூலமாகத் தெருத் தெருவாக ஒலிபெருக்கி மூலமாகவும் அறிவித்தனர். கூடவே வீடு வீடாகப் போயும் உள்ளே புகுந்து இழுத்து வந்தனர். இப்படித் திரட்டப்பட்ட சீன ஆண்களை பிப்ரவரி 22-ஆம் தேதி வரை மையத்தில் அடைத்து வைத்தனர். பிறகு ஏறத்தாழ 50 லாரிகளில் அவர்களைப் பின்னால் இழுத்துக் கையைக் கட்டி ஏற்றினர். சில பத்து மைல் தூரத்தில் கிழக்குக் கடற்கரையில் இருந்த “தானா மேரா பேசார்” கடற்கரைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து கடலை நோக்கி நடந்து செல்லுமாறு கட்டாயப்படுத்தப் பட்டனர். அவ்வாறு அவர்கள் விதித்தப்படி நடந்து போகும் போது, ஜப்பானியர்களின் இயந்திரத் துப்பாக்கியால் படுகொலை செய்யப்பட்டனர். அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு, ஒவ்வொரு பிணத்தையும் காலால் உதைத்தனர். துப்பாக்கி முனையால் குத்தினர். மற்ற வழிகளிலும் தவறாகப் பயன்படுத்தினர். குழி தோண்டிப் புதைக்கக் கூட இல்லை. அப்படியே போட்டு விட்டுத் திரும்பினர். பிணங்கள் சிதைந்து கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டன. வியக்கத் தக்க முறையில் இந்தக் கொடுமையிலிருந்து தப்பித்த சிலர் இதை விவரித்து எழுதி உள்ளனர். பின்னாட்களில் ஜப்பான் இவ்வாறு 6000 இளம் சீனர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை ஒத்துக் கொண்டுள்ளது. ஆனால் ஜப்பான் ஆக்ரமிப்பு ஆட்சி முடிந்த பிறகு, சீன வணிகக் கழகம் அமைத்த ஒரு குழு புதைத்த உடலை அகழ்ந்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டது. சிக்லேப், புங்கோல் சாங்கி ஆகிய இடங்களில் தோண்டிப் பார்த்ததில் ஏறத்தாழ 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை சீன ஆண்கள் கொல்லப்பட்டுள்ளனர் என மதிப்பிட்டுள்ளது. இதைப் படித்த போது நமது காலகட்டத்தில் இலங்கைப் பேரினவாத அரசு, தமிழர்கள் மீது நடத்திய, நடத்திக் கொண்டிருக்கும் அழித்தொழிப்பு அரசியல்தான் நினைவுக்கு வந்து வருத்தியது. கொலைகார அரசியல் மனித நாகரிகத்தில் இருந்து அழியவே அழியாதா? இதுதான் இவனுக்கு விதிக்கப்பட்ட விதியா?
*
இவ்வாறு சீன இளைஞர்களைச் சுட்டுக் கொன்றதை அந்த ஏகாத்திபத்திய இராணுவம் சட்ட ஒழுங்கை நிலைநிறுத்துவதற்காகவும், ஜப்பானுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காகவும் மேற்கொண்டதாக நியாயப்படுத்தியது இன்னும் கொடுமை. உண்மையில் இது சீனர்களுக்கு எதிரான பழிவாங்கும் கோழைத்தனமாக நடவடிக்கையாகும். போர்க்களத்தில் இந்தக் கொலைகள் நடக்கவில்லை; போர்வீரர்கள் மேல் இது நிகழவில்லை; அப்பாவிப் பொதுமக்கள் மேல் நிகழ்த்தப்பட்டது. இப்படி நகரத்தில் மட்டுமல்ல, கிராமங்களிலும் நூற்றுக்கணக்கான சீன இளைஞர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
இந்தக் கொலைகாரர்களுக்குச் சிங்கப்பூர் முழுவதும் “இளைப்பாறும் வீடு” என்று முப்பதுக்கும் மேல் அங்கங்கே வேலி போட்ட வீடுகள். அந்த வீடுகளில் ஜப்பான் மற்றும் கொரியா நாட்டைச் சார்ந்த இளம் பெண்கள் குவிக்கப்பட்டிருந்தனர். அந்தப் பெண்களிடம் பாலியல் சுகம் தேடி, 200க்கும் மேலான ஜப்பானிய படைவீரர்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்ததை மிதிவண்டியில் தான் பார்த்துக் கொண்டே வேகமாகப் போனதைப் பதிவு செய்கிறார் லீ. இத்தகைய ஏற்பாடு செய்த பிறகு, சிங்கப்பூர் முழுவதும் படைவீரர்கள் பாலியல் பலாத்காரம் செய்வது கொஞ்சம் குறைந்தது என்றும் குறிக்கிறார். ஈழத் தமிழ்ப் பெண்கள் மேல் சிங்கள இராணுவம் நிகழ்த்திய பாலியல் பலாத்காரக் கொடுமைகள் மனதில் தோன்றித் துன்புறுத்துவதைத் தடுக்க முடியவில்லை.
