தங்கத் தாரகையே !

.

தூக்கி முடித்த குழலழகில்
     சொக்கிப் போகும் என்மனமே!
தேக்கி வைத்த அழகெல்லாம்
     தேவன் உனக்குத் தந்தானோ?
ஆக்கி வைத்த சுவையுணவை
     அடியேன் உண்டு மகிழ்வதுபோல்
நாக்கில் எச்சில் ஊறுதடி
     நற்றேன் கனியைச் சுவைத்திடவே!

அருகே நீயும் நிற்கையிலே
     அணைக்க நெஞ்சம் துடிக்குதடி!
பெருகி ஓடும் வெள்ளமெனப்
     பெண்ணே காதல் பொங்குதடி!
உருகிக் குலையும் மெழுகாக
     உள்ளம் குன்றி நோகுதடி!
பருவம் மிளிரும் இளமாதே
     பசியைத் தந்து வாட்டாதே!

என்னை முறைத்துப் பார்க்காதே!
     இதயம் தன்னைத் தாக்காதே!
கண்ணைத் திறந்து வித்தைகளைக்
     காட்டி உயிரை மயக்காதே!
உன்னை நினைந்தே இரவெல்லாம்
     உறக்கம் இன்றித் தவிக்கின்றேன்!
பொன்னை நிகர்த்த நிறமுற்றுப்
     பொலியும் தங்கத் தாரகையே!

29.8.1984

நன்றி bharathidasanfrance