அவள் - மலைகள் இதழில்..

.

நிறைய மன்னிப்புகள் தேவையாக இருந்தன
குறிப்பாக அவளிடமிருந்து

அவளுள் இருந்தார்கள்
மகள் தாய் மனைவி தங்கை தோழி
அத்தனை பேரும்

மிகப் பெரிய குற்றங்களையோ
மறக்க முடியாத துரோகங்களையோ
எவருக்கும் செய்துவிடவில்லை

சில தற்செயலாக நிகழ்ந்தவை
பல காலகாலமாக எல்லோரும் செய்தவை
அவசர உலகில் நிதானித்து திட்டமிட்டு
வேண்டுமென்றே எதையும் செய்யவில்லை

நிறைய நோகச் செய்திருக்கிறேன்
அது குறித்துக்
கவலையும் கொள்ளாதிருந்திருக்கிறேன்
இப்போது
மன்னிப்புகள் வேண்டியிருக்கின்றன..
மன அமைதிக்காக

காலம் கடந்து விட்டது
எதையும் சரிசெய்ய இயலாத புள்ளியில்
கசிந்துருகி நிற்கும் எனக்குக்
காட்டப்படுகிற கருணையில்
உயிர்களிடத்தான அன்பு தெரிகிறது
நான் யாசிக்கிற மன்னிப்பு
மறுக்கப்படுகிறது

கையில் அள்ளி வீசும் நீராக
அலைக்கழித்த என்னை
ஆழ்கடலின் பேரமைதியுடன்
அச்சுறுத்துகிறாள் இன்று.
***

18 ஆகஸ்ட் 2012 மலைகளின் எட்டாவது இதழில்.., நன்றி மலைகள்.காம்!


No comments: