கோபாலகிறிஸ்ணனின் நான்குபெண்கள் - செ .பாஸ்கரன்

.
 சென்ற ஞாயிற்றுக்கிழமை 16 .06.2013 மாலை 5 மணிக்கு சிட்னியில் தரமான திரைப்படங்களை திரையிட விரும்பிய சிலர் ஒன்று கூடுவதாகவும் கலந்துரையாட உள்ளதாகவும் நண்பர் ரஞ்சகுமாரிடம் இருந்து கிடைத்த குறும் தகவலும் தமிழ்முரசுஒஸ்ரேலியா இணைய பத்திரிகையில் பிரசுரிக்க அனுப்பிய விளம்பரத்தையும் பார்த்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பல முறை பலருடன் இது பற்றி கதைத்திருந்தும் நடைமுறைப்படுத்த முடியாது போய்விட்டது. தற்போது அது நடக்க இருக்கின்றது. விளம்பரத்தைப்பார்த்தேன் சகாஸ் அமைப்பு  அழைக்கிறார்கள் அடூர் கோபாலகிறிஸ்ணனின் நான்குபெண்கள். என்றிருந்தது. 



அங்கு சென்றபோது ஒரு சிலரைத்தவிர எல்லோருமே அறிமுகமானவர்கள்தான். தீவிர வாசிப்பாளர்கள் எழுத்தாளர்கள் திரைப்படத் துறையில் கால்பதித்துள்ள நெறியாளர்கள் ஒளிப்பதிவாளர்கள் என்று பல்துறை முகங்களும் சங்கமித்திருந்தது. 
திரைப்படம் காண்பிப்பதற்கு முன்பாக நண்பர் ரஞ்சகுமார் சகாசின் சார்பாக சிறு அறிமுக உரையைதந்துவிட்டு அடூர் கோபாலகிறிஸ்ணனின் நான்கு பெண்கள் மலையாளத்திரைப்படம் காண்பிக்கப்பட்டது.  அடூர் கோபாலகிறிஸ்ணனின் பேசப்பட்ட படங்கள் சுயம்வரம் சடோகில் போன்றவை. சடோகில் என்ற படத்தை அண்மையில் பார்த்திருந்தேன். நான்கு பெண்கள் 2007 இல் வெளிவந்த திரைப்படம் அது மட்டுமல்ல மிகப்பெரும் எழுத்தாளரான தகழி சிவசங்கர்பிள்ளை அவர்களின் கதை தான் இந்த நான்கு பெண்கள். செம்மீன் என்ற பிரபல்யமான திரப்படத்தின் கதையும் திரைக்கதையும் இந்த சிவசங்கர்பிள்ளை என்பது குறிப்பிடப்படவேண்டியது. தவிர நடித்தவர்கள் அனைவருமே நல்ல நடிகைகள். கீது மோகன்தாஸ்- நந்திதாதாஸ் -பத்மபிரியா-  மஞ்சுபிள்ளை போன்றவர்கள்தான் அவர்கள். படம் நிறைவடைந்தபோது மனதில் ஒரு வலி சமூகத்தின் அரசயந்திரத்தின் மீது ஒரு வெறுப்பு அந்த திரைப்படத்தின் யதார்த்தம் நம்மில் தொற்றிக்கொண்டது.

அடூர் கோபாலகிறிஸ்ணன் 

இதைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம் பெற்றது. ஆரோக்கிமான பல விடயங்கள் பேசப்பட்டது. தெரியாததை கற்றுக்கொள்ள எல்லோருமே ஆர்வம் காட்டினார்கள். முடிவில் மாதம் ஒருமுறை கூடுவதென்றும் அதில் உலக திரைப்படங்கள் ஒவ்வொன்று காண்பிப்பதாகவும் திட்டம் இடப்பட்டது. தொடற்சியாக நல்ல திரைப்படங்களை பார்ப்பதன்மூலம்தான் திரைப்பட ரசனையை வளர்த்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையை செயற்படுத்தும் வடிகாலாக சகாஸ் அமையவேண்டும் என்ற வேண்டுகோளோடு அன்றய மாலை இனிதாக முடிவடைந்தது. அடுத்தபார்வைக்கு ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் நண்பர்களையும் அழைத்து வரவேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் சிட்னியில் தரமான படங்களை பார்க்கும் வாய்ப்பும் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும் என்பதில் எந்தசந்தேகமும் கிடையாது.