உலகச் செய்திகள்


உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு: 60 பேர் பலி

ஜி20 மாநாட்டில் உளவு பார்த்த பிரித்தானியா!

இந்தியாவின் வடமாநிலங்களில் பலத்த மழை: 130 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் உத்தரகாண்டில் பேரழிவு: 1000 இற்கும் மேற்பட்டோர் பலி

========================================================================

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு: 60 பேர் பலி


17/06/2013   இந்தியாவின், உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 60 க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
 பல மாவட்டங்களில் வீதிப்போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, கனமழை காரணமாக உத்தர்காசியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில் சிக்கி 60க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆயிரக்கணக்கானவர்கள் நிலச்சிரிவில் சிக்கிக் கொண்டுள்ளதால் அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, யாத்ரீகர்கள் யாரும் உத்தர்காசி வர வேண்டாம் என்று மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
கனமழையினால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைபட்டுள்ளதால் கங்கோத்ரி, யமுனோத்ரி உள்ளிட்ட இடங்களில் தங்கியுள்ள பக்தர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இதனால் அங்குள்ள தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள், தர்மசத்திரங்கள் நிரம்பி வழிகின்றன. மோசமான வானிலை காரணமாக கேதார்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது     நன்றி விரகேசரி             

ஜி20 மாநாட்டில் உளவு பார்த்த பிரித்தானியா!

18/06/2013       கடந்த 2009 ஆம் ஆண்டு பிரிட்டனில் நடைபெற்ற  ஜி20 மாநாட்டில் பங்கேற்ற பிற நாட்டுத் தலைவர்களின் செயல்பாடுகளை பிரிட்டன் உளவுத்துறை இரகசியமாக கண்காணித்து வந்தது தற்போது அம்பலமாகியுள்ளது.
ஜி20 நாடுகள் கூட்டமைப்பில் ஆர்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
சமீபத்தில், அமெரிக்காவின் டெலிபோன் ஒட்டுக் கேட்பு முதலிய இரகசிய உளவு வேலைகள் குறித்த ரகசியங்களை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய அமெரிக்க உளவு அமைப்பான் சிஐஏவின் முன்னாள் பணியாளர் எட்வர்ட் ஸ்னோடென் தான் தற்போது இத்தகவலையும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் லண்டனில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில், 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடி தொடர்பாக விவாதித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
மேலும் கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற ஜி20 மாநாட்டில் பங்கேற்ற அப்போதைய ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவ், மாஸ்கோவில் உள்ள தலைவர்களுடன் செயற்கைக்கோள் தொலைப்பேசியில் பேசியுள்ளார்.
அதையும் இடைமறித்துக் கேட்க அமெரிக்க உளவுத் துறை மேற்கொண்ட முயற்சி தற்போது அம்பலமாகியுள்ளது. பிரிட்டனின் உளவு அமைப்பான ஜி.சி.எச்.க்யூ., அம்மாநாட்டில் பங்கேற்ற அனைத்து வெளிநாட்டுத் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை இரகசியமாக பதிவு செய்து வைத்துள்ளது.
மேலும், அவர்களின் மின்னஞசல் மற்றும் அவர்களின் மடி கணனிகளில் உள்ள இரகசியங்களும் திருடப்பட்டுள்ளன. மாநாட்டுக்கு வந்திருந்தவர்களின் வசதிக்காக, சிறப்பு இணைய வசதி மையங்களை அமைத்த பிரிட்டன் உளவுத் துறை, அதன் மூலமே, இரகசியங்களைத் திருடி உளவு பார்த்துள்ளது.
ஆனால் சில பிரதிநிதிகள், தாங்கள் அனுப்பும் மின்னஞசல்களை மற்றவர்கள் பார்த்துவிடாதபடி தந்திரமாகவும் அனுப்பி வைத்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
மாநாட்டில் கலந்து கொண்ட பிற நாட்டுத்தலைவர்கள், யார் யாருடன் என்ன பேசுகிறார்கள் என்பதை கண்காணிக்க மாத்திரம் 45 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது பிரிட்டன் உளவுத் துறை.
அதிலும் குறிப்பாக துருக்கி நிதியமைச்சர் , தென்னாப்பிரிக்க தலைவர்கள் உள்ளிட்ட 15 பேரது செயல்பாடுகள் மட்டும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுள்ளது. ஜி8 நாடுகளின் மாநாடு தற்போது பிரிட்டனில் திங்கள்கிழமை தொடங்கி நடை பெற்று வருகிறது.
அதில் இப்பிரச்சினைக் குறித்து பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் விளக்கமளிக்க வேண்டுமென பிறநாட்டுத் தலைவர்களால் வலியுறுத்தப் படுவார் என நம்பப்படுகிறது.     நன்றி விரகேசரி         

இந்தியாவின் வடமாநிலங்களில் பலத்த மழை: 130 பேர் உயிரிழப்பு

19/06/2013          இந்திய வடமாநிலங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130ஐ தாண்டியுள்ளது.
தென் மேற்கு பருவ மழை வட இந்தியாவில் தீவீரமடைந்துள்ளது.
தொடர்ந்து சில நாட்களாக கன மழையும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் வட மாநிலங்கள் குறிப்பாக இமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
உத்தரகாண்ட் மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பல நகரங்கள் தீவுகள் போல காட்சி அளிக்கின்றன.

பிரசித்தி பெற்ற புனித தலங்களான கேத்ரிநாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவற்றுக்கு ஆன்மிக யாத்திரை மேற்கொண்டிருந்த தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 72 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நடுவழிகளில் வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் சிக்கி தவிக்கின்றனர்.
கேதர்நாத் கோயில் உள்ள பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு அப்பகுதியை கடுமையாக பாதித்துள்ளது.
அந்தக் கோயிலுக்குச் சென்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள், வெளியேற முடியாமல் தவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேதர்நாத் கோயிலின் சுற்றுச்சுவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. கேதர்நாத் கோயில் பகுதியில் மீட்புப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருவதாக மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்டில் மீட்புப் பணிகளை மேற்கொள்வது குறித்து, முதலமைச்சர் விஜய் பஹுகுணா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது.
பின்னர், சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்ட முதலமைச்சர் பஹுகுணா, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே, உத்தரகாண்ட் மாநிலத்தில் மட்டும் 60க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமாநில மழை வெள்ளத்திற்கு இதுவரை 130 பேர் வரை உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஏராளமானோரைக் காணவில்லை.

உத்தரகாண்ட் மற்றும் ஹிமாச்சலில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணியில் இராணுவமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர்கள் மூலம், மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    நன்றி விரகேசரி         

இந்தியாவின் உத்தரகாண்டில் பேரழிவு: 1000 இற்கும் மேற்பட்டோர் பலி


20/06/2013  இந்தியாவின் உத்தரகாண்டில் மழை வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டுள்ளது.
வெள்ளம், நிலச்சரிவால் சேற்றில் கூட்டம் கூட்டமாக புதைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், அரியானா மாநிலங்களில் பருவமழையின் போது வழக்கமாக பெய்யும் மழையின் அளவை விட, கடந்த 3 நாட்களில் மூன்று மடங்கு அதிகமாக பெய்ததால்  ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஏராளமான பகுதிகள் மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.மழை காரணமாக வீடுகள் இடிந்துள்ளன.
 ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டது. அலக்நந்தா ஆற்றின் கரையோரம் இருந்த 40 ஓட்டல்கள் உட்பட 73 கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.

கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, சமோலி, உத்தரகாசி போன்ற இடங்களுக்கு புனித யாத்திரை மேற்கொண்ட ஒரு லட்சம் பக்தர்கள் சாலைகள் சேதம் அடைந்ததால் ஆங்காங்கே சிக்கியுள்ளனர்.
பொதுமக்களும் பல இடங்களில் வெள்ளத்துக்கு இடையே சிக்கி தவிக்கின்றனர். அவர்களை மீட்கும் பணியில் இராணுவ ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவற்றின் மூலம் உணவு பொட்டலங்கள், உணவு பொருட்கள் போடப்படுகின்றன,
வட மாநிலங்களில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக பெய்த மழை, பல்வேறு இடங்களில் நேற்று சற்று குறைந்துள்ளது. வெப்பநிலையும் சாதகமாக இருந்ததால், மீட்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன.

உத்தரகாண்டில் மழை, வெள்ளத்துக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இவர்களில் பெரும்பாலோர் யாத்திரிகர்கள். வெள்ளம், நிலச்சரிவால் கூட்டம் கூட்டமாக சேற்றில் புதைந்து இவர்கள் இறந்துள்ளனர்.
புகழ்பெற்ற கேதார்நாத் கோயில் அருகே 50 பக்தர்கள் புதைந்து பலியாகினர்.

வெள்ளத்தில் இக்கோயில் முழுமையாக மூழ்கி விட்டது.  இதனால், கோயில் அப்படியே உள்ளதா? அல்லது இடிந்து விட்டதா என தெரியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இக்கோயிலுக்கு செல்லும் பாதைகளில் ஆங்காங்கே 6 ஆயிரம் பக்தர்கள் சிக்கியுள்ளனர்.

உத்தரகாண்ட் முழுவதும் 60 ஆயிரம் பேர் வெள்ளத்தாலும், நிலச் சரிவாலும் சிக்கி தவித்து வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலோர் புனித யாத்திரை சென்றவர்கள். உத்தரகாண்டில் 200 கார்கள், 2 மண் அள்ளும் பிரம்மாண்ட இயந்திரங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.

காரையோரம் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் ஹெலிகாப்டரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இமாச்சல பிரதேசத்தில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி குழுவினரும், நிருபர்களும் நிலச்சரிவால் பூ என்ற இடத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டு உள்ளன. 


அரியானா , உத்தர பிரதேச மாநிலங்களை இணைக்கும் கத்திமா , பானிபட் தேசிய நெடுஞ்சாலை வெள்ளத்தில் துண்டிக்கப்பட்டு விட்டது.
 உத்தரகாண்ட் முதல்வர் விஜய் பகுகுணா கூறுகையில், ‘‘இமயமலை சுனாமியால் வரலாறு காணாத பேரழிவு ஏற்பட்டுள்ளது.

பலி எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கக்கூடும். முறையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் பலி எண்ணிக்கையை பற்றி சரியாக கூற முடியாது’’ என்றார்.   நன்றி விரகேசரி