தமிழ் உணர்வாளர் மணிவண்ணன் அவர்களுக்கு அகவணக்கம்தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டத்திற்காக தன்னையையும் இணைத்துநின்ற தமிழ்த்திரைப்பட இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் அவர்களின் மரணச்செய்தி அனைவரையும்  கலங்கவைக்கின்றது.
அவலங்களையே சுமந்துநிற்கின்ற ஒரு தேசத்தின் விடிவிற்காக குரல் எழுப்புகின்ற அனைவருமே அம்மக்களின் ஆழ்மனதில் எப்போதும் உயிர்ப்புடனே இருப்பார்கள்.
ஆனால் அத்தேசத்தின் பெருமகனாம் தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் வழிநடத்தலை உளமார ஏற்று, அம்மக்களுக்காகப் போராடி மடிந்திருப்பேன் என வெளிப்படையாகச் சொல்லிவந்தவர் மணிவண்ணன் அவர்கள்.
தனது வாழ்வின் மூலமும் சாவின் மூலமும் தனது மக்களுக்கு விடுதலைக்கான செய்தியை எடுத்துச்செல்பவன் ஓர் உன்னதமான போராளியாகின்றான்.
அந்தவகையில் தமிழீழ மக்களின் விடுதலைக்காக தமிழ்நாட்டின் வீதிவீதியாக ஓங்கியொலித்த அந்தக்குரல், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகள் எங்கும் ஓடிச்சென்றது. தமிழீழத் தாயகத்திற்கும் வருகைதந்த அவர், நவம் அறிவுக்கூடம், காந்தருபன் அறிவுச்சோலை என்பவற்றைப் பார்வையிட்டு அமையப்போகும் தமிழீழத்தினை நினைத்துப் பெருமைகொண்டார்.
தனது சாவின் போதும், தமிழர்களின்  தேசியக்கொடியைத் தன்மீது போர்த்துமாறு கோரினார். அதன்முலம் தமிழீழ விடுதலைக்கான அடையாளங்கள் தன்னைப் பெருமைப்படுத்துவதாக நம்பினார். அவ்வாறான தேசப்பற்று ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும் எனக் கருதினார்.
இவ்வாறு எம்மோடு எப்போதுமே இணைந்துநின்ற தமிழின உணர்வாளர் மணிவண்ணன் அவர்களின் மறைவிற்காய் அகவணக்கம் செய்வதோடு, அவரது கனவுகளை எமது நெஞ்சங்களில் சுமப்போம் என உறுதியெடுத்துக்கொள்வோம்.
இவ்வண்ணம்
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – விக்ரோறியா - அவுஸ்திரேலியா