நெடுநல்வாடையை நுகர வாருங்கள் - 5 கீதா மதிவாணன்

.


அரசனின் அரண்மனையைத் தேர்ந்த அனுபவமும் தொழிலறிவும் வாய்ந்த கலைஞர்கள் அமைத்த விதத்தை அழகுபட விவரிக்கும் வரிகள்...

நெடுநல்வாடைப் பாடல் (72-81)
……………………………………மாதிரம்
விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்
இருகோல் குறிநிலை வழுக்காது குடக்குஏர்பு
ஒருதிறம் சாரா அரைநாள் அமயத்து
நூல்அறி புலவர் நுண்ணிதின் கயிறுஇட்டு
தேஎம் கொண்டுதெய்வம் நோக்கி
பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்ப மனைவகுத்து
ஒருங்குஉடன் வளைஇஓங்குநிலை வரைப்பின்
பருஇரும்பு பிணித்துசெவ்வரக்கு உரீஇ
துணைமாண் கதவம் பொருத்திஇணைமாண்டு


விரிந்த கதிர் பரப்பும் கதிரவன்
மேற்கு நோக்கி மேற்செல்கையில்
ஒருபக்கம் நிழல் சாரா வேளையில்
இருகோலினை நிலத்தில் ஊன்றி
வருநிழல் மாறாதிருக்கும்
நல் உச்சிப்பொழுதொன்றில்

நூல் படித்த அறிஞர்கள்
நூல் பிடித்து திசை குறித்து
திசை குறிக்கும் தெய்வந்தொழுது
தெய்வநிகர் மன்னனுக்கு
மனையும் வாயிலும் மண்டபமும் வகுத்து
வகுத்ததனைத்தையும் மதிலால் வளைத்து
வளைத்த மதிலின் மத்தியில்
அரக்கு வண்ணம் கொண்டு
பருத்தக் கதவுகள் இரண்டு
இரும்பாணிகள் கொண்டு நிலையாய்
இணைத்துப் பொருத்தினர் நிலையோடு!

நாளொடு பெயரிய கோள்அமை விழுமரத்து
போதுஅவிழ் குவளைப் புதுப்பிடி கால் அமைத்து
தாழொடு குயின்ற போர் அமை புணர்ப்பின்
கைவல் கம்மியன் முடுக்கலின் புரைதீர்ந்து
ஐயவி அப்பிய நெய்யணி நெடுநிலை
வென்றுஎழு கொடியொடு வேழம் சென்றுபுக
குன்று குயின்றன்ன ஓங்குநிலை வாயில் (82-88) 
 
உத்தம நட்சத்திரமாம்
உத்திரத்தின் பெயர்கொண்ட
உத்திரப் பெருமரத்தாலான
அக்கதவுகளின் இருமருங்கிலும்
மொக்கவிழும் குவளைப்பூப்போலும்
பிடிகளை  அழகுபடப் பொருத்தி
வளியோ உளியோ நுழையாவண்ணம்
துளியிடைவெளியின்றி முடுக்கினர்,
தேர்ந்த தொழிலறி தச்சர்!  
உயவுக்காய் கடுகின் நெய்தடவி
உயர்ந்திருந்த நிலைகளினூடே
வெற்றிக்கொடியேந்தியபடி
வேழங்கள் நடைபோடும்படி
மலைவாயில் போலே 
மதில்வாயில் அமைத்தனர்.
 

திருநிலை பெற்ற தீதுதீர் சிறப்பின்
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து
நெடுமயிர் எகினத் தூநிற ஏற்றை
குறுங்கால் அன்னமொடு உகளும் முன்கடை
பணைநிலை முனைஇய பல்உளைப் புரவி
புல்உணாத் தெவிட்டும் புலம்புவிடு குரலொடு
நிலவுப்பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்து
கிம்புரிப் பகுவாய் அம்பணம் நிறைய
கலிந்துவீழ் அருவிப் பாடுவிறந்து,அயல
ஒலி நெடும் பீலி ஒல்கமெல்இயல்
கலிமயில் அகவும் வயிர்மருள் இன்இசை
நளிமலைச் சிலம்பின் சிலம்பும் கோயில் (89-100)

திருமகள் உறைந்தாற்போல்
தீதேதும் அணுகாத,
குறுவெண்மணல் பரப்பிய
குறைவிலா முற்றத்தில்
நீள்வெண்மயிர் கொண்டு
ஆண் கவரிமான் ஒன்று
குறுநடை பயிலும் அன்னம் துரத்தி
குறும்பாய்த் தாவித்திரியும் 
அரண்மனை முன்வாயில்!
 

கொட்டிலின் தனிமை வெறுத்து
எட்டிய புல்லும் தவிர்த்து
பிடரிமயிர்நிறைப் புரவியொன்று
கதறித் துயர்மிகக் கனைக்க.... நிலாவோடு கொற்றவனும்
உலாவரும் முற்றமதில்
வாய்பிளந்த மீன்குழாய் வழியே
வான் பிளந்த மழைநீர் வழிய... அருவியென அதை அதிசயித்தபடி
அருகிலே செருக்கோடு திரியும்
தோகைமயிலின் அகவல் கேட்போர்
ஊதுகொம்பின்னிசையென்றே மருள...
 
ஆர்ப்பரிக்கும் மழையின் பேரொலியால்
ஆரவாரிக்கும் மலையின் எதிரொலிபோல்
ஆரவாரித்தது கோவில்,
அரசனெனும் கோவின் இல்!

************************************************

படங்கள்: நன்றி இணையம்