கணபதியே காப்பாய்..

.

#1. கைவினைத் திறனில் உருவான வினை தீர்க்கும் விநாயகர் 

வேழ முகத்தோனின் ஆசிகள் வேண்டி சதுர்த்தி தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடி விட்டோம்.

 #2. கணபதியே அருள்வாய் 


பண்டிகைக்கு முன்னாலிருந்தே பெங்களூர் மாநகராட்சியும்(BBMP) மாநில மாசுக்கட்டுப்பாட்டுத் துறையும் (KSPCB) வண்ணம் தீட்டிய விநாயகர் உருவச் சிலைகளை வாங்குவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டதுடன் சிலை செய்பவர்களையும் அதிக அளவில் களிமண் சிலைகளை விற்பனைக்குக் கொண்டுவர ஆணையிட்டிருந்தது. ஆனால் விற்ற பத்து சிலைகளில் எட்டு வண்ணப் பிள்ளையார்களே. வண்ணப் பிள்ளையாரை செய்ய உபயோகிக்கும் மண்ணை விட களிமண் சிலைகள் உயர்தர மண்ணில் செய்ய வேண்டியிருப்பதால் இவற்றின் விலை அதிகமென்றும், சம அளவில் இரண்டும் கிடைக்குமாறு செய்திருந்தும் மக்கள் அதை வாங்கவில்லையென்றும் விற்காத களிமண் பிள்ளையார்களைக் காட்டி வருத்தம் தெரிவிக்கின்றனர் வியாபாரிகள். மக்களைக் கவர கிரீடம், நகைகளுக்கு மட்டும் பொன் வண்ணம் தீட்டியிருந்தும் பயன் இருக்கவில்லை.




#3.
பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்வரையிலும் களிமண் பிள்ளையார்கள் குறிப்பிட்ட சில இடங்களிலேயே கிடைத்து வந்தது. தேடிச் சென்று வாங்கிவருவோம், ஊர் வழக்கம் அதுவென்பதால். இப்போது எல்லா இடங்களிலும் கிடைத்தும் கூட, வண்ணச் சிலைகளே மக்களின் தேர்வாக இருக்கிறது.., ஏரிகளில் அவற்றைக் கரைப்பதால் நீர் வாழ் உயிரனங்கள், உபயோகிக்கும் மனிதர்கள், தாவரங்களுக்கு இரசாயனங்களால் கேடு என்பது தெரிந்தும். ஆசையுடன் குழந்தைகள் அவற்றைத் தொட்டுக் குதூகலிக்கிறார்கள். அதே கையுடன் அவர்கள் எதையேனும் சாப்பிட நேர்ந்தால் வண்ண இரசாயனம் உடல்நலனுக்கு உடனே தீங்காகும் எனவும் அறியப்படுகிறது.

தத்தமது வியாபார ஸ்தலங்கள் முன்னால் பொது இடத்தில் வைத்துப் பூசை செய்வதில் யாருடைய சிலை பெரியது என்பதில் போட்டியும் நிலவுவதால் பெரிய வண்ணச் சிலைகளின் விற்பனை அதிகமாகவே இருந்திருக்கிறது. தங்கள் கோரிக்கைகள் எடுபடாததால் வரும் வருடத்தில் வண்ணப் பிள்ளையார் சிலைகளுக்கு தடை விதிக்க முடிவு செய்திருக்கிறது மாசுக்கட்டுப்பாட்டுத் துறை. ஆனால் ஆளும் மாநில அரசு  அதை அமல்படுத்துமா அரசியல் காரணங்களுக்காக மீண்டும் கோரிக்கை வைப்பதுடன் நிறுத்திடுமா என்பதைத் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தற்போது ஏரிகளில் கரைப்பதை முடிந்தவரை தடுத்திட கர்நாடக அரசே பெங்களூரின் பல பாகங்களிலிருந்து பிள்ளையார்களைப் பெற்று முறைப்படி அவற்றைக் கரைக்க ஆவன செய்துள்ளது. எந்தெந்த இடங்களில் எத்தனை மணிக்கு பிள்ளையார்களை எடுத்துச் செல்வார்கள் என்கிற அறிவிப்பையும் செய்தித்தாள்களில் அறியத் தந்திருக்கிறது.

கரைப்பதற்கு கிணறு இல்லாத நிலையில் ஆரம்ப காலத்தில் ஏரிகளில் கரைத்திருக்கிறோம் நாங்களும். வீட்டிலேயே வாளிநீரில் கரைத்து நன்கு கலக்கிச் செடிகளுக்கு ஊற்றிவிடலாம் எனத் தோழி மூலமாக அறியவந்தபின் அதையே வழக்கமாக்கிக் கொண்டு விட்டோம் கடந்த பல ஆண்டுகளாக.

#4 ஞான முதல்வன்

எளிய கடவுள் பிள்ளையார்.  அருளை வாரி வழங்குவதில் முதன்மையானவர். நட்பானவர். Friendly God எனக் கொண்டாடப்படுபவர். அன்போடும் மனசுத்தியோடும் எளிமையாக வழிபட்டாலே போதும். இறைவனின் பெயரால் இயற்கையை மாசுப்படுத்தாது இருப்போம். 

#5. பண்டிகைக்குப் பிறகு ஓய்வாக:

(ஓய்வெடுத்த பின் கவனிக்க ஓரமாக வைப்போம் விண்ணப்பம்.)
கணபதியே காப்பாய்..
வையகத்தின் பசுமையை.. இயற்கையின் கொடையை..
***

Nantri : tamilamudam

No comments: