தமிழ் சினிமா

MailPrint

மூன்று பேர் மூன்று காதல்

பல வித்தியாசமான படங்களை இயக்கிய வசந்த் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் வந்திருக்கும் திரைப்படம் தான் "மூன்று பேர் மூன்று காத‌ல்".
ஊட்டியில் மென்பொருள் பொறியாளராக இருக்கும் விமல் தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் லாசினியை காதலிக்கிறார்.
லாசினிக்கு ஏற்கனவே ஒருவருடன் நிச்சயமாகி திருமணம் நின்று விடுகின்றது. அதை சாதகமாக்கி காதலை ஏற்க வருகிறார்.
ஒரு கட்டத்தில் வெளியூர் செல்லும் விமல் அங்கு இரு காதல் ஜோடிகளின் தியாகமயமான வாழ்க்கையை அறிந்து தனது காதல் சுயநலமானது என்று முறிக்கிறார். யார் அந்த காதல் ஜோடி என்பது பிளாஷ்பேக்.
ஒரு காதல் ஜோடி சேரன்-பானு, மற்றொரு ஜோடி அர்ஜுன்-ரித்விக். இனி அவர்கள் கதை... சேரன் சமூக சேவகர். கஷ்டப்படுவோருக்கு ஓடோடி உதவுகிறார்.
திருட்டு தம்பி, அவனுக்கு உடந்தையாக இருக்கும் தந்தை என்று தவிக்கும் பானு குடும்பத்தில் புகுந்து இருவரையும் திருத்துகிறார் சேரன். இது அவர் மேல் பானுவை காதல்பட வைக்கிறது.
ஆனால் சேரனுக்கு அதில் விருப்பமில்லை. சமூக சேவை பணிகளுக்காக வாழ்வையே அர்ப்பணித்திருக்கிறார். காதல் தோல்வியான பானுவும் அந்த இயக்கத்தில் சேர்கிறார்.
நீச்சல் பயிற்சியாளர் அர்ஜுனும், அவரிடம் நீச்சல் படிக்கும் சுர்வினும் காதலிக்கின்றனர். சுர்வினை சர்வதேச போட்டிக்கு அனுப்ப கடும் முயற்சி எடுக்கிறார் அர்ஜுன். அது நிறைவேறியதா என்பது படத்தின் இறுதி முடிவு.
மூன்று காதலிலும் சேரன்-பானு காதல் முந்துகிறது. சமூக சேவகர் கதாபாத்திரத்தில் சேரன் வாழ்கிறார். பொலிஸ் அடியை தொலைக்காட்சியில் காட்டி பானு தந்தையை திருத்துவது, தந்தையை வெறுக்கும் மகளை அவரோடு சேர்த்து வைக்க முயன்று அவமரியாதைகள் சுமப்பது என்று மனதில் வியாபிக்கிறார்.
விபத்தாகி மருத்துவமனையில் படுக்கையிலும் காதலியை சர்வதேச போட்டிக்கு அனுப்ப துடிக்கும் அர்ஜுன் ஈர்க்கிறார்.
காதலனுக்காக சாதிக்க துடிக்கும் சுர்வினிடம் லட்சிய வெறி. ஆனால் இவர்கள் காதல் மட்டும் சத்தமின்றி நகர்கிறது.
லாசினியை காதல் வயப்படுத்த செய்யும் விமலின் சிறு சிறு சேஷ்டைகள் ரசனை. தம்பி ராமையா, அப்புக்குட்டி, சத்யன், ஜான்விஜய், ஆடுகளம் நரேன் கதாபாத்திரங்களும் நேர்த்தி.
மூன்று காதலின் வெவ்வேறு தன்மைகளை அழுத்தமான திரைக்கதையில் நகர்த்துகிறார் இயக்குனர் வசந்த். சுவாரஸ்யங்கள் இல்லாதது குறை.
யுவன் சங்கர் ராஜாவின் இரைச்சல் இல்லாத பின்னணி இசை நெஞ்சுக்குள் ஊடுருவுகிறது. போஜன் கே. தினேஷ் கமெரா மருதம், முல்லை, நெய்தல் நிலங்களின் வித்தியாசம் காட்டுகிறது.
ஆகமொத்தத்தில், "மூன்று பேர் மூன்று காதல்" படத்தை, "முடிந்தால், முடிந்தவரை பார்"க்கலாம்!நன்றி விடுப்பு