இவ்வாறு ஜப்பான் நடவடிக்கைகளை அணுக்கமாகக் கவனித்து அவர்கள் உலகில் சிறந்த போர்வீரர்கள் என்பதைப் போலவே, எதிரிகளின் மேல் அவர்கள் மேற்கொள்ளும் வெறுப்பும் கொடூரமும் ஜெங்கீஸ்கானையும் அவன் படைவீரர்களையும் மிஞ்சக் கூடியது; ஈவிரக்கமற்றது என்று கணிக்கிறார். இப்படிக் கணிக்கிற இடத்தில்தான் லீ கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்:
ஹிரோசீமா, நாகசாகி மேல் போட்ட இரண்டு அணுக்குண்டுகள் தேவைதான் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. போடாமல் இருந்திருந்தால் லட்சக்கணக்கான மலேய இனத்தினரும், சிங்கப்பூர் சீன இனத்தினரும் ஏன் லட்சக்கணக்கான ஜப்பானியர்கள் உட்பட அழிய நேர்ந்திருக்கும்.
பேரரசனை வழிபடுகிற வீரமரபைக் கொண்டாடுகிற பண்பாட்டைக் கோட்பாடாகவே வளர்த்து வைத்திருப்பதனால், பேரரசனுக்காகப் போர்க்களத்தில் இறப்பதுதான் மேலுலகம் அடையவும் கடவுளாகவும் எளிய வழி என நம்புகின்றனர். அதனால் போர்க்களத்தில் இறந்தவர்களின் சாம்பல் டோக்கியோவின் புறநகர்ப் பகுதியிலுள்ள ‘யாசுக்குனி’ என்ற கோயிலில் எடுத்துப் பேணப்படுகிறது.
*
ஆகஸ்டு 6-ஆம் தேதி குண்டு விழுந்தது. ஆனால் 11-ஆம் தேதியிட்ட நாளிதழில் செய்தி வந்தபிறகு தான் சிங்கப்பூரில் பலருக்கும் தெரிந்தது. இதைத் தொடர்ந்து இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. மூன்றரை ஆண்டுகால ஜப்பான் ஆக்ரமிப்பிலிருந்து சிங்கப்பூருக்கு விடுதலை கிடைத்தது. ஆனாலும் இந்த மூன்று ஆண்டுதான் தனது வாழ்க்கையில் மிக முக்கியமான ஆண்டுகள் என்கிறார் லீ. இந்த ஆக்ரமிப்பாளர்கள்தான் மனித சமூகம் குறித்தும், மனிதர்களின் குணநலன் மற்றும் ஆசைகள் குறித்தும் மிகவும் ஆழமாகவும் நுட்பமாகவும் புரிந்து கொள்ள வழி ஏற்படுத்திக் கொடுத்தனர் என்கிறார். அரசு ஆளுகை என்பது என்ன, அதிகாரம் என்பது என்ன என்பதைப் புரிந்து நடைமுறைப்படுத்துவதற்கு அந்தக் காலத்தில் பெற்ற அனுபவம்தான் அடிப்படை என்கிறார். ஒட்டுமொத்த சிங்கப்பூர் சமூகமும் ஈவு இரக்கமற்ற, பயத்தைப் பரப்பிய அந்த இராணுவத்திற்கு உடனே அடிபணிந்து போகக் கற்றுக் கொண்டது ஆச்சரியமாக இருந்தது எனத் தெரிவிக்கிறார். அதனால்தான் இன்றும்கூட, “தண்டனை குற்றத்தைக் குறைக்காது, எனவே குற்றவாளிகள் மேல் மென்மையான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்” என்று வாதங்களின் மேல் நம்பிக்கை அறவே இல்லை என்கிறார். இருத்தல் என்பது இராணுவ ஆட்சியின் கீழ் நிலையற்ற ஒன்றாக மாறிவிடும் சூழலில், எதிர்பாராத நிகழ்வுகளின் சந்தர்ப்ப விளையாட்டாக வாழ்க்கை மாறி விடுவதைக் கண்கூடாகக் கண்டேன். எந்தப் பல்கலைக்கழகமும் கற்றுக் கொடுக்க முடியாத பல விஷயங்களை இந்த மூன்றரை ஆண்டுகளில் அதிகமாகக் கற்றுக் கொண்டேன் என்கிறார்.
போருக்குப் பிறகு, போர்க் குற்றவாளிகள் என்று 260 பேர் விசாரிக்கப்பட்டார்கள். ஆனால் 100 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்கள். இதில் இன்னும் ஒரு செய்தி. தாங்கள் நிகழ்த்திக் காட்டிய தீமைகளுக்கு எப்பொழுதோ ஜெர்மனி உலக அரங்கில் மன்னிப்பு கேட்டுக் கொண்டது. ஆனால் ஜப்பானை ஆண்ட லிபரல் டிமாக்கிரட்டிக் அரசும் சரி, பெரும்பாலான கல்வியாளர்களும் சரி, அரசியல் மற்றும் ஊடகவாதிகளும் சரி, இந்தத் தீமைகளைக் குறித்துப் பேசுவதையே தவிர்த்து வருகின்றனர். காலத்தின் கையிலும், தூசிபடிந்த ஆவணங்களிலும் மக்கி, இந்தச் செயல்கள் மறக்கப்பட்டு விடும் என்று நம்புகின்றனர். ஆனால் 1992-இல் லிபரல் டிமாக்கிரட்டிக் அல்லாத ஓர் அரசு பதவிக்கு வந்த பிறகுதான் பிரதம மந்திரி ‘மோரிஹிரோ ஹோசோகாவா’ தகுதியில்லாத ஒரு மன்னிப்பைக் காலங்கடந்து தெரிவித்துள்ளார்.
*
லீ-யினுடைய நினைவு அலைகளைப் படிக்கப் படிக்க இன்றைய இலங்கையில் நடக்கும் கொலைகார அரசியல் தலைமைதான் திரும்பத் திரும்ப எனக்குள் காட்சியாகிக் கொண்டே இருந்தது. கூடவே பிரதமர் லீ, மலேயாவுடன் சேர்ந்தே இருந்தால் மலேசியர் பெரும்பான்மையாகி விடுவர்; சீனர்கள் சிறுபான்மையாகி விடுவார்கள். பெரும்பான்மைப் பலம் மூலம், வருகிற காலங்களில் சீனர்களின் வாழ்வாதாரம், அதிகார வாழ்வு எல்லாம் பறிக்கப்பட்டு விடும் என்பதை ஆழமாக உணர்ந்துள்ளார். இந்நிலையில் மலேசியர்களுக்கும் சீனர்களுக்கும் நடந்த இனக்கலவரத்தை முன்னிறுத்திச் சீனர்களுக்கான தனிநாட்டை அது எவ்வளவு சிறிதாக இருந்தாலும் ‘சிங்கப்பூர்’ என்று உருவாக்கி விட்டார். சிங்கப்பூரில் 80% சீனர்கள். ஏறத்தாழ 7% மலேசியர். 5% இந்தியர். தனது தேசத்தில் மலேசியர்களைச் சிறுபான்மையினர் என்று மாற்றி விட்டார். எவ்வளவு பெரிய நுண் அரசியலை அவருக்கு நிகழ்த்திக் காட்ட முடிந்திருக்கிறது என்று வியக்கத் தோன்றுகிறது. இந்தக் கணக்கு ஏன் ஈழத்தமிழர்களுக்கு அன்றைக்கே புரியாமல் போய்விட்டது? பெரும்பான்மை பலம் கொண்டு உரிமைகள் பறிக்கப்பட்டு விடும் என்கிற முன் யோசனை ஏன் இல்லாமல் போய் விட்டது? சிங்கப்பூருக்கு வெளியே சீனர்களுக்கென்று ஒரு நாடு, ஒரு ஆட்சி, ஒரு அதிகார அரசு இருந்தது. ஈழத் தமிழர்களுக்கும் அப்படியொரு தமிழ்நாடு, இலங்கைக்கு வெளியே இந்தியாவில் உருவாகியிருந்தால் அவர்களும் அப்படி யோசித்திருப்பார்களோ? 1938-இல் ‘தமிழ்நாடு தமிழர்க்கே’ என்று முழங்கிய பெரியாரும், நாம் தமிழர் இயக்கம் கண்ட ஆதித்தனாரும், தமிழ்த் தேசிய அரசியல் நடத்திய ம.பொ.சிவஞானமும் தங்கள் முயற்சியில் வெற்றி பெறாமல் போனதுதான் தமிழினத்தின் இன்றைய எல்லா அவலத்திற்கும் அடிப்படையாக அமைந்து விட்டதோ? இப்படியெல்லாம் என்னை எண்ண வைத்தது அந்தப் புத்தகம்.
Nantri :http://www.keetru.com/
No comments:
Post a Comment