நேசிக்கத்தகுந்த மனிதர் சோமா அண்ணர் தமிழ் சமூகப்பணியில் அயராது உழைத்தவர் நினைவஞ்சலிக்குறிப்பு முருகபூபதி                     
அவுஸ்திரேலியாவில் சமீபத்தில் மறைந்த முன்னாள் விக்ரோரியா ஈழத்தமிழ்ச்சங்கத்தின் தலைவரும் தமிழ் சமூகப்பணியாளருமான சோமசுந்தரம் அவர்களுக்கும் எனக்குமிடையிலான நட்புறவுக்கு இருபத்தியைந்து வருடங்களும் ஏழுமாதங்களும் என்பதை தெளிவாகவே சொல்லிவிடமுடியும். இக்காலப்பகுதியில் அவருடன் பழகிய தருணங்கள் மறக்கமுடியாத நிகழ்வுகளாகவே மனதில் பதிந்துள்ளமையால்தான் இந்தப்பதிவை எழுதமுடிகிறது.
அவர் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தியை நண்பர் நடேசன் எனக்குச்சொல்லும்பொழுது, தொலைதூரப்பயணத்திலிருந்தேன். அதன்பிறகு, சில மணிநேரங்களில் நண்பர் சபேசன், கைத்தொலைபேசிக்கு குறுந்தகவல் அனுப்பியிருந்தார்.

1987 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான் மெல்பனுக்கு வந்த சில நாட்களில் டொன்காஸ்டர் என்னுமிடத்தில் பொறியியலாளர் மகேஸ்வரன் அவர்களின் இல்லத்தில் ஒரு சந்திப்பு நடைபெறுவதாகவும் அதற்கு என்னை அழைத்துச்செல்ல தருமகுலராஜா என்பவர் வருவதாகவும் நண்பர் இராஜரட்ணம் சிவநாதன் சொன்னார். அவர் சொன்னபிரகாரம் தருமகுலராஜா வந்து என்னை அழைத்துச்சென்றார். அன்றுதான் அவரையும் முதல் முதலில் சந்தித்தேன்.
மகேஸ்வரன் டொன்காஸ்டர் என்ற இடத்தில் இருந்தமையால் அவரை டொன்காஸ்டர் மகேஸ்வரன் என்றுதான் அன்றும் இன்றும் அழைக்கின்றார்கள். இவர் எங்கள் நீர்கொழும்பில் பிரதம பொறியியலாளராக பணியிலிருந்தவர். இவரது வீட்டில் கோவை மகேசன், காசி ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்ட சந்திப்புகள் 1970களில் நடந்துள்ளன.
அன்று அவரது டொன்காஸ்டர் வீட்டில் நடந்த சந்திப்பில் அவர் தவிர ஏனைய அனைவருமே எனக்குப் புதியவர்கள். ராஜா வில்சன், மனோ நவரட்ணம், ஜெயகுமார், சுந்தரமூர்த்தி, கோபாலகிருஷ்ணன் ஆகியோரை அங்கு சந்தித்தேன். அவர்கள் மத்தியிலிருந்தவர்தான் பின்னாட்களில் நாம் அன்போடு அழைத்த சோமா அண்ணர்.
அச்சந்திப்பில் நான் ஒரு புதுமுகம். என்னை அழைத்துவந்த தருமகுலராஜாவிடம், என்னைக்காண்பித்து, “யார் இவர்?” என்று கேட்டார். நானே என்னை அறிமுகம் செய்துகொண்டபோது, “ அட பத்திரிகையாளரா, எங்கள் தமிழ்ச்சங்கத்திற்கு தேவைப்படுபவர்.” என்று சொன்னதுடன் நில்லாமல், அச்சமயம் இலங்கை தமிழ்ச்சங்கம் என்ற பெயருடன் இயங்கிய தற்போதைய ஈழத்தமிழ்ச்சங்கத்தின் செய்திமடலின் (News Letter) ஆசிரியர் சுந்தரமூர்த்தியிடம், சங்கத்தின் வெளியீடுகளை எனக்கு அனுப்பிவைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
அன்றைய சந்திப்பில் இலங்கையின் நிலைவரங்களை சோமா அண்ணர் மற்றவர்களுக்கு விபரித்தார்.
சுந்தரமூர்த்தியும் அவர் சொன்னவாறு சில நாட்களில் சங்கத்தின் செய்திமடல் சில பிரதிகளை எனக்கு தபாலில் அனுப்பியிருந்தார். ஒரே மூச்சில் படித்தேன். அதன் உள்ளடக்கக்கருத்துக்கள் பல எனக்கு உடன்பாடாக இருக்கவில்லை.
அச்சமயம் இந்த நாட்டில் அகதி அந்தஸ்த்துக்காக விண்ணப்பித்து விட்டிருந்தமையால் சங்கத்தில் அங்கத்தவராகும் ஆர்வமும் எனக்கிருக்கவில்லை.
1988 காலப்பகுதியில் நண்பர்கள் சிவநாதன், தருமகுலராஜா, திவ்வியநாதன், விஜயகுமார் சூரியகுமாரன், பல்மருத்துவர் ரவீந்திரராஜா முதலான சிலர் இணைந்து மக்கள்குரல் என்ற மாதாந்த கையெழுத்துப்பத்திரிகையை ஆரம்பித்தனர். மெல்பனில் வெளியான முதலாவது அரசியல் விமர்சன இதழ் மக்கள் குரல். இந்த இதழின் வருகை இந்நாட்டில் அக்காலப்பகுதியில் தமிழ்ச்சமூகத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதன் கருத்துக்களுடன் உடன்படாதவர்கள் கூட அதனை தேடி எடுத்துப்படித்தனர். அந்த ஆசிரியர் குழுவில் நானும் இருந்தேன். ஒவ்வொரு இதழ் வெளியாகும் முன்னரும் ஆசிரியர் குழு நீண்ட விவாதங்களை நடத்தியபின்பே படைப்புகளை பதிவுசெய்யும். கணினியில் தமிழ் பதிவுசெய்யப்படாத காலம். அதனால் மக்கள் குரல் கையெழுத்து பத்திரிகையாகவே வெளியானது.
ஒரு இதழில் வெளியான ஓரு குட்டிக்கதை ஒரு குடும்பத்தில் சிறு சலசலப்பை ஏற்படுத்திவிட்டது என்பது சோமா அண்ணர், நான் தங்கியிருந்த வாடகைக்குடியிருப்புக்கு தேடி வந்து சொல்லும்; வரையில் தெரியாது. ஒரு வெள்ளிக்கிழமை இரவு அவர் என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு மக்கள் குரல் ஆசிரியர்குழுவினரை சந்திக்கவிரும்புவதாகச்சொன்னார். அவர் ஏன் வருகிறார்? என்ன விடயம் பேசப்போகிறார் என்பது எமக்குத்தெரியாது. மறுநாள் சனிக்கிழமை முற்பகல் வந்தார்.
நண்பர்கள் சிவநாதன், தருமகுலராஜா ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். குறிப்பிட்ட குட்டிக்கதை மெல்பனில் நடந்த ஒரு உண்மைச்சம்பவத்தின் பின்னணியில் எழுதப்பட்டிருந்ததாகவும். எழுத்தாளன் என்ற அறிமுகத்துடன் இங்கு நான் வசிப்பதனால் நான்தான் அதனை எழுதியிருக்கக்கூடும் என்று குறிப்பிட்டசெல்வாக்குமிக்க குடும்பத்தினர் தமது கோபத்தை காண்பித்திருக்கின்றனர். அதுபற்றி விசாரிப்பதற்காகவே அவர்களின் பிரதிநிதியாக சோமா அண்ணர் வந்தார். அக்கதையை நானோ, ஆசிரியர் குழுவில் இருந்த வேறு எவருமோ எழுதியிருக்கவில்லை. நாம் எமது விளக்கத்தை சோமா அண்ணருக்கு தெரிவித்தோம். வெளியிலிருந்து யாரோ எழுதிய அந்தக்குட்டிக்கதை குறிப்பிட்ட குடும்பத்தினரை நோகச்செய்திருப்பின் அதற்காக வருந்துவதாக நாம் மக்கள் குரலின் அடுத்த இதழில் பதிவுசெய்தோம்.
ஏற்கனவே டொன்காஸ்டர் மகேஸ்வரனின் இல்லத்தில் நடந்த சந்திப்பிலும் பின்னர் எனது வாடகை வீட்டில் நடந்த சந்திப்பிலும் சோமா அண்ணர் பேசியதோரணை என்னை கவர்ந்தது. அன்று முதல் பல பொதுவிடயங்களில் நாம் பேசியிருக்கின்றோம். முரண்பட்டிருக்கின்றோம். அவரது பனிபோல் மறைந்துவிடும் தர்மாவேசக்கோபத்தை ஏற்றுக்கொண்டுமிருக்கின்றேன்.
இந்த நாட்டில் இன்று என்னைப்போன்ற பலர் தமிழ் சமூகப்பணிகளை அயராமல் முன்னெடுப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே கால்கோள் இட்டவர்களின் வரிசையில் பேராசிரியர் இலியேசர் அவர்களையடுத்து இடம்பெறுபவர் சோமா அண்ணர்.
1986-1987 காலப்பகுதியில் இந்த நாட்டுக்கு வந்துகொண்டிருந்த பல இளைஞர்களுக்கு, இளம் குடும்பத்தலைவர்களுக்கு நம்பிக்கையளித்தவர்கள் வரிசையிலும் அவர் இடம்பெற்றவர். சட்டத்தரணி ரவீந்திரன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற அகதிகளின் சந்திப்பில் சோமா அண்ணர் புத்திமதிகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.
புரிந்துணர்வுமிக்க காலப்பகுதியாக அதனை நினைவுகூரமுடியும்.
பொதுவாழ்வில் ஈடுபடுபவர்கள் தமது தனிப்பட்டவிருப்பு வெறுப்புகளை காண்பிக்கத்தலைப்படும்போதுதான் சிக்கல்கள் உருவாகின்றன. சோமா அண்ணர், தமிழ்ப்பற்றாளர். தமிழ் ஈழக்கனவுடன் வாழ்ந்தவர். ஆயுதம் ஏந்திய தமிழ் விடுதலை இயக்கங்கள் தமக்குள் மோதிக்கொண்டே ஈழவிடுதலைக்காக போரிட்டபோது, “யார் குத்தியாவது அரிசியானால்சரி என்று இந்த மாநகரில் ஈழத்து கிராமிய வசனம் பேசியவர்.
இறுதியில் எவர் குத்தியும் அரிசியாகாமல், பதர்களையே பறக்கவிட்டார்கள் என்பதுதான் தமிழினம் கண்ட சோகம். அந்தச் சோகம் சோமா அண்ணரையும் பாதித்திருக்கும்.
சோமா அண்ணர் விக்ரோரியா ஈழத்தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்த காலப்பகுதி சற்று சிக்கலானது. ஒருபுறம் இலங்கையிலிருந்து தமிழர்கள் புலம்பெயர்ந்து அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பித்திருந்தர். மறுபுறம் வடமராட்சியில் லலித் அத்துலத் முதலியின் லிபரேஷன் ஒப்பரேஷன் நடவடிக்கைகள் உக்கிரமடைந்திருந்தன.
மெல்பனுக்கு வந்த அகதிகளை சங்கத்தில் அங்கத்தவர்களாக இணைத்துக்கொள்வதா? என்ற மனப்போராட்டம், இலங்கையில் தாம் நம்பிய விடுதலை இயக்கங்கள் ஒன்றோடு ஒன்று மோதி அழியும் சோகத்தின் மன அழுத்தம், இந்நிலையில் தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகத்தின் ஸ்தாபகர் சட்டத்தரணி கந்தசாமி, ஈரோஸ் இயக்கத்தினரால் கடத்தப்பட்டு காணாமல் போனார். அவருடன் இலங்கையிலும் இங்கிலாந்திலும் இணைந்து செயற்பட்ட சட்டத்தரணி ரவீந்திரனும் மருத்துவர் பொன் சத்தியநாதனும் மக்கள் குரல் ஆசிரிய பீடத்திலிருந்த சிவநாதனும் சோமா அண்ணரிடம் ஒரு கண்டனக்கூட்டம் நடத்துமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
ஒரு புறத்தில் அத்தகைய ஒரு கண்டனக்கூட்டத்தை மெல்பனில் விரும்பாத தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர், மறுபுறத்தில் நடத்தவே வேண்டும் என்று வலியுறுத்திய மிதவாதிகளும் மனித உரிமை ஆர்வலருமான மருத்துவர் பிரையன் செனவிரத்தின.
சோமா அண்ணர் அத்தருணத்தில் நிதானமாகவே நடந்துகொண்டார். ஒரு சங்கத்தின் தலைவர் என்ற முறையில் ஜனநாயகப்பண்புகளை மதித்து அந்தக்கூட்டத்தை மெல்பன் வை..டபிள்யூ. சி, . மண்டபத்தில் ஏற்பாடு செய்தார். சட்டத்தரணி ரவீந்திரன், பொன் சத்தியநாதன், ஆகியோருடன், நானும் சிட்னியிலிருந்து வருகை தந்த நடேசன், துரைசிங்கம் ஆகியோரும் இக்கூட்டத்தில் உரையாற்றினோம். மருத்துவர் பிரையன் செனவிரத்தினவின் கண்டனப்பேச்சு ஒளிப்பதிவில் பெறப்பட்டு ஒளிபரப்புச்செய்யப்பட்டது.
அக்காலப்பகுதியில் இயக்கங்களின் அடாவடித்தனங்களை பிரையன் கடுமையாக கண்டித்து பேசியும் எழுதியும் வந்தவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.;.
அகதிகளாக வந்திருந்த நாம் எமக்கான ஒரு அமைப்பை உருவாக்குவதற்கு முனைந்தோம். இதற்கு மக்கள் குரல் பின்னணியிலிருந்தது. அதன் ஆசிரியர் குழுவினர் நட்பு ரீதியாக விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட சட்டத்தரணி ரவீந்திரன், மெல்பன் வை. டபிள்யூ. சி. . மண்டபத்தில் ஒரு சந்திப்புக்கு ஒழுங்குசெய்து ஆலோசனைகளை வழங்கினார். அகதிகளை அங்கத்தவர்களாக சங்கம் ஏற்றுக்கொள்ளாத சூழ்நிலையில் அந்தக்கூட்டமானது தமிழ்ச்சங்கத்திற்கு எதிரானது என்ற கற்பிதம் சோமா அண்ணருக்கு சொல்லப்பட்டிருக்கவேண்டும்.
அவர் அடுத்தடுத்த வாரமே அவசரஅவசரமாக சங்கத்தின் சார்பில் ஒரு கூட்டத்தை அதே மண்டபத்தில் ஒழுங்குசெய்து தனது நிலைப்பாடுகளையும் சங்கத்தின் நிலைப்பாட்டையும் விளக்கினார். வந்திருக்கும் அகதிகளையும் சங்கத்தின் உறுப்பினர்களாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற எமது வலியுறுத்தல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சோமா அண்ணர், அவுஸ்திரேலிய பிரதமர் பொப்ஹோக், அக்காலப்பகுதியில் பாராளுமன்ற அங்கத்தவராக இருந்த லூயிஸ் கென்ட், உட்பட பலருடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டார் அக்காலகட்டத்தில் அவரது பணிகள் விதந்துபோற்றுதலுக்குரியது. தமிழ்மக்கள் சார்ந்த பல பணிகளுக்கு தமது நெடுநேர உழைப்பையும் பணத்தையும் செலவிட்டவர். ஈழத்தமிழ் மக்களின் நலனும் அவர்களின் வாழ்வாதாரமும் குறித்து சிந்தித்த அதே சமயம் விடுதலைப்புலிகளை விட்டால் வேறு வழியில்லை என்ற சூழ்நிலைக்கருத்தியலிலும் தங்கியிருந்தார்.
அவருடைய முதலாவது சிந்தனையில் உடன்பட்டிருந்தாலும் அவரது இரண்டாவது கருத்தில் உடன்படமுடியாமல் அவருடைய வயதுக்குத்தரவேண்டிய மரியாதையின் நிமித்தம் நான் அவருடன் அரசியல் பேசுவதையே தவிர்த்துக்கொண்டேன்.
அதற்கு 1988-1989 காலப்பகுதிக்காக (நிருவாகிகள் தெரிவு) நடந்த தமிழ்ச்சங்கத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டமும் ஒரு காரணமாகும். அன்று நாம் நேருக்கு நேர் பொதுமக்கள் முன்னிலையில் முரண்பட்டோம்.
எமது மக்கள் குரல் ஆசிரிய பீடத்தைச்சேர்ந்த சிவநாதன், தருமகுலராஜா, கொர்னேலியஸ், பல்மருத்துவர் ரவீந்திரராஜா ஆகியோரும் ஆண்டுப்பொதுக்கூட்டத்தில் சில பதவிகளுக்காக போட்டியிட்டனர். சட்டத்தரணி ரவீந்திரன் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். போட்டி பலமாக இருந்தது. மண்டபம் நிறைந்து மக்கள்.
அக்கூட்டத்தில் நிருவாகிகள் தெரிவுக்காக போட்டியிடும் அன்பர்கள் தாம் ஏன் போட்டி யிடுகின்றோம்? பதவி ஏற்றால் தமிழ் சமூகத்திற்கு எத்தகைய பங்களிப்புகளை வழங்குவார்கள் என்பதை தனித்தனியாக மேடைக்கு வந்து விளக்கவேண்டும். அதன் பிறகு தேர்தல் நடைபெறவேண்டும் என்று நான் தலைவர் சோமா அண்ணரிடம் கேட்டேன். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை.
தமிழ்ச்சங்கத்தின் தேர்தல்களில் தெரிவாகும் பிரதிநிதிகள் சம்பளம் வாங்காமல் தொண்டு அடிப்படையில் பணியாற்றுவதாகவும் பாரளுமன்றம் போன்று சம்பளம் வாங்கும் பிரதிநிதிகளை தெரிவுசெய்யவில்லை என்றும் விளக்கமளித்து எனது கோரிக்கையை மறுத்தார். அதனால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது.
சலசலப்பு முற்றி திசைதிரும்பக்கூடாது என்பதனால் எனது கோரிக்கையை நான் மீளப்பெற்றுக்கொண்டேன். எனினும் சோமா அண்ணருக்கு என்மீது ஒரு கண் அன்று விழுந்துதான்விட்டது.
அடுத்த சில நாட்களில் அவர் மாரடைப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அறிந்து மிகுந்த கவலைப்பட்டேன். அவர் வீடு திரும்பியதும் நண்பர் பல்மருத்துவர் ரவீந்திரராஜாவுடன் சென்று சுகம் விசாரித்தேன். இன்முகத்துடன் வரவேற்று உரையாடினார்.
ஏற்கனவே, அவர் பேராசிரியர் இலியேஸர் நடத்திய வாராந்த தமிழ் சமூக வானொலியில் (3EA Radio) செய்தி வாசிக்கும்போது நானும் சில உரைச்சித்திரங்களுக்காக குறிப்பிட்ட வானொலி கலையகத்திற்கு சென்றிருக்கின்றேன்.
சோமா அண்ணர் செய்திகள் வாசிக்கும்போது மக்கள் விடுதலை முன்னணியை ஜாதிக விமுக்திக பெரமுனை என்றே குறிப்பிட்டார். அது தவறு, ஜனதா விமுக்தி பெரமுனை என்று வாசியுங்கள் என்று அவரிடம் திருத்திச்சொன்னபோது ஏற்றுக்கொண்டார். ஒரு தடவை இலங்கையில் ஒரு பௌத்த பிக்கு வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு செய்வினை சூனியம் செய்து யாகம் வளர்த்து அதில் எண்ணெயில் அமுக்கி எடுக்கப்பட்ட பிரபாகரனின் படத்தை கொளுத்திய செய்தியை வாசிக்கும்போது சிரித்துக்கொண்டு வாசித்தார். அச்சிரிப்பில் எள்ளல் இருந்தது.
செய்தி வாசிக்கும் ஊடகவியலாளர்கள் தங்களது தனிப்பட்ட உணர்ச்சிகளை காண்பிக்கக்கூடாது அண்ணர்என்று சொன்னபோது அதனையும் சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்டார்.
மற்றவர்களின் பார்வையில் அவர் எப்படி இருந்தபோதிலும், என்னைப்பொறுத்தவரையில் அவர், கருத்து முரண்பாடுகளுக்கு அப்பால் நேசிக்கத்தகுந்த நல்ல மனிதர். அவரை சுகம் விசாரிக்கச்சென்றிருந்தவேளையில் எனது இரண்டாவது சிறுகதைத்தொகுதி சமாந்தரங்கள் சென்னையில் வெளியாகியிருந்தது.
அதன் வெளியீட்டுவிழாவில் கிடைக்கப்பெறும் நிதியை மெல்பன் அன்பர்களின் ஆதரவுடன் நான் ஆரம்பித்த இலங்கை மாணவர் கல்வி நிதியத்திற்கு வழங்கவுள்ளேன். இந்த இலக்கிய நிகழ்வில் நீங்களும் பேசவேண்டும்,” என்று கேட்டுக்கொண்டேன்.
அவர் தனது உடல்நலக்குறைவையும் பொருட்படுத்தாது எனது அழைப்பை ஏற்று தனது அன்புத்துணைவியாருடன் வந்து கலந்துகொண்டு உரையாற்றி என்னை உற்சாகப்படுத்தினார். கம்பராமாயணத்தில் மிகுந்த ஈடுபாடுடையவர் சோமா அண்ணர். நூல்வெளியீடுகள் போன்ற இலக்கிய கூட்டங்களில் அவர் கம்பராமாயணத்தையே மேற்கோள் காட்டிப்பேசுவார். அதனை ஒரு இயல்பாகவே கொண்டிருந்தார். மெல்பன் எழுத்தாளர் திருமதி பாமினி செல்லத்துரையின் சிதறிய சித்தார்த்தன் நூலின் வெளியீட்டுவிழாவும் சோமா அண்ணரின் தலைமையில்தான் நடந்தது.
நண்பர் கலைவளன் சிசு நாகேந்திரனின் அந்தக்காலத்து யாழ்ப்பாணம், மற்றும் வேந்தனாரின் நூல்களின் வெளியீட்டு நிகழ்வுகளில் நானும் அவரும் உரையாற்றியிருக்கின்றோம்.
நல்ல வாசகர். அதனால் எனது அன்புக்கும் நெருக்கமானவர்.
எங்கே கண்டாலும் பரஸ்பரம் சுகம் விசாரித்துக்கொள்வோம். எனது மனைவி மாலதி அவுஸ்திரேலியா வருமுன்னரே, தமிழ்ச்சங்கத்தின் பாடசாலைகளில் தமிழ் ஆசிரியராக பணியாற்ற அழைத்து, அதற்கான கடிதத்தையும் தந்தவர்.
அவுஸ்திரேலியாவில் அவர் தமிழ் அரசியல் பணி, தமிழ் சமூகப்பணி, மற்றும் ஆலய திருப்பணிகளில் மட்டுமன்றி தமிழ்ச்சங்கத்தின் ஆதரவுடன் இயங்கும் தமிழ்ப்பாடசாலைகளின் வளர்ச்சியிலும் விமர்சனங்ளை ஏற்றுக்கொண்டும் சகித்துக்கொண்டும் அயராமல் இயங்கியவர்.
ஒருவரது மறைவு வெறும் கண்ணீர் அஞ்சலியாக மாத்திரம் எல்லைவகுத்து மட்டுப்பட்டுவிடக்கூடாது, அவரிடமிருந்து கற்றுக்கொண்டவற்றின் ஊடாக எம்மையும் சுயவிமர்சனத்துக்குள்ளாக்கி செப்பனிட்டுக்கொள்ளவேண்டும்.
சோமா அண்ணர் என்றும் எங்களுடன் நினைவுகளாக வாழ்ந்துகொண்டேயிருப்பார். அவரது அன்புமனைவிக்கும் அருமைச்செல்வங்களுக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் அனுதாபம் தெரிவிக்கும் அதேசமயம் அவர்களின் ஆழ்ந்த துயரத்திலும் பங்கெடுத்து சோமா அண்ணரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.
letchumananm@gmail.com

No comments: