சொல்ல மறந்த கதைகள் --11 - முருகபூபதி

.
எதிர்பாராதது
  எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தான் வாழ்க்கை.
  இந்த வசனத்தை எனது எழுத்துக்களில் பல சந்தர்ப்பங்களில் பதிவுசெய்வதற்கு கால்கோள் இட்டதுதான் நான் முதல்முதலில் மாஸ்கோவுக்கு செல்வதற்காக விமானம் ஏறிய சம்பவம்.
 airport           வானத்தில் பறக்கும் விமானங்களை பார்த்து வியந்த பருவத்தில் எங்கள் ஊருக்கு சமீபமாக கட்டுநாயக்காவில் சர்வதேச விமானநிலையம் 1965 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் டட்லிசேனநாயக்காவினால் திறந்துவைக்கப்பட்டபோது அந்த விழாவைப்பார்க்க பாடசாலை நண்பர்களுடன் சென்றிருக்கின்றேன்.
           அன்றுதான் என் வாழ்நாளில் முதல்தடவையாக ஒரு விமான நிலையத்தையும் பார்த்தேன். அதன் பிறகு பல தடவைகள் அங்கு சென்றிருந்தாலும் விமானம் ஏறுவதற்காக அல்ல, யாரையாவது ஐரோப்பாவுக்கோ மத்திய கிழக்கிற்கோ இந்தியாவுக்கோ வழியனுப்பத்தான் வந்திருப்பேன்.
           அவர்கள் ஏறிய விமானம் ஓடுபாதையில் ஒரு சுற்றுச்சுற்றிவந்து மேலே ஏறி பறக்கத்தொடங்கி கண்ணிலிருந்து மறையும் வரையில் பரவசத்துடன் பார்த்த பின்புதான் வீடு திரும்புவேன். அப்பொழுது மனதில் ஏக்கம் குடியேறும். எனக்கும் அப்படி ஒரு விமானப்பயணம் எப்போது சித்திக்கும் என்பதுதான் அந்த ஏக்கம்.
           வீரகேசரியில் உதவி ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்த (1985) வேளையில் ஒரு மதியம் கொழும்பிலிருக்கும் சோவியத் ரஷ்யாவின் தகவல் பிரிவில் பணியாற்றிய நண்பர் ராஜகுலேந்திரனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

         “ உமக்கு இரண்டு வாரம் லீவு எடுக்க முடியுமா? மாஸ்கோவில் நடைபெறவுள்ள 12 ஆவது சர்வதேச மாணவர், இளைஞர் விழாவில் கலந்துகொள்வதற்கு பத்திரிகையாளர் என்ற முறையில் தெரிவாகியிருக்கிறீர்.” என்றார் நண்பர்.
          எனக்கு  நம்பமுடியவில்லை. மீண்டும் மீண்டும் கேட்டு ஊர்ஜிதப்படுத்திக்கொண்ட பின்னர், “ என்னிடம் கடவுச்சீட்டுக்கூட இல்லையே…என்ன செய்வது?” என்றேன்.
        “ தாமதமின்றி சர்வதேசபயணங்களுக்கான கடவுச்சீட்டை எடுத்துக்கொள்ளவும். விரைவில் அந்த உலக விழாவின் இலங்கைக்கான தேசியக்குழுவின் இணைச்செயலாளர் தோழர் அபூ யூசுப் உங்களுடன் தொடர்புகொள்வார்.” என்று சொன்ன நண்பர் தெலைபேசி இணைப்பை துண்டித்துக்கொண்டார்.
       பத்திரிகை அலுவலகத்தில் ஆசிரியர் மற்றும் நிருவாக அதிகாரிகளுக்கெல்லாம் தகவல் சொல்லிவிட்டு கடவுச்சீட்டையும் துரிதகதியில் பெற்று விஸாவுக்காக சோவியத் தூதரகத்தில் சேர்ப்பித்த பின்னர்தான் எத்தனைபேர் இந்தப்பயணத்தில் இணைந்துகொள்கிறார்கள் என்ற தகவல் கிடைத்தது.
     அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்கவாதிகள், அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள் என மொத்தம் நூறுபேர் அந்த சர்வதேச விழாவுக்;கு இலங்கையிலிருந்து பயணமானோம். அந்தக்குழுவில் நான் ஒருவன் மாத்திரமே தமிழ்ப்பத்திரிகையாளனkatunayake airport்.
     1965 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலைய திறப்புவிழாவின்போது நான் கண்ட கனவு எதிர்பாரதவிதமாக சுமார் இருபது ஆண்டுகளின் பின்னரே பலித்தது.
     ரஷ்யா, உக்ரேய்ன், பைலோ ரஷ்யா, உஸ்பெக்கிஸ்தான், கஜாகிஸ்தான், ஜோர்ஜியா, அஸர்பைஜான், லிதுவேனியா, மொல்டாவியா, கிர்கீஸியா, தாஜிக்ஸ்தான், ஆர்மீனியா, துருக்மேனியா, எஸ்தோனியா, முதலிய 15 குடியரசுகளும் 20 சுயாட்சிக்குடியரசுகளும் 8 சுயாட்சிப்பிராந்தியங்களும் 10 சுயாட்சிப்பிரதேசங்களும் கொண்ட சோவியத் யூனியனின் தலைநகரம் மாஸ்கோவில்தான் 156 நாடுகளின் ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் பங்குபற்றிய அந்த சர்வதேச விழா தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் நடந்தது.
    இந்த விழாவில் பங்குபற்றுவதற்கு அழைப்பு கிடைத்த நாளிலிலிருந்து அங்கு சென்று தாயகம் திரும்பும் வரையில் அடுத்தடுத்து எதிர்பாராத சம்பவங்களையே தரிசித்தேன்.
 சீன விமானத்தில் பாம்புக்கறியும் பிலிப்பைன்ஸ் விமனத்தில் தவளை சூப்பும் கிடைக்கும் ரஷ்ய விமானத்தில் பன்றி, மாடு எல்லாம் கிடைக்கும் கவனம் என்று நண்பர்கள் சொல்லி பயமுறுத்திவிட்டார்கள்.
 அதனால் அந்த ஏரோபுளட் விமானத்தில் ஏறியதுமே “ நான் ஒரு வெஜிடேரியன்” என்று விமானப்பணிபெண்களிடம் முன்னெச்சரிக்கையாக சொல்லிவிட்டேன். நாடு திரும்பும்வரையில் பாம்பு, தவளை, மாடு. பன்றிக்குப்பயந்தே தாவரபட்சிணியாகவே வாழ்ந்தேன்.
  எங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நட்சத்திர அந்தஸ்து பெற்ற இஸ்மாயிலோவா ஹோட்டலில்தான் ஆசிய நmoscow cathedralாடுகளிலிருந்து வந்த பிரதிநிதிகள் அனைவரும் தங்கினர்.
  இந்தியாவிலிருந்து காங்கிரஸ், ஜனதா, வலது-இடது கம்யூனிஸ்ட், தி.மு.க, அ.இ.அ.தி.மு.க, பிரமுகர்கள் மற்றும் பல கலைஞர்களும் வந்திருந்தனர்.
இந்த ஹோட்டலில்தான் இந்திய அரசியல்வாதிகள் தங்கபாலு, சீத்தாராம யச்சூரி, மிஸா கணேசன், மற்றும் குச்சுப்புடி நடனத்தில் சாதனை புரிந்து கின்னஸ் புத்தகத்தில் தனது பெயரை பதிந்துகொண்ட சரளகுமாரி உட்பட சுமார் ஐநூறு பிரதிநிதிகள் இந்தியாவிலிருந்து வந்து தங்கியிருந்தனர். தினமும் இவர்களுடன் உரையாட சந்தர்ப்பம் கிடைத்தது.
 சந்திரிகாவின் கணவர் விஜயகுமாரணதுங்க, யூ.என்.பி. பாராளுமன்ற உறுப்பினர்கள் அநுர பஸ்தியன், சுனில் ரஞ்சன் ஜயக்கொடி., தற்பொழுது கல்வி அமைச்சராக இருக்கும் பந்துல குணவர்தன, முன்னைய அரசில் அமைச்சராகவிருந்த மகிந்த விஜேசேகர, மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, நவசமசமாஜக்கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகளைச்சேர்ந்த பிரதிநிதிகளும் அதே ஹோட்டலில் பக்கத்து பக்கத்து அறைகளில்தான் தங்கினர்.
 அச்சமயம் கல்வி மற்றும் இளைஞர் விவகார அமைச்சராகவிருந்த தற்போதைய எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கா, பின்னாட்களில் வடக்கு- கிழக்கு மாகாணசபையில் அங்கம் வகித்த பத்திரிகையாளரும் தற்போது பிரான்ஸ் நாட்டுக்கான இலங்கைத்தூதுவருமான தயான் ஜயதிலக்க, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஏ.அஸீஸ் ஆகியோரும் வந்திருந்தனர்.
 அந்த ஹோட்டலின்; உணவு விடுதியில் இலங்கைப்பிரதிநிதிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் எனக்காக ஒரு மேசை தனியாக ஒதுக்கப்பட்டதற்கும் “நான் வெஜிடேரியன்” என்ற கோரிக்கைதான் காரணம்.
 leninஇதுவும் எதிர்பாராததே.
எங்களுடன் வந்திருந்த சில முஸ்லிம் இளைஞர்களுக்கும் அந்த உணவு விடுதிக்குள் பிரவேசித்ததும் கவலை வந்துவிட்டது. அவர்களுக்கு ஹலால் இறைச்சி வேண்டும். அத்துடன் பன்றி இறைச்சியையும் தவிர்க்கவேண்டும்.
 எனவே மற்ற பிரதிநிதிகளுடன் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பதற்கு சங்கடப்பட்டார்கள். தங்களது மனக்குறையை எமது வழிகாட்டித்தோழர் தோழியரிடம் சொன்னார்கள்.
 உடனுக்குடன் பிரதிநிதிகளின் தேவைகளைக்கவனித்த அவர்கள், துரிதமாக இயங்கி மேலும் ஒரு பெரிய மேசையை எனது மேசையுடன் இணைத்து, அதில் ருஷ்யமொழியில் வெஜிடேரியன் டேபிள் என்ற அட்டையையும் பரிசாரகர்கள் பார்க்கும் விதமாக வைத்துவிட்டார்கள்.
 முஸ்லிம் இளைஞர்கள் பல தடவைகள் கையெடுத்து கும்பிடாத குறையாக அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள்.
 வேறும் உதவிகள் தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கள் என்று சொன்ன அந்த ரஷ்ய நாட்டு வழிகாட்டிகள் அடுத்திருந்த தங்கள் உணவு மேசைக்குப்போய்விட்டார்கள்.
 என்னருகே அமர்ந்த முஸ்லிம் இளைஞர்களுக்கும் சைவ உணவே பரிமாறப்பட்டது.
தினமும் காலை, மதியம், இரவு  உரியநேரத்தில் நாங்கள் அந்த உணவு விடுதிக்குச்சென்றுவிடவேண்டும். உணவின் பின்னர் பல இடங்களுக்கும் அழைத்துச்செல்லப்படுவோம். கண்காட்சி, இசை நிகழ்ச்சி, மகாநாடு, ஊர்வலம், நகர்வலம் என்று பல நிகழ்ச்சிகள். உற்சாகமாக இருந்தோம்.
 ஒரு நாள் வெள்ளிக்கிழமை. காலை உணவுவேளையில் அந்த மரக்கறிபோசன மேசையிலிருந்த முஸ்லிம் இளைஞர்களுக்கு மற்றுமொரு கவலை வந்துவிட்டது.
 எங்கள் மேசையருகில் வந்த இலங்கை அரசியல் கட்சியொன்றின் பிரதிநிதியிடம் சிங்களத்தில் இப்படிச்சொன்னார்கள்:- “ இன்றைக்கு வெள்ளிக்கிழமை. இலங்கையிலிருந்திருந்தால் தொழுகைக்காக பள்ளிவாசல் சென்றிருப்போம். இந்த கம்யூனிஸ்ட் நாட்டில் என்ன செய்வது.? ”
 அதற்கு அந்த சிங்கள அரசியல்வாதி, “ இந்த நாட்டில் வந்து அதெல்லாம் எதிர்பார்க்க முடியாது. ஹோட்டலில் உங்கள் அறையிலேயே தொழுதுகொள்ளுங்களMoscow Mosque்” என்று சிங்களத்தில் சொன்னார்.
 அப்பொழுது நான் மட்டுமல்ல அங்கிருந்த எவருமே எதிர்பாராதவிதமாக ஒரு ரஷ்ய வழிகாட்டித்தோழர் எங்கள் மேசைக்கு வந்தார்.
 வந்தவர் சிங்கள மொழியில், “ தோழர்களே இங்கே பள்ளிவாசல் இருக்கிறது. யார் யார் போகவேண்டும். சொல்லுங்கள் அழைத்துப்போகிறோம்” என்றார்.
 நாம் அந்த இடத்தில் மூர்ச்சித்து விழவில்லை என்பதுதான் ஆச்சரியம்.
தமிழ். சிங்களம், ஆங்கிலம் உட்பட பல மொழிகளும் தெரிந்தவர்கள்தான் எங்களுக்கு வழிகாட்டித்தோழர்- தோழியர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மை அப்பொழுதுதான் தெரிந்தது.
  அந்த வழிகாட்டி அங்கிருந்து அகன்றதும் அந்த முஸ்லிம் நண்பரிடம் சிங்கள அரசியல்வாதி மெதுவாகச் சொன்னார்:-“ ஐஸே…இங்கே சுவர்களுக்கும் காதுகள் இருக்கும். கவனம்.”
  ஐநூறு ஆண்டுகால பழமைவாய்ந்த புனித பஸில் கதீட்ரல் அமைந்துள்ள மாஸ்கோ கிரம்ளினில்தான் சோசலிஸத்திற்காக பாடுபட்ட மேதை லெனினின் பொன்னுடலும் இருக்கிறது. முஸ்லிம்கள் தொழுவதற்கு பள்ளிவாசலும் இருக்கிறது.
 இந்த ஆக்கத்தின் ஆரம்பத்தில் அந்தத்தேசத்தில் எத்தனை குடியரசுகள் எத்தனை சுயாட்சிக்குடியரசுகள், எத்தனை சுயாட்சிப்பிராந்தியங்கள் என்று குறிப்பிட்டிருந்தேன்.
 அந்த சோஷலிஸ சோவியத் யூனியன் இன்று இல்லை என்பதும் எதிர்பாராததே.  

No comments: