இந்த ஏரியைத் தவிர - கவிதை - தேவதேவன்

.
இந்த ஏரியைத் தவிர
பிறிதொரு  அழகிய அற்புதமுண்டோ
இந்தப் பூமியில்?
எல்லையில்லாத வானம்,
சுற்றி விரிந்திருக்கும் வனம்,
ஆராதித்து நிற்பதன் இரகசியம்:
அதன் அமைதி,
நிச்சலனம்,
ஒளியுடன் அதற்குள்ள
அத்துணை நெருக்கமான உறவு,
ஒளிவு மறைவற்ற தைரியம்.
அதாவது தூய்மை,
ஆற்றைப் போலவோ
ஆழியைப் போலவோ
ஆர்ப்பரிக்காத எளிமை,
அடக்கம்,
வானமே தன் அகம் பார்த்துக் கொள்ள உதவும்
ஆடிமை,
நிலவும் இயற்கையின்
அனைத்துப் படைப்புக்களினதும்
ஆசான்மை.
அன்பே,
நம் வீட்டு மூலையிலே
வானமே வியந்து போற்றும்
ஒரு ஏரியைப் போல வந்தமர்ந்திருக்கும்
அந்தப் பேர்யாழை மடியெடுத்து மீட்டு,
உலகில் மறைந்து கிடக்கும் பேரிசையை
அது மீட்கட்டும்.

Nantri : vadakkuvaasal.com

No comments: