உலகச் செய்திகள்

இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்

இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: அதிர்ச்சியில் மக்கள்

தலிபான்களின் தாக்குதல்கள்

இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்


 Monday, 16 April 2012

indonesia_earthquake_ இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் இன்று திடீரென மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலநடுக்கத்தால் பாதிப்பு குறித்து எந்த தகவலும் இல்லை என்று புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.


சுமத்ரா தீவில் இருந்து 640 கிலோ மீட்டருக்கு அப்பால் நடுக்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், ரிக்டர் அளவில் 7.00 புள்ளிக்கு குறைவாகவே இருந்ததால் சுனாமி அபாயம் இல்லை என்றும் இந்தோனேஷிய வானிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனத்தின் அதிகாரி ஆரிப் நுராகிம் தெரிவித்தார்.

கடந்த 11ம் திகதி ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக இந்தியா, இலங்கை உட்பட பல்வேறு நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது, மேலும் 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின் வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நன்றி தினக்குரல்

இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: அதிர்ச்சியில் மக்கள்
 
 Tuesday, 17 April 2012 
 
Earthquake இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் இன்று மாலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிப்பு குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஏற்கனவே கடந்த 11ம் திகதியும், நேற்றும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
நன்றி தினக்குரல்

தலிபான்களின் தாக்குதல்கள்
Tuesday, 17 April 2012 

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வட அத்திலாந்திக் ஒப்பந்த நாடுகள் (நேட்டோ) படைகளின் தலைமையகம், பாராளுமன்றம், வெளிநாட்டு இராஜதந்திரிகளின் வாசஸ்தலங்கள் அமைந்திருக்கும் கேந்திர முக்கியத்துவ இடங்கள் உட்பட 7 பகுதிகளில் தலிபான் தீவிரவாதிகள் படுமோசமான தாக்குதல்களை ஞாயிறன்று நடத்தியுள்ளனர்.

நேற்றைய தினம் மாலை நேட்டோ படைகளும் ஆப்கானிஸ்தான் அரசாங்கமும் விடுத்த அறிவிப்பில் மோதல்கள் முடிவுக்கு வந்து விட்டதாகவும் தலைநகருக்குள் ஊடுருவித் தாக்குதல் நடத்திய தலிபான் தீவிரவாதிகள் சகலரும் கொல்லப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உண்மை நிலைவரம் உரிய முறையில் வெளியுலகுக்கு தெரியவந்ததாக நம்பமுடியவில்லை. தலைநகரில் மாத்திரமல்ல மாகாணங்களிலும் பல இடங்களில் ஒருங்கிணைந்த தாக்குதல்களை தலிபான்கள் ஏக காலத்தில் மேற்கொண்டிருந்தார்கள்.

இந்த தாக்குதல்கள் சகலதுமே அவற்றினால் ஏற்பட்டிருக்கக்கூடிய உயிரிழப்பிற்கும் அழிவுகளுக்கும் அப்பால் தலிபான்களை பொறுத்தவரை பிரசார ரீதியில் பிரமாண்டமான பெறுமதி கொண்டவையாக இருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை. ஆப்கானிஸ்தானில் போரிடும் பணிகளில் இருந்து நேட்டோ படைகள் படிப்படியாக விலகுவதை ஆரம்பிப்பதற்கு இன்னும் ஒரு வருட காலமே இருக்கும் நிலையில் தலிபான்கள் இத்தகைய ஒரு தாக்குதலை நடத்தி அமெரிக்காவையும் அதன் மேற்குலக நேச அணிகளையும் ஆப்கான் அரசாங்கத்தையும் திகைக்க வைத்துள்ளார்கள். வெளிநாட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருக்கப்போகின்றனவோ இல்லையோ அங்கே மோதல்கள் தொடரவே போகின்றதென்பதை அண்மைக்கால நிகழ்வுப் போக்குகள் பிரகாசமாக வெளிக்காட்டி நிற்கின்றன.

ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகளின் செயற்பாடுகளின் விளைவாக வாஷிங்டனுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மூண்ட கடுமையான முறுகல் நிலை ஓரளவிற்கு தணிந்துகொண்டுவரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை தலிபான்கள் தலைநகரில் தங்களது கைவரிசையை காட்டியிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கு இதனால் ஏற்பட்ட அசௌகரியம் மதிப்பிடமுடியாததாகும். இரவு வேளைகளில் தேடுதல்களையும் முற்றுகைகளையும் செய்வதை அமெரிக்கப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்து ஆப்கான் இராணுவத்தின் விசேட படைகள் அண்மையில் தான் பொறுப்பெடுத்திருந்தன. கிரனேட்டுகளை ஏவும் ரொக்கெட்டுக்கள் மற்றும் நவீன ஆயுதங்கள் சகிதம் தலிபான்கள் தலைநகருக்குள் ஊடுருவியிருக்கிறார்கள். இவர்களில் பலர் தற்கொலைப் போராளிகள். இத்தகைய ஊடுருவலை அவர்கள் பெருமளவில் செய்யக்கூடியதாக இருந்திருக்கின்றமை தலைநகரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருக்கக்கூடிய படுமோசமான குறைபாடுகளை அம்பலப்படுத்துகிறது.

மீண்டும் ஒரு தடவை பாகிஸ்தானில் ஐ.எஸ்.ஐ. புலனாய்வு அமைப்பின் மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டக்கூடிய சூழ்நிலையை காபூல் தாக்குதல்கள் ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால் இத் தாக்குதல்களுக்கு தாங்கள் எந்த வகையிலும் பொறுப்புடையவர்கள் அல்ல என்று பாகிஸ்தான் இராணுவ தலைமைப் பீடத்தினர் நிச்சயம் மறுதலிப்பர். ஆனால் பாகிஸ்தானில் சிவிலியன் அரசாங்கத்தின் சொல்லுக்கு கட்டுப்படாமல் செயற்படும் இராணுவத்திற்கும் வாஷிங்டனுக்கும் இடையேயான முறுகல் நிலை இதனால் மேலும் தீவிரமடையப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கென்று வந்த நேட்டோ படையினர் தங்களது நேச சக்தி என்று நம்பிய இஸ்லாமாபாத்திடமிருந்தே இப்போது பெரும்பிரச்சினையை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. அமெரிக்காவும் இந்தியாவும் நெருங்கிவந்ததை ஜீரணிக்க முடியாத பாகிஸ்தான் இராணுவத் தலைமை தலிபான்களுக்கு மறைமுகமாக உதவுகின்றது என்பதே அரசியல் அவதானிகளின் உறுதியான அபிப்பிராயமாக இருக்கிறது.

தலிபான்களை முற்றுமுழுதாக இராணுவ ரீதியாக தோற்கடிப்பதில் நம்பிக்கை இழந்த ஒரு நிலையிலேயே அமெரிக்கா அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தீர்மானித்தது. ஆரம்ப கட்ட நடவடிக்கையாக கட்டாரில் இருதரப்பினரும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்த போதிலும் கூட அதனை தொடர முடியாத சூழ்நிலை தோன்றியது. ஆப்கான் ஜனாதிபதி ஹமிட் கார் சாயையும் பேச்சுவார்த்தைகளில் சம்பந்தப்படுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையும் முன்னேற்றம் ஏற்பட முடியாமற் போனமைக்கான பிரதான காரணங்களில் ஒன்று என்று கூறப்படுகிறது. பேச்சுக்கள் இடைநிறுத்தப்பட்ட நிலையில் தலைநகரில் தலிபான்கள் நடத்திய படுமோசமான தாக்குதல்கள் அவர்கள் இராணுவ ரீதியில் மிகவும் வலுவான நிலையில் இருப்பதை வெளிக்காட்டியிருக்கின்றது. பேச்சுக்களை பற்றி பேசிக்கொண்டே இராணுவ ரீதியில் தலிபான்களை பலவீனப்படுத்த அமெரிக்காவினால் தீட்டப்பட்ட திட்டங்களும் தோல்வியையே தழுவுகின்றன.

ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் துருப்புகள் வெளியேறியபோது காபூலில் கிரெம்ளினின் கையாளாக ஆட்சியிலிருந்த நஜிபுல்லாவினால் கடைசி ரஷ்யப் படை வீரன் எல்லையை கடந்து சென்ற பிறகு 3 வருடங்களுக்கு ஆட்சியை தக்கவைக்கக் கூடியதாக இருந்தது. ஆனால், அமெரிக்காவின் கையாளாக காபூலில் இன்றிருக்கும் ஹமிட் கார்சாய் நேட்டோ படைகளின் வெளியேற்றத்திற்கு பிறகு எத்தனை நாட்கள் அதிகாரத்தில் இருப்பார் என்ற கேள்வி இப்போது இயல்பாகவே எழுகிறது.
நன்றி தினக்குரல்No comments